Published:Updated:

’’கமலோட பலமே அந்த ‘பன்மை’தான்..!’’ - 'மய்யம்' அரசியல் பேசும் கு.ஞானசம்பந்தம்

’’கமலோட பலமே அந்த ‘பன்மை’தான்..!’’ - 'மய்யம்' அரசியல் பேசும் கு.ஞானசம்பந்தம்
’’கமலோட பலமே அந்த ‘பன்மை’தான்..!’’ - 'மய்யம்' அரசியல் பேசும் கு.ஞானசம்பந்தம்

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை டாக்டர். அப்துல் கலாம் வீட்டிலிருந்து தொடங்கி, மதுரையில் தன் கட்சிக் கொடியையும், 'மக்கள் நீதி மய்யம்' என்ற தன் கட்சிப் பெயரையும் அறிவித்தார். அதுமட்டுமல்லாது, அவர் கட்சியின் உயர்மட்ட குழு என பதிமூன்று பேரை நியமித்திருக்கிறார். அதில் திரைத்துறை சார்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். கமல் கட்சியின் உயர்மட்ட குழுவில் உள்ள பேராசிரியர் கு.ஞானசம்பந்தரை தொடர்புகொண்டு பேசினோம். 

"எனக்கும் கமலுக்குமான சந்திப்பு 2003 சென்னை சோழா ஹோட்டல்லதான் நடந்துச்சு. அப்போ, நான் ஒரு மீட்டிங்ல பேசிட்டு வந்தேன். அவர் 'ஹேராம்' பட ஷூட் முடிஞ்சு வந்தார். அப்போ நான் வழக்கம் போல நகைச்சுவையா பேச, எம்.எஸ்.வி சாருக்கு அது பிடிச்சு என்கிட்ட பேசினார். அடுத்து ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில சந்திக்கும்போது என்கிட்ட அதைப்பத்தி சொல்லி, ’நல்லாயிருந்துச்சு’னு சொன்னார். அப்புறம், 'விருமாண்டி' படத்துக்காக மதுரை ஜல்லிக்கட்டு தொடர்பாக அவர் ஸ்கிரீன் ப்ளே பண்ணும்போது, அவர்கூட ஒரு ஆறு மாசம் சேர்ந்து பயணிக்கிற வாய்ப்பு கிடைச்சுது. அந்த ஊர் கிராமங்கள்ல கல்யாண வீடு, துக்க வீடு எல்லாம் எப்படி இருக்கும்னு காமிக்க நான் அவரை கூட்டிப்போவேன். அப்போ, அவர் சார்ட்ஸ், கூலிங் க்ளாஸ், தொப்பி எல்லாம் போட்டுகிட்டு என்கூட வருவார். அப்போ சிலர் என்கிட்ட வந்து ஆட்டோகிராஃப் வாங்குவாங்க. ஆனா, என் பக்கத்துல இருக்கிறது கமல்னு யாருக்கும் தெரியாது. அப்போ அவர் கவனிச்ச விஷயங்களை ரொம்ப அழகா படத்துல வெச்சிருந்தார். அப்போதான், இவர் இந்தளவு உன்னிப்பா கிராமத்தை கவனிச்சிருக்கார்னு எனக்கு பிரமிப்பா இருந்துச்சு. புத்தக வாசிப்பாளரா கமலை எனக்கு ரொம்ப பிடிக்கும். 'விருமாண்டி' பட ஷூட்ல பார்த்த கமலை நான் மதுரை பொதுக்கூட்டத்துல பாத்தேன். அங்கு நிறைய இளைஞர்கள்தான் வந்திருந்தாங்க. அவர் படங்களிலேயே பல சமூக பிரச்னையை போகிறப்போக்கில் சொல்லிட்டு போயிடுவார். எந்த ஒரு விஷயத்தையும் உண்மையா கொடுக்கணும்னு நினைப்பார். அறிவியலையும் விஞ்ஞானத்தையும் உள்ளே புகுத்தி புதுமை செய்யணும்னு நினைப்பார். இதெல்லாம்தான் அவரை ஒரு கலைஞனா மட்டுமில்லாமல் மனிதனாக ரசிக்க வெச்சுது. சாப்பாடுக்கு பதில் காய்களையும், காய்க்கு பதில் சாதமும் இருந்தால் யாருக்கும் எந்த உடல் சார்ந்த பிரச்னையும் வராதுனு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். ஃப்ரீயா இருக்கும்போது இதை பண்ணுங்க, அதை பண்ணுங்கனு நிறைய எளிமையான உடற்பயிற்சி எல்லாம் கூட சொல்லித்தருவார். அதைவிட எல்லாத்தையும் ஸ்போர்டிவா எடுத்துக்கக்கூடிய ஹியூமர் சென்ஸ் உள்ள நபர். அது அரசியலுக்கு நிச்சயம் தேவை. எது செஞ்சாலும் நம்ம செய்யலாம், நம்ம ஒழிச்சிடலாம்னு பன்மையில் யோசிக்கிற நபர். அதுதான் அவரோட பலமே. இதெல்லாம்தான் எனக்கு அவர் மேல் இருக்க மரியாதையை அதிகப்படுத்துச்சு" என்று கமலைப் பற்றியும் கமல்ஹாசனுக்கும் இவருக்குமான நட்பை பற்றியும் பேசினார். 

’’ 'விருமாண்டி' படத்துல அவர் என்னை நடிக்க கூப்பிட்டபோது, இதை காலேஜ்ல என்ன சொல்லப்போறாங்கன்னு எனக்கு ஒரே தயக்கமா இருந்துச்சு. அந்தத் தயக்கத்தை அவர் உடைச்சு என்னை நடிக்க வெச்சார். இப்போ நான் 25 படங்களுக்கு மேல் நடிச்சிட்டேன். அதே மாதிரி, அவர் என்னை இப்போ கட்சிக்குக் கூப்பிட்டபோதும் தயக்கமாவும் என்ன பண்ண போறோம்ங்கிற பயமும் இருந்துச்சு. அந்த பயத்தையும் தயக்கத்தையும் உடைச்சு, 'எல்லாரும் சேர்ந்து பண்ணுவோம், சேர்ந்தே சமூகப் பணி செய்வோம் வாங்க'னு கூப்பிட்டார். அவருக்கு யார்கிட்ட என்ன பண்ண சொன்னா சரியா இருக்கும்னு நல்லாவே தெரியும்.  ஃபாரீன்ல ஒரு விஷயம் இருக்குன்னா அது அவர் வீட்லயும் இருக்கும். அந்தளவுக்கு எப்பவும் அப்டேட்லயே இருப்பார். நேத்துதான் உயர்மட்ட குழுனு அறிவிச்சிருக்காங்க. இனிமேதான் யார்யார் என்னென்ன பண்ணணும்ன்னு முடிவெடுப்பாங்க. இப்போதான் காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கோம். அதை எப்படி எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி சமைக்கிறதுன்னு இனிதான் எல்லாரும் பேசி முடிவெடுக்கணும். அப்போதானே எல்லாரும் சந்தோசமா சாப்பிட முடியும். ஆன்மிக ரீதியான நபர்கள், மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என பேதமில்லாமல் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள், சேர்ந்து வருகிறார்கள்; ரொம்ப சந்தோசமா இருக்கு. கண்டிப்பா, மக்களுக்கு வேணும்கிறதை சரியா பண்ணுவோம்" என்றபடி விடைபெற்றார்.