Published:Updated:

"ஒரு படம் பண்ணிட்டுதான் எல்லாம்!"

"ஒரு படம் பண்ணிட்டுதான் எல்லாம்!"
பிரீமியம் ஸ்டோரி
"ஒரு படம் பண்ணிட்டுதான் எல்லாம்!"

சினிமா ஸ்பெஷல்

"ஒரு படம் பண்ணிட்டுதான் எல்லாம்!"

சினிமா ஸ்பெஷல்

Published:Updated:
"ஒரு படம் பண்ணிட்டுதான் எல்லாம்!"
பிரீமியம் ஸ்டோரி
"ஒரு படம் பண்ணிட்டுதான் எல்லாம்!"

தவி இயக்குநர்கள்... தங்கள் வாழ்வை சினிமாவுக்காகவே அர்ப்பணித்து, கடிவாளம் போட்டுக்கொண்ட பந்தயக்குதிரைகள். ‘ஒரு படம் எடுத்துட்டுதான்...’ என்று திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் உதவி இயக்குநர்கள், அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் காதல் துணைகள், அவர்களின் திரைக்கனவு நிறைவேற தானும் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் கிராமத்து அம்மாக்கள், அவர்களின் திறமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரியமும் பிரார்த்தனையுமாக பலம்கொடுக்கும் நண்பர்கள்... என  உதவி இயக்குநர்களின் போராட்ட வாழ்க்கை, ஒரு நன்னாளில் விடியும் என்ற நம்பிக்கையே திரை உலகின் ஆக்ஸிஜன். அந்த விடியலுக்காகக் காத்திருக்கும் படைப்பாளிகள் சிலர் இங்கே....

ஜெனிஃபர் ஜூலியட் (வயது - 31)

"ஒரு படம் பண்ணிட்டுதான் எல்லாம்!"

“எனக்கு சொந்த ஊர் மன்னார்குடி. அம்மா சிங்கப்பூர்ல பிசினஸ் பண்ணிட்டு இருந்தாங்க. மன்னார்குடியில ஸ்கூலிங் முடிச்சுட்டு, சிங்கப்பூர்ல அக்கவுன்ட்ஸ் படிச்சுட்டு, சிஸ்டம் வொர்க் பண்ணிட்டிருந்தேன். பள்ளி நாட்களில் கவிதை, கதை, பாரதிராஜா சார் படங்கள்னுதான் இருப்பேன். அந்த கலை ஆர்வம் இருந்ததால, கம்ப்யூட்டர் கீ போர்டு தட்டுற வேலை பிடிக்கல. விட்டுட்டு, சென்னைக்கு வந்தேன். இயக்குநர் மதுமிதா வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாங்க. அதுக்கப்புறம் இயக்குநர் சரண் சார்கிட்ட, ‘ஆயிரத்தில் இருவர்'  படத்துல உதவி இயக்குநரா வேலைபார்த்தேன். இப்போ ‘பட்டதாரி’ படத்துல அசோஸியேட்டா வேலைபார்த்துட்டு இருக்கேன். ஒரு பொண்ணு சினிமாவுக்கு வரும்போது, எல்லா வேலைகளையும் துணிஞ்சு இறங்கிப் பார்க்கணும். எல்லார்கிட்டயும் போல்டா வேலை வாங்கத் தெரிஞ்சிருக்கணும். சில நேரங்கள்ல ஷூட்டிங் முடிய இரவு 2 மணி ஆயிடும். டைரக்டர் `பேக்கப்' சொன்னதுக்கப்புறம் அடுத்த நாளைக்கு என்ன வேலை பார்க்கப்போறோம்னு மேனேஜர்கிட்ட சொல்லிட்டு வரணும். மணி 3 மணியாயிடும். மறுநாள் காலையில 5.30 மணிக்கெல்லாம் ஃபீல்டுக்கு போனாதான், அந்த நாள் வொர்க் சரியா நடக்கும். இப்படி ஓய்வைப் பத்தியெல்லாம் நினைக்காம ஓடணும், ஓடுறேன்.

நிச்சயம் இந்த வருஷம் தனியா ஒரு படம் பண்ணிடுவேன். அதுக்கப்புறம்தான் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கணும்!”

கவித்ரா (வயது - 28)

"ஒரு படம் பண்ணிட்டுதான் எல்லாம்!"

“எனக்கு சொந்த ஊர் ஈரோடு. அப்பா... சென்னையில் ‘ஸ்டில்ஸ் ரவி’ சார்கிட்ட அசிஸ்டன்டா இருந்த ‘ஸ்டில்ஸ்’ ராஜா. எனக்கு இயல்பிலேயே போட்டோகிராஃபியில் ஆர்வம். சின்ன வயசுல கொரியன் இயக்குநர் `கிம் கி டுக்'கின் படங்களும், லியோ டால்ஸ்டாய் சிறுகதைகளுமா வளர்ந்தேன். ஒருநாள் அப்பா, ‘உனக்கு டைரக்‌ஷனில் ஆர்வம் இருந்தா, உன் கிரியேட்டிவிட்டியை அதில் வெளிப்படுத்து’னு சொன்னார். உள்ளுக்குள் இருந்த கனவை, அப்பா உணரவெச்சுட்டார். வாய்ப்புகளுக்கு அலைஞ்சேன். கிடைச்சது. வேலையைக் கத்துக்கிட்டேன். வெளிவரவிருக்கிற ‘ஆந்திரா மெஸ்’, ‘ருக்குமணி வண்டிவருது’, ‘மைக்கேலாகிய நான்’ படங்கள்ல அசோஸியேட் இயக்குநரா வேலைபார்த்திருக்கேன். இப்போ ‘முத்துராமலிங்கம்’ படத்துல அசிஸ்டன்ட் டைரக்டரா வேலைபார்த்துட்டு இருக்கேன். இந்த அஞ்சு வருஷத்துல, நிறைய போராட்டங்கள், தடைகள் தாண்டியிருக்கேன்.

என் காதல் கணவர் ஷெயின்ஷா, என் கனவுக்குத் துணையா இருக்கிற அன்புத் துணை. எங்க பொண்ணு சஹானாவுக்கு 8 வயசு. ஒவ்வொரு முறை நான் அவுட்டோர் ஷூட்டிங் போகும்போதும், சஹானாவைப் பார்த்துக்கிறது அவர்தான். ‘நிச்சயம் ஜெயிப்ப’னு சொல்லிட்டே இருப்பார். ஜெயிக்கணும்!’’

சிவக்குமார் (வயது - 36)

"ஒரு படம் பண்ணிட்டுதான் எல்லாம்!"

“தருமபுரி பையன் நான். ப்ளஸ் டூ படிக்கும்போது ‘சேவிங் பிரைவேட் ரயன்’ என்ற ஆஸ்கர் விருது வாங்கின படத்தைப் பார்த்ததுதான், சினிமா நோக்கி என்னை ஓடிவரவெச்சது. சென்னையில் ஒரு வருஷம் அலைஞ்சதுக்கு அப்புறம், எடிட்டர் மோகன் ராஜாகிட்ட அசிஸ்டன்ட் எடிட்டரா வேலை கிடைச்சது. மும்பையில பிரசாத் ஸ்டூடியோ திறந்தப்போ, எங்க சார் என்னை அங்க வேலைக்கு அனுப்பினார். சின்ன பட்ஜெட் ஹிந்திப் படங்களில் உதவி எடிட்டரா வேலை பார்த்தேன். மீண்டும் சென்னைக்கு வந்து, ‘காத்தவராயன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘வேட்டைக்காரன்’ படங்களில் அசிஸ்டன்ட் டைரக்டரா வேலைபார்த்தேன். இப்போ ‘இங்கிலீஷ் படம்’ என்ற தமிழ் காமெடி ஹாரர் மூவியில வேலைபார்க்கிறேன். என்னைப் புரிஞ்ச ஒரு பொண்ணு, காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இப்போ எனக்கு ரெண்டு குழந்தைங்க. சீக்கிரமே படம் பண்ணணும்.''

வள்ளிகாந்தன் (வயது - 32)

"ஒரு படம் பண்ணிட்டுதான் எல்லாம்!"

“பத்தாவது படிக்கும்போதே எனக்கு சினிமாவில் ஆர்வம் அதிகம். நான் இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சப்போ எங்கப்பா இறந்துட்டார். பொருளாதாரக் காரணங்களுக்காக டெல்லியில ஒரு வருஷம் வேலைபார்த்தேன். என் க்ரியேட்டிவ் மனசு என்னைத் தொந்தரவு செய்துட்டே இருக்க, அண்ணா யுனிவர்சிட்டியில உதவித்தொகையுடன் படிக்கிற எலெக்ட்ரானிக் மீடியா கோர்ஸில் சேர்ந்தேன். எஃப்.எம்-ல `ஆர்ஜே' வாய்ப்புக் கிடைச்சப்போ, இயக்குநர் பாண்டிராஜ் சார், ‘ஈரம்’ அறிவழகன் சார், சமுத்திரக்கனி சாரை இன்டர்வியூ பண்ணினேன். ஒருமுறை ‘வம்சம்’ படம் பத்தின நிறை, குறைகளை  பாண்டிராஜ் சார்கிட்ட பகிர்ந்துகிட்டேன். திடீர்னு ஒருநாள் அவர் கூப்பிட்டு, எனக்கு ஒரு வேலை கொடுத்தார். அதை நான் முடிச்சுக்கொடுத்த விதம் அவருக்குப் பிடிச்சுப்போக, என்னை உதவி இயக்குநரா சேர்த்துக்கிட்டார். `மெரினா ', `கேடி பில்லா கில்லாடி ரங்கா'னு அவரோட `பசங்க' புரொடக்‌ஷன் மூவிஸ்ல எல்லாம் வொர்க் பண்ணியிருக்கேன். இடையில் என் நண்பன் அட்லியோட ‘ராஜாராணி’ படத்துல அசோஸியேட்டா வொர்க் பண்ணினேன். இப்ப தனியா படம் பண்ணப் போறேன்.

இடையில மூணு வருஷமா தீபாவளி, பொங்கலுக்கு ஊருக்குப் போகலை. என்னைக் காதலிச்ச பொண்ணையும் கல்யாணப் பண்ணிக்க முடியலை. என் வாழ்க்கையில் எல்லாமே, நான் சினிமாவில் ஜெயிச்சதுக்கு அப்புறம்தான்!’’

காலம் வெற்றியைத் தள்ளிப்போடலாம்... ஆனால், தடுக்க முடியாது! நம்பிக்கையோடு நகர்கிறார்கள் இவர்கள்!

ம.மாரிமுத்து   ஜெ.விக்னேஷ்