Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"எம்.ஜி.ஆர் கொடுத்த வாழ்க்கை, ரஜினியின் சிபாரிசு, அஜித்தின் டெடிகேஷன்..!" - 'தளபதி' தினேஷ்

சின்ன வயசுலே ஸ்கூல் படிக்கும்போது அத்லெட் பிளேயரா இருந்தேன். ஏன்னா, எனக்கு படிப்பைவிட ஸ்போர்ட்ஸ்தான் ஆர்வம் அதிகம். படிப்புல கவனம் செலுத்தாம கராத்தே, ஜிம்... இப்படித்தான் சுத்திக்கிட்டு இருந்தேன். அப்போ, எனக்கு ஃபைட்டராக சினிமாவில் சேரணும்னு ஆசை வந்துச்சு. ஆனா, சினிமாவுல எனக்கு யாரையும் தெரியாது. டெய்லி சினிமா ஃபைட்டர் யூனியனுக்குப் போயிட்டு வருவேன். ஆனா, என்னை யாரும் கண்டுக்கக்கூட மாட்டாங்க. அந்த நேரத்தில் உடையார்னு ஒருத்தரிடம் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். அவரிடம் என் ஆசையைச் சொன்னேன். அவர் அப்போது தமிழ்நாடு முதல்வரா இருந்த எம்.ஜி.ஆருக்குப் பழக்கம். அவர் சிபாரிசு பண்ணி, எம்.ஜி.ஆரிடமிருந்து ஒரு கடிதம் வாங்கிக் கொடுத்தார். அந்தக் கடிதம் என் வாழ்க்கையின் தலையெழுத்தையையே மாற்றிவிட்டது'' -  என்று பேச ஆரம்பிக்கிறார் 30 வருடங்களாக சினிமாவில் பைட்டராக, ஸ்டன்ட் இயக்குநராக, நடிகராக இருக்கும் தளபதி தினேஷ். 

தளபதி தினேஷ்

"என் வாழ்க்கையில் ரஜினி சாரை எப்போதும் மறக்கமாட்டேன். 1986- ம் ஆண்டு நான் சினிமாவுக்கு வந்தேன். நிறைய படங்களில் ஃபைட் மாஸ்டராக வேலை பார்த்திருந்தாலும் என்னைப் பலருக்கு தெரியவைத்த படம், 'தளபதி'தான். இந்தப் படத்துக்கு பிறகுதான் என் பெயர் 'தளபதி தினேஷ்'னு மாறியது. சூப்பர் சுப்பராயன் மாஸ்டரிடம்தான் ஃபைட்டராக வேலை பார்த்தேன். அவரிடமிருந்துதான் தொழில் கற்றுக்கொண்டேன். சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் அப்போது மணிரத்னம் சார் படங்களில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது என்னை 'தளபதி' படத்தின் டிஸ்கஷனுக்காக, மணி சாரை பார்க்கக் கூட்டுக்கிட்டு போனார். அங்கே என்னைப் பார்த்த மணி சார் 'தளபதி' படத்தின் முக்கியமான ஃபைட் சீனில் என்னை கமிட் செய்தார். அப்புறம் நிறைய படங்கள் என்னைத் தேடி வர ஆரம்பித்தது. 

'பாட்ஷா' என் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படம். இந்தப் படத்துக்காக என்னை கமிட் செய்தது ரஜினி சார்தான். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் 'ஜிம்பாடி-யா இருக்கிற நாலு பேர் எனக்குப் பின்னாடி நின்னால் நல்லாயிருக்கும்'னு சொல்லி கமிட் செய்தார். இந்தப் படத்தில் எனக்குப் பெரிய ஸ்கோப் இல்லை. ஆனா, படம் முழுக்க ரஜினி சாருடன் டிராவல் ஆவோம். இந்தப் படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. 

'எஜமான்' படத்திலும் முக்கியமான ஃபைட் சீன் எனக்குக் கிடைச்சது. அதேமாதிரி ஃபைட் மாஸ்டராக இருப்பதைவிட ஃபைட்டராக இருப்பதுதான் ரொம்பக் கஷ்டம். ஏன்னா, ஃபைட் மாஸ்டர் க்ரியேட்டிவா யோசிப்பார். ஃபைட்டர்தான் உயிரைக்கொடுத்து நடிப்பார். கீழே அடிப்பட்டு விழுவதற்கு எப்போதும் ஃபைட்டர் பயப்படமாட்டார். ஏன்னா, இன்னைக்குக் கீழே விழுந்தால்தான், நாளைக்கு டைரக்டர் சார் நம்மளை ஞாபகம் வெச்சு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூப்பிடுவார்னு நினைப்பாங்க. அப்படி நான் வாங்கிய வீரத்தழும்புகள் அதிகம். என் முட்டியில், முதுகுத் தண்டில் நிறைய ஆபரேஷன் நடந்திருக்கு. ஆனா, எதுக்கும் பயப்படாம ஃபைட் சீன்ல நடிப்பேன். ஃபைட் மாஸ்டராக ஆனவுடனே ரஜினியின் 'சந்திரமுகி' படத்துக்கு வொர்க் பண்னேன். இந்தப் படத்துல ரஜினியில் ஃபைட் சீனுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். ரஜினி காலைத் தூக்கி நிற்கும் ஒரு காட்சிக்கு தியேட்டரில் விசில் பறந்துச்சு. அதேமாதிரி அஜித் சார் 'பரமசிவன்', 'அசல்' படங்களில் வொர்க் பண்ணியிருக்கேன். அவர் உடம்பில் நிறைய ஆபரேஷன் நடந்திருந்தாலும், சண்டைக் காட்சிகளுக்கு நாம என்ன சொல்றோமோ, அதை அப்படியே ஃபாலோ பண்ணுவார், அஜித். 

சந்திரமுகி சண்டைக்காட்சி

ஃபைட் மாஸ்டராக வேலை செஞ்சுக்கிட்டு இருக்கும்போதே நிறைய படங்களில் குணச்சித்திர கேரக்டரில், காமெடி ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படி நான் நடித்த படங்களின் எண்ணிக்கையே ஆயிரத்தைத் தொடும்.  என்னைத் தொடர்ந்து, என் பசங்களும் இப்போ ஃபைட் மாஸ்டராக சினிமாவில் இருக்கிறார்கள். அவர்களை நான் நல்லா படிக்க வைத்தேன். ஆனா, இருவரும் சினிமா ஷூட்டிங் பார்க்க வரும்போது, சினிமாவில் ஃபைட்டர் ஆகணும்னு ஆசைப்பட்டு, இந்தத் துறைக்கே வந்துட்டாங்க. ஆனா, வீட்டுல அம்மா, மனைவி ரெண்டுபேருக்கும் பசங்க இப்படி இருக்கிறது பிடிக்கலை. ஆனா, இன்னைக்கு அவங்களை இந்தளவுக்குக் கொண்டுவந்ததுக்குக் காரணமே சினிமாதானே... அதனால, நான் எந்த மறுப்பும் சொல்லலை. இப்போ, சுந்தர்.சி சாரோட 'கலகலப்பு 2'  படத்தை முடிச்சேன், படமும் ரிலீஸ் ஆயிடுச்சு. சுந்தர்.சி சார் எனக்கு நல்ல பழக்கம். அவருடைய 'நந்தினி' சீரியலுக்கும் என்னை ஃபைட் மாஸ்டரா கமிட் பண்ணியிருக்கார். 'நந்தினி' சீரியல் மற்ற சீரியல் மாதிரி இல்லாம, நிறைய சண்டைக் காட்சிகளோட இருக்கும். அதனால, எனக்கும் அதுல வொர்க் பண்றது புது அனுபவம்தான். 

இப்போ சண்டைப் பயிற்சியாளர்களா வர்ற பசங்களும் சரி, ஹீரோவா நடிக்கிறவங்களும் சரி... சண்டைக் காட்சிகளைப் பற்றி தெரிந்துகொண்டு, நல்லா பிராக்டிஸ் பண்ணிட்டு வர்றாங்க. ஆனா, நாங்க ஃபைட்டராக வந்த காலத்தில் எல்லாம் இது எல்லாம் ரொம்பக் கஷ்டம். தவிர, அப்போது ஜிம் அதிகமாக கிடையாது. ஏதாவது ஒரு மைதானத்தில்தான் வொர்க் அவுட் பண்ணுவோம். அந்தக் காலத்திலேயே சிக்ஸ்பேக் வச்ச பசங்க நாங்க.'' எனச் சிரிக்கிறார், தளபதி தினேஷ். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்