Published:Updated:

``யோவ் என்னய்யா இப்டி லாக் பண்ணிட்டே"ன்னு சொன்னார் பாரதிராஜா! - இயக்குநர் கவிதாபாரதி

``யோவ் என்னய்யா இப்டி லாக் பண்ணிட்டே"ன்னு சொன்னார் பாரதிராஜா! - இயக்குநர் கவிதாபாரதி
``யோவ் என்னய்யா இப்டி லாக் பண்ணிட்டே"ன்னு சொன்னார் பாரதிராஜா! - இயக்குநர் கவிதாபாரதி

கம்யூனிஸ்ட் செயல்வீரர், கவிஞர், சின்னத்திரை இயக்குநர், திரைப்பட நடிகர் எனப் பல்வேறு முகங்களைக்கொண்டவர் கவிதாபாரதி. மருதுவின் ஓவியங்கள், ஈழத்து மரச்சிற்பம் என மிகச் சிறந்த கலைக்கூடமாகக் காட்சியளித்தது அவரது அலுவலகம். தனக்குள் எழுந்த கலை ஆர்வத்தை அழகிய வார்த்தைகளில் விளக்கினார்...

``கவிதாபாரதி' உங்கள் இயற்பெயரா?''

``இல்லை. எனது இயற்பெயர் மூர்த்தி. கவிதையின்பால் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பினாலும், பாரதி மீதும்கொண்ட காதலாலும் `கவிதாபாரதி' என வைத்துக்கொண்டேன்.''

`` `கள்ளப்படம்', `அருவி', `படைவீரன்'... எனக் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களே...?''

``அடிப்படையில் நான் ஓர் இயக்குநர். நடிப்பதற்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மூன்று படங்களுமே நண்பர்கள் மூலம் வந்தவை. மிஷ்கினின் அசிஸ்டென்டாக இருந்த வடிவேலு, என்னைப் பார்க்க விரும்புகிறார் என என் நண்பர்கள் சொன்னார்கள். `என்ன காரணம்?' என்று கேட்டால், `அவர் இயக்க உள்ள `கள்ளப்படம்' என்ற  படத்தில் நடிப்பதற்காக' என்றார்கள். எனக்கு சிரிப்புதான் வந்தது. பிறகு வடிவேலுவைச் சந்தித்து, `என்னை எதற்குத் தேர்ந்தெடுத்தீர்கள்?' எனக் கேட்டேன். `அந்த போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு நீங்க கரெக்டா இருப்பீங்க' என்று கூறி, ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்தார். எனக்கு வேடிக்கையாக இருந்தது. அடுத்ததாகத்தான் `படைவீரன்', `அருவி' பட வாய்ப்புகள் வந்தன. `அருவி' படத்தில் தொலைக்காட்சி இயக்குநராகவே நடிக்கவேண்டும் என்றார்கள். அதற்கு என்னைப் பேசிக்காட்டச் சொல்லி ஓகே செய்தார்கள்.''

``நீங்களே ஓர் இயக்குநர். இயக்குநராக நடிக்கவே டெஸ்ட் வைத்தார்களா?''

``ஆமாம். எனக்காவது பேசச்சொல்லி தேர்வுவைத்தனர். மற்றவர்களுக்கெல்லாம் மூன்று, நான்கு மாதங்களுக்கு பயிற்சியே கொடுத்தார்கள். திட்டமிட்டுப்  எடுக்கப்பட்ட படம் அது.''

``கம்யூனிஸ்ட் இயக்கப் பணியிலிருந்து எப்படித் திரைத் துறைக்கு வந்தீர்கள்?''

``தொடக்கத்தில் ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்தேன். மாதம் நூறு ரூபாய் சம்பளம். அப்போது சிறிய நாடகக் குழுவை வைத்து பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் வீதி நாடகங்கள் அரங்கேற்றுவேன். அப்போதெல்லாம் திரைப்படங்களின் மீது பெரிய ஈர்ப்பு கிடையாது. அந்தக் காலகட்டத்தில்தான் பாலுமகேந்திராவின் `வீடு' திரைப்படம் வந்தது. அதைப் பார்த்த பிறகே திரைப்படம் மீதான எனது பார்வை மாறியது. மக்களிடம் திரைப்படத்தின் மூலம் நம் கருத்துகளைக் கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. நான் திரைத்துரையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், சென்னைக்குச் செல்ல கட்சியில் அனுமதி கேட்டேன். அனுமதி மறுக்கப்பட்டது. 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம் அது. அப்போது பெருந்துறை தொகுதி வேட்பாளராக என்னைத் தயார்படுத்த, கட்சி முடிவெடுத்தது. ஆனால், எனது எண்ணம் வேறு. அதைக் கட்சியில் விளக்கினேன். பணம் சம்பாதிப்பதற்காக திரைத் துறைக்குப் போகவில்லை என்றும், திரைப்படத்தின் மூலம் எனது கருத்துகளை மக்களிடம் கொண்டுசெல்லப்போவதாகவும் கூறி, அவர்களைச் சம்மதிக்கவைத்தேன். அதன் பிறகு, கட்சியிலிருந்து எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு விடுப்பு கொடுத்தார்கள். `சினிமாவில் ஜெயித்தால் ஓகே. இல்லையென்றால் திரும்பி வந்துவிட வேண்டும்' என்று கூறினார்கள்.

ஒருவழியாக அனுமதி பெற்று, சென்னை நோக்கி எனது பயணத்தைத் தொடங்கினால், பணப்பையில் பை மட்டுமே இருந்தது, பணம் இல்லை. செய்வதறியாது, அந்தத் தேர்தலில் சேவல் சின்னத்துக்காக, `உங்கள் சின்னம்... சேவல் சின்னம்' என்று விளம்பரத்தட்டி எழுதிக் கொடுத்தேன். ஒரு தட்டி எழுதினால் ஒன்றரை ரூபாய் கொடுப்பார்கள். அதைக்கொண்டுதான் சென்னைக்கு வந்தேன். திரைத் துறைக்குள் என்னால் உடனே நுழைய முடியவில்லை. சுப.வீ அண்ணன்தான் `சுட்டி' பத்திரிகையில் எனக்கு வேலை வாங்கித் தந்தார். பிறகு, நக்கீரனில் சேர்ந்தேன். அதன் பிறகே தொலைக்காட்சி, சினிமா எனப் பயணம் தொடர்கிறது.''

``தொலைக்காட்சி இயக்குநராகும் வாய்ப்பு எப்படி வந்தது?''

``பாரதிராஜா சார் இயக்கிய `தாஜ்மஹால்' படத்தில் நான் உதவி இயக்குநர். படப்பிடிப்பின்போது அவர் காட்சிகளைப் புதிது புதிதாக உருவாக்கி, அதற்கு உடனே வசனம் எழுதச் சொல்வார். அப்போது நான் வசனம் எழுதுவதைப் பார்த்த ராதிகா மேடம், `சித்தி' தொடருக்கு திரைக்கதை-வசனம் எழுதச் சொன்னார். அதிலிருந்து அடுத்தடுத்த தொடர்களை இயக்கிவருகிறேன்.''

``தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி உங்கள் பார்வை?''

``தொலைக்காட்சித் தொடர்கள் வணிகம் சார்ந்தவை. இவற்றில் க்ரியேட்டிவிட்டிக்கு அதிக வாய்ப்புகள் இருக்காது. இரண்டு விளம்பர இடைவேளைக்கு இடையிலும் மக்களை அமரவைப்பதுதான் தொலைக்காட்சித் தொடர்களின் பணி. அந்தந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகப்படியான பொழுதுபோக்கு இருந்தது. பாண்டி ஆடுவது, தட்டாங்கல் விளையாடுவது தொடர்ந்து நாவல்களை வாசிக்கும் பழக்கம் வந்தது. லஷ்மி, ரமணிசந்திரன் போன்றோரின் நாவல்களை, தொடர்கதைகளை விரும்பி வாசித்தார்கள். வணிகரீதியாக சுஜாதா, பாலகுமாரன் போன்றோரின் புத்தகங்களைவிட, அவர்களின் நாவல்கள்தான் அதிகம் விற்பனையானது.

இதன் அடுத்தகட்டப் பரிமாணமாக, ஏறக்குறைய அந்தத் தொடர்களின் உள்ளடக்கத்தைப் போன்றே தொலைக்காட்சித் தொடர்கள் வருகின்றன. பெண்களின் இருப்பிடத்துக்குள்ளேயே, அவர்களின் வேலை நேரம்போக மீதி நேரத்துக்கான பொழுதுபோக்கு அவர்களுக்குத் தேவையானதாக இருந்தது. அந்த இடத்தைத்தான் தொலைக்காட்சித் தொடர்கள் பிடித்துள்ளன. திரைப்படம் என்றால் எடுத்து முடித்த பிறகுதான் பண்டமாக மார்க்கெட்டுக்கு வருகிறது. ஆனால், தொலைக்காட்சித் தொடர்களில் இன்று எடுத்தது நாளைக்கே ஒளிபரப்புக்கு வருகிறது. ஒரு தொடர் தொடங்கிய முதல் இரண்டு வாரங்களில் நல்ல டிஆர்பி காட்டியாக வேண்டும். அதில் தவறிவிட்டால் தொடர், தொடர்ந்து வர இயலாது. எனவே, இதில் சோதனை முயற்சிக்கு இடமில்லை. ''

``அப்படியானால் தொலைக்காட்சித் தொடர்களில் உங்களை அடையாளப்படுத்தும்படியாக எதுவும் செய்யவே இயலாதா?''

``செய்திருக்கிறேன். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் `எம்.ஜி.ஆரை சுட்ட கதை' என்ற தொடர் பண்ணினேன். அடுத்து, `ஈழம் நேற்றும் இன்றும்' என்ற தொடர் செய்தேன். அதில் ஈழத்தில் இருக்கும் தமிழர்களின் வரலாற்றுப் பின்னணி தொடங்கி, விடுதலைப்புலிகளின் தோற்றம் வரை நீண்டதொரு வரலாற்றைக் காட்சிப்படுத்தினேன். பொதுவாக, இலங்கையில் தமிழர்கள் வந்தேறிகள் என்றும், பிழைக்கப்போனவர்கள் எப்படி நாடு கேட்கலாம் என்பதுமே பரவலான கருத்தாக இருந்தது. ஆனால், உண்மையில் ஈழத்தமிழர்கள் அங்கேயே தொன்மக்குடிகளாக இருந்தவர்கள்தான்.

நம் நாட்டிலிருந்த விஜயன் என்கிற அரசகுமாரன், யாருக்கும் அடங்காதவனாக, குற்றச்செயல்கள் புரிபவனாக இருந்தான். அவனுக்கு தண்டனை கொடுக்கும்விதமாக, அவனையும் அவனோடு சேர்ந்து 700 குற்றவாளிகளையும் சுக்கானில்லாத கப்பலில் ஏற்றி அனுப்பினார்கள். அது கடலில் மூழ்கினாலும் மூழ்கட்டும் அல்லது எங்கேயாவது கரை ஒதுங்கினால் பிழைத்துப்போகட்டும் என்பதே அந்தத் தண்டனை. அந்தக் கப்பல் இலங்கையில் கரை ஒதுங்கியது. அவர்கள்தான் இலங்கையில் குடியேறி, அங்கு வாழ்ந்துவந்த தமிழர்களோடு உறவாடி, குடும்பம் நடத்தி, சிங்களவர்கள் என்கிற இனம் அங்கே உருவானது. ஆக, இலங்கையிலேயே இருந்த தொன்மக்குடி, தமிழர்களே என்ற உண்மையை அதில் காட்டியிருந்தேன்.

இவை எல்லாம் தொலைக்காட்சித் தொடர்களின் வழக்கமான வடிவமைப்பைத் தாண்டி நான் செய்தவை. பிழைப்பு சார்ந்து இயங்கினாலும் அதிலும் நம்முடைய சுயதிருப்திக்கான சிலவற்றைச் செய்ய முடிகிறது. நான் வசனம் எழுதிய தொடர் ஒன்றில், அவ்வப்போது நிகழ்கால அரசியலைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். பெரியார் முதல் பிரபாகரன் வரையிலான கருத்துகளையும் அவ்வப்போது பயன்படுத்தியிருக்கிறேன். அப்படிக் கருத்துச் சொல்வது துருத்திக்கொண்டு தெரியாது. கொடுக்கப்பட்ட சட்டகத்துக்குள் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கும். இந்தத் தளத்திலிருந்து அவ்வளவுதான் நம்மால் செய்யமுடியும் என்பதோடு திருப்தியடைந்துகொள்ளவேண்டியதுதான்.''

``தொலைக்காட்சி இயக்குநரான நீங்கள், நடிக்க வந்துவிட்டீர்கள். நிறைய திரைப்பட இயக்குநர்களே நடிகர்களாகிறார்களே. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

``இதற்கு ஒற்றைக்காரணம் இருக்க முடியாது. ஒன்று, என்னைப்போல நட்புக்காக நடிக்க வருபவர்களாக இருக்கும். இரண்டாவது, நாமே நடிகராகும்போது காட்சியைப் புரிந்து நடிப்பது மிகவும் எளிது. அதேபோல நடிப்பதில் கூச்சமில்லாதவர்களாகவும் இருக்கலாம். அதனால் நாமே நடித்தால் என்ன என்று நடிப்பிலும் இறங்கியிருக்கலாம். அனைத்தும் நல்ல விஷயமே. நடிகர்கள் இயக்குநர்களாகும்போது இயக்குநர்கள் நடிகர்களாக வேண்டியதுதானே!''

``உங்கள் குருநாதர் பாரதிராஜா பற்றி..?''

``பாரதிராஜா சார், இரண்டு மாத காலம் அமெரிக்க அரசாங்கத்தின் விருந்தினராக அமெரிக்கா சென்றுவந்தார். அதை ஒரு பத்திரிகையில் தொடராக எழுதினார். அப்போது அவருக்கு எழுத நேரமில்லாததால், அவர் சொல்லச் சொல்ல நான் எழுதினேன். என்னை அறிவுமதி அண்ணன்தான் பாரதிராஜா சாரிடம் அறிமுகப்படுத்திவைத்தார். அந்த அறிமுகத்துக்குப் பிறகு `தாஜ்மஹால்' படத்தில் அவரிடம் பணியாற்றினேன். அதன் பிறகு தொடர்ச்சியாக அவரோடு இயங்காமல் அவ்வப்போது இணைவதும், பின்னர் வேறு வேலையில் ஒதுங்குவதுமாகவே இருந்துவந்தேன். இருந்தாலும், அவர்தான் என் குருநாதர்.''

`` `படைவீரன்' படத்தில் பாரதிராஜாவை நடிக்கவைத்ததில் உங்களுடைய பங்களிப்பும் இருந்ததாமே?''

`` `படைவீரன்' படத்தின் தயாரிப்பாளர் மதிவாணன், என் நண்பர். நான் வாங்கிய புத்தகத்தை அவரிடம் கூறி, `நீங்கள் வாங்கவேண்டாம், நான் படித்துவிட்டுத் தருகிறேன்' என்பேன். அதேபோல் அவர் வாங்கிய புத்தகங்களை எனக்கு வாசிக்கக் கொடுப்பார். அப்படி ஒரு நட்பு. அவரது தம்பிதான் இயக்குநர் தனா. அப்போது அந்தப் படத்தின் கதையை என்னிடம் கொடுத்து, வாசித்துக் கருத்துச் சொல்லக்கேட்டார். நானும் கருத்துச் சொன்னேன். அப்போது என்னிடம், `இந்தப் படத்தில் உங்களை நடிக்கச்சொன்னால், எந்தப் பாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பீங்க?' என்று கேட்டார். நான் பெரியசாமி என்ற பாத்திரத்தைச் சென்னேன். உடனே, `நான் அந்தப் பாத்திரத்தில்தான்  உங்களை நடிக்கவைக்கலாம்னு இருக்கேன்' என்று சொன்னார். அப்படித்தான் அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

அடுத்து, அந்தப் படத்தில் சாதியை மறுத்துப் பேசக்கூடிய வலுவான ஒரு பாத்திரத்துக்கு வேறு ஒரு நடிகரைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். நான் `அது சரியா வராது. அந்தக் கதாபாத்திரத்துக்கு பாரதிராஜா பேசினால்தான் சரியாக இருக்கும்' எனச் சொன்னேன். உடனே அவரும்கூட, `நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், பாரதிராஜா இந்தப் பாத்திரத்தில் நடிப்பாரா?' என்று சந்தேகத்துடன் கேட்டார். `நான் வேண்டுமானால் பாரதிராஜாவிடம் பேசுவதற்கு பத்து நிமிட நேரம் வாங்கித் தருகிறேன். அதற்குள் அவரிடம் கதையைச் சொல்லி சம்மதிக்க வைக்கவேண்டியது உங்கள் பொறுப்பு' என்றேன்.

அதேபோல பாரதிராஜாவிடம் வேறெந்த காரணத்தையும் சொல்லாமல், `இவர் மணிரத்னத்தின் அசிஸ்டென்ட். உங்களிடம் ஒரு லைன் சொல்லணும்னு ஆசைப்படுறார்' என்று மட்டும் அறிமுகப்படுத்திவைத்தேன். அவர் கதை சொல்லவும், `நல்லருக்கேய்யா' என்றவர், `உனக்கு எந்த ஊர்?' என்று இயக்குநரிடம் விசாரித்தார். அவர் தேனி என்றதும், `அதானய்யா பார்த்தேன். கதை ஹெல்தியா இருக்கேய்யா' என்றார். `அதுல அந்த கிருஷ்ணன் கேரக்டரை நீங்கதான் பண்றீங்க' என நான் சொன்னேன். `யோவ் என்னய்யா இப்டி லாக் போடுற?' என்றார். `சரி, இன்னொரு நாள் வந்து முழுக்கதையைச் சொல்லு' என்றவர், அதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.''

`` `படைவீரன்' படம், ஆணவக்கொலைக்கு எதிராகப் பேசுகிறது. இதுபோல, திரையுலகில் சமூகச் சிந்தனையுள்ள திரைப்படங்களின் வரவுக்கான வாய்ப்பு எப்படியுள்ளது?''

``அந்தந்தக் காலகட்டங்களில் இதுபோன்ற படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. கதாநாயகர்களுக்கான படங்களும் வருகின்றன. கதையை மட்டுமே முன்னிறுத்தும் சமூக நோக்குள்ள படங்களும் வந்துகொண்டேதான் இருக்கின்றன.''

`` `படைவீரனி'ல் தனித்துவமான வில்லனாக அடையாளப்படுத்திவிட்டீர்கள். இனி திரைப்படங்களில் நடிக்க முயல்வீர்களா?''

``எனக்கான முகத்தைப் பதிவுசெய்தாயிற்று. இனி தொடர்ந்து முயல்வேன்.''

அடுத்த கட்டுரைக்கு