"ரகுல் ப்ரீத் சிங் - சாய் பல்லவி காம்போ!'' - சூர்யா-செல்வராகவன் புராஜெக்ட் சுவாரஸ்யங்கள் #Surya36

செல்வராகவன் இயக்க, சூர்யா நடித்து வரும் திரைப்படத்தில் நாளுக்குநாள் புதுப்புது விஷயங்கள் கூடிக்கொண்டே வருகிறது. இத்திரைப்படத்தை 'அருவி', 'தீரன்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தத் திரைப்படத்திற்கு 'சூர்யா-36' என ஹாஷ்டேக் கொடுத்து, கடந்த புத்தாண்டில் பூஜையுடன் தொடங்கினார்கள். 'இறுதிச்சுற்று', 'இறைவி' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவாளராகவும், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராகவும், ஆர்.கே.விஜய்முருகன் கலை  இயக்குநராகவும் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். படத்தின் சில சுவாரஸ்யங்கள் இதோ...

சூர்யா 36

செல்வராகவன் சூர்யா இணையும் முதல் படம் இது. இதனால் இப்படத்திற்குப் பரபரப்பும், பெரிய எதிர்பார்ப்பும் வலைதளங்களில் இருக்கிறது. எதிர்பார்ப்பைப்  பூர்த்தி செய்யும் வகையில், இப்படத்தின் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா.

செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணியில் 'துள்ளுவதோ இளமை' முதல்  'யாரடி நீ மோகினி' வரை... இவர்களது படங்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட் லிஸ்டில் இருக்கிறது. 'துள்ளவதோ இளமை' மற்றும் 'யாரடி நீ மோகினி' ஆகிய படங்களுக்குக் கதை, திரைக்கதை மட்டும் செல்வராகவன் எழுதியிருந்தார். கடைசியாக, 'யாரடி நீ மோகினி' படத்தின் தெலுங்கு வெர்ஷனில் யுவன் - செல்வராகவன் கூட்டணி  இணைந்திருந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு, மேலும் ஒரு கொண்டாட்டமாய் 'சூர்யா 36' அமைந்திருக்கிறது. இதுவரை சூர்யா - யுவன் ஷங்கர் ராஜா காம்போவில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் அபிமானத்தை வென்றுள்ளதும் இந்தக் கொண்டாட்டத்திற்குக் காரணம். ஜனவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பின் முதல் ஷெட்யூலை வேகமாக முடித்தனர். 

சூர்யா 36

ஏற்கெனவே ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். மலையாளம், தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்துவரும் சாய் பல்லவி, நேற்று முன்தினம் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். சிறுவயதிலேயே சூர்யாவின் தீவிர ரசிகையான  சாய் பல்லவிக்கு சூர்யாவுடன் நடிக்கும் கனவு நிஜமானது போல் பெரும் மகிழ்ச்சியுடன் நடித்து வருவதாகவும், ஷூட்டிங் ஸ்பாட் சாய் பல்லவியின் 'ஃபேன் கேர்ள்' மொமென்ட்டில் கலகலப்பாக நடந்து வருகிறது. 

சாய் பல்லவி

மேலும், படத்தில் யுவன் இசையில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற உள்ளதாகவும், ஒவ்வொரு பாடலும் யுவன் - செல்வாவின் கோல்டன் காம்போவில் இதற்கு முன் வந்த பாடல்களையெல்லாம் மிஞ்சும் வகையில் இருக்கும் எனவும் இசை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.                

படத்தில் பல பிரத்யேகக் காட்சிகளும், மக்கள் கூட்டம் அதிகம் இடம்பெறும் காட்சிகளும் இப்படத்தில் அதிகமாய் இருப்பதால், பொது மக்களுக்கும், படக்குழுவுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், சென்னை சாலிகிராமம் பகுதியில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் கதை அம்பாசமுத்திரம் பகுதிகளில் நடப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளதால், மிக நேர்த்தியான முறையில் அம்பாசமுத்திர வீதிகள், வீடுகள், கோயில்கள் என ஒரிஜினல் அம்பாசமுத்திரத்தையே மிஞ்சும் அளவுக்கு செட் அமைத்திருக்கிறார், கலை இயக்குநர் ஆர்.கே.விஜயமுருகன். கிட்டத்தட்ட 20 நாட்கள் கொண்ட இந்த ஷெட்யூலின் படப்பிடிப்பு முழுவதும், இந்த அரங்குகளிலேயே நடைபெறவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, 'சூர்யா 36' படக்குழு.

இந்தப் படத்தை தீபாவளி ரிலீஸாக திரைக்குக் கொண்டுவரலாம் என்ற முனைப்பில் ஜெட் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். தவிர, அஜித் - சிவா கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் 'விசுவாசம்' திரைப்படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 62' ஆகிய இரு படங்களும் 'தீபாவளி ரிலீஸ்' என்ற முடிவோடு தயாராகிக்கொண்டிருப்பதால், 2018 தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும்!

 

 

 
       

Do you like the story?

Please Appreciate the Author by clapping!