Published:Updated:

"கலையரசி ஶ்ரீதேவி... என் மயில்... என்ன சொல்றதுனு தெரியலை!" - கலங்கும் பாரதிராஜா #Sridevi

கே.ஜி.மணிகண்டன்
"கலையரசி ஶ்ரீதேவி... என் மயில்... என்ன சொல்றதுனு தெரியலை!" - கலங்கும்  பாரதிராஜா #Sridevi
"கலையரசி ஶ்ரீதேவி... என் மயில்... என்ன சொல்றதுனு தெரியலை!" - கலங்கும் பாரதிராஜா #Sridevi

ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் உலுக்கிப் போட்டியிருக்கிறது, நடிகை ஶ்ரீதேவியின் மரணம். 'துணைவன்' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடிகையாக வளர்ந்து, பாலிவுட்டுக்குப் பறந்து... தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவின் முக்கியமான முகங்களில் ஒருவராக இருந்த நடிகை இன்று இல்லை. ரசிகர்கள் முதல் நடிகர்கள் வரை... பலரும் ஶ்ரீதேவியின் திடீர் மரணத்திற்கு இரங்கல்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஶ்ரீதேவியின் மரணத்திற்கு இயக்குநர் பாரதிராஜாவின் இரங்கல் இது.

"என் முதல் படம், '16 வயதினிலே'. இந்தக் கதைக்குத் தகுந்தமாதிரி 16 வயசு நடிகையைத் தீவிரமா தேடிக்கிட்டு இருந்த சமயம், மலையாளத்துல நடிச்சுக்கிட்டு இருந்த ஶ்ரீதேவியைப் பார்த்தேன். நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருக்கும்போதே என மனசுல ஆழப் பதிஞ்சுபோன ஒரு ரியல் கேரக்டர், மயில். அந்தக் கேரக்டருக்கு 100% உழைப்பைக் கொடுத்து உயிர் கொடுத்தது, நடிகை ஶ்ரீதேவி. 'இந்தக் கேரக்டருக்கு ஒப்பனை தேவையில்லை. ஒரிஜினல் முகமாவே நடிக்கணும்'னு நான் சொல்ல, 'கொஞ்சமா மேக்அப் போட்டுக்குறேன் சார்'னு சொன்னார். மயில் கேரக்டருக்கு அவங்க உழைச்ச உழைப்பு, இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு. முழுப்படத்தையும் முடிச்சுட்டு பேக்அப் பண்ணும்போது ஶ்ரீதேவிக்கு அழுகை. 'ஏன் அழற?'னு கேட்டப்போ, 'இந்த இடத்தைவிட்டுப்போக மனசே இல்லை சார்'னு சொன்னா. ஒரு நடிகை, படப்பிடிப்பு தளத்தை சென்டிமென்ட்டா அணுகுனது, எனக்கு ஆச்சரியமா இருந்தது. அப்பேற்பட்ட நடிகை ஶ்ரீதேவி.

அதற்குப் பிறகு, 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தோட கதையைக் கேட்க சொன்னேன். 'சார்... ஷூட்டிங் எங்கேனு சொல்லுங்க, எங்கே கூப்பிட்டாலும் வர்றேன்'னு சொன்னாங்க. '16 வயதினிலே' திரைப்படம் எங்களுக்குப் பல மாற்றத்தைக் கொடுத்துச்சு. '16 வயதினிலே' கதையை இந்தியில் ரீமேக் பண்ணலாம்னு பாலிவுட்டில் இருந்து ஒரு அழைப்பு. 'அமோல் பலேகர் ஜோடியா நடிக்க எந்த ஹீரோயினை ஒப்பந்தம் பண்ணலாம்?'னு தயாரிப்பாளர் கேட்க, ஶ்ரீதேவியே நடிக்கட்டும்னு சொன்னேன். 'அந்தப் பொண்ணுக்கு இந்தி தெரியுமா?'னு அடுத்த கேள்வி. 'புத்திசாலிப் பொண்ணு சார்... ரெண்டே நாள்ல ரெடியாகிடுவா'னு நான் சொன்னேன். ஶ்ரீதேவிகிட்ட, 'இந்தியில நடிக்கிறியா?'னு கேட்டப்போகூட, 'அய்யோ... வேணாம் சார், மாட்டேன்'னு பயப்பட்டுச்சு. ஒருவழியா 'சொல்வா சவான்' படத்துல நடிச்சா... படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

ஶ்ரீதேவியை இந்தியில நான்தான் அறிமுகப்படுத்துனேன்... இந்தப் பெருமை எனக்கு என்னைக்கும் இருக்கும். ரெண்டு வருடத்துக்கு முன்னாடி ஶ்ரீதேவி கொடுத்த டிவி பேட்டியில ஒரு கேள்வி. 'உங்களோட நடிப்புத் திறமைதான், உங்க வளர்ச்சிக்குக் காரணம். இது எப்படிச் சாத்தியம் ஆச்சு?'னு ஒரு கேள்வி. 'இது பாரதிராஜாகிட்ட கத்துக்கிட்டது'னு பதில் சொன்னாங்க, ஶ்ரீதேவி. ஒரு இயக்குநரா எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பெருமையா நான் இதைப் பார்க்குறேன். ஏன்னா, அவங்க நல்ல நடிகை மட்டுமில்ல, நல்ல மனுஷி. ஒருமுறை நியூயார்க் டூர் போயிருந்தப்போ, ஶ்ரீதேவியின் அம்மா உடல்நிலை சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்க; போய்ப் பார்த்தேன். ஹாஸ்பிட்டலுக்குப் பக்கத்திலேயே சின்னதா ஒரு அப்பார்ட்மென்ட் எடுத்துத் தங்கியிருந்த ஶ்ரீதேவியைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். 'என்னமா இவ்ளோ சிம்பிளா இருக்க?'னு கேட்டேன், அதுக்கு ஶ்ரீதேவி சொன்னா, 'இந்த உலகத்துக்குத்தான் சார் நான் ஒரு நடிகை... எனக்கு நான் ஶ்ரீதேவிதானே?'

தென்னிந்தியாவுல இருந்து எத்தனையோ நடிகைகள் பாலிவுட்டுக்குப் போயிருக்காங்க. ஆனா, இந்தளவுக்குக் கொடிகட்டிப் பறந்தது, ஶ்ரீதேவி மட்டும்தான். 'மயில் எங்கே மயில் எங்கே'னு ஏங்கிக்கிட்டு இருந்த தமிழ் ரசிகர்களை ஶ்ரீதேவி வருத்தப்படவெச்சுட்டாங்களே... அவங்களோட இந்த இழப்பு ஆந்திரா, தமிழ்நாடு, கேரள மக்களுக்கு மட்டுமில்ல... இந்தியாவுக்கே இழப்பு, இந்தக் கலையரசியின் மரணம். அவங்க குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் என்ன ஆறுதல் சொல்றதுனு தெரியலை. சினிமாவுக்குக் கிடைச்ச 'கலைச்செல்வி' இந்த ஶ்ரீதேவி. அந்த இடத்தை நிரப்புறதுக்கான ஆட்கள் இங்கே இல்லைனு நினைக்கிறேன். எந்தக் கல்லூரியிலும் படிக்காத ஒரு பெண், இந்தியாவோட ஒன்பது மொழிகளைப் பேசுவா. கடவுள் கொடுத்த வரம் அது. இந்தப் பொண்ணுக்கு இது எப்படிச் சாத்தியம் ஆச்சுனு இப்போவரைக்கும் எனக்குத் தெரியலை. அவர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த துக்கத்தைத் தெரிவிச்சுக்கிறேன். என் மயில் உயிரோட இல்லைங்கிற வருத்தம் எப்போவும் இருக்கும்!" எனத் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார், பாரதிராஜா.

ஶ்ரீதேவியின் உடல் இன்று இரவு மும்பைக்கு கொண்டுவரப்படும் என துபாயில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.