Published:Updated:

வித்யா பாலன் இடத்தில் ஜோதிகா, சிறுவயது சூர்யா இப்போ ஹீரோ- #QuickSeven

சுஜிதா சென்
வித்யா பாலன் இடத்தில் ஜோதிகா, சிறுவயது சூர்யா இப்போ ஹீரோ- #QuickSeven
வித்யா பாலன் இடத்தில் ஜோதிகா, சிறுவயது சூர்யா இப்போ ஹீரோ- #QuickSeven

மீபத்தில் வெளியான 'நாச்சியார்' திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து மக்களிடையே வரவேற்பைப் பெற்றார் ஜோதிகா. திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் நடிப்பை நிறுத்தியிருந்த இவர், '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்' ஆகிய படங்களின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வந்தார். இந்நிலையில், இந்தியில் கடந்த ஆண்டு வெளியான 'துமாரி சுலு' படத்தின் தமிழ் ரீமேக்கில் வித்யா பாலன் கேரக்டரில் ஜோதிகா நடிக்க இருக்கிறார். இதனை ராதாமோகன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஜோதிகா 'மொழி' படத்தில் ராதாமோகன் இயக்கத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

'தீரன்- அதிகாரம் ஒன்று' படத்துக்குப் பிறகு தமிழில் அதிகமான படங்களில் ஹீரோயினாக கமிட்  ஆகிவருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் 'ஸ்பைடர்' படம் தோல்வியைத் தழுவியதை அடுத்து, இவர் தனக்கான மார்க்கெட்டை இழந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின. மேலும், இவர் 'விஜய் 62' படத்தில் கமிட்டாகி வெளியானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'அய்யாரி' என்ற இந்திப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சில படங்களில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகின. இதற்கு ரகுல் மறுப்பு தெரிவித்துள்ளார். "நான் நடிக்கும் கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் அவற்றைத் தேர்ந்தெடுப்பேன். என் படங்களில் இரண்டாவது ஹீரோயின் இருந்தாலும், நான் தேர்ந்தெடுத்த கதாபாத்திரம் வலுவிழந்துவிடாதபடி பார்த்துக்கொள்கிறேன். மற்றொரு நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து, என்னை இரண்டாவது கதாநாயகியாக மாற்றினால், அந்த மாதிரியான படங்களில் இருந்து வெளியே வந்துவிடுவேன்" என்று தெரிவித்துள்ளார். 

பாலா இயக்கத்தில், சூர்யா நடித்து 2001-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நந்தா'. இதில் சிறு வயது சூர்யாவாக நடித்த வினோத் கிஷன் தற்போது '6-அத்தியாயங்கள்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். 'நந்தா'வுக்குப் பின் 'சமஸ்தானம்', 'சேனா' ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இது தவிர்த்து, 'நான் மகான் அல்ல' படத்தில் வில்லனாகவும், 'ஜீவா', 'விடியும் முன்', 'நெஞ்சில் துணிவிருந்தால்' ஆகிய படங்களிலும் தனது நடிப்பை வெளிக்காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

'வேலைக்காரன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்த பகத் ஃபாசிலை ரசிகர்கள் வரவேற்றதோடு மட்டுமல்லாமல், அவரை அடுத்தடுத்த படங்களிலும் எதிர்பார்க்கத் தொடங்கினர். இந்நிலையில், அவர் மணிரத்தினத்தின் 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் கமிட்டாகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கு பதில் அருண் விஜய் கமிட்டாகி இருக்கிறார். அதோடு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் ஃபகத் ஃபாசில் நடித்து வருகிறார்.

றைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமான நடிகை ஜெயப்ரதா. தமிழ் தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்தவர். சினிமாவில் தனக்கான வாய்ப்புகள் குறைந்த நேரத்தில் அரசியலிலும் பிரவேசித்தவர். தற்போது இவர் மீண்டும் சினிமாவுக்குள் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'கேணி' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயப்ரதா. இது மலையாளத்தில் 'கிணர்' என்கிற பெயரில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, தான் நிறைய வித்தியாசமான ரோல்களில் நடிக்க ஆர்வம் கொண்டிருப்பதாகவும், இளைய தலைமுறையினர் அதற்கான வாய்ப்புகளைத் தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் ஜெயப்ரதா. 

மிழில் 'மெர்சல்' படத்துக்குப் பிறகு தெலுங்கில், 'ஆவ்' என்ற படத்தில் நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். பெண்களை மையப்படுத்தி எடுத்துள்ள இந்தப்படத்தில், காஜலுடன் சேர்ந்து நித்யா மேனன் மற்றும் ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான முதல் வாரத்திலேயே அரை மில்லியன் டாலர் வசூல் செய்தது. விரைவில் ஒரு மில்லியன் டாலர் வசூலைத்தொட இருக்கிறது. இதனால் இப்படத்தைத் தயாரித்த நானி மகிழ்ச்சியில் உள்ளார். மேலும், காஜல் அகர்வால் ட்விட்டரில், "அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார். 

'மதுரை சம்பவம்', 'சிவப்பு எனக்குப் பிடிக்கும்', 'தொப்பி' ஆகிய படங்களை அடுத்து யுரேகா இயக்கிவரும் படம், 'கட்டுப்பய சார் இந்த காளி'. 'மத்திய சென்னை' படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய்வந்த் இப்படத்தில் ஹீரோவாக நடித்து, படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ஐரா நடிக்கிறார். "20 ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கத்தில் நடத்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இப்படம். இதில் மர்மநபர் ஒருவர், ஓர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பைக்கை தீயிட்டு கொழுத்திச் சென்றார். அவர் ஏன் அப்படி செய்தார், அந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் என்னென்ன, என்பதை த்ரில்லர் கதையாக சொல்லியிருக்கிறேன்'' என்று கூறியுள்ளார் யுரேகா.