Published:Updated:

``பெரியாரின் கஞ்சத்தனம் கமல்கிட்டேயும் இருக்கு!" - `மய்யம்' குறித்து கஸ்தூரி

``பெரியாரின் கஞ்சத்தனம் கமல்கிட்டேயும் இருக்கு!" - `மய்யம்' குறித்து கஸ்தூரி
``பெரியாரின் கஞ்சத்தனம் கமல்கிட்டேயும் இருக்கு!" - `மய்யம்' குறித்து கஸ்தூரி

"நான் கமலை ஆதரித்துப் பேசியிருக்கேன். அதெல்லாம் மக்கள் கண்டுக்கவே மாட்டாங்க. எது பிரச்னைக்கு உரிய ட்வீட்டா இருக்குதோ அதைத்தான் மக்கள் விரும்புவாங்க. சினேகன், வையாபுரி போன்ற பிக்பாஸ் மக்கள் எல்லாரும் கமல் அணியில் சேர்ந்துருக்காங்க என்பதை நான் கொஞ்சம் ஹியூமரா போட்டிருந்தேன். 

சாதாரணமா ஒருநாள் காலையிலயிருந்து சாயங்காலம் வரை சீரியஸா ட்வீட் பண்றதை வழக்கமா வெச்சுருக்கேன். ராத்திரியில மட்டும் ஹியூமரா ஏதாவது ட்வீட் பண்ணிட்டுத் தூங்குவேன். அதுதான் என்னோட ஸ்டைல். இதெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டா என்னாலே என்ன பண்ண முடியும் மக்களே" என்றபடி நம்மிடம் பேச ஆரம்பித்தார் கஸ்தூரி. 

கமலின் மேடைப் பேச்சை ஆதரித்து நிறைய விஷயங்கள் பேசியிருக்கீங்களே...

"தமிழ்நாட்டுல கம்பராமாயணம் யார் எழுதினா, குடியரசு தினம் என்னைக்கு என்பதுகூட நமக்கு சரிவரத் தெரியாது. ஆனா, ஒரு தனிமனிதர் இவ்வளவு துல்லியமா யோசிச்சு, மேடையில பேசமுடியும்னா அது கமல் சாரால மட்டும்தான் முடியும். தமிழ்மொழி, தமிழ்நாடுனு மட்டும் பேசாம, தென்னிந்தியானு ஒட்டுமொத்தமா சேர்த்துப் பேசியது பிடித்திருந்தது. முதல்வர் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குறது, பொன்னாடை போர்த்துவது மாதிரியான செயல்களை மேடையில் மாத்துனதும் எனக்குப் பிடிச்சிருந்தது." 

ஆனா, கமலுக்கு எதிரா இருக்கீங்கனு நிறைய பேர் சொல்றாங்களே. அதை எப்படி பார்க்குறீங்க?

"கமலுக்கு நான் எப்போதுமே எதிராக இருந்தது கிடையாது. நான் அடிக்கடி சொல்றமாதிரி கட்சி சார்பில் எனக்கு விருப்பம் கிடையாது. என்னை இதுவரை எல்லாக் கட்சியிலயும் கூட்டு சேர்த்துக்கிட்டாங்கனுதான் சொல்வேன். 

ஒருதடவை இந்துக்களை கேவலமாகப் பேசியதுக்கு எதிராக நான் ட்வீட் போட்டிருந்தேன். 'இந்துக் கடவுள்களை மட்டம் தட்டிப் பேசுறது பகுத்தறிவு இல்லை. அதுதான் திராவிடமா'னு கொஞ்சம் காட்டமா சொல்லியிருந்தேன். அப்போ என்னை வலதுசாரியானு கேட்டாங்க. ஹெச்.ராஜாவுக்கு எதிராகப் பேசியிருந்தபோது, இடது சாரியானு கேட்டாங்க. கருத்து சொல்றதும் கலாய்க்குறதும் என்னுடைய உரிமை. அவ்வளோதான். தயவு செய்து என்னை எந்தக் கட்சியிலும் இழுக்காதீங்க." 

'மய்யம்'ல எனக்கு ஓர் ஐயம்னு சொல்லியிருக்கீங்களே... ஏன்? 

"சாதாரணமான ஸ்பெல்லிங்கை உபயோகிக்காம, பெரியாரின் ஸ்டைலைக் கமல் பின்பற்றுகிறார். அதுல எனக்கு உடன்பாடு கிடையாது. பெரியார் எப்படிப் பண விஷயத்துலயும் பாராட்டுலயும் கஞ்சமா இருந்தாரோ, அதேமாதிரி தமிழ் எழுத்துகளை உபயோகிப்பதிலும் கஞ்சத்தனமாகத்தான் இருந்தார். பெரியார் தமிழ்ல நான்கைந்து எழுத்துகளை ஒதுக்கிவெச்சுட்டார். பெரியாரின் பெண்ணியத்துல எனக்கு மரியாதை உண்டு. கடவுள் மறுப்புல எனக்கு உடன்பாடு இல்லை. திருமுருகன் காந்தி அவர்கள்கிட்டகூட கமலை விட்டுக்கொடுத்து பேசாமல், முட்டுக்கொடுத்துதான் பேசியிருக்கேன். ஆக, கமலின் கருத்துகளை நான் முழுவதுமாக ஏத்துக்கலை. அதேசமயம் எதிர்க்கவும் இல்லை. 

தினமும் செய்தித்தாளை பார்த்துதான் நான் ட்வீட் போடுறேன். அன்னைக்கு ஹாட் டாபிக் 'மய்யம்' என்ற வார்த்தை. அதுனாலதான் மய்யம்/ஐயம்னு நான் கிண்டல் பண்ணி ட்வீட் போட்டிருந்தேன். ஆனா, இப்போ எல்லாரும் கேள்வி கேட்குறதைப் பார்த்து எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எப்போவுமே சிந்தனை மட்டும் இருந்தா சரிவராது, சிரிப்பும் இருந்தாதான் நல்லா இருக்கும்." 

சினிமாத்துறையில இருக்குற பல பேர் கமலை ஆதரித்துப் பேசுறாங்க. அதைப் பற்றி என்ன நெனைக்கிறீங்க?"

"சினிமாத்துறையில உள்ள எல்லாருக்கும் கமல் நன்கு பரிச்சயமானவர். அதனால வெளியிலயிருந்து பார்க்குற மக்களைவிட, உடன் இருந்து பார்க்குற சினிமாகாரர்களுக்கு கமலைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் தன்மை அதிகமாகவே இருக்கும். அதனால நிறையபேர் அவருக்கு ஆதரவாகப் பேசுறாங்க. நம்பிக்கையையும் அதிகம். இவ்வளவு பணமும் பெயரும் புகழும் சினிமா துறையினர் ஏற்கெனவே சம்பாதிச்சுட்டாங்க. மறுபடியும் அவங்க பணத்தை நோக்கி ஓடமாட்டாங்க. கமல், ரஜினி, விஷால் இவங்க எல்லாருக்கும் சினிமாவுல ஓய்வு என்பதே கிடையாது. அவங்களா சினிமாவைவிட்டு விலகும்வரை சினிமா அவங்களை விடாது. உண்மையான சேவை நோக்கம் இருந்தால் மட்டுமே, அரசியல்ல நீடிக்க முடியும். ஊழல் பண்ற அரசியல்வாதிகூட முதல்ல, மக்களுக்கு சேவை செய்வதைத்தான் தன்னோட நோக்கமாக வெச்சிருப்பாங்க. அதுக்கப்புறம்தான் மனசுல பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணம் அதிகமாகியிருக்கும். 

சினிமாத்துறையினர் அரசியலுக்கு வர்றதை நான் முழுமூச்சாக ஏத்துக்கிறேன். அதனாலதான் கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே ஆதரவாக இருக்கணும்னு விருப்பப்படுறேன். வியாபார நோக்கம் ரெண்டு பேருக்குமே இல்லை. முழுக்க முழுக்க சேவை நோக்கம் மட்டும்தான். கமலுடைய வேகம் எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. அவர் ரொம்ப புத்திசாலி. திருமுருகன் காந்தி அவர்கள்கூட, 'கமல் ஏன் சின்ன வயசுலேயே அரசியலுக்கு வரலை'னு கேட்டார். அதுக்கு நான், 'ஞானசம்பந்தர் 6 வயதிலேயே பாடல் எழுதிட்டார். ஆனா, திருநாவுக்கரசர் 60 வயசுலதான் பாடல் எழுதினார். மலாலாவுக்கு 15 வயசுல நோபல் பரிசு கிடைத்தது. அதேமேடையில நோபல் பரிசு வாங்கிய கைலாஷ் சத்யார்த்திக்கு 60 வயசு. இதுல யாருக்கு எப்போ அந்த 'சிந்தனை', 'உந்துதல்' வரும்னு மத்தவங்க எப்படி முடிவு செய்ய முடியும்'னு கேட்டேன்."

அடுத்த கட்டுரைக்கு