Published:Updated:

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர்! Season 3, episode 5

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர்! Season 3, episode 5

Published:Updated:
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

'ரீமேக் முத்திரை'... உடைத்த கதை!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... நம்ம சந்திப்பின் கடைசி எபிசோட் இது. ‘ஜெயம்’ ராஜா, மோகன் ராஜாவா மாறின ‘தனி ஒருவன்’ கதையைச் சொல்றேன்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

‘ஜெயம்’ படத்துக்குப் பிறகு, ரவிக்கு நிறைய கதைகள் வந்தாலும், அதெல்லாம் அவனோட திறமைக்குத் தீனிபோடுற அளவுக்கு இல்ல. அதனாலதான், ரவியோட அடுத்த படத்தையும் நானே எடுக்கலாம்னு முடிவெடுத்தேன். தெலுங்கு ஹிட் படமான ‘அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி’ படத்தை, தமிழ்ல ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’யா ரீமேக் செய்து ரிலீஸ் பண்ணினோம். தெலுங்கு வெர்ஷன்ல இல்லாத பல ஸீன்களை இதில் சேர்த்திருந்தேன். டான்ஸ், ஃபைட்னு எல்லா ஏரியாவிலும் சிக்ஸர் அடிச்சிருப்பான் ரவி. அதைத் தொடர்ந்து மற்ற இயக்குநர்களோட படங்களில் ரவி நடிச்சாலும், மறுபடியும் `ரீமேக் - ரவி - நான்’ கூட்டணியை உருவாக்கினோம். அதுதான், ‘உனக்கும் எனக்கும்’. இந்தப் படத்தோட ஹிட்டுக்குப் பிறகு, எழில் இயக்கிய, ‘தீபாவளி’ ஹிட் மூவியில் ரவி நடிச்சான்.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

அடுத்து ‘பொம்மரில்லு’ தெலுங்குப் படத்தோட ரீமேக்கான ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில், மறுபடியும் நானும் ரவியும் கைகோத்தோம். தொடர்ந்து பிற இயக்குநர்களோட கைகோத்து, ‘தாம் தூம்’, ‘பேராண்மை’ன்னு வித்தியாசமான படங்கள்ல கலக்கினான் ரவி. அந்தச் சமயத்துலதான், ஒரு நிகழ்ச்சியில நானும், நடிகர் விஜய் சாரும் சந்திச்சோம். ‘என் பொண்ணு உங்க ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தை ப்ளே செய்தாதான், காலையில சாப்பிடவே செய்றா. நல்ல கதை இருந்தா சொல்லுங்க, நாம ஒரு படம் பண்ணலாம்’னு அவர் சொல்ல, அவரோட மனைவி சங்கீதா சிஸ்டர், ‘ஆமாண்ணா! எங்க எல்லாருக்கும் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர் கேட்ட மாதிரி நல்ல கதை இருந்தா உடனே சொல்லுங்க’னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது.

விஜய் சாருக்கு என்ன கதைனு தேடினப்போ, தெலுங்குல 15 வருஷத்துக்கு முன்னாடி வெளியான ‘ஆசாத்’ படத்தின் கதையின் கரு சரியா இருக்கும்னு மைண்டில் க்ளிக் ஆச்சு. விஜய் சார்கிட்ட சொன்னேன். ‘நல்லாயிருக்கு. இதில் நிறைய மாற்றங்கள் செய்யலாம்’னு சொன்னார். நாலு மாசமா வொர்க் செய்து, ஆக்‌ஷன் மாற்றங்களோட அந்த ஸ்கிரிப்ட் வேலையை முடிச்சிட்டு பார்த்தப்போ, அதை விஜய் சார் மட்டுமே செய்ய முடியும்ங்கிற அளவுக்கு செம மாஸ் படமா உருவாகியிருந்தது. அதுதான் ‘வேலாயுதம்’. அந்தப் படத்துக்காக அவர்கூட வொர்க் செய்த ஒவ்வொரு நாளுமே எனர்ஜெட்டிக் எக்ஸ்பீரியன்ஸ். ‘வேலாயுதம்’ ஹிட் ஆச்சு.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

அடுத்ததா, தெலுங்கு ‘கிங்’ படத்தை ‘தில்லாலங்கடி’யா ரவியை வெச்சு ரீமேக் செய்தேன். என்னோட மற்ற படங்களை ஒப்பிடும்போது, ‘தில்லாலங்கடி’யின் வசூல் கொஞ்சம் குறைவு என்பது வருத்தமா இருந்தது. அந்தப் படத்தோட நீளத்தை கொஞ்சம் குறைச்சு, ஹீரோ கதாபாத்திரத்தை இன்னும் பெட்டரா செய்திருக்கலாம்னு படம் வெளியான பிறகு தோணுச்சு. தொடர்ந்து, டைரக்டர் குரு ரமேஷ் கேட்டதால அவரோட ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்தில் நான் நடிச்சேன். அதுக்குப் பிறகு பெரிய இடைவெளிவிட்டு, போன வருஷம் ‘தனி ஒருவன்’ ரிலீஸ்.

இந்த இடைவெளியில், ‘ரீமேக் ராஜா’னு என் மேல் குத்தப்பட்ட முத்திரையை உடைக்க சவாலா வேலைகள் செஞ்சேன். ‘ஒரு படத்தோட கதையை முறைப்படி விலைகொடுத்து வாங்கி ரீமேக் பண்றது தப்பில்லை. ஆனா, திருட்டுத்தனமா ‘ஃப்ரீமேக்’ செய்றதுதான் தப்பு. ‘அனுமன் ஜங்ஷன்ல’ இருந்து ‘வேலாயுதம்’வரை உன்னோட ஏழு படங்களையும் முறைப்படி விலைகொடுத்து வாங்கிதான் ரீமேக் செய்திருக்கோம்’னு அப்பா பூஸ்ட்-அப் செய்துட்டே இருந்தாலும், நான் சமாதானமாகல. என் வாழ்க்கையில் இருந்து, கதை தேடினேன்.

என்னோட பள்ளிப்பருவ நண்பன், முபாரக். ப்ளஸ் டூ முடிச்சுட்டு தெளிவான சிந்தனையோட வாழ்க்கையில பயங்கரமா போராடினான். மரைன் பயாலஜி படிச்சவன், ரெண்டு வருஷம் வெளியுலகத் தொடர்பே இல்லாம சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்குப் படிச்சான்.

ஐ.எஃப்.எஸ். ஆனான். யாருக்காகவும், எதுக்காகவும் தன்னை மாத்திக்காம, தன்னோட வேலையில் நேர்மையோடவும் தனித்தன்மையோடவும் இருப்பான். என் 30 ஆண்டுகால நண்பன் முபாரக் தந்ததுதான், ‘தனி ஒருவ'னுக்கான ஸ்பார்க். அவனை டார்கெட் செய்துதான் ‘மித்ரன்’ கேரக்டரை வடிவமைச்சேன். சமூகம் சார்ந்த என் எண்ணங்களை, அக்கறையைக் கொட்டி ‘தனி ஒருவன்’ கதைக் கருவை உருவாக்கினேன்.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இப்படி முபாரக்கும் என் மூளையும் சேர்ந்த கலவையா 2009-ல் உருவான ‘தனி ஒருவனை’ உருவாக்க, மூன்று வருட உழைப்பைக் கொடுத்தேன். ஸ்கிரிப்ட்டுக்கு ஒன்றரை வருஷம், படத்தை எடுத்து முடிக்க ஒன்றரை வருஷம்னு உழைச்சேன்.

ரவியைத் தவிர, மத்த எந்த ஹீரோவையும் இந்தக் கதைக்காக நான் நினைக்கல. அடுத்ததா, வில்லன் ‘சித்தார்த் அபிமன்யூ’வுக்கு நான் விட்ட அம்பு, அரவிந்த்சாமி சாருக்கு! பல இயக்குநர்கள் தொடர்ந்து கேட்டுட்டே இருந்தும் பிடிகொடுக்காம இருந்த அவருக்கு, ‘தனி ஒருவன்’ ஸ்கிரிப்ட் பிடிச்சிருந்தது. அவரும், கதைநாயகனுக்கு இணையான ஒரு கேரக்டருக்குதான் காத்திட்டு இருந்தார். தன் அறிவை தவறான வழியில பயன்படுத்துற புத்திசாலி பிசினஸ்மேன் கேரக்டர் அது. நாம எல்லோரும் ரசிச்ச அந்த ஹீரோவுக்கு... வில்லன் ‘சித்தார்த் அபிமன்யூ’வை அவ்ளோ பிடிச்சிருந்தது. தன்னோட ஸ்மார்ட் டெலிவரியால மக்களுக்கும் ‘சித்தார்த் அபிமன்யூ’வை கில்லிங் டார்லிங் ஆக்கிட்டார் அரவிந்த்சாமி சார்.

‘தனி ஒருவன்’ படத்துல மியூசிக்குக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்பதால, அணுகிய இசையமைப்பாளர்கள் யாரும் பாஸிட்டிவ் சிக்னல் தரல. மியூசிக் டைரக்டர் ஃபிக்ஸ் பண்ண முடியாததாலேயே ரொம்ப நாள் பட வேலைகள் தள்ளிப்போச்சு. படத்துல ‘கண்ணால கண்ணால’ பாட்டைத் தவிர்த்து, பேக்கிரவுண்டு மியூசிக்குக்கு மட்டும்தான் வேலை. அதனால, மியூசிக் டைரக்டரை ஃபிக்ஸ் பண்ணாமலே, படத்தை எடுக்க ஆரம்பிச்சுட்டேன். ஒரு கட்டத்துல ‘ஹிப்ஹாப்’ ஆதி, இந்தக் கதையை நம்பி ஒப்புக்கிட்டு, மியூசிக் பண்ணினார். ரிலீஸுக்கு அப்புறம், அவரோட மியூசிக்கும் செம ரீச்.

இப்படி என்னோட 100 பர்சன்ட் உழைப்பைக்கொட்டி, ஏராளமான தடங்கல்களைத் தாண்டி நான் எடுத்த ‘தனி ஒருவன்’, போன வருஷத்தோட பிளாக் பஸ்டர் மூவி ஆச்சு. பட டைட்டில் கார்டில் ‘ஜெயம்’ ராஜாங்கிற என் பெயரை, மோகன் ராஜான்னு மாத்தினேன். பெயரைப் போலவே, அந்த ஒரே படம் என் லைஃபையே மாத்திடுச்சு. இண்டஸ்ட்ரி, மக்கள், மீடியா, குடும்பம்னு அந்த வெற்றி எல்லா தரப்பினர்கிட்ட இருந்தும் எனக்குப் பெற்றுத்தந்த பாராட்டும் அன்பும் என்னைத் திக்குமுக்காட வெச்சிடுச்சு. இதுக்கு முன்னாடியும் நான் எத்தனையோ ஹிட் கொடுத்திருந்தாலும், அதில் எல்லாம் நிறைய சந்தோஷம் கிடைச்சிருக்கு... ஆனா, இந்தளவுக்குத் தன்னம்பிக்கை கிடைச்சதில்ல. ஒரு நல்ல படத்தை மக்கள் நிச்சயம் கொண்டாடுவாங்கனு, மனசில் கருவாகியிருக்கும் தரமான விஷயங்களை திரையில் தைரியமா செய்யலாம்னு எனக்கு நம்பிக்கை தந்த படம் ‘தனி ஒருவன்’.

அதுவரை மற்ற மொழிப்படங்களின் ரீமேக் உரிமையை வாங்கிட்டு இருந்தேன். ‘தனி ஒருவன்’ ரிலீஸான மூணாவது நாள், அதோட தெலுங்கு ரைட்ஸை விற்றோம். அதை ஹிந்தியிலும் நானே டைரக்ட் செய்யவும் வாய்ப்புகள் அதிகமா இருக்கு. அடுத்து, சிவகார்த்திகேயனோட சேர்ந்து ஒரு படம் வொர்க் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். மைல்ஸ் டு கோ.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

எந்தக் குடும்பத்துலயும் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் இருக்காது. அதுபோலதான் எங்க வீட்டுலயும். நாங்க எல்லாருமே சின்னச் சின்ன சண்டைகள் போடுவோம். ஆனா, அதை அடுத்த நாளைக்கு கொண்டுபோகவே மாட்டோம். யாராவது ஒருத்தர், சமாதானத்துக்கு வந்துடுவோம். எங்களைப் பொறுத்தவரை சினிமா வேறு, வாழ்க்கை வேறுன்னு இல்ல. ரெண்டுமே ஒன்றோடு ஒன்று இணைந்ததுதான் எங்க குடும்பம். இதுதான் எடிட்டர் மோகன் குடும்பம். கடலான இந்த சினிமாவில், எங்க குடும்பமும் சிறு துளியா இருக்கிறதில் பெரிய சந்தோஷம் எங்க எல்லாருக்கும்!

சினிமாவுக்கு வரத் துடிக்கிற இளைஞர்களுக்கு... குறிப்பா, இயக்குநர் ஆசையில் இருக்கிறவங்களுக்கு சில வார்த்தைகள் என் அனுபவத்தில். சினிமாவில் எதைச் செய்றோம், அதை எப்படிச் செய்றோம் என்பதுதான் முக்கியம். ஒரு க்ரியேட்டரா முதலில் நம்மை 100 பர்சன்ட் திருப்திப்படுத்தற நம் மண்ணும் வாழ்வியலும் தொடர்புடைய திரைக்கதையை, ஆடியன்ஸை திருப்திப்படுத்துற விதத்துல, தனித்தன்மையோட கொடுக்கணும். அதை கான்ஃபிடன்டோட செய்தா... வெற்றி நிச்சயம்!

எல்லாருக்கும் பெரிய `பை’!

`இளசுகளின் இன்ஸ்பிரேஷன்' வரிசையில் அடுத்தது யார்..? ப்ளீஸ் வெயிட் ஃபார் டூ வீக்ஸ்!

கு.ஆனந்தராஜ், படங்கள்:எம்.உசேன்