Published:Updated:

''இப்போதைக்கு வாழ்த்துகள் மட்டும்தான்...!" - '6 அத்தியாயம்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
''இப்போதைக்கு வாழ்த்துகள் மட்டும்தான்...!" - '6 அத்தியாயம்' விமர்சனம்
''இப்போதைக்கு வாழ்த்துகள் மட்டும்தான்...!" - '6 அத்தியாயம்' விமர்சனம்

6 கதைகள், 6 அமானுஷ்யம்,  6 இயக்குநர்கள்... வெவ்வேறு திசையில் பயணிக்க, இறுதியில் என்ன ஆனது என்பதே, `6 அத்தியாயம்'.

அத்தியாயம் - 1 (சூப்பர் ஹீரோ) : தனக்குள் சூப்பர் பவர் உள்ளது என்று சொல்லும் சுப்ரமணியைக் கண்டு `பைத்தியம்' எனச் சொல்லி வீட்டில் இருப்பவர்கள் மனநல மருத்துவரிடம் அனுப்பி வைக்கிறார்கள். டாக்டரிடம் செல்லும் சுப்பிரமணி, மருத்துவரை நம்பவைத்து `இவர் சூப்பர் ஹீரோதான்' என்று ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிக்கிறார். அதற்காக தன்னையே பரிசோதிக்கும் முயற்சியில் இறங்குகிறார், மருத்துவர். 

அத்தியாயம் - 2 (இது தொடரும்) : எந்தத் தவறும் அறியாத குழந்தை, இளைஞன் ஒருவனின் பாலியல் வன்முறையால் பலியாகிறாள். ஆவியாக சுற்றும் அந்தக் குழந்தைக்கு உதவ, இன்னொரு பெண்ணின் ஆவியும் இணைகிறது. தன் கதையைச் சொல்லி அழும் அந்தச் சிறுமியிடம், `இவனை என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்' என அந்தப் பெண் ஆவி சவால் விடுகிறது. 

அத்தியாயம் - 3  (மிசை) : மூன்று பேச்சுலர்கள். அதில் `பசங்க' பட புகழ் கிஷோரும் ஒருவர். அவர் செய்யும் காதலில் மற்ற இரண்டு பேருக்கும் அதிருப்தி. காரணம், இவர் காதலிக்கும் பெண்ணின் அழகில் இவர்களும் மயங்குகிறார்கள். கிஷோர் தங்கள் அறையில் இருப்பது தெரியாமலேயே இருவரும் இதைப் பற்றி பேசிக்கொள்கிறார்கள்.  

அத்தியாயம் - 4 (அனாமிகா) : தனது மாமாவின் அழைப்பை ஏற்று சஞ்சீவ் அவரது வீட்டுக்குக் கிளம்பிப் போகிறார். எதிர்பாராதவிதமாக, அர்த்த ராத்திரியில் `ஆபிஸ் வேலை' என கிளம்பிவிடுகிறார், அவரது மாமா. அன்று இரவு வீட்டில் சில அமானுஷ்யங்கள் பார்த்து பயந்துபோய், அங்குமிங்குமாக ஓடி, இறுதியல் மயக்கம்போட்டு விழுந்தே விடுகிறார்.

அத்தியாயம் - 5 (சூப் பாய் சுப்பிரமணி) : தன்னைச் சுற்றி நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கு  விடைதேடி நம்பூதிரி ஒருவரின் உதவி கேட்டுச் செல்கிறார், சுப்பிரமணி. `நான் எந்தப் பொண்ணுகூட நெருங்கிப் பழகுனாலும், அந்தப் பேய் என்னை விடமாட்டேங்குது சாமி' என்று குமுறுகிறார். நடக்கும் அமானுஷ்யத்துக்குப் பின்னால் இருக்கும் காரணத்தை அறிந்ததும், காரித்துப்புகிறார் சாமியார் (நாங்களும்தான்).

அத்தியாயம் - 6 (சித்திரம் கொல்லுதடி) : `கோகிலா' என்கிற பேய்ப் புத்தகம் எதிர்பாரத விதமாக ஒரு ஓவியரிடம் (வினோத் கிஷன்) வருகிறது. காரணம், இவர் புத்தகங்களை படித்துதான் ஓவியங்களை வரைவார். அந்தப் புத்தகத்தைப் படித்து ஒரு அழகான சங்கத் தமிழ் பெண்ணை வரைகிறார். பாதி புத்தகம் மட்டுமே இருந்ததால், பெண்ணின் கண்களை மட்டும் வரைய முடியவில்லை. அதற்காக அந்தப் புத்தகத்தை எழுதிய எழுத்தாளரைத் தேடிப் பயணப்படுகிறார். தேடிச் சென்று பார்த்ததும் அதிர்கிறார். 

டாக்டர் செய்த பரிசோதனை முயற்சி என்ன, அந்தப் பெண் அந்த இளைஞனை என்ன செய்தார், தன் நண்பர்களே இப்படிச் செய்வதை பார்க்கும் கிஷோரின் நிலை என்ன, சஞ்சீவ் மயங்கிக் கிடக்க காரணமாக இருந்த அமானுஷ்யத்துக்கு என்ன காரணம்,  'சூப் பாய்' சுப்பிரமணியனைச் சுற்றி நடக்கும் அமானுஷ்யத்துக்கு செய்த பரிகாரம் என்ன, எழுத்தாளரைத் தேடிச்சென்ற வினோத் பார்த்தது என்ன... இப்படி ஆறு `என்ன?'களுக்கும் என்னானது என்பதுதான் இந்த `6 அத்தியாயம்'. 

ஆறு அத்தியாயங்களையும் முறையே, கேபிள்.சங்கர், ஷங்கர் வி.தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ், லோகேஷ், ஶ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள்.

விமர்சனத்தை ஆரம்பிக்கும்முன் இதைவிட தரமான பல நல்ல குறும்படங்கள் யூ-டியூபில் இலவசமாகக் கொட்டிக்கிடக்கிறது என்பதைக் கூறிக்கொண்டு... விமர்சனத்திற்கு வருவோம். முதல் அத்தியாத்தில் தன்னை சூப்பர் ஹீரோ என நினைத்துக்கொண்டு சுப்ரமணி சொல்லும் `சூப்பர் டூப்பர்' நிகழ்வுகளுக்கு நிகராக அதன் க்ளைமாக்ஸ் அமைந்திருந்தால், ஒரு நல்ல குறும்படம் பார்த்த அனுபவம் கிடைத்திருக்கும். இரண்டாவது அத்தியாயத்தில் குழந்தையின் பாலியல் வன்கொடுமையைக் கையில் எடுத்தது ஓகே என்றாலும், மறைமுகமாகச் சொல்கிறேன் என்ற பெயரில் 'பாலியல் வன்கொடுமையைவிட மோசமாகக்' காட்சிப்படுத்தியிருப்பது அவசியம்தானா? என்ற கேள்வி எழுகிறது. அத்தியாயம் மூன்றில் கிஷோர் காதலிக்கும் பெண்ணை மற்ற இரண்டு பேருக்கும் பிடிக்கும் என்பதையும் இயக்குநர் அப்படித்தான் காட்டியிருக்க வேண்டுமா? நாலாவது அத்தியாத்தில் இடம்பெற்ற `ஃபேன்ஸி ட்ரெஸ் காம்படிஷன்' டைப் பேய்களை, இதுவரை தமிழ் சினிமா கண்டதில்லையா பாஸ்!. 'சூப் பாய் சுப்பிரமணி'யின் கதைக்குப் பின்னால் இருந்த காரணம் இருக்கே... வாயில்லாத ஜீவனையும் விட்டுவைக்காத 'பேய்த்தன'த்திற்கு நோ கமென்ட்ஸ். 'சித்திரம் கொல்லுதடி' குறும்படத்தில் சொல்ல வந்த கதையை லாஜிக் மிஸ்டேக் இல்லாமல் சொல்லியிருந்தால், ஆறு கதையில் அந்தக் கதையாவது பாஸ் மார்க் வாங்கியிருக்கும். 

சுப்ரமணி சொல்லும் நம்பகத்தனமான `சூப்பர் ஹீரோ' நிகழ்வுகள், `சூப் பாய் சுப்பிரமணி' கதையில் ஆங்காங்கே வரும் `ஓகே' ரக காமெடிகள், கடைசி அத்தியாயத்தில் கோகிலாவைப் பற்றிய கதையை வாய்ஸ் ஓவரில் சொல்வது, இதுபோக எல்லாக் குறும்படங்களும் இருக்கும் சுவாரஸ்யமான ஒன்லைன் இவையெல்லாம், ஒட்டுமொத்த அத்தியாங்களிலும் சொல்லிக்கொள்ளும்படியான பாஸிடிவ் விஷயங்கள்.

`அமானுஷ்யத்தை எப்படிக் காட்டினாலும் ரசிப்பார்கள்' என்ற 6 இயக்குநர்களின் தவறான கணிப்பில்தான், இயக்குநர்களின் ஒற்றுமையைக் காணமுடிகிறதே தவிர, ஒவ்வொரு குறும்படத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இதுபோன்ற குறைபாடுகளையெல்லாம் தவிர்த்திருந்தால் இந்த முயற்சிக்கான வரவேற்பு இன்னும் அதிகரித்திருக்கும். ஏனெனில், தமிழ்சினிமா சந்தித்துக்கொண்டிருக்கும் பலவிதமான பிரச்னைகளுக்கு மத்தியில், இதுபோன்ற சில முயற்சிகள்தான் திறமையாளர்களை அடையாளம் காட்டுவதோடு, பல புதுமுயற்சிகளுக்கும் வழிவகை செய்துகொடுக்கும். அதனால்தான், '6 இயக்குநர்கள், 6 கதை' என்ற இந்த அத்தியாயத்தைப் பாராட்டவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், 'புது முயற்சி' என்ற அடையாளத்தை மட்டும் மூலதனம் ஆக்காமல், படைப்பை கூடுதல் தரத்தோடும், அர்ப்பணிப்போடும் கொடுக்கவேண்டியது படைப்பாளிகள் கையில்தான் இருக்கிறது. இப்போதைக்கு, 'வாழ்த்துக்கள்!' மட்டுமே! 

அடுத்த கட்டுரைக்கு