Published:Updated:

''கறிக்கொழம்பு இடியாப்பம், எம்.ஜி.ஆர் படம், அப்பு..!" - கமல் வளர்ந்த கதை சொல்கிறார் 85 வயது ராமசாமி

பாலமுருகன். தெ
''கறிக்கொழம்பு இடியாப்பம், எம்.ஜி.ஆர் படம், அப்பு..!" - கமல் வளர்ந்த கதை சொல்கிறார் 85 வயது ராமசாமி
''கறிக்கொழம்பு இடியாப்பம், எம்.ஜி.ஆர் படம், அப்பு..!" - கமல் வளர்ந்த கதை சொல்கிறார் 85 வயது ராமசாமி

''இமயமலைக்குப் பக்கத்துல அப்புவின் அக்கா, நளினியின் பரதநாட்டியம் நடந்துச்சு. நாங்க எல்லாம் போயிருந்தோம். அந்த மலைப்பிரதேசத்தில் தங்கியிருந்த பங்களாவில் கரன்ட் இல்லே. அகல்விளக்கு மட்டுமே வெளிச்சம். குரங்குகள் அட்டகாசம் தாங்கமுடியலை. சின்னப் பையனான அப்பு அழ ஆரம்பிச்சுட்டான். அவன் அழுதா எனக்கு மனசு தாங்காது. கதவைத் திறந்து வெளியே வந்தால், குரங்குகள் சூழ்ந்திருச்சு. பிள்ளையைக் காப்பாத்துணுமேனு அப்புவைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு மலையிலிருந்து உருண்டுட்டேன். கீழே பனி ஆறு ஒடுது. எப்படியோ அப்புவைக் காப்பாத்திக் கொண்டுவந்து சேர்த்துட்டேன். இல்லேன்னா அன்னைக்கே நானும் அப்புவும் செத்திருப்போம். இது நடந்தப்போ அப்புக்கு ரெண்டு வயசு இருக்கும்'' 

இப்படி மலரும் நினைவுகளை விவரிக்கிறார், கமல்ஹாசனை சிறுவயதிலிருந்தே வளர்த்துவந்த 85 வயது ராமசாமி. பரமக்குடிக்கு அருகில், தெளிச்சத்த நல்லூர் கிராமம்தான் சொந்த ஊர். அப்பு என்றுதான் கமல்ஹாசனை அழைக்கிறார். இந்தப் பெயரைத்தான், 'அபூர்வ சகோதர்கள்' படத்தில் ஒரு கேரக்டருக்கு கமல் வைத்திருப்பார். சினிமாப் புகழின் உச்சிக்குப் போனாலும், தன்னை வளர்த்தவரை மறக்கவில்லை கமல். ''அப்புவைப் பெற்றது ராசம்மாளாக இருந்தாலும், பிறந்த தினத்திலிருந்து ஐந்து வயது வரை பாலுடன் அன்பு, பாசம், வீரத்தை ஊட்டி வளர்த்தது நான்தான்'' என்கிற ராமசாமியை, சொந்தக் கிராமத்தின் வீட்டில் சந்தித்தோம். 

"அப்பு வீட்டு வேலைக்குப் போனது எப்படி?'' 

''எனக்கு அப்போ 12 வயசு இருக்கும். படிச்சது ரெண்டாம் வகுப்புதான். கொத்தனார் வேலை செஞ்சுட்டிருந்தேன். என் முதலாளியும் அப்புவின் அப்பா வழக்கறிஞர் சீனிவாசனும் நண்பர்கள். அவருடைய அலுவலகத்துக்கும், வீட்டு வேலைக்கும் நம்பிக்கையான ஒரு பையன் வேணும்னு சொன்னாங்க. என்னை அங்கே அனுப்பினார் முதலாளி. அங்கே வேலைக்குச் சேர்ந்த ஆறாவது மாசம், ராத்திரி நேரம். ஆபரேஷன் செய்துதான் குழந்தையை வெளியே எடுக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. எங்க அய்யா சீனிவாசன் அழுதுட்டாரு. அவரை சமாதானப்படுத்தி அடுத்த நாள் காலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அம்மாவைக் கூட்டிட்டுப்போனோம். அங்கேதான் அப்பு பிறந்தான். அப்புவின் பெரியம்மா குழந்தையைக் குளிப்பாட்ட வெளியே கொண்டுவந்தாங்க. 'இந்தாடா... இனிம இவன் உன் பிள்ளை. சாதக ரீதியாக தாய்கிட்ட பால் குடிக்கக் கூடாதுனு சொல்றாங்க. நீதான் இவனை வளர்க்கணும்'னு சொல்லிக்கிட்டே பிள்ளையை என் கையில கொடுத்தாங்க. ராமநாதபுரம் அரண்மனையில் ஐந்து நாள் தங்கியிருந்தோம். சாப்பாடுல இருந்து எல்லாத்தையும் ராசா வீட்டுலேயே பாத்துக்கிட்டாங்க. அப்புறம், பரமக்குடி வீட்டுக்கு வந்துட்டோம். அப்புக்கு பாட்டில் பால் கொடுக்கிறது, வெளியே வேடிக்கை பார்க்க கூட்டிட்டுப் போறதுனு எல்லாம் பார்த்துக்கிட்டேன். அவன் வளர வளர நான் இல்லாம கொஞ்ச நேரம்கூட இருக்க மாட்டான். வீட்டுக்குப் பின்னாடி ரவி தியேட்டர்னு இருக்கும். அங்கே எப்போ வேணும்னாலும் போவோம் வருவோம். அப்புவுக்குச் சண்டை படம்னா ரொம்பப் பிடிக்கும். பாட்டுப் போட்டாலே ஆட ஆரம்பிச்சுருவான். மத்த நேரத்துல நான் ஒரு கம்பும் அப்பு ஒரு கம்பும் வெச்சுட்டு சண்டைப் போடுவோம். ராத்திரி வரைக்கும் அப்புவோடு இருந்து தூங்க வெச்சுட்டு வீட்டுக்குப் போயிருவேன். காலையில் அவன் எழுந்திருக்கிறது முன்னாடியே அங்கே இருப்பேன்.'' 

''அப்புவிடம் உங்களுக்குப் பிடிச்சது, மறக்கமுடியாத விஷயங்கள்...'' 

''அது நிறைய இருக்கே. அப்புவை சாயந்திர நேரத்தில் ஆற்றுப்பாலம் பக்கம் தூக்கிட்டுப் போவேன். அப்படி நாங்கள் போயிட்டு வரும்போது அப்புவின் அண்ணன் சாருஹாசன், 'என்னடா பீடி குடிக்கப் போனியா?'னு என்னைக் கேட்பாரு. அந்த நேரம் அப்பு சும்மாவே பொய் சொல்லி என்னையை மாட்டிவிட்ருவான். ''அய்யா, அப்படியெல்லாம் இல்லைங்க'னு சொல்வேன். ஆற்றுப்பாலம் பக்கத்துல இருந்த ஒரு முஸ்லிம் கடையின் இடியாப்பம், அப்புவுக்கு ரொம்பப் பிடிக்கும். கறிக்குழம்பு ஊற்றி இடியாப்பம் சாப்பிட்டுவோம். அப்புறம், சோப்பு போட்டு கைகளைக் கழுவிட்டு வருவோம். வீட்டுக்கு வந்தால் சாருஹாசன், 'இன்னைக்கு என்னடா சாப்பிட்டீங்க?'னு முறைப்பா கேட்பார். 'ஒண்ணும் சாப்பிடலையே'னு அப்பு முந்திட்டுச் சொல்லிடுவான். நானும் 'ஆமாம் சாமி'னு தலையாட்டுவேன். 

ஒருமுறை, அப்புவின் அக்கா நளினியோட நாட்டியக் கச்சேரி அரங்கேற்றம் டெல்லியிலும் சுற்றியிலும் ஒரு மாசம் நடந்துச்சு. அதுக்காக, சென்னையில் இருக்கும் அப்புவின் பெரியம்மா வீட்டுக்குப் போய், அங்கிருந்து போயிருந்தோம். அய்யா, அம்மா கச்சேரிக்குப் போயிட்டாங்க. நாங்க ஆக்ராவுக்குப் போயிட்டோம். அப்புவைத் தூக்கிட்டு தாஜ்மஹால் உள்ளே போனேன். கண்ணாடி மாளிகையைப் பார்த்ததும் எனக்கு தலை சுத்தியிருச்சு. ரொம்ப நேரமானதால எங்களை காணாம்னு வீட்டுல தேடி, போலீஸுக்குத் தகவல் சொல்லியிருக்காங்க. ஆடி அசைஞ்சு வீட்டுக்குப் போனால், எனக்கு விழுந்துச்சுப் பாருங்க அடி. ஒரு கட்டத்துக்கு மேலே, கத்திக் கூப்பாடு போட்டு தடுத்து அப்புதான் என்னைக் காப்பாத்தினான். இன்னொரு முறை, ராஜபாளையம் ராசா கவர்னராக இருந்த ஊருக்குப் போயிட்டு வந்தப்பவும் இதேமாதிரி அடி வாங்கினேன். எனக்கு அப்புவின் சந்தோஷம் முக்கியம். அதுக்கு என்ன வேணும்னாலும் செய்வேன். 

இன்னொரு முறை, குற்றாலம் டூர் போயிருந்தோம். நாங்க தங்கியிருந்த சிங்கம்பட்டி பங்களாவுக்குக் கீழே அண்ணாதுரை, சம்பத், கருணாநிதி, நெடுஞ்செழியன் எல்லாம் தங்கியிருந்தாங்க. அங்கே போனோம். டேப் ரிக்கார்டுல பாட்டுக் கேட்டுக்கிட்டிருந்தாங்க. அந்தப் பாட்டுக்கு அப்பு சூப்பரா டான்ஸ் ஆடுனதைப் பார்த்த அண்ணா, அப்புவே தூக்கி முத்தம் கொடுத்து போட்டோ எடுத்துக்கிட்டார். அந்த போட்டோ இன்னும் அப்பு வீட்டுல இருக்கும்னு நினைக்கிறேன். வேற சொல்லணும்ன்னா... 'மதுரை வீரன்' படம், பரமக்குடி ரவி தியேட்டரில் 101 நாள் ஓடிச்சு. அந்தப் படத்தை தினமும் போய் பார்ப்போம். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் படத்தை விரும்பிப் பார்ப்பான் அப்பு. சின்ன வயசுலேயே சினிமா, டான்ஸ் சிந்தனையாவே இருந்தான்.'' 

''அந்த நாளில் அப்புவை (கமல்ஹாசன்) விட்டு என்னைக்காவது பிரிஞ்சிருக்கீங்களா?'' 

''ஒருமுறை அப்பு வீட்டுல வேலை செய்யறவங்களுக்கும் எனக்கும் பிரச்னை. நான் யார்கிட்டேயும் சொல்லாமல் மதுரைக்கு வந்துட்டேன். தியாகராஜர் கல்லூரி கேன்டீன் வேலையில் சேர்ந்துட்டேன். திடீர்னு அங்கே சாருஹாசன் வந்துட்டார். என் கைய பிடிச்சு, 'எதுக்குடா வீட்டை விட்டு வந்தே? அப்பு சாப்பிடாமல் அழுதுட்டிருக்கான். இப்பவே வாடா'னு ஒரு காரைப் பிடித்து கூட்டிட்டு வந்துட்டார். என்னைப் பார்த்தும் அப்பு, 'நீ எங்கே போனாலும் என்னையும் கூட்டிட்டுப் போயிரு'னு கட்டிப்பிடிச்சு அழுதுட்டான். அதைப் பார்த்த என்னால் அழுகையை அடக்க முடியலை. இதை என்னால் எப்பவுமே மறக்க முடியாது.'' 

''அப்பு சினிமாவில் நடிக்கப்போனது எப்படி?'' 

''தனுஸ்கோடியில் புயல் வந்த நேரம். நடிகர் ஜெமினி கணேசனின் சூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அய்யாவும் (சீனிவாசன்) அம்மாவும் (ராஜம்மாள்) நளினிக்கு சினிமாவுல நடிக்க வாய்ப்புக் கேட்டுப் போனாங்க. அங்கே ஜெமினி கணேசன், '' புதுசா எடுக்கிற 'களத்தூர் கண்ணம்மா' படத்துல நடிக்க சின்னப் பையன் வேணும் இவனை (அப்பு) கூட்டிட்டு சென்னைக்கு வாங்க''னு சொல்லிட்டுப் போயிட்டார். அப்போ, அப்புவுக்கு அஞ்சு வயசு. சினிமாவில் நடிக்க ஆரம்பிச்ச பிறகும் என்னைய வந்து பார்ப்பார். 'நீ என்னோடு வந்துடேன். உனக்கு கடை வெச்சுத் தர்றேன்'னு கூப்பிட்டார். நான்தான் போகலை. இதுவரைக்கும் அப்புகிட்ட எந்த உதவியும் கேட்டதில்லே. மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்துல கால் முறிஞ்சுப் போச்சு. நடக்க முடியாமல் கஷ்டமா இருக்கு. இப்போ ராமேஸ்வரம் வந்து அப்பு, என்னைப் பார்த்து முத்தம் கொடுத்தார். அப்போதான், 'காலுல ஆபரேசன் பண்ணனும். உதவி செய்வியா?'னு கேட்டேன். செய்றேன்னு சொல்லியிருக்கிறார் அப்பு.''