Published:Updated:

''ஜாலியான 'கேம்ஸ் ஜோடி'களுக்கு, ஒரு விபரீத விளையாட்டு..." - 'கேம் நைட்' படம் எப்படி? #GameNightReview

தார்மிக் லீ
''ஜாலியான 'கேம்ஸ் ஜோடி'களுக்கு, ஒரு விபரீத விளையாட்டு..." - 'கேம் நைட்' படம் எப்படி? #GameNightReview
''ஜாலியான 'கேம்ஸ் ஜோடி'களுக்கு, ஒரு விபரீத விளையாட்டு..." - 'கேம் நைட்' படம் எப்படி? #GameNightReview

ஒவ்வொரு நாளும் ஜாலியான விளையாட்டுகளை விளையாடி இரவுகளைக் கடத்தும் மூன்று காதல் ஜோடிகளுக்கு, ஒரு நாள் இரவு மட்டும் விபரீதமாக மாறுகிறது. விபரீதமான அந்த விளையாட்டில் எதிர்பாராத விதமாக நடக்கும் கொலைகள்... அதற்குப் பின்னணி என்ன, யார் அதைச் செய்கிறார்... போன்ற பல முடிச்சுகளை விளையாடி அவிழ்ப்பதே இந்த `கேம் நைட்'.

மேக்ஸ் (ஜேஸன் பேட்மேன்) - ஆனி (ரேச்சல் மெக் ஆடம்ஸ்), ரையான் (பில்லி மக்னூஸன்) - சாரா (ஷரன் ஹோர்கன்), கெவின் (லேமர்ன் மோரிஸ்) - மிச்சல் (கெய்லி பன்பரி), என்ற இந்த மூன்று ஜோடிகளும் ஒவ்வொரு நாள் இரவிலும் சின்னச் சின்ன விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஒருநாள் இரவு மேக்ஸின் சகோதரர் ப்ரூக்ஸ் (கெய்ல் சான்லர்) நீண்டநாள் கழித்து இவரைச் சந்திக்க வருகிறார். (மேக்ஸின் கனவுக் காரில்).  இவரின் வருகையை எதிர்பார்க்காத மேக்ஸ், என்ன செய்வதெனத் தெரியாமல் ப்ரூக்ஸையும் இவர்கள் விளையாடும் விளையாட்டில் சேர்த்துக்கொள்கிறார். விளையாடி முடித்து வீட்டுக்குக் கிளம்பும்போது, ப்ரூக்ஸ் தனது வீட்டிற்கு எல்லோரையும் விளையாட அழைக்கிறார். `அது எப்பவும்போல விளையாடுற விளையாட்டு மாதிரி இருக்காது, இது சீரியஸான கேம்' என்ற டிஸ்க்ளைமரையும் கொடுக்க, `போகலாமா வேண்டாமா' என்ற குழப்பத்தில் இருக்கும் அந்த மூன்று ஜோடிகளும், ஒரு வாரம் கழித்து அங்கு செல்கின்றனர். 

`இப்போ இங்க ஒரு கடத்தல் நடக்கும், அவர்களை யார் கடத்துனாங்க, எங்க கொண்டு போயிருக்காங்கனு கண்டுபிடிச்சா, நான் என்னுடைய காரை பரிசாக தர்றேன்' என்று விளையாட்டைச் சூடுபிடிக்க எடுத்துரைக்கிறார் ப்ரூக்ஸ். அனைவரும் கேம் மோடுக்குப் போக, திடீரென ஒருவர் FBI எனச் சொல்லி சில பேப்பர்களை எல்லோரிடமும் கொடுக்கிறார். அதன் பின், கொஞ்ச நேரத்திலேயே மேலும் இருவர் உள்ளே நுழைந்து ப்ரூக்ஸை அடித்துக் கடத்திவிட்டுப் போய்விடுகிறார்கள். `விளையாட்டு ஆரம்பித்துவிட்டது' என ஒருவக்கொருவர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட துப்புகளை வைத்துத் தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கின்றனர். எல்லோருக்கும் முன் ப்ரூக்ஸை சந்திக்கும் மேக்ஸுக்கு, நடந்துகொண்டிருக்கும் அனைத்தும் விளையாட்டல்ல, உண்மை எனத் தெரியவருகிறது. ப்ரூக்ஸைக் கடத்தியதற்கான காரணம் என்ன, கடத்தியவர்கள் வைக்கும் கோரிக்கை என்ன... என்பதை டார்க் காமெடி கலந்த ஆக்‌ஷன் ஜானரில் விளையாட நினைத்திருக்கிறார் இயக்குநர் ஜான் ஃப்ரேன்சிஸ் டேலி மற்றும் ஜோநாதன் கோல்டுஸ்டெயின். 

படத்தில் அதிக கவனம் ஈர்ப்பவர் ரேச்சல் மெக் ஆடம்ஸ். சின்னச் சின்ன சேட்டைகளாலும், செய்யும் 'டார்க் காமெடி' ரக காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக ஜேஸன் பேட்மேனுக்குள் துளைத்திருக்கும் புல்லட்டை எடுக்கும் காட்சியில் 10 நிமிடம் இடைவிடாமல் நான்ஸ்டாப் காமெடி செய்து கலக்கியிருக்கிறார். ஜேஸனும் இவருக்கு ஈடுகொடுக்கும் நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். இதுபோக லேமர்ன் மோரிஸ், கெய்லி பன்பரியை சந்தேகப்பட்டு இருவருக்கும் ஏற்படும் காமெடி சண்டைகள், பில்லி மக்னூஸன், ஷரன் ஹோர்கனுக்குள் ஏற்படும் `ரொமான்ஸ்' ரக காமெடிகள் எக்ஸ்ட்ரா போனஸ். `முதலில் ஏற்பட்ட விளையாட்டு வீபரீதம்தான்' என அப்பட்டமாகத் தெரிந்தாலும், பின்னே வந்த `விபரீதம் விளையாட்டு' என்பது போன்ற டிவிஸ்ட்டுகள் படத்தின் சர்ப்ரைஸ் எலமென்ட். படத்தின் மற்றொரு சர்ப்ரைஸ் எலமென்ட் மைக்கெல் சி. ஹாலின் க்ளைமாக்ஸ் காட்சி. 

டேனியல் ஹஸ்டனின் இடத்தில் `ஒரு' பொருளை எடுக்கச் செல்லும்போது இடம்பெற்ற நீ....ண்ட விறுவிறு காட்சியை, ஒரே டேக்கில் அழகாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பேரி பீட்டர்சன். ஜோமி க்ரோஸ், க்ரிகோரி ப்ளாட்கின், டேவிட் ஈகன் என்ற இந்த மூன்று எடிட்டர்களும், மாறி மாறி தங்களதுன் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக படம் ஆரம்பித்த காட்சியில் இடம்பெற்ற சின்னச் சின்ன பொருட்களைக்கூட பயன்படுத்தி தங்களுடைய எடிட்டிங் திறமைகளைக் காட்டியிருக்கிறார்கள். படத்தின் பரபரப்பை கூட்டிக்கொட்டியதோடு, சில இடங்களில் காமெடிகளுக்கும் மிகவும் உதவியாக இருந்தது  கிளிஃப் மார்டினஸின் இசை.    

மாறி மாறி விளையாட்டு, விபரீதம், உண்மை, பொய்... என்ற ரக திரைக்கதையினால், தற்பொழுது நடப்பது உண்மையா பொய்யா என்ற குழப்பம் ஏற்படும். டார்க் காமெடி ஜானர் என்பதால், அதற்கான சந்தர்பங்களையும், காட்சிகளையும் வலுக்கட்டாயமாக திணித்ததுபோல் இருந்தது. காமெடிக்கான காட்சிகளைத் திணிக்காமல், ரன்னிங், சேஸிங் நேரத்தில், போகிறபோக்கில் காமெடியை வைத்திருந்தால் படத்தின் கதை இன்னும் வேகமாக நகர்ந்திருக்கும். ஒவ்வொரு ஜோடிக்கும் படத்தின் தொடக்கத்தில் ஆரம்பிக்கும் விவாதம் படம் முடிந்தும் நிற்காது. பேசிக்க்க்க்க்கொண்டே இருப்பார்கள். ஒரு சில இடங்களில் வொர்க்கவுட் ஆன ஒரே ரக காமெடி, இன்னொரு இடத்தில் எடுபடவில்லை. முழுக்க முழுக்க காமெடிகளுக்கு மட்டுமே முக்கியத்தும் கொடுக்காமல், ஆக்‌ஷன் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகம் தூவியிருக்கலாம். மேக்ஸின் பக்கத்து வீட்டுப் போலீஸ்காரரான ஜெஸ்ஸி ப்ளிமோன்ஸின் சென்டிமென்ட் சீக்குவென்ஸுக்கு கனெக்ட் செய்யும் உணர்வுகளைக் கொடுத்திருக்கலாம். எல்லாமே காமெடி... ஒருவேளை அதுவும் காமெடியோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

வழக்கமான கதைக்களமாக இருந்தாலும், காமெடிக்கு மட்டுமே கவனம் செலுத்தாமல், ஆக்‌ஷன் கலந்த திரைக்கதையில் விளையாடியிருந்தால் `கேம் நைட்' சிறப்பாக முடிந்திருக்கும். 

பின் செல்ல