Published:Updated:

ரஜினியிடம் கதை சொல்லிய அட்லி, அருண்பிரபு, கார்த்திக் சுப்புராஜ்..! ரஜினி முடிவு..!?

ரஜினியிடம் கதை சொல்லிய அட்லி, அருண்பிரபு, கார்த்திக் சுப்புராஜ்..! ரஜினி முடிவு..!?
ரஜினியிடம் கதை சொல்லிய அட்லி, அருண்பிரபு, கார்த்திக் சுப்புராஜ்..! ரஜினி முடிவு..!?

ரஜினி நடிக்கும் 'காலா ' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டது. தமிழ் தவிர தெலுங்கில் வழக்கம்போல் ரஜினிக்குப் பாடகர் மனோ டப்பிங் குரல் கொடுக்கிறார். இந்தி மொழிக்கான டப்பிங் பணிகளும் துவங்கி விட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 27-ஆம் தேதி 'காலா' படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துவிட்டனர். இப்போதே பரபரவென பரபரப்பு பற்றிக்கொண்டு எரிகிறது. அடுத்து தீபாவளிக்கு '2.0' வெளியாகும் என்கிறார்கள். இந்தமாதிரி சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக ரஞ்சித் போன்ற இளம் இயக்குநர்கள் சிலர் போயஸ் கார்டன் சென்று ரஜினிக்குக் கதை சொல்லி வருகிறார்கள். சிலர், இயக்குநர்கள் கதை சொல்லும் செய்தியைக் கேள்விப்பட்டு, தாங்களும் கதை சொல்ல போனில் அப்பாயின்மென்ட் கேட்டுக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தன்னிடம் போனில் பேசும் இயக்குநர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் போடப்படும் ஒரே கன்டிஷன், 'நெத்தியடி அரசியல் கதையாக இருந்தால் மட்டுமே கதை சொல்ல வரவேண்டும்' என்பதுதான். 

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய 'அருவி' படத்தைப் பார்த்துவிட்டு நெகிழ்ந்து போய்விட்டார், ரஜினி. ஏற்கெனவே ரவிக்குமாரிடம் அருண்பிரபு வேலை பார்த்தபோது அறிமுகம் என்றாலும், அருணிடம் இருந்து இப்படியொரு அதிரடி திரைப்படத்தை எதிர்ப்பார்க்கவில்லை. தனது போயஸ்கார்டன் வீட்டுக்கு 'அருவி' குழுவை வரவழைத்தார். முதலில் அதிதிபாலனுக்கு தங்கச்சங்கிலி கொடுத்தார், அடுத்து அருண்பிரபுவுக்கும் தங்கச்சங்கிலியை பரிசளித்து அன்போடு அணைத்துக் கொண்டார். நீ...ண்ட நேரம் 'அருவி' படத்தின் ஓவ்வொரு காட்சிகளையும், நேர்த்தியையும் வியந்துபோய்ப் பாராட்டினார். அதன்பின் சாவகாசமாக பேசிக்கொண்டு இருந்தபோது, 'அருண்பிரபு எனக்கு ஏதாவது கதை வெச்சிருக்கீங்களா...' என்று  கேட்ட ரஜினி, கடகடவென தனது டிரேட் மார்க் சிரிப்பையும் உதிர்த்திருக்கிறார். இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராத அருண்பிரபும் 'நீங்க சொல்லிட்டீங்க, உடனே ரெடி பண்றேன் சார்...' என்று பதில் சொல்லியபடி இன்ப அதிர்ச்சி விலகாமல் போயஸ் கார்டனைவிட்டு வெளியில் வந்திருக்கிறார்.  

அட்லி இயக்கத்தில் வெளிவந்த 'ராஜா ராணி', 'தெறி' ஆகிய படங்களைப் பார்த்து ரசித்தார், ரஜினி. கோவாவில் ஒரு பக்கம் 'தெறி' படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் 'கபாலி' படத்தின் ஷூட்டிங்கையும் நடத்தினார், தயாரிப்பாளர் 'கலைப்புலி' தாணு. அப்போது ரஜினியிடம் அனுமதி வாங்கிய அட்லி, ரஜினியின் தீவிர ரசிகையான தன் மனைவியின் பிறந்த நாளன்று ரஜினியை சந்திக்க வைத்து சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்தார், அட்லி. 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற அட்லியின் மேக்கிங் ஸ்டைலும், ஜி.எஸ்.டி வசனமும் ரஜினியைக் கவர்ந்தன. 'மெர்சல்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் படத்தை இயக்குவதை இலக்காகக் கொண்டு போயஸ் கார்டனில் அப்பாயின்மென்ட் கேட்ட அட்லியிடம், 'நல்ல கதையாக இருந்தால் சொல்லுங்கள்' என்று பதில் வந்தது. எனவே, அடுத்த படத்தின் கதைக்காக லண்டன் சென்று கதை விவாதம் செய்தவர், ஜனவரி மாதம் இறுதியில்தான் சென்னைக்குத் திரும்பினார், கதை சொன்னார். அட்லி சொன்ன கதையை உன்னிப்பாகக் கேட்ட ரஜினி, அதன்பின் 'நான் போன் பண்ணி இன்ஃபார்ம் செய்றேன்' என்று அனுப்பி வைத்தார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கார்த்திக் சுப்புராஜை அழைத்து ரஜினி, 'பாபிசிம்ஹா நடிச்சிருந்த கேரக்டருக்கு என்னைக் கூப்பிட்டிருந்தா, நானே நடிச்சிருப்பேனே...' என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டார். அவரை எப்போதும் 'தலைவா..' என்று விளிக்கும் கார்த்திக் சுப்புராஜ், ரஜினிக்குக் கதை சொல்வதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தார். அதன்படி  கடந்த 15-ஆம் தேதி போயஸ் கார்டனில் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு அழைப்பு வந்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கதை கேட்டார், ரஜினி. அவரிடமும், 'யோசித்துவிட்டு பிறகு அழைப்பதாக'ச் சொல்லி அனுப்பிவைத்தார், ரஜினி. மக்கள் மன்றம் துவங்கி அரசியல் பிரவேசம் செய்யும் வேளையில் புதுப்படத்தில் நடிக்கப் போவது உண்மையா, என்கிற கேள்வியை ரஜினி தரப்பின் முன் வைத்தோம், 'ரஜினி சார் சுறுசுறுப்பானவர், வேகமானவர் என்பது உலகறிந்த உண்மை. ஒரு படத்துக்கு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும், முழுப்படமும் நேரத்திற்கு முடிந்துவிடும். தமிழக சட்டமன்றத் தேர்தல் வருவது தள்ளிப்போகும் போல் தெரிகிறது. அதற்குள் அக்மார்க் அரசியலைப் பேசும் ஒரு படத்தில் நடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்' என்று நம்மிடம் பதில் சொன்னார்கள். 

ஆக, ' காலா', '2.0' படங்களுக்குப் பிறகு இன்னொரு அதிரடி ரஜினியிடம் இருந்து வரலாம்!