Published:Updated:

அஜித் - ஜோதிகாவின் காதல் கான்வர்சேஷன், தேவாவின் இசை, 'ஏகே' டைட்டில்...! #18YearsOfMugavaree #VikatanExclusive

அஜித் - ஜோதிகாவின் காதல் கான்வர்சேஷன், தேவாவின் இசை, 'ஏகே' டைட்டில்...! #18YearsOfMugavaree #VikatanExclusive
அஜித் - ஜோதிகாவின் காதல் கான்வர்சேஷன், தேவாவின் இசை, 'ஏகே' டைட்டில்...! #18YearsOfMugavaree #VikatanExclusive

கனவுகளுக்காக காதலை விட்டுக்கொடுத்த ஸ்ரீதர் (அஜித்குமார்), குடும்பத்துக்காக கனவுகளையே விட்டுக்கொடுத்தான் என ஒரு ஃபேமிலி டிராமா ஜானரை சுற்றி இருந்த படம், 'முகவரி'. தெலுங்கில் இன்று பெரிதாய் கொண்டாடப்படும் ஃபேமிலி சென்டிமென்ட் ஹீரோ கதையை தமிழ் சினிமா அப்போதே கண்டிருந்த காலம் அது.  தான் நேசித்த விஷயத்துக்காகவும், குடும்பத்துக்காகவும் தங்கள் காதலைத் தொலைத்தவர்களுக்கு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய படம் இது.

சினிமாவில் மியூசிக் டைரக்டர் ஆகவேண்டும் என்பது ஸ்ரீதரின் கனவு. இல்லை இல்லை... ஸ்ரீதர் மற்றும் அவனது சுற்றத்தாரின் கனவு. இப்படி ஒருவருக்காக அவரது குடும்பம், நண்பர்கள், காதலி என அனைவருமே இருந்தது, அவர்களுக்காக இவர் அன்பா இருந்ததைத்தான் இப்படம் உருகி உருகி சொல்லியிருக்கும். 'ஆசை', 'வாலி', 'காதல் மன்னன்' என சாதாரண பசங்களைவிட ஒரு படி  மேல உள்ள கதாபாத்திரங்களாக நடித்துவந்த தன் பாதையை, ஃபேமிலி சப்ஜெக்டுகளை நோக்கி அஜித் திரும்பிய காலகட்டம் இது. எல்லா இளவட்டங்கள் மாதிரி அஜித்தும் காய்கறி கடைக்குச் செல்வது, அப்பாவிற்கு டிரெயின் டிக்கெட் வாங்கித் தருவது என அப்போதே மிடில் கிளாஸ் வேலையில்லா பட்டதாரி டெம்ப்ளேட்டில் நடித்திருப்பார்.

ரகுவரன், சித்தாரா, கே.விஸ்வநாதன் என இந்தக் குடும்பத்தில் ஸ்ரீதரை தாங்காத ஆளில்லை. விஜி (ஜோதிகா) தன்  வீட்டில் மட்டும் இல்லாமல், தான் செல்லும் இடத்தையும் கலகலப்பாக வைத்துக்கொள்ளும் க்யூட்டான பெண். நண்பர்களாக கேஸட் கடை மணிவண்ணன், விவேக். ராஜீவ், அமெரிக்கா மாப்பிள்ளை, ஜெய் கணேஷ் எனப் படத்தில் எல்லோரும் நல்லவர்கள்தான். ஸ்ரீதர் ஒவ்வொரு முறையும்  சான்ஸ் கேட்டுப் போகும்போது,  ஒரு பெரிய மியூசிக் டைரக்டர்கிட்ட ஸ்ரீதர் காலைப் பிடிச்சுக் கெஞ்சும்போதும் அவனுக்கு ஏற்படும் வலிகள்தான் இப்படத்தின் வெற்றி. இத்தனை வலிகளுக்குப் பிறகும் அவன் முயற்சியைத் தொடர்ந்த காரணம், "எட்டடி தோண்டி தங்கம் கிடைக்கலைனு மனம் தளர்ந்து போகும் ஒருவன், அவனைத் தொடர்ந்து வெறும் இரண்டு அடி தோண்டிய ஒருத்தனுக்குப் பத்தாவது அடியில தங்கம் கெடச்சுது, மனம் தளராமல் முயற்சி செய்யணும்"னு அவரது அண்ணன் சொன்ன, 'கோல்டு அட் 10 ஃபீட்' கதைதான்.  

2000-ம் ஆண்டில் Y2K பிரச்னை வரும், உலகமே அழிந்து விடும், 1999-ம் ஆண்டிற்குப் பிறகு காலண்டர் அச்சடிக்கவில்லை என்பதையெல்லாம் சிறுவயதில் கிசுகிசுத்துக்கொண்ட வதந்தி. அப்படிப்பட்ட ஒரு புது யுகத்தை வரவேற்ற சில பாடல்களில் 'ஆண்டே நூற்றாண்டே' பாடல்தான் டாப். அப்போதே படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் பயங்கர பிரமிப்பையும், பிரமாண்ட அனுபவத்தையும் கொடுத்தது. இப்பாடலில்  வைரமுத்து புது மில்லினியம் எப்படி வேண்டும் என ஒரு விஷ் லிஸ்ட் வைத்திருப்பார். அது எதுவுமே இன்றும் மாறவில்லை என்பதும் நிதர்சனம்.

ஒரு பெரிய இசையமைப்பாளரிடம்  புது  இயக்குநர் தன் படத்தின் சூழ்நிலையைச் சொல்லி ஒரு டியூன் கிடைக்கும்போது, இயக்குநர் சொன்ன அந்த சிச்சுவேஷனுக்கு ஏற்ற பாடல் பாடும்போது, ஶ்ரீதர் தன் வாழ்க்கையை, வலியைப் பாடுவது போலவே இருக்கும். பி.சி.ஶ்ரீராமின் ஒளிப்பதிவு படத்தின் பாடல்களில் மட்டுமல்லாமல், சில காட்சிகளிலும் முத்திரை பதித்திருக்கும். ஜோதிகா - அஜித் டெலிபோனில் பேசும் காட்சி, அதில் இருவருக்குமுள்ள காதலைப் பரஸ்பரம் வார்த்தைகள் என்றில்லாமல் பகிர்ந்து கொள்ளும் ஒரு கான்வர்சேஷன். கனவு போலவே கிளாஸியாக இருக்கும். தனக்கே உரித்தான ஒளியியல் முறையை இப்படத்தில் கடைப்பிடித்திருப்பார், பி.சி.ஶ்ரீராம். அஜித்  பேசி முடித்தபின்தான், 'இது கனவு' என்று தெரியவரும். அஜித் போனில் பேசும் காதல் காட்சிகள் அப்போது மிகவும் பிரபலமாய் இருந்ததனால்கூட, இந்தக் காட்சி இடம் பெற்றிருக்கலாம். 

இசையமைப்பாளர் வாய்ப்புக் கேட்டு இருக்கும் ஒருவனின் கதை எவ்வளவு இசை நிறைந்ததாக இருக்கவேண்டுமோ, அந்தளவுக்கு இருந்திருக்கும் படத்தின் இசை. வேற்று மொழிப் பாடல்களின் ரிப்-ஆஃப் என்ற வாதங்கள் வந்தாலும், அதைத் தமிழ் ரசிகர்களுக்கான ரசிப்புத்தன்மையில் கொண்டுவந்தது தேவாவின் கைவண்னம்..   

இதுமட்டும் இல்லை, இப்படத்தில் வந்த அனைத்து காமெடி டிராக்குகளும் விவேக் எழுதியது. அல்வா வாசு டீ கடையில் உட்கார்ந்து அவ்வப்போது தானும் வேலை செய்கிறேன், வழிப்பறி செய்கிறேன் என்று எல்லா இடத்திலும் மொக்கை வாங்குவது இன்றும் சிரிக்க வைக்கக்கூடிய காமெடிகள். நாம் இன்று பல இடங்களில் கேட்கும் 'முதல்ல வாங்கோணும். அப்புறம் நோண்டோனும்' எனப் பொன்னம்பலம் பேச்சும் கலாய் டயலாக் டிரேட் மார்க்கான ஒன்று. முக்கியமாக, அஜித்குமாருக்கு டைட்டில் கார்டில் 'ஏ.கே' என அறிவித்த முதல் படம் இதுதான். 

இப்படத்தில் கதாநாயகன் ஜெயிப்பது போன்று காட்டினால், பார்க்கும் ரசிகர்களுக்குப் பாசிட்டிவாக இருக்கும் என்றும், வர்த்தக ரீதியாகவும் ஒரு பாசிட்டிவ் சென்டிமென்ட்டாக இருக்கும் என்பதற்காகவும், படத்தில் முன்னதாகக் காட்டப்பட்ட கம்போஸிங் மற்றும் காதல் காட்சிகளைக் கொண்டு படத்தை முடித்திருப்பார்கள். 

இன்று அஜித் குமார் 'தல' என அழைக்கப்பட்டாலும், அவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில்  ஒரு 'பக்கத்து வீட்டுப் பையன்' இமேஜை அடைந்தது 'முகவரி' படம் மூலம்தான்! 25 வயதைத் தாண்டியவர்கள் கனவுகளுக்காக தங்கள் காதலைப் பிரிந்திருந்தால், இந்தப் படத்தை பார்க்கும்போது நிச்சயம் ஒரு 'ரெமினிசென்சாக' இருக்கும்! 

அடுத்த கட்டுரைக்கு