Published:Updated:

`` `சண்டே கலாட்டா'வுல இருந்து ஏன் விலகினேன்னா..?’’ தேவதர்ஷினி

`` `சண்டே கலாட்டா'வுல இருந்து ஏன் விலகினேன்னா..?’’ தேவதர்ஷினி
`` `சண்டே கலாட்டா'வுல இருந்து ஏன் விலகினேன்னா..?’’ தேவதர்ஷினி

ஜீ தமிழின் `காமெடி கில்லாடிஸ்' நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராகக் கலக்கிவருகிறார், பிரபல காமெடி நடிகை தேவதர்ஷினி. தன் சினிமா மற்றும் சின்னத்திரை பயணம் குறித்து உற்சாகமாகப் பேசுகிறார். 

"நடுவர் அனுபவம் எப்படி இருக்கு?" 

"சிறப்பு! பல வருஷங்களாகக் காமெடி ஜானர்ல இயங்கிட்டிருக்கேன். அதன் ஒரு பரிமாணம்தான் இந்த நடுவர் பொறுப்பு. சினிமாவில் எங்களுக்குக் கொடுக்கிற ஸ்கிரிப்டை மட்டுமே டெலிவரி பண்றோம். ஆனா, இன்றைய தலைமுறை பசங்க ரொம்பத் திறமையுடன் இருக்காங்க. சொந்தமா ஸ்கிரிப்டை ரெடி பண்ணி, அட்டகாசமான பர்ஃபார்மில் கலக்குறாங்க. ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருக்கு.'' 

"திறமைகளை வெளிக்காட்ட இன்றைக்கு இருக்கும் வாய்ப்புகள் பற்றி என்ன நினைக்கிறீங்க?'' 

"ஆக்டிங், காமெடி, மியூசிக்னு தங்களின் திறமையை வெளிக்காட்ட, நிறைய சேனல்களின் மேடைகள் கிடைக்குது. சோஷியல் மீடியாவும் பெரிய சப்போர்ட்டிவா இருக்கு. இதையெல்லாம் இன்றைய தலைமுறை சரியாகப் பயன்படுத்தினால், பெரிய அளவில் வளரலாம். முன்னாடி நான் உள்பட பல ஆர்டிஸ்டுகள் இந்த மாதிரியான வாய்ப்புகள் இல்லாமல், நிறையவே போராடி வந்தவங்க." 

" 'சண்டே கலாட்டா' நிகழ்ச்சியிலிருந்து விலகினது ஏன்?" 

"ஒரு மாற்றத்துக்காக மட்டுமே. என் மீடியா பயணத்தின் ஆரம்பத்திலிருந்து சன் டிவி பக்கபலமா இருக்கு. அங்கே நிறைய சீரியல்கள், நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன். அதில், 'சண்டே கலாட்டா' பெரிய மைல்கல். ஒவ்வொரு வாரமும் வெரைட்டியான கான்செப்ட்டுல காமெடி பர்ஃபார்ம் பண்ணினோம். ஆறு வருஷமா 300 எபிசோடுகள் வரை நடிச்சுட்டேன். இந்த நீண்ட பயணத்தில் சின்ன பிரேக் எடுத்து, வெரைட்டியா வொர்க் பண்ணினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. பல வாய்ப்புகள் தேடி வந்துச்சு. அப்படித்தான், 'காமெடி கில்லாடிஸ்' நடுவர் ஆனேன். சன் டிவி மற்றும் 'சண்டே கலாட்டா' நிகழ்ச்சியை மிஸ் பண்ற ஃபீலிங் இருக்கு. நம்ம குடும்ப சேனல்தானே. எப்போ வேணாலும் மறுபடியும் அங்கே வொர்க் பண்ணுவேன்.'' 

"முன்னணி காமெடி நடிகையாக வலம்வரும் அனுபவம் பற்றி..." 

"பெருமையா இருக்குது. மனோரமா, கோவை சரளா அம்மாக்கள் வரிசையில் மற்றவர்கள் என்னை ஒப்பிடறது சரியானு தெரியலை. காமெடி நடிகையா ஃபீல்டுல நிற்கிறது ரொம்பவே கஷ்டம். 'பார்த்திபன் கனவு' படத்திலிருந்து, 'காஞ்சனா 3' வரை நிறைய பண்ணிட்டேன். சவாலான பயணம் இது. காமெடி கேரக்டர்களின் தாக்கம் வீட்டிலும் உற்சாகமா இயங்கச் செய்யுது.'' 

" 'காஞ்சனா 3' பட ஷூட்டிங் எப்படிப் போகுது?" 

"என் ஆக்டிங் கரியர்ல பெரிய பிரேக் கொடுத்த படம், 'காஞ்சனா'. அதன் அடுத்த பாகத்தில் நடிக்கலை. இப்போ, 'காஞ்சனா 3'யில் நடிக்கிறேன். முதல் பார்ட் மாஸ்னா, இது பல மடங்கு மாஸா இருக்கும். அந்த அளவுக்கு த்ரில், காமெடி எக்கசக்கமா இருக்கு. சரளா அம்மாவும் நானும் மீண்டும் மாமியார் மருமகளா நடிக்கிறோம். ஹீரோ லாரன்ஸ், ஹீரோயின் ஓவியா. ஷூட்டிங் விறுவிறுப்பா போயிட்டிருக்கு." 

"நடிகை ஓவியா செட்ல எப்படி?" 

"அவங்க கலகலப்பா இருக்கிறதோடு, எங்களையும் கலகலப்பாக்குவாங்க. அவங்க ஷூட்டிங் வந்த முதல் நாளில் சூழ்ந்துக்கிட்டு, 'பிக் பாஸ்' பற்றி நிறைய விசாரிச்சோம். கூலா பதில் சொன்னாங்க. எப்போதுமே புன்னகையோடு இருக்கும் ஜாலி பர்சன்." 

" 'பாகமதி' படத்தில் நடித்த அனுபவம்..." 

"படத்தின் நீளம் கருதி என்னுடைய போர்ஷன் சீன்ஸ் பல கட்டாகிடுச்சு. ஆனாலும், நிறைவான ஆக்டிங் அனுபவம் கிடைச்சது. அனுஷ்காவும் நானும் 'ரெண்டு' படத்தில் நடிச்சிருக்கோம். அப்போ பார்த்த மாதிரியே, இப்பவும் இருக்காங்க. அனுஷ்காவின் போர்ஷன் இல்லாத நேரத்திலும், நான் நடிக்கிறதை பக்கத்தில் இருந்து பார்த்து ரசிப்பாங்க. அவங்க, பார்க்கத்தான் போல்டான கேரக்டர் மாதிரி தெரியறாங்க. பழகினால் ரொம்பவே ஸ்வீட் பர்சன்." 

"சீரியல்களில் கவனம் செலுத்தாமல் இருக்கீங்களே. ஏன்?" 

" 'மர்மதேசம்' தொடங்கி தமிழ், தெலுங்கில் 60 சீரியல்களில் நடிச்சிருப்பேன். 'அத்திப்பூக்கள்' சீரியல்தான் கடைசி. 'காஞ்சனா' படத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்துட்டதால், சீரியல்களுக்கு நேரம் ஒதுக்க முடியலை. ஃபியூச்சர்ல, 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' மாதிரி நல்ல காமெடி சீரியல்கள் அல்லது வெப் சீரியல்களில் நடிக்க ரெடி.'' 

"ஃபேமிலி சப்போர்ட் பற்றி..." 

"20 வருஷத்துக்கும் மேலாக சினிமா ஃபீல்டுல இருக்கேன்" என்றவர் உடனே இடைமறித்து, "அச்சச்சோ... வருஷத்தை சொல்லிட்டேனே. உடனே சீனியர் ஆர்டிஸ்ட்னு சொல்லிடாதீங்க" எனப் பலமாகச் சிரித்துவிட்டு, "இத்தனை வருஷ சினிமாப் பயணத்துக்கு என் ஃபேமிலி சப்போர்ட்தான் முக்கிய காரணம். கணவர் சேத்தனும் என் பொண்ணும் தொடர்ந்து உற்சாகப்படுத்தறாங்க. வெரி லக்கி நான்."