Published:Updated:

“முன்பு அமலாபாலோட பொண்ணு... இப்போ பா.விஜய் அண்ணாவோட தங்கச்சி!” லிட்டில் ஸ்டார் யுவா

மு.பார்த்தசாரதி
“முன்பு அமலாபாலோட பொண்ணு... இப்போ பா.விஜய் அண்ணாவோட தங்கச்சி!” லிட்டில் ஸ்டார் யுவா
“முன்பு அமலாபாலோட பொண்ணு... இப்போ பா.விஜய் அண்ணாவோட தங்கச்சி!” லிட்டில் ஸ்டார் யுவா

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, சமுத்திரக்கனி அங்கிள் 'அப்பா' படத்தில் நந்தினியா அறிமுகம் பண்ணிவெச்சாங்க. ஃபர்ஸ்ட் டைம் ஸ்க்ரீனில் என்னைப் பார்த்த காரைக்காலில் இருக்கும் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் செம குஷி. அந்த நேரத்தில், ஒரு பக்கம் திரும்பின இடமெல்லாம் பாராட்டு. இன்னொரு பக்கம், பத்தாவது பப்ளிக் எக்ஸாம். ஆனாலும், நான் அசரவே இல்லை. கான்ஃபிடன்ட்டா பரீட்சை எழுதினேன். இப்போ, 'காஞ்சனா 3' படத்தில் நடிச்சுட்டிருக்கேன். அடுத்த மாசம், ப்ளஸ் டூ பப்ளிக் எக்ஸாம் எழுதப்போறேன். இன்னும் ஷூட்டிங் முடியலை. ஆனாலும், அதே கான்ஃபிடன்ட் இப்பவும் இருக்கு. நல்லபடியா ஷூட்டையும் முடிச்சுக்கொடுத்துட்டு பரீட்சையிலும் ஸ்கோர் பண்ணுவேன்” எனத் தன்னம்பிக்கையோடு பேசுகிறார், யுவலெட்சுமி. 

'அப்பா' படத்தில் நந்தினியாகவும், 'அம்மா கணக்கு' படத்தில் அபியாகவும் யதார்த்தமாக நடித்து, தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் யுவலெட்சுமி. தொடர்ந்து, மலையாளத்தில் 'ஆகாச மிட்டாய்' என்ற பெயரில் வெளியான 'அப்பா' படத்தின் ரீமேக்கிலும் நடித்தார். 'காஞ்சனா 3' ஷீட்டிங்கில் பிஸியாக இருந்தவரிடம் ஒரு மாலை நேரப் பேட்டி... 

“ 'ஆகாச மிட்டாய்' படத்துக்குப் பிறகு பா.விஜய் அண்ணாவின் 'ஆருத்ரா' படத்தில், தங்கச்சியா நடிச்சிருக்கேன். அமலாபால் அம்மாவுக்குப் பொண்ணா நடிச்சதுக்கு அப்பறம் தொடர்ந்து மகள் கேரக்டர் வரும்னு நினைச்சிட்ட இருந்தேன். ஆனா, பா.விஜய் அண்ணாவுக்குத் தங்கச்சியா நடிச்சதுல என் ட்ராக் கொஞ்சம் மாறியிருக்கு. இந்தப் படத்துல எனக்கும் விஜய் அண்ணாவுக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் சார்தான் அப்பா. அவருக்குப் பொண்ணா நடிச்சது மூலமா ரொம்பவே ஆசிர்வதிக்கப்பட்டவளா உணர்ந்தேன். சீக்கிரம் ஆருத்ராவை ஸ்கிரீனில் பார்க்க ஆர்வமா இருக்கிறேன்” என்கிறார். 

'காஞ்சனா 3' அனுபவம் பற்றி கேட்டதுமே... 

“செமையா போகுது. அந்த செட்லயே நான்தான் சின்னப் பொண்ணு. லாரன்ஸ் அண்ணா, கோவை சரளா ஆன்ட்டி, தேவதர்ஷினி அக்கா என எல்லாருமே என்னை நல்லா பாத்துக்குறாங்க. எல்லோரும் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸாவே ஆகிட்டாங்க. இந்தப் படத்துக்காக, ஆல்ரெடி ரெண்டு மாசம் ஸ்கூலில் பர்மிஷன் வாங்கியிருந்தேன். இன்னும் ரெண்டு நாள் ஷூட் இருக்கு. அதையும் முடிச்சுக்கொடுத்து, ஃபுல் டைமா உட்கார்ந்து படிக்கணும். ஆனால், நான் இனிதான் படிக்கவே ஆரம்பிக்கணும்னு இல்லை. ஏன்னா, ஷூட்டிங் ஸ்பாட்லேயே டைம் கிடைக்கும்போதெல்லாம் படிச்சிருக்கேன். 'நீ ரொம்ப நல்லா நடிக்கிறே. அதேநேரத்தில் சின்சியரா படிக்கவும் செய்யறே. நடிப்பு, படிப்பு இது ரெண்டையுமே ஸ்போட்டிவா எடுத்துக்கோ'னு லாரன்ஸ் அண்ணா சொல்வார். ஃபர்ஸ்ட் டைம் சமுத்திரக்கனி அங்கிளை எப்படிப் பாத்தேனோ, அதேபோலதான் லாரன்ஸ் அண்ணாவையும் பார்க்கிறேன். ஸ்பாட்ல எப்பவுமே உற்சாகமா இருப்பார். இதுதான் ஸ்கிரிப்ட் நீங்க இப்படித்தான் நடிக்கணும்னு சொன்னதே இல்லை. எனக்கான சுதந்திரம் கொடுப்பார். 

கோவை சரளா ஆன்ட்டியும் நானும் நடிக்கும் காட்சிகளில் விழுந்து விழுந்து சிரிச்சிருக்கோம். 'நீ குட்டிப் பொண்ணா இருந்தாலும் இடத்துக்குத் தகுந்த மாதிரி அழகா மாறிக்கிறே. மூர்த்தி சிறுசா இருந்தாலும் கீர்த்தி பெருசு'னு பாராட்டுவாங்க. தேவதர்ஷினி அக்காவும் செம காமெடி டைப். ஷூட்டிங் பிரேக்ல நான் படிக்கும்போதெல்லாம், என்கரேஜ் பண்ணுவாங்க. நான் ப்ளஸ் டூ படிக்குற பொண்ணுங்கிறதையே மறந்து 60 நாளும் ஜாலியா இருந்ததுக்கு இவங்க எல்லாரும்தான் காரணம்” எனப் புன்னகை குறையாமல் பேசுகிறார் யுவலெட்சுமி. 

'அப்போ, ப்ளஸ் டூ பொதுத்தேர்வைச் சிறப்பா முடிப்பீங்களா?' எனக் கேட்டால், ''அண்ணா, நான் சினிமாவை எப்படி நேசிக்கிறேனோ அப்படித்தான் படிப்பையும் நேசிக்கிறேன். நல்லா ஸ்கோர் பண்ணிடுவேன் என்கிற நம்பிக்கையில்தான் ஸ்கூல் பர்மிஷன் கொடுத்திருக்கு. அந்த நம்பிக்கையை காப்பாத்துவேன். நிச்சயமா ப்ளஸ்டூல நல்ல மார்க் வாங்குவேன். என்னோடு எக்ஸாம் எழுதப்போகும் எல்லோருக்கும் ஆல் தி பெஸ்ட். எக்ஸாம் ஃபியர் இல்லாம நல்லா பர்ஃபார்ம் பண்ணுவோம்'' என வெற்றிப் புன்னகை சிந்துகிறார் யுவலெட்சுமி.