Published:Updated:

'பிக்பாஸை மிஞ்சும் எமதர்மனின் டாஸ்க்!' - 'ஏண்டா தலையில எண்ண வெக்கல' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
'பிக்பாஸை மிஞ்சும் எமதர்மனின் டாஸ்க்!' - 'ஏண்டா தலையில எண்ண வெக்கல' விமர்சனம்
'பிக்பாஸை மிஞ்சும் எமதர்மனின் டாஸ்க்!' - 'ஏண்டா தலையில எண்ண வெக்கல' விமர்சனம்

'பிக்பாஸை மிஞ்சும் எமதர்மனின் டாஸ்க்!' - 'ஏண்டா தலையில எண்ண வெக்கல' விமர்சனம்

நிச்சயதார்த்தம் முடிந்த மாப்பிள்ளை எமதர்தமராஜாவின் நிபந்தனைபடி தனக்குக் கொடுத்த நான்கு டாஸ்க்குகளை, நான்கு நாள்களில் முடித்து இறுதியில் தன் கல்யாணத்தை நடத்திக்கொண்டாரா என்பதே `ஏண்டா தலையில எண்ண வெக்கல' படத்தின் ஒன்லைன். 

வேலை தேடி சென்னையில் உள்ள எல்லா கம்பெனிகளின் இன்டர்வியூக்களிலும் ஆஜராகும் ப்ரவீன் (அசார்). ஒரு கம்பெனியின் நேர்காணலில் ரம்யாவை (சஞ்சிதா ஷெட்டி) பார்த்ததும் காதல் வயப்படுகிறார். சஞ்சிதா வைக்கும் பல டெஸ்ட்டுகளில் பாஸ் செய்த அவர்களது காதல் நிச்சயதார்த்தம் வரை போகிறது. இதற்கு நடுவில் எமதர்மராஜாவுக்கு எமலோகத்தில் போரடிக்கிற காரணத்தால் `யாரையாவது வம்பிழுத்து என்டர்டெயின்மென்ட் பண்ணலாமே' என்ற முடிவுக்கு வருகிறார். ஆனால், அசாரோ இவரைச் சுற்றி சில அமானுஷ்யங்கள் நடந்தும், எதையும் கண்டுகொள்ளாமல் ஜாலியாக ரொமான்ஸ் செய்துகொண்டிருப்பார். `ஏண்டா இங்க ஒருத்தன் வேல வெட்டி இல்லாம உன்னையே ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன், கண்டுக்காமலே இருக்க' என்று கடுப்பாகும் எமதர்மராஜா, நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு அசாருக்கு கொக்கிப்போடுகிறார். 

`பாட்டி கையில் அடிவாங்குவது', `தற்கொலைக்கு முயற்சி செய்யும் பொண்ணைக் காப்பாற்றுவது' என்று பிக் பாஸை விஞ்சும் நான்கு டாஸ்க்குகளை அசாருக்குக் கொடுக்கிறார். மைண்ட் வாய்ஸில் டாஸ்க்குகளைக் கொடுக்கும் எமன், `இதை வெளியில சொன்னா உன் உயிர் போயிரும், செஞ்சு முடிச்சாதான் உன் கல்யாணமும் நடக்கும்' என்ற நிபந்தனையையும் முன் வைக்கிறார். `ஊர்ல அத்தனை பேர் இருந்தும் ஏன் நம்ம ஹீரோவை எமன் தேர்ந்தெடுக்குறார்ங்கிறதுதானே உங்க சந்தேகம்' ஏன்னா நம்ம ஹீரோ `தலையில எண்ண வெக்கலையாம்' அதுனாலதான். தனக்குக் கொடுக்கப்பட்ட நான்கு டாஸ்க்குகளை முடித்து, கடைசியில் தன் தலையில் எண்ணெய் வைத்து, பவுடர் அடித்து, மேக்-அப் போட்டு கல்யாணத்துக்கு ரெடியானாரா என்பதே மீதிக்கதை.

`கலக்கப்போவது யாரு' ஷோவில் இடம்பெற்ற விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கியுள்ளார். அதே ஷோவில் பங்கேற்று, தற்போது கலக்கிவரும் அசார்தான் இந்தப் படத்தின் அறிமுக நாயகனாகக் களமிறங்கியிருக்கிறார். புது முயற்சி. வாழ்த்துகள் டீம். அறிமுக நாயகன் அசாரின் நடிப்பு கதைக்கேற்ப கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. குறிப்பாக, இரண்டாம் பாதியின் ஓட்டத்தில் தனது நல்ல நடிப்பை வெளிக்காடியிருக்கிறார், முதல் படம் என்ற ஃபீலிங்கை எந்தக் காட்சியும் பிரதிபலிக்கவில்லை. வெல்கம் அசார். முதல் பாதியில் மட்டுமே தொடர்ந்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. அதைச் சரியாகப் பயன்படுத்தி. தனக்குக் கொடுத்த ரோலை சரியாகச் செய்திருக்கிறார். 

இரண்டாம் பாதியில் யோகி பாபு இடம்பெற்ற `சொல்வதெல்லாம் நன்மை' காட்சி சிறப்பு. `நான் சொல்லல இவன் பெரிய பைத்தியம்'னு என்பது போன்ற டைமிங் கவுன்டர்கள் நன்றாகவே வொர்க்கவுட்டானது. இதுபோக மந்திரியின் மகளாக நடித்த ஈடன் கிரியகோஸ், ஆங்காங்கே இடம்பெற்ற சிங்கப்பூர் தீபனின் மைண்ட் வாய்ஸ் காமெடிகள், ஒரு சீக்குவென்ஸில் வந்துபோகும் அர்ச்சனா படத்தின் ஓகே ரகம். கமர்ஷியல் படங்களுக்குத் தகுந்த வம்ஷிந்திரனின் ஒளிப்பதிவும் சி.எஸ்.பிரேமின் ஒளிப்பதிவும் படத்தைத் தாங்கிப்பிடித்தது. 

முதல் பாதி படம் `ப்ளீஸ் சிரிக்க வைங்க பாஸ்' என்ற ரகத்திலே காமெடி ட்ராக் நகர்ந்தது. சில இடங்களைத் தவிர படத்தில் இடம்பெற்ற காமெடிகள் கலக்கப்போவது யாரு பார்த்த எஃபெக்ட்டைக் கொடுத்தது. `பாட்டி கையில் அரை வாங்க வேண்டும்' டாஸ்க்கை முடிக்க அவ்வளவு `கீழே' இறங்கி யோசித்திருக்க வேண்டாமே இயக்குநரே. ஃபேன்டஸி காமெடியைக் கையில் எடுத்த இயக்குநர் ஃபேன்டஸியில் மட்டுமே ஜஸ்ட் பாஸ் வாங்கியிருக்கிறார். ஸ்கோப் இருந்தும் பல இடங்களில் காமெடி டோட்டல் மிஸ்ஸிங். இடைவேளை நேரத்தில் தொடங்கிய கதையை அதற்கு முன்பே தொடங்கி சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியிருந்தால், அப்லாஸை அள்ளியிருப்பார் இயக்குநர். ஒரே ஒரு பாட்டுதான் என்றாலும், பின்னணியில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரெஹைனாவின் இசை பல தமிழ் சினிமாக்களில் கேட்ட ரகம்.  

வழக்கமான தமிழ் க்ளிஷேக்களைத் தவிர்த்து, திரைக்கதையை வகுப்பெடுத்து அழகாக சீவியிருந்தால் `ஏண்டா தலையில எண்ண வெக்கல' படம் எமதர்மராஜாவோடு சேர்ந்து எங்களுக்கு என்டர்டெயின்மென்ட்டைக் கொடுத்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு