Published:Updated:

''ரெண்டு வார்த்தைலயே சொல்லியிருக்கலாம்... தப்பா எடுத்துப்பீங்களோனுதான், கட்டுரையாவே எழுதிட்டோம் கௌதம்!" #HBDGauthamMenon

தார்மிக் லீ
''ரெண்டு வார்த்தைலயே சொல்லியிருக்கலாம்... தப்பா எடுத்துப்பீங்களோனுதான், கட்டுரையாவே எழுதிட்டோம் கௌதம்!" #HBDGauthamMenon
''ரெண்டு வார்த்தைலயே சொல்லியிருக்கலாம்... தப்பா எடுத்துப்பீங்களோனுதான், கட்டுரையாவே எழுதிட்டோம் கௌதம்!" #HBDGauthamMenon

நான் பிறந்த அதே வருடத்தில்தான் இவர் மூகாம்பிகை கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தார். அனேகமாக, அங்கிருந்துதான் எனக்கும் இவருக்குமான பந்தம் தொடங்கியிருக்க வேண்டும். காதலிப்பவர்கள் கவிஞர்களாக மாறி மலையை அசைக்கலாம், இரும்பைத் துரும்பாக்கலாம், பாறையைக் கரைத்துவிடலாம், ஏழு கடல் தாண்டி, ஒன்பாதாயிரம் மலைதாண்டி... என்றெல்லாம் கவி பாடுவார்கள். ஆனால் இவரது டிக்ஸ்னரியில் காதல் என்ற உணர்வுக்கு ஒரு புது அர்த்தத்தை எழுதியிருப்பார் போல... அதை இயக்குநர் கே.பாலசந்தரும் பாராட்டி இவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். படத்தின் பெயர் `விண்ணைத்தாண்டி வருவாயா', இயக்குநரின் பெயர் கௌதம் வாசுதேவ் மேனன். 

இவர் படங்களில் கதைக்கும், காட்சியமைப்புக்கும் ரொம்பவே கஷ்டப்படுவார் என்பது இவரது படங்களைப் பார்த்தாலே தெரியும். ஆனால், அதையும் தாண்டி, தன்னுடைய படங்களின் ஹீரோயின்களை அழகாகக் காட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் கௌதம். `மின்னலே' ரீனா, `காக்க காக்க' மாயா, `வாரணம் ஆயிரம்' மேக்னா, `விண்ணைத்தாண்டி வருவாயா' ஜெஸ்ஸி, `எனை நோக்கி பாயும் தோட்டா' லேகா என எல்லோரிடமும் அவர்கள் நெற்றியில் வைக்கும் பொட்டில் தொடங்கி, உடுத்தும் உடை வரை அழகியலின் உச்சத்தைப் பார்க்கலாம். இவர் படங்களில் இடம்பெறும் ஹீரோயின்கள் அழுதாலும் சரி சிரித்தாலும் சரி, பார்ப்பவர்களை ரசிக்க வைப்பதில் எந்தவிதப் பஞ்சமும் வைக்கமாட்டார்கள். அதற்கு இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் மேலும் அழகு சேர்ப்பார்கள். சமீபத்தில் வெளியான `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் 'விசிறி' பாடலைக்கூட உதாரணமாகச் சொல்லலாம். இந்தப் பாடலைக் கேட்பதற்கும் முன்னும், பார்ப்பதற்கும் முன்னும் ஒரு விஷயத்தை நினைவில்கொள்வது அவசியம். கதைப்படி, ஒரு பேரழகியான நடிகையின் (மேகா ஆகாஷ்) மேல் காதல்வயப்படும் ஒரு சராசரி ரசிகனின் (தனுஷ்) வரிகளும்... காதலை ஏற்றுக்கொண்ட அவளின் பதில் வரிகளும்தான் இந்த `விசிறி' பாடல். அதற்கேற்ப தாமரையின் வரிகளும், ஜோமன் டி.ஜானின் ஒளிப்பதிவும் மேலும் அழகு சேர்ப்பவை. அந்தப் பாட்டை மறுபடியும் கேட்டுப் பாருங்க!

`When you read, Don't just consider what the author thinks, Consider what you think', கௌதமிற்கு மிகவும் பிடித்த `Dead poet society' எனும் படத்தில் இடம்பெற்றிருக்கும் வரிகள் இவை. `ஒரு விஷயத்தைப் பார்க்கும்போதோ, ஒரு புத்தகத்தைப் படிக்கும்போதோ, அதன் படைப்பாளி என்ன நினைத்தான் என்பதைத்தாண்டி, நீ என்ன நினைக்கிறாய் என்பதே முக்கியம்' - இதுதான் அந்தக் கூற்றுக்கான விளக்கம். கௌதம் மேனனுக்கு இதுதான் ரொம்பவும் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கும். இவரின் படங்கள் கொடுத்த உணர்வை வேறெங்காவது நாம் கண்டிப்பாகக் கடந்து வந்திருப்போம். ஆனால், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது கௌதம் மேனனின் படைப்புகள்தான். காரணம், அதில் இருக்கும் யதார்த்தம். சமயத்தில் அதைமீறி சில ஃபேன்டஸி சிந்தனைகள். இது போன்ற சிந்தனைகளை சினிமாவால் மட்டும்தான் கொடுக்கமுடியும் என்பதிலும், கற்பனைக்கும் மீறிய சில சித்திரிப்புகளைக் கையில் எடுக்கும்போது இருக்கும் கவனத்திலும் கௌதம் எப்பவுமே டாப்தான்.  

`A theatre where films are shown for public entertainment', `The production of films as an art or industry' என சினிமாவுக்கு இரு விளக்கம் உண்டு. பார்வையாளர்கள் பொழுதுபோக்குக்காகப் படம் எடுப்பது, சினிமாவை ஒரு துறையாக நினைத்து அதில் வியாபாரம் செய்வது, சினிமாவை ஒரு கலையாக நினைத்து தன் நேர்த்தியான உழைப்பைக் கொடுப்பது... என சினிமாவின் மீதான பார்வை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தோன்றும். இதில் மூன்றாவது ரகத்தில் குறிப்பிட்ட இயக்குநர்களை மட்டுமே அடக்க முடியும். அதில் கட்டாயம் கௌதமுக்கும் இடமுண்டு. `படத்தின்  இயக்குநர் இவர்தான்' என்று வெளியே சொல்லாமல், படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சொல்லிவிடலாம், இது கௌதம் மேனன் படம்தான்' என்று. இதுதான் ஒரு இயக்குநருக்கான அழகு, நேர்த்தி, டெடிகேஷன். அதற்காக தனக்கென ஒரு ட்ரேட்மார்க்கையும், ட்ரெண்ட் செட்டையும் கொண்டவர் கௌதம்.

`மின்னலே' - `வாரணம் ஆயிரம்' - `விண்ணைத் தாண்டி வருவாயா' :

மூன்று படங்களுக்குமே இருக்கும் ஓர் ஒற்றுமை, `லவ்வுக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் வேணாலும் எடுக்கலாம்'. `காதல்ங்கிறது ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிகிட்டு, புரிஞ்சிகிட்டு அப்புறம்தான் வரணும்' என்ற வார்த்தைகளுக்குக் கருப்பு கொடி காட்டியவர் கௌதம். தனது பெரும்பாலான படங்களில் `Love at first sight' கான்செப்ட்டைதான் கையில் எடுத்திருப்பார். இதுவே மெச்சூர்டான காதலாக இருந்தால், `பார்த்தவுடனேயே ஒரு ஸ்பார்க்கு பட்டுனு சொல்லிட்டேன் ஐ லவ் யூ', `டூ மினிட்ஸ்லேயே சொல்லிருப்பேன், நீ தப்பா நினைப்பேன்னுதான் ரெண்டு மணிநேரம் வெயிட் பண்ணேன்' என்பதாகட்டும், காதலை பல வெரையிட்டியில் வெளிக்காட்டியிருப்பார். பல கமர்ஷியல் படங்களைப்போல் முழுநேர வேலையாக ஹீரோ பொண்ணு பின்னாடி மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கமாட்டான். ராஜேஷ் ஆகட்டும், சூர்யாவாகட்டும், கார்த்திக் ஆகட்டும்... அவனுக்கென்று ஒரு கனவு இருக்கும், லட்சியம் இருக்கும். காதல் காட்சிகளில் எந்தளவுக்குக் கவித்துவம் இருக்குமோ, ஹீரோவின் லட்சிய உணர்வில் அதேஅளவு வலிகளையும் விதைத்திருப்பார் கௌதம். இதுபோன்ற காதல்களம் கொண்ட படங்களில் நெகடிவ் ரோல்களுக்கு வேலையே வைக்கமாட்டார். அதுதான் கௌதமின் ஸ்பெஷல்.    

`காக்க காக்க' - `வேட்டையாடு விளையாடு' - `என்னை அறிந்தால்' :

மூன்று படங்களின் ஹீரோவைத்தாண்டி பாரட்டப்பட வேண்டியது, படத்தின் வில்லன்கள். படத்தின் ஹீரோ, அதுவும் ஒரு போலீஸ் கதைக்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ, அவரை எதிர்கொள்ளும் வில்லனுக்கும் கேரக்டருக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். தவிர, கெளதம் படங்களில் வில்லனுக்குத் தேர்வான ஆட்கள் ரொம்பவே ஸ்பெஷல். `காக்க காக்க' படத்தின் பாண்டியா, `வேட்டையாடு விளையாடு' படத்தின் அமுதன் - இளமாறன், `என்னை அறிந்தால்' படத்தின் விக்டர்... என கெளதம் மேனனின் கதாபாத்திரத் தேர்வுகளே 'வாவ்' ரியாக்‌ஷன் கொடுக்கவைக்கும். சினிமாவைப் பொருத்தவரை ஒரு ஹீரோவைப் பார்ப்பதற்கு முன் ஒரு இமேஜ் அவர் மேல் ஏற்படும். அந்த இமேஜில்தான் அவரை அடுத்தடுத்த படங்களிலும் பார்க்கத் தூண்டும். `சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஆகட்டும், `உலகநாயகன்' கமலஹாசன் ஆகட்டும். நடித்த முதல் படத்திலேயே இருவரும் தங்களுக்கான அடையாளத்துடன் உள்ளே வரவில்லை. இதற்கு முன் 'வில்லன்' என்ற அடையாளமே இல்லாமல் உள்ளே நுழைந்தவர்கள் ஜீவன், டேனியல் பாலாஜி, சலீம் பைக், அருண் விஜய். ஆனால், இவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் நம்பகத்தன்மை நிரம்பி வழிந்தது. 

தொடர்ந்து இரண்டு வார்த்தை இங்கிலீஷ் பேசினாலே, `தோ பார்றா பீட்ரு' எனக் கலாய்ப்பார்கள். ஆனால் இவர் படங்களில் குடும்பமே இங்கிலீஷில் பேசும். அதுவும் ரசிக்கும்படியாக இருப்பதுதான், இவரின் ஸ்பெஷல். பிறந்தநாள் வாழ்த்துகள்... ஸாரி ஸாரி... Happy Birthday கௌதம்!   

பின் செல்ல