Published:Updated:

'மேய்ப்பனை ஆபத்திலிருந்து மீட்கும் ஆடுகள்' - #ShaunTheSheepMovie #MovieRewind

'மேய்ப்பனை ஆபத்திலிருந்து மீட்கும் ஆடுகள்' - #ShaunTheSheepMovie #MovieRewind
'மேய்ப்பனை ஆபத்திலிருந்து மீட்கும் ஆடுகள்' - #ShaunTheSheepMovie #MovieRewind

'மேய்ப்பனை ஆபத்திலிருந்து மீட்கும் ஆடுகள்' - #ShaunTheSheepMovie #MovieRewind

ஆடுகள் மந்தபுத்தி பிராணி, முட்டாள்தனமானவை, எதையும் யோசிக்காமல் முன்னால் செல்லும் ஆட்டை அப்படியே பின்பற்றும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். இதற்கு மாறாக, நகரத்தில் தொலைந்துபோகும் தங்களின் மேய்ப்பனை மீட்கும் புத்திக்கூர்மையுள்ள ஆடுகள் பற்றிய சுவாரசியமான அனிமேஷன் திரைப்படம் Shaun The Sheep Movie. ஷான் என்கிற அறிவாளி ஆடு, தன் கூட்டாளிகளுடன் இணைந்து நிகழ்த்தும் சாகசங்கள், சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கின்றன. 

நகரத்தைவிட்டு சற்றுத் தள்ளியிருக்கும் ஆட்டுப் பண்ணை அது. சேவல் கூவியதும் முதலாளி எழுவார். அவருடைய வளர்ப்பு நாயும் கூடவே எழுந்துகொள்ளும். அவர்கள் சென்று ஆடுகளை எழுப்புவார்கள். மேய்ச்சலுக்கு அனுப்பி கண்காணிப்பார்கள். ஓய்வு ஒழிச்சலின்றி தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு இது திரும்பத் திரும்ப நடைபெறும். அந்த மந்தையில் குறும்பும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஓர் ஆடு, ஷான். 

ஒருநாள், ‘விடுமுறை நாளைக் கொண்டாடுங்கள்’ என்கிற விளம்பரத்தைப் பார்க்கும் ஷான், 'நமக்கு மட்டும் ஏன் விடுமுறை நாள் இல்லை?' என யோசிக்கிறது. “நமது முதலாளியையும் நாயையும் அப்புறப்படுத்திவிட்டு நாம் ஒருநாளை ஜாலியாகக் கொண்டாடலாமே’' என்று இதர ஆடுகளிடம் ஆலோசிக்கிறது. ஒரு நல்ல நாளில் அந்தச் சதியை நிறைவேற்ற திட்டம் உருவாகிறது. 

முதலாளியை உறங்கச்செய்து ஒரு வண்டியில் ஏற்றிப் படுக்கவைக்கின்றன. எலும்புத் துண்டைக் காட்டி நாயையும் அப்புறப்படுத்தியாயிற்று. முதலாளியின் வீட்டினுள் புகுந்த ஆடுகள், அங்குள்ள வசதிகளைக் குளறுபடியாகப் பயன்படுத்தி கொண்டாட்டத்தில் இறங்குகின்றன. ஆனால், முதலாளி படுக்கவைப்பட்ட வண்டியின் தடுப்பு நகர்வதால், வண்டி சாலையில் ஓட ஆரம்பிக்கிறது. அதை நிறுத்தத் தெரியாமல் ஆடுகள் விழிக்கின்றன. சுதாரித்துக்கொள்ளும் வளர்ப்பு நாய், வண்டியைப் பின்தொடர்ந்து ஓடுகிறது. 

அந்த வண்டி விபத்தில் சிக்குவதால், அடிபடும் முதலாளி மறதிநோய்க்கு ஆளாகிறார். பழைய விஷயங்கள் எதுவும் நினைவுக்கு வருவதில்லை. பின்தொடர்ந்து சென்ற நாய், மருத்துவனையின் உள்ளே நுழைய முடியாமல், விலங்குகளைக் கைப்பற்றும் அமைப்பு ஒன்றிடம் சிக்கிக்கொள்கிறது. நாயை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்லும் டர்னர் என்கிற ஆசாமி, விலங்குகளின் மீது கடுமையான வெறுப்புகொண்டவர். இதர கைதிகளோடு இந்த நாயையும் சிறையில் அடைத்துச் சிரித்து மகிழ்கிறார். 

பண்ணை வீட்டில் ஆடுகள் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியாதவாறு ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அங்குள்ள பன்றிகள் வீட்டினுள் புகுந்து, ஆடுகளின் இடத்தைக் கைப்பற்றுகின்றன. தங்கள் மேய்ப்பனின் பிரிவால் ஆடுகள் வருந்துகின்றன. அவரை மீண்டும் அழைத்துவர, நகரத்துக்குக் கிளம்புகிறது ஷான். பின்னாலேயே இதர ஆடுகளும் செல்கின்றன. அந்த ஆடுகளைப் பார்த்தும், மறதிநோயால் அடையாளம் தெரியாமல் அவதிப்படும் முதலாளி ஒருபுறம், விலங்குகளைக் கண்டால் சிறையில் அடைத்துக் கொடுமை செய்ய வெறியுடன் காத்திருக்கும் டர்னர் இன்னொருபுறம், சிறையில் அடைபட்டிருக்கும் நாய்... இவற்றுக்கு இடையில் ஆடுகள். முடிவில் என்னதான் ஆயிற்று என்பதை வயிறு வலிக்க வலிக்க நகைச்சுவைக் காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார்கள். 

ஷான் தி ஷிப் (Shaun the Sheep) என்கிற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரின் தூண்டுதலால் உருவான திரைப்படம் இது. ஸ்டாப்மோஷன் என்கிற நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் பிரமிக்கவைக்கின்றன. சாலைப் போக்குவரத்தைச் சித்தரிக்கும் காட்சி ஒன்று, அனிமேஷனா அல்லது உண்மையா என்று திணறும் அளவுக்கு அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 

சிக்கலில் மாட்டும் ஒவ்வொரு முறையும் ஷான் செய்யும் தந்திரங்களும் சாகசங்களும் அட்டகாசம். மறதிநோயில் அவதிப்படும் பண்ணை முதலாளி, ஒரு முடி திருத்தகத்தில் பணிக்குச் சேர்கிறார். பழைய ஞாபகத்தில் ஆட்டின் ரோமங்களைக் கத்தரிக்கும் பாணியிலேயே ஒருவருக்கு முடியை வெட்ட, அதுவே புது ஸ்டைலாகி புகழை வாரித்தருவதும், வாடிக்கையாளர்கள் கடையில் குவிவதும் நகைச்சுவையின் உச்சம். 

மனிதர்களின் உடைகளை மாட்டிக்கொண்டு உணவகத்துக்குச் செல்லும் ஆடுகள் செய்யும் ரகளைகள் சிறப்பானது. அதில் ஓர் ஆட்டை, பெண் என்று நினைத்து, டர்னர் அசடு வழியும் காட்சி நகைச்சுவைக்கு உத்தரவாதம். தன்னை ஏமாற்றிய விலங்குகளைக் கொன்றே தீருவது என்கிற கோபத்துடன் அதிநவீன ஆயுதத்தை சோதித்துப் பார்க்கும் டர்னர், ஒரு பொம்மை நாயைச் சுட, பக்கத்தில் இருக்கும் ரோபோ பொம்மை பயந்துபோய் கையைத் தூக்கிவிடுவது போன்ற மிக நுட்பமான நகைச்சுவைகள் படம் முழுவதிலும் நிறைந்துள்ளன. 

மிகவும் சிரமப்பட்டு முதலாளியை அடையும் ஷான், மறதிநோய் காரணமாக அவர் துரத்தும்போது கண்ணீர் வடிப்பதும், அழுது தீர்க்கும் ஓர் ஆட்டுக்குட்டியைச் சமாதானப்படுத்த அனைத்து ஆடுகளும் இணைந்து பாடும் தாலாட்டுப் பாடலும் நெகிழவைக்கின்றன. முதலாளியோடு சேர்த்து அனைத்து விலங்குகளையும் கொல்வதற்கு, டர்னர் செய்யும் திட்டங்களும், சாவின் நுனியில் இருக்கும் விலங்குகள் தங்களின் சமயோசிதப் புத்தியைப் பயன்படுத்தித் தப்பிப்பதும் பரபரப்பான காட்சிகள்.

ஆஸ்கர், கோல்டன்குளோப், பாப்டா போன்ற திரைவிழாக்களில் பரிந்துரை செய்யப்பட்ட இந்தத் திரைப்படம், டோரண்ட்டோ திரை விமர்சகர்களுக்கான திரை விழாவில் ‘சிறந்த அனிமேஷன் திரைப்படம்’ விருது பெற்றுள்ளது. படம் தொடங்கியது முதல் இறுதிவரை ஒருகணமும் சலிப்பை உண்டாக்காத இந்த பிரிட்டிஷ் திரைப்படத்தை, சுவாரசியமாக இயக்கியவர்கள், மார்க் பர்டன் (Mark Burton) மற்றும் ரிச்சர்டு ஸ்டார்ஜக் (Richard Starzak). 

பண்ணை முதலாளி, பணி அட்டவணையைத் தூக்கி எறிந்துவிட்டு விலங்குகளுடன் கொண்டாட்டமாகப் பொழுதைக் கழிப்பது, விலங்குகளைச் சிறை பிடிக்கும் மையம், பராமரிப்பு மையமாக மாறுவது என இறுதிக் காட்சிகள் மனதை நெகிழச் செய்கின்றன. குழந்தைகளுடன் இணைந்து பார்க்கவேண்டிய திரைப்படம். 

அடுத்த கட்டுரைக்கு