Published:Updated:

பாச மலர்கள்!

பாச மலர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பாச மலர்கள்!

ரசனை’ இதயக்கனி’ எஸ்.விஜயன்

பாச மலர்கள்!

ரசனை’ இதயக்கனி’ எஸ்.விஜயன்

Published:Updated:
பாச மலர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பாச மலர்கள்!

எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்த நேரம். தஞ்சாவூரில் சிவாஜி கணேசனுக்குச் சொந்தமான சாந்தி, கமலா திரையரங்குகளைத் திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர். அப்போது, சிவாஜி தனது சூரக்கோட்டை பண்ணை வீட்டுக்கு விருந்து சாப்பிட அழைப்பு விடுத்திருந்தார்.

எம்.ஜி.ஆர் தனது சக அமைச்சர்கள், முக்கியக் கட்சிக்காரர்களுடன் சிவாஜியின் சூரக்கோட்டை பண்ணை வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில், எம்.ஜி.ஆருடன் காரில் பயணித்த அமைச்சர்கள் சிலர், ''நாங்கள் உங்களுக்காக தனி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆனால் நீங் களோ, உங்கள் போட்டியாளர் சிவாஜி வீட்டுக்குச் செல்கிறீர்களே...'' என்று ஆதங்கப்பட்டிருக்கின்றனர்.

உடனே எம்.ஜி.ஆர், ''நானும் சிவாஜி யும் எப்படி அண்ணன், தம்பி போல் பழகு கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? எங்களது போட்டி, கலை வாழ்க்கையில் மட்டும்தான். அது தனிப்பட்ட எங்களது நட்பு, பாசத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. வேண்டாத பகைமை கொண்டு எங்கள் ரசிகர்கள் மோதிக் கொள்வதிலும் அர்த்தம் இல்லை. அதை நாங்கள் விரும்பவும் இல்லை'' என்றார். அதோடு நிற்கவில்லை.

பாச மலர்கள்!

''சிவாஜியிடம் இப்போது இருக்கிற இந்த பண்ணையில் இருந்து சென் னைக்கு வைக்கோல் வழக்கமாக எடுத்து வரப்படுகிறது. அது, எனது சத்யா ஸ்டுடியோவில்தான் இறக்கி வைக்கப்படும். அந்த வைக்கோல்தான் எனது வீட்டில் இருக்கும் பசு மாடுகளுக்கும் சிவாஜி வீட்டுப் பசுக்களுக்கும் உணவு. நான் குடிக்கும் பால் சிவாஜி பண் ணையின் வைக்கோலைத் தின்று செரித்துக் கிடைக்கின்ற பால்தான்'' என்றாராம்.

இந்தத் தகவல்களை நமக்குச் சொன்னவர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் மந்திரியாக இருந்த கும்பகோணம் எஸ்.ஆர்.ராதா.

தமிழ் சினிமா வரலாற்றில் பி.யூ.சின் னப்பா - தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர் - சிவாஜி, ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன், கமல்ஹாசன் - ரஜினிகாந்த், விஜயகாந்த் - சத்யராஜ், பிரபு - கார்த்திக், விஜய் - அஜித், சிம்பு - தனுஷ் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் போட்டியாளர்கள் இருந்தனர், இருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆர்.- சிவாஜி போல் சினிமாவிலும், அரசியலிலும் மோதிக் கொண்டவர்கள் யாரும் இருக்க முடியாது. அதேபோல் நட்பிலும் அவர்கள் உச்சம்தான். அண் ணன், தம்பியாகத்தான் இருவரது நட்பும் இருந்தது.

இருவருமே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இருந்து வந்தவர்கள். படிப்படியாகப் பாடுபட்டு வளர்ந்தவர்கள். வளர்ச்சிக்குப் பின்னால் சிந்தப் பட்ட உழைப்பின் துளிகளை நன்கு அறிந்தவர்கள்.

சிவாஜி கணேசன், 1962-ல் அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்காவில் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்து விட்டு திரும் பினார். அப்போது, நடிகர் சங்கத் தலைவராக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர், சென்னை விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை ஊர்வலமாக அழைத்து வந்ததோடு இல்லாமல், தமிழ்த் திரையுலகினரை எல்லாம் வரவழைத்து பெரும் பாராட்டுக்கூட்டம் ஒன்றையும் நடத்தினார். நடிகர் சங்கத்தில் இதற்குப் போதியநிதி இல்லாத நிலையில், தன் சொந்தப் பணத்தைப் போட்டு செலவு செய்தார்.

பாச மலர்கள்!

உலக ரீதியில் ஒரு தமிழ் நடிகனுக்குக்  கிடைத்த கௌரவத்தை சக நடிகனாகக் கொண்டாட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அப்போது, நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வந்த 'நடிகன் குரல்’ மாத இதழின் சார்பில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டார். திரையுலகிலுள்ள முக்கி யஸ்தர்கள் பலரும் பாராட்டுக் கட்டுரை எழுதி இருந்தனர். அதில், முதல் கட் டுரை எம்.ஜி.ஆருடையது. அதில் 'தம்பி கணேசன்’ என்று சிவாஜியைப் போற்றிய வரிகள் மகத்தானது.

எம்.ஜி.ஆர்., தன் கைவிரலில் நீண்ட காலமாக நடிகர் சங்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார். ஒரு சில படங்களில் கூட அதைக் காண முடியும். அந்த மோதிரத்தை, இந்தப் பாராட்டு விழாவில், சிவாஜிக்கு அணிவித்து மகிழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு 'ரிக்ஷாக்காரன்’ படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகர் என்று இந்திய ஜனாதிபதியின் விருது கிடைத்தது. அப்போது, பெரும்சர்ச்சை எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அன்றைக்கு (1972) நடிகர் சங்கத்தலைவராக இருந்த சிவாஜி, எம்.ஜி.ஆருக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய சிவாஜி, ''பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு கண்கொள்ளாக் காட்சியைக் காணக் கொடுத்து வைத்திருக்கிறது. அண்ணன், எம்.ஜி.ஆருக்கு விருது கிடைத்தது பற்றி நடிகர் உலகில் கருத்து வேறுபாடு இல்லை. மற்றவர்களுக்கு அபிப்ராய பேதம் இருக் குமானால், அதுபற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஏனெனில், எங்களுக்குள் அபிப்ராய பேதம் கிடையாது, இருக்க வாய்ப்பில்லை'' என்று கூறினார்.

பாச மலர்கள்!

1973-ம் ஆண்டு 'உலகம் சுற்றும் வாலி பன்’ வெளியாவதில் நிறைய பிரச்னைகள் இருந்தன. அண்ணா சாலையில் உள்ள திரையரங்கு ஒன்றில் தன் படம் வெளி யிட வேண்டும் என்று எம்.ஜி.ஆர், விரும்பினார். ஆனால், அன்றைய ஆளும் தி.மு.க. அரசுக்குப் பயந்து கொண்டு திரையரங்கு உரிமையாளர்கள் எம்.ஜி.ஆருக்குச் சாதகமான பதிலைத் தரவில்லை.

அப்போது, தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டு, அ.தி.மு.க-வைத்  தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தார் எம்.ஜி.ஆர். சிவாஜியோ காங்கிரஸ் கட்சியில் இருந்தார். தி.மு.க-வோடு அ.தி.மு.க-வையும் சேர்த்தே விமர்சித்தபடி இருந்தார் என்றாலும், எம்.ஜி.ஆரின் விருப்பத்தை யார் மூலமோ அறிந்தவர், 'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் தனது 'சாந்தி' திரையரங்கில் வெளியிட முடிவெடுத்தார். ஆனால், அதை அர சியலாக்கி சிவாஜிக்குத் தொல்லை தருவார்கள் என்று நினைத்த எம்.ஜி.ஆர்., சிவாஜியின் முடிவை ஏற்கவில்லை.

பாச மலர்கள்!

எம்.ஜி.ஆர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவர் பூரணநலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்பதற்காக சிவாஜி, பிரபு உட்பட தன் குடும்பத்தாருடன் வட பழனி முருகன் கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அத்துடன் தர்ஹா ஒன்றிலும், தேவாலயத்திலும் பிரார்த்தனைகள் மேற்கொண்டார்.

1977-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டு சேர்ந்திருந்தது. அப்போது, கூட்டணிக் கட்சிகளின் சார்பாக சென்னை பனகல் பூங்காவில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் கலந்து கொண்டு பேசினர். அரசியல் ரீதியாக இருவரும் இணைந்த முதல் பொதுக்கூட்டம் அது. அதற்காக சிவாஜி, தன் அன்னை இல்லத்திலிருந்து அருகிலுள்ள (இன்று எம்.ஜி.ஆர்., நினைவு இல்லம்) எம்.ஜி.ஆரின் அலுவலகத்துக்கு வந்துவிட, அங்கிருந்து எம்.ஜி.ஆர்., தன் காரில் அவரை பொதுக்கூட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

5.12.1987 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற 'ஜல்லிக்கட்டு’ 100-வது நாள் நிகழ்ச்சியில், தமிழக முதல்வராகக் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., படத்தில் பங்குபெற்ற சிவாஜி மற்றும் கலைஞர்களுக்குக் கேடயம் வழங் கினார். அவர், கடைசியாகப் பங்கேற்ற திரையுலகப் பொதுநிகழ்ச்சி அதுதான். மலையாளத்தில் சிவாஜி நடித்த (1978) சினிமாஸ்கோப் படம் 'தச்சோளி அம்பு’! பிரேம்நசீர், தீபா இருவரும் நாயகன், நாயகியாக நடித்த அந்தப் படத்தில் சிவாஜி முக்கிய வேடத்தில் நடித்தார். அதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் இடுக்கி அருகே நடைபெற்றது. சண்டைக் காட்சியின் போது சிவாஜி தவறி விழுந்து வலது கையில் முழங்கைக்குக் கீழே எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை நடந்த போது, முறிந்த எலும்பை இணைக்கும் வகையில் தகடு பொருத்தப்பட்டது. சிவாஜி குணமாகிய பின் 'தச்சோளி அம்பு’ படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார். படப்பிடிப்பு தொடங்கிய இடம் சத்யா ஸ்டுடியோ.

பாச மலர்கள்!

சிவாஜி ஒப்பனையோடு படப்பிடிப் புக்கு வந்தார். ஸ்டுடியோ நிர்வாகி பத்மநாபன், துணை நிர்வாகி ஹரி (எம்.ஜி.ஆரின் ஒப்பனையாளராக இருந்த ராமதாஸின் மகன்) உட்பட ஸ்டுடியோ பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து பத்தாயிரம் ரோஜாப் பூக்களைக் கொண்ட மிகப்பெரிய மாலையை சிவாஜிக்கு அணிவித்து வரவேற்றனர். எம்.ஜி.ஆரின் உத்தரவின் பேரில், அவரது பிரத்யேக ஒப்பனை அறையை சிவாஜிக்கு அளித்தனர். அதற்கு முன் வேறு யாரும் எம்.ஜி.ஆரின் ஒப்பனை அறையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதில்லை.

எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் புரூக் ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவரைக் காணச் சென்றவர்களில் சிவாஜியும் ஒருவர். சிவாஜியைக் கண்டதும் எம்.ஜி.ஆர், அவரைக் கட்டிப்பிடித்து கதறி அழுது விட்டார். துள்ளிப்பாயும் வேலா கவே எம்.ஜி.ஆரைப் பார்த்துப் பழகிய சிவாஜியும், படுக்கையில் அவர் இருந்த நிலைகண்டு அழுது விட்டார். நீண்ட நேரம் அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்களைத் தவிர வேறு யாரும் அருகில் இல்லை. சிவாஜியிடம் எம்.ஜி.ஆர். ஒரு ரகசியக் கடிதம் கொடுத்ததாகக்கூடச் சொல்வார்கள். அந்த விஷயம் குறித்து சிவாஜி கடைசி வரை யாரிடமும் கூற வில்லை. இரு திலகங்களுக்குள்ளும் உறைந்து போன ரகசியம் அது.

பாச மலர்கள்!

எம்.ஜி.ஆர், கடைசி முறையாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன், இலங்கைத் தமிழர்களைக் காக்கும் பொருட்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்திய பிரதமர் ராஜீவ்காந்திக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2.8.1987 அன்று சென்னை கடற்கரையில்  கூட்டம் நடத்தினார். அதில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., கீழே பார்வையாளர்கள் வரிசையில் சிவாஜி அமர்ந்திருப்பதைக் கண்டார். சிவாஜி தயங்கினாலும் அவரை மேடைக்கு வரவழைத்து அமர வைத்தார். அப்போது, சிவாஜிக்கு தன் அன்பைத் தெரிவிக்கும் வகையில் அவர் கன்னத்தில் எம்.ஜி.ஆர். முத்தமிட... கூட்டம் முழுவதும் ஆர்ப்பரித்தது.

துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க் கும் என்பது, திரை ரசிகர்களை மொத்தமாக ஈர்த்து வைத்திருந்த இந்த இரு காந்தங்களுக்கு சரியாகவே பொருந்தும்.