Published:Updated:

`ஶ்ரீதேவியின் தம்பி அவிஷேக்... வெல்கம் பிரதர்!" - `காத்தாடி' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
`ஶ்ரீதேவியின் தம்பி அவிஷேக்... வெல்கம் பிரதர்!" - `காத்தாடி' விமர்சனம்
`ஶ்ரீதேவியின் தம்பி அவிஷேக்... வெல்கம் பிரதர்!" - `காத்தாடி' விமர்சனம்

`ஶ்ரீதேவியின் தம்பி அவிஷேக்... வெல்கம் பிரதர்!" - `காத்தாடி' விமர்சனம்

பெற்றோரை இழந்த குழந்தையைப் பயன்படுத்தி கடத்தல் தொழில் செய்துவரும் சர்வதேச ரௌடி... யதேச்சையாக அவன் வழியில் குறுக்கிட்டு, குழந்தையைக் காப்பற்ற முயலும் மூன்று இளைஞர்கள். குழந்தையைக் மீட்கிறார்களா... ரௌடியின் பிடியில் மாட்டுகிறார்களா... என்பதே `காத்தாடி' சொல்ல வரும் கதை. 

`எப்படியாவது வெளிநாடு போய்விட வேண்டும்' என சக்தியும் (அவிஷேக் கார்த்திக்), துப்பாக்கியும் (டேனியல்) கங்கணம் கட்டிக்கொண்டு திருட்டுத்தொழில் செய்துவருகிறார்கள். `இப்படி சின்னச் சின்ன திருட்டு பண்ணா நம்ம கண்டிப்பா ஃபாரின் போகமுடியாது, பணக்கார வீட்டுக் குழந்தையா பார்த்து கடத்தி காசு கேட்டு, அதைவெச்சு ஃபாரின் போகலாம்' என்ற முடிவுக்கு வருகிறார்கள். மறுபக்கம் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வேலை செய்துகொண்டிருக்கும் காளி வெங்கட்டின் மகளுக்கு, இருதயத்தில் பிரச்னை இருப்பது தெரியவர, `ஆபரேஷன் செய்ய அவ்வளவு காசுக்கு நான் எங்கே போவேன்' என திகைத்து நின்றுகொண்டிருக்கிறார். 

பணக்காரக் குழந்தையைக் கடத்தக் காத்திருக்கும் சக்திக்கும், துப்பாக்கிக்கும் ஆடியில் இறங்கும் சம்பத்தின் மகளான பேபி சாதன்யா கண்ணில் படுகிறார். பார்த்தவுடன் குழந்தையைக் கடத்தியும் விடுகிறார்கள். அந்த நேரத்தில் குழந்தையும், இந்த இருவரும் தன்ஷிகாவிடம் துப்பாக்கி முனையில் மாட்டுகிறார்கள். விஷயம் தெரிந்த தன்ஷிகா `50 லட்சம் கொடுத்தாதான் குழந்தையை விடுவேன்னு இவங்க அப்பாகிட்ட சொல்லு' என டிவிஸ்ட் அடிக்கிறார். இவர்கள் செய்வதைப் பார்த்த பேபி சாதன்யா, துப்பாக்கி முனையில் இவர்களை நிறுத்தி, தனது நிஜக் கதையை அவர்களுக்கு எடுத்துச்சொல்கிறார். பேபி சாதன்யா சொன்ன கதையென்ன... காளி வெங்கட்டின் மகளுக்கு ஆபரேஷன் நடந்ததா... இந்த மூவருக்கும் தேவையான பணம் கிடைத்ததா... என காமெடி கலந்த த்ரில்லரில் `காத்தாடி'யை பறக்கவிட முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.  

மறைந்த நடிகை ஶ்ரீதேவின் தம்பியான அவிஷேக் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். கதைக்குத் தகுந்த அளவான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தினால் `தமிழ் சினிமா உங்களை அன்புடன் வரவேற்கும்'. வாழ்த்துகள் பாஸ். படம் முழுவதும் ஆடியன்ஸை சிரிக்க வைப்பதில் டேனியல் அதிகம் கவனம் ஈர்கிறார். தன்ஷிகாவிடம் `50 லட்சம் கேட்டு 50-50 பங்குன்னா எப்படி வரும், வர்றதே 50தானே' என்பது போன்ற கவுன்டர்கள் சரவெடி ரகம். திமிர் பிடித்த பொண்ணுக்கே உரிய தொணியில் தனது நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார் தன்ஷிகா. நடிப்பில் மட்டுமில்லாமல் சண்டைக் காட்சிகளிலும் அதிக கவனம் பெறுகிறார். படத்தில் பாரட்டக்கூடிய மற்றொரு விஷயம், பேபி சாதன்யாவின் நடிப்பு. அப்பாவை இழந்த ஏக்கம், தாயை கண் முன் பிரிந்த சோகம் என இயல்பான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.

இவர்களைத் தவிர படத்தில் இடம்பெற்ற ஜான் விஜய், சம்பத், இரண்டு காட்சிகளில் வந்துபோகும் வி.எஸ்.ராகவன் (அவர் மறைவுக்கு முன்பு படமாக்கப்பட்ட காட்சிகள்) , காளி வெங்கட் என எல்லோரும் தங்களுக்குக் கொடுத்த கேரக்டரை சரியாக செய்திருக்கிறார்கள். காட்சிகள் கொடுக்காத பரபரப்பை, ஆர்.பவன் இசையும் ஜெமின் ஜோமினின் ஒளிப்பதிவு மட்டுமே கொடுக்கிறது. இருக்கும் காட்சிகளை வைத்து அளவாகக் கத்திரித்திருக்கிறார், எடிட்டர் விஜய் வேலுகுட்டி. `இந்தப் பையன் யாரை முறை சொல்லிக் கூப்பிடுறானோ அவங்க செத்துப்போயிருவாங்க' என்ற டேனியலின் சிறு ஃப்ளாஷ்பேக் `சிறப்பு'. ஆங்காங்கே இடம்பெற்ற டிவிஸ்ட்டுகளும், அதன் கனெக்டிவிட்டியும் படத்தில் சரியாக வொர்க்அவுட் ஆகியிருக்கிறது. 

இடைவேளையை ஒட்டி ஆரம்பிக்கும் பரபர திரைக்கதை, இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் டோட்டல் மிஸ்ஸிங். கதையை க்ளைமாக்ஸில்தான் சொல்ல முடியுமென்றாலும், இடையில் இருந்த நேரத்தை வேறு விதமாகப் பயன்படுத்தியிருக்கலாம். காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் ரன்னிங், சேஸிங் போன்ற காட்சிகளுக்கு கவனம் செலுத்தி விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம். பல கமர்ஷியல் படங்களுக்குப் பக்கபலமாக இருப்பது, நான் கடவுள் ராஜேந்திரனின் ப்ரெஸன்ஸ். ஆனால், இந்தப் படத்தில் அதுவே துருத்திக்கொண்டிருப்பதுதான் சோகம். அவரின் காட்சிகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கிறது. `குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண், இப்படத்தை இயக்கியிருக்கிறார். அது கொடுத்த கலர்ஃபுல் விஷுவலும், காமெடி ட்ராக்கும் இந்தப் படத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங். 

அந்தரத்தில் தொங்கும் ரக காட்சிகளை நீக்கி, திரைக்கதையில் பறக்க விட்டிருந்தால் `காத்தாடி' இன்னும் உயரரே பறந்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு