Published:Updated:

'தனி ஒருவன்' சக்ஸஸ் மீட்டில் அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் - இயக்குநர் மோகன் ராஜா

'தனி ஒருவன்' சக்ஸஸ் மீட்டில் அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் - இயக்குநர் மோகன் ராஜா
'தனி ஒருவன்' சக்ஸஸ் மீட்டில் அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் - இயக்குநர் மோகன் ராஜா

ஐந்தாம் ஆண்டு சென்னை சர்வதேச குறும்பட விழா சென்னையில் பிப்ரவரி 18 முதல் 24 வரை நடக்க இருக்கிறது. இதற்கான  பத்திரிக்கையளார் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் மோகன்ராஜா, மதன் கார்க்கி உள்பட பலர் கலந்து கொண்டார்.

இயக்குநர் மோகன்ராஜா பேசியதாவது:

“இந்த நிகழ்வில் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். 'தனி ஒருவன்' படம் பெரிய ஹிட். அதைவிட அந்தப் படத்தின் சக்ஸஸ் மீட் மிகப்பெரிய ஹிட். அதற்கு முக்கியகாரணம் அந்த மேடையில் நானும் என் தம்பியும் உணர்ச்சிவசப்பட்டு அழுத சம்பவம். அதனாலே அந்த வெற்றிவிழா வைரல் ஆனது. பிறகுதான், 'என்னடா இது, படத்தைவிட இந்த வீடியோ ஹிட்டாகிடும் போலிருக்கே'னு பயம் வந்துடுச்சு.  இதே மேடையில்தான், தனி ஒருவனின் அந்த சக்சஸ் மீட்டும் நடந்தது. 

அன்று உணர்ச்சிப்பூர்வமாக பேசிக்கொண்டிருந்தபோது நிறையப் பேர் கைதட்டி என் உணர்வை இன்னும் தூண்டிவிட்டார்கள். அந்த வேகத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வார்த்தை பேசிவிட்டேன். அன்று நான் சொன்னது சரி, தவறு என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், அது என் மனசுக்குள்ளே கடந்த மூன்று வருடங்களா உறுத்திக்கொண்டே இருந்தது. நான் பேசிய அந்த வார்த்தையே, ஒரு யூ ட்யூபில் சோலோ மோடில் போட்டு பின்னால் வயலின்களை வாசிச்சுபோட்டாங்க. 

'நேத்து ஷார்ட் ஃபிலிம் எடுக்க வந்தவங்களாம் படம் பண்ணும்போது நாம பண்ணலயே.' இதுதான் அன்று நான் பேசிய வார்த்தை. அதுக்கும் அன்னைக்கு நிறையப் பேர் கைதட்டுனாங்க. ஆனா, பிறகு நான் பேசியதைப் பார்க்கையில் எனக்குள்ளேயே பெரிய கில்ட்டி ஃபீலை தந்துச்சு. அவசரப்பட்டு ஏதோ பேசிட்டோமோனுகூட தோண ஆரம்பிச்சது. 'நேத்து ஷார்ட் ஃபிலிம் எடுக்க வந்தவங்களை நம்புறாங்க, நம்மலை நம்பலயே'னு நாம பேசுனதை எங்கேயவாது கார்த்திக் சுப்புராஜ் பார்த்தால் தப்பா நினைப்பாரோனுகூட தோணிட்டே இருந்துச்சு. இன்னைக்கு சினிமாத் துறைக்கு வர்றவங்க முன் நானேல்லாம் ஒண்ணுமே கிடையாது. என்னை அறியாமல் அந்த வார்த்தையே சொன்னதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். 

நான் ரீமேக் பண்ணின எல்லா படங்களிலும் என்னால் முடிஞ்ச சின்னச்சின்ன விஷயங்களை சேர்த்துக்கிட்டுதான் இருந்தேன். அது மூலமா சின்ன திருப்தி எனக்கு கிடைக்கும்.  ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் சின்ன  வயசு ஜெயம்ரவி போர்ஷன் கிடையாது. ஸ்கூலில் தன் பையனை சேர்க்க ஃபார்ம் கொடுப்பாங்க. அதில அம்மா பேர் மட்டும்தான் இருக்கும். ‘அப்பா பேர் இல்லையே, நீங்க எப்படி தனியா குழந்தையை வளர்ப்பீங்க''னு பிரின்ஸிபல் கேட்பார். 

அதுக்கு நதியா, 'உங்க ஸ்கூலில் சரஸ்வதி போட்டோ மட்டும் மாட்டியிருக்கீங்க. பிரம்மா போட்டோவை ஏன் மாட்டலை? உலகத்திலே இருக்குற எல்லா குழந்தைக்கும் சரஸ்வதி மட்டுமே போதும்ங்குற எண்ணம்தானே அதுக்குக் காரணம். என் குமரனுக்கு இந்த மகாலெட்சுமி' போதும்’னு சொல்வாங்க. இந்த சீனை தமிழில் நான்தான் சேர்த்தேன். அதுவே ஒரு ஷார்ட் ஃபிலிம்தான். இப்படி நான் பண்ணின ரீமேக் படங்கள் எல்லாத்துலயும் என்னால் முடிஞ்ச அளவுக்கு என் சொந்த விஷயங்களை சேர்த்திருப்பேன். 

காலேஜ் படிச்ச நாள்களில் நான் பாத்த ஷார்ட் பிலிம்கள்தான் என்னை இன்னைக்கு இயக்குநராய் ஆக்கியிருக்கு. நான் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படிக்கும்போது 'பழைய கதை' னு ஷார்ட் ஃபிலிம் எடுத்தேன். அப்போ, எனக்குள்ளே நிறைய சந்தோஷம் இருந்தது. அந்த ஷார்ட் ஃபிலிம்தான் என்னை யாருனு எனக்கே காட்டியது. நான் படிக்கும் காலத்தில் பம்பாயில் ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நடக்கும். அதைப் பாக்க ஓடியிருக்கேன். உண்மையில் என் பார்வையை விசாலப்படுத்தியது அந்த ஷார்ட் ஃபிலிம்களும் இன்டர்நேஷனல் மூவிகளும்தான். ஒரு நாளைக்கு ஏழு படங்கள் பார்ப்பேன் அப்படிப் பார்த்ததால்தான் இன்னைக்கு இந்த இடத்துக்கு வந்துருக்கேன்.

ஒருத்தனுக்கு பத்திலிருந்து இருபத்து ஐந்து வயதுவரைக்கும்தான் க்ரியேட்டிவிட்டியே நடக்குது. அதுக்கு அப்புறம் அரைச்ச மாவைதான் அரைச்சுட்டு இருக்கோம். நீங்க இன்ஸ்பயர் ஆகுற அந்த நொடியில் ஷார்ட் ஃபிலிம் பண்ணுங்க. அது உங்களை வெளிக்காட்டும். காமெடியா சொல்லனுனா, பிரபுதேவா மாஸ்டர் இப்போ எப்போதாவது புது மூவ்மென்ட் போடுறாரா. இருபத்து ஐந்து வயசில போட்ட மூவ்மென்ட்டைதான் இப்போ வரைக்கும் போட்டுகிட்டு இருக்கார். அவர் ஒரு ஜீனியஸ். அந்த வயசுலேயே எல்லா மூவ்மென்ட்டையும் போட்டு முடிச்சுட்டார். உலகத்திலேயே அவரை மாதிரி ஒரு டான்ஸ் மாஸ்டரை பாக்க முடியாது.

முப்பது வயது ஸ்போர்ட்டிலிருந்து ரிடையர்ட் ஆகுற வயசு. தயவுசெஞ்சு எதுக்காகவும் காத்திருக்கமா சீக்கிரம் ஷார்ட் ஃபிலிம் எடுங்க. கதை வேறு, வாழ்க்கை வேறு கிடையாது, வேலை வேறு வாழ்க்கை வேறு கிடையாது என்ற எண்ணத்தை எனக்கு இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்தான் கொடுத்துச்சு. நான் பாத்த 75 சதவீதம் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம், அகதிகளை பற்றியவை. அதனால்தான் 'தனி ஒருவன்' படத்தில், ‘உலகத்திலேயே அமைதியான நாடு இந்தியா, இந்தியாவிலே அமைதியான மாநிலம் என் தமிழ்நாடு'னு வசனம் வெச்சேன். இந்த ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவலை பயன்படுத்திகோங்க.”

அடுத்த கட்டுரைக்கு