Published:Updated:

"பணத்தைக் கொடுங்க; இல்லைனா நடிச்சுக்கொடுங்க!" 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தொடர்கிறதா? #VikatanExclusive

"பணத்தைக் கொடுங்க; இல்லைனா நடிச்சுக்கொடுங்க!" 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தொடர்கிறதா? #VikatanExclusive

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படம் உருவாகி அமோக வெற்றியைப் பெற்றது. எல்லோராலும் பாராட்டப்பட்டு, வசூலையும் வாரிக்குவித்தது. அதன்பிறகு நீ...ண்டகாலமாக இரண்டாம் பாகம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி, வடிவேலுவை அடிக்கடி சந்தித்து வந்தார், இயக்குநர் சிம்புதேவன். அவரோ, 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்', 'எலி' என அடுத்தடுத்த படங்களில் கவனத்தை செலுத்தி வந்தார். இந்நிலையில்தான், 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' அறிவிப்பு வெளியானது. முதல் காப்பி அடிப்படையில் இப்படத்தை லைக்கா நிறுவனத்துக்குத் தயாரித்துத் தருவதாக ஒப்புக்கொண்டிருந்தார், ஷங்கர். இந்தப்பட தயாரிப்பு விவரம் குறித்து ஷங்கரும், சிம்புதேவனும் வடிவேலுவிடம் தெரிவித்தனர். அவரும் ஒப்புக்கொண்டு சம்பளத் தொகையைப் பேசி, அட்வான்ஸ் பணத்தைப் பெற்றுக்கொண்டு கால்ஷீட் கொடுத்தார். வரலாற்றுத் திரைப்படம் என்பதால் சென்னையில் பிக்பாஸ், 'காலா'வின் தாராவி செட் போடப்பட்ட ஈ.வி.பி ஸ்டுடியோவில் கோடிக்கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமாக செட் போடப்பட்டது. சில நாள்கள் படப்பிடிப்பும் நடந்தது. 

இயக்குநர் சிம்புதேவன் உருவாக்கி வைத்து இருந்த கதை, திரைக்கதை, விவகாரங்களில் தலையீடு செய்து காட்சிகளை மாற்றியமைக்கச் சொன்னார், வடிவேலு. பிறகு பிரச்னைகள் எழவே, இப்படத்தில் நடிக்காமல் ஒதுங்கிவிட்டார், வடிவேலு. இதுகுறித்து ஷங்கர் தரப்பில் விசாரித்தோம்.

''படத்திற்கான பாடல் ரெக்கார்டிங் செய்தபோது, 'ரொம்ப பிரமாதமாக இருக்கிறது' என்று கட்டிப்பிடித்துக்கொண்டார். ஆனால், அந்தப் பாடலைப் படமாக்கும்போது 'இந்தப் பாட்டு பிடிக்கலை; மாத்துங்க' என்று அடம்பிடித்தார். காமெடிக் காட்சி ஒன்றில் பசு மாட்டின் பாலைக் கறந்துகொண்டே 'செண்பகமே... செண்பகமே...' என்ற ராமராஜன் பாடலைப் பாடி நடிக்கச் சொன்னோம். 'வரலாற்றுப் படத்தில் இந்தப் பாடல் எதற்கு? நான் ராமராஜன் நடிச்ச பாட்டையெல்லாம் பாடமாட்டேன்' என்று மறுத்தார். 'நீங்கள் ஏற்கெனவே முதல் பாகத்தில் இதுமாதிரி பாடி நடித்திருக்கிறீர்கள்' என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் மறுத்தார். ஒரு சண்டைக் காட்சியில் எதிரியின் அடிவயிற்றைக் கத்தியால் குத்துவதுபோல காட்சி எடுக்க வேண்டும். அதற்கும் 'நான் அப்படி நடிக்கமாட்டேன்' என்று சொன்னார், வடிவேலு. ஷூட்டிங் ஸ்பாட்டில் அரசர் காலத்து ஆடையைக் கொண்டுபோய்க் கொடுத்தால், 'இது வேண்டாம். வேறு உடை கொடுங்கள்' என்கிறார் வடிவேலு" என வடிவேலு மீது ஏராளமான புகார்களை அடுக்கினார்கள். வடிவேலு தரப்பில் கேட்டால், 'கேரவன் வசதி சரியில்லை, இந்தப் படத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்தாலும் படப்பிடிப்பில் அவருக்குச் சரியான மரியாதையைத் தரவில்லை' என்று சொல்கிறார்கள். அதனால்தான், 'இனிமேல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளமாட்டேன்' என்று அறிவித்துவிட்டு ஷூட்டிங்கைத் தவிர்த்து வந்தார், வடிவேலு.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இயக்குநர் ஷங்கர், "கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க வடிவேலு ஒப்புக்கொண்டார். தனது சம்பளத் தொகையில் ஒன்றரைக் கோடி ரூபாயை அட்வான்ஸாக வாங்கியிருக்கிறார். அந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட செட் 6 கோடி ரூபாய்க்கும் அதிகம். திடீரென்று வடிவேலு 'நடிக்கமாட்டேன்' என்று சொல்லி மறுத்து வருகிறார். இதனால், பலகோடி ரூபாய் நஷ்டத்தில் நாங்கள் தவித்து வருகிறோம். எங்கள் விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு நல்ல முடிவை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று வடிவேலு மீது புகார் கொடுத்தார். தயாரிப்பாளர்கள் சங்கமும் ஷங்கர் கொடுத்த புகாருக்கு விளக்கம் அளிக்கச்சொல்லி வடிவேலுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுவரை எந்தப் பதிலும் சொல்லாமல் தவிர்த்து வந்தார், வடிவேலு.

ஷங்கரும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்காகப் பல கோடிகள் செலவு செய்து சென்னை ஈ.வி.பி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள செட் கடந்த சில மாதங்களாக வீணாகக் கிடக்கிறது. வடிவேலுவின் தனிப்பட்ட பிரச்னைக்குக் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதால், தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் இந்த விவகாரத்தை விசாரிக்கச் சொல்லி வற்புறுத்தப்பட்டது. கடந்த 24-ம் தேதி அன்று திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் வந்திருந்தனர். இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, வடிவேலுவும் வருவார் என்று அவரை எதிர்பார்த்துக் காத்திருக்க, கடைசிவரை வடிவேலு வரவில்லை. தவிர, தனது மேனேஜரை கவுன்சிலுக்கு அனுப்பிவைத்ததால், சங்கமும் வடிவேலு மீது கோபம் கொண்டது. 'வடிவேலுவால் இதுவரை ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனத்துக்கு வட்டியுடன் சேர்த்து கிட்டத்தட்ட ஒன்பது கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. எனவே, மூன்று நாள்களில் வடிவேலு 8 3/4 கோடி ரூபாயை தயாரிப்பு தரப்பிற்கு செட்டில் செய்ய வேண்டும்' என்று வடிவேலுவுக்குக் கெடு விதிக்கப்பட்டிருக்கிறது . தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் இந்தத் தடாலடி நடவடிக்கையால் அதிர்ச்சியானார் வடிவேலு.

எனவே, தயாரிப்பாளர் சங்கத்தில், 'நான் வாங்கிய 1 1/2 கோடி ரூபாயைத் திருப்பித் தருகிறேன்' என்று வடிவேலு சொல்லியிருக்கிறார்.  ஆனால், 'உங்கள் சம்பளம், செட் அமைக்க செய்த செலவு, அதற்காக இதுவரை கொடுத்துக்கொண்டிருக்கும் வட்டி... எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாக 8 3/4 கோடி ரூபாயை செட்டில் செய்யுங்கள்' என்று வற்புறுத்தியிருக்கிறார்கள். தன் நிலையை உணர்ந்துகொண்ட வடிவேலு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசருக்குப் போன் செய்தும், 'சிம்புதேவன் எழுதியுள்ள திரைக்கதைப்படியே நான் நடித்துத் தருகிறேன். வேறெதிலும் தலையீடு செய்யமாட்டேன்' என்று உறுதி கொடுத்து இருக்கிறார். வடிவேலுவின் இந்த முடிவை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தெரிவித்தார். பிரச்னை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதால், விரைவில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. வடிவேலு ரசிகர்களுக்கு, டரியல் ஆரம்பம்தான்!

                   
                                       
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு