Published:Updated:

"இளையராஜா குழந்தையாக்கி தூங்க வைக்க... தூக்கம் தொலைக்க வைத்த யுவன்!" #21YearsOfYuvanism

தார்மிக் லீ
"இளையராஜா குழந்தையாக்கி தூங்க வைக்க...  தூக்கம்  தொலைக்க வைத்த யுவன்!" #21YearsOfYuvanism
"இளையராஜா குழந்தையாக்கி தூங்க வைக்க... தூக்கம் தொலைக்க வைத்த யுவன்!" #21YearsOfYuvanism

"இளையராஜா குழந்தையாக்கி தூங்க வைக்க... தூக்கம் தொலைக்க வைத்த யுவன்!"

உணர்வுகளின் தூண்டுதலுக்குக் காரணமாக இருப்பது, இரண்டு. அவை, காதலியால் விதைக்கப்பட்ட காதலுக்கு யுவனின் பாடல்கள் கொடுக்கும் வலி மற்றும் வலிமை. இந்த இரண்டையுமே ஒருவனால் அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. இப்படி நம் உணர்வுகளைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் கையில் இசைக் கருவிகளை எடுத்த இசையமைப்பாளர்கள், கவிதைகளாக வரிகளாக எழுதி பாடல்களாக இடம்பெறச் செய்த பாடலாசிரியர்கள்... என தமிழ் சினிமாவில் கலகக்காரர்கள் ஏராளம். அதில் ஒருவரைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம். ஏதோ ஒருவகையில் நம்மை ஆளப் பிறந்தவர்கள் என்பதாலோ என்னவோ இருவரின் பெயர்களிலும் `ராஜா' இருக்கும். ஆம், அவர்களேதான். ஒருவர் பெயர் இளையராஜா... இன்னொருவர் இளையதலைமுறையினரின் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா. இன்றோடு இவர் தமிழ் சினிமாவில் கால் பதித்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது.   

வெறும் வலியாக மனதுக்குள் புதைந்திருக்கும் உணர்வுகளைத் தூண்டி வெளியில் எடுத்துக் கண்ணீர்விட வைப்பது முத்துகுமாரின் வரிகள். இவரது வரிகள் கொண்ட பாடல்களைக் கேட்கும்போது துக்கத்தில் மட்டுமல்ல, தூக்கத்திலும் நான் கண்ணீர் சிந்தியதுண்டு. காதலிக்கும் ஒவ்வொருவனும் கற்பனையாய் ஒரு உலகத்தை உருவாக்கி வைப்பான். அவ்வுலகத்தின் கதாநாயகனே யுவன்தான். மிடுக்கான நடையோடு, சிலிர்க்கும் கற்பனையோடு, `நான்தான் இந்த உலகின் ராஜா' என்ற கர்வத்தோடு... அந்தக் உலகில் நம்மை உலாவவிடுவது இ(யு)வனின் இசை. பிப்ரவரி 28, 1997... `அரவிந்தன்' படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா இளையராஜாவைப் பார்க்கும்போது, 16 வயதான அச்சிறுவனிடம், `அப்பா எங்கே போனார்' எனக் கேட்டுள்ளார். `இங்க இல்ல, வெளியில போயிருக்காருனு நினைக்கிறேன்' என பதில் கூறினார். மறுபடியும் டி.சிவா அவனிடம், `நீ என்ன பண்ற, உங்க அப்பா மாதிரி உனக்கும் இசைமேல ஆர்வம் இருக்கா, மியூஸிக் பண்ணுவியா?' எனக் கேட்டுள்ளார். `சான்ஸ் கொடுங்க, கண்டிப்பா நான் பண்றேன்' எனப் பதில் கொடுத்திருக்கிறார், சிறுவன் யுவன் ஷங்கர் ராஜா. அதற்குப் பின் `வரும் நாட்களில் சினிமாத்துறையில் தான் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்கப்போகிறோம்' என்று தெரியாமல், அந்தப் படத்துக்கு இசையமைக்க, இசைக் கருவிகளைத் தொட்டார் யுவன். இப்படித்தான் சினிமா வாழ்க்கைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டார். விஷயம் தெரிந்த இளையராஜாவும், `அவன் மியூஸிக் நல்லா போடுவானானு எல்லாம் எனக்குத் தெரியாது, அவனுக்கு மியூஸிக் பண்ண வாய்ப்பு கொடு, கண்டிப்பா எல்லோரையும் பேச வைப்பான்' என்று தன் மகனைப் பற்றி பெருமிதமாகக் கூறினார். அந்த வார்த்தைகள் உண்மையும் ஆனது.

ஒரு சில இசை கொடுக்கும் உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், தேவா என சில இசை மேதைகளை வார்த்தைகளுக்குள் சுருக்குவது மிகவும் கடினம். அப்படிப்பட்ட வரிசையில் இடம்பெற யுவன் அதை அடைய செய்த முயற்சிகளும் சாதரணமானதல்ல. `அரவிந்தன்' படத்திற்குப் பிறகு இரண்டு படங்களில் தோல்வியைத் தழுவிய யுவன், `பூவெல்லாம் கேட்டுப்பார்', `தீனா', `நந்தா', `துள்ளுவதோ இளமை', `மௌனம் பேசியதே' போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்குத் தன்னை முக்கியமான இசையமைப்பாளராக அடையாளம் காட்டினார். சில தோல்வியுற்ற படங்களில் அவர் வாங்கிய வசைகளும் ஒருபக்கம் இருக்கின்றது. `துள்ளுவதோ இளமை' படத்துக்குப் பின் `காதல் கொண்டேன்' என்ற படத்தில் அந்தக் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்கிறது. தனுஷ் - செல்வராகவன் கூட்டணியல்ல, யுவன் ஷங்கர் ராஜா - செல்வராகவன் என்ற கூட்டணி. படத்தில் `யுவன் ஷங்கர் ராஜாதான் வேலை செய்யவேண்டும்' என்ற ஒப்பந்தத்திற்கு முன், `நான் படத்தை எடுத்துப் பாக்குறவங்களை காட்டடி அடிக்குறேன், நீ உன் இசையில காட்டடி அடி' என்ற தீர்மானத்தில் ஒப்பந்தம் போட்டிருப்பார்கள் போல... அதுவரை மெல்லிசாக உணரப்பட்ட யுவனின் இசை, `காதல் கொண்டேன்' படத்தின்போது உக்கிரமானது. படத்தின் க்ளைமாக்ஸில் `திவ்யா, திவ்யா' என வெறியாட்டம் போட்டது தனுஷ் மட்டுமில்லை, யுவனின் பாடல்களையும், இசையையும் கேட்ட மக்கள்... சாரி சாரி... ரசிகர்களும்தான். ஆம், அதுவரை மக்களாக இருந்து யுவனின் இசையில் மகிழ்ந்தவர்கள், அப்படத்துக்குப் பின் ரசிகனாக மாறி ரசிக்கத் தொடங்கினார்கள்.

அதற்குப்பின் இவர் இசைக் கருவிகளில் கை வைத்தாலே போதும் என்ற நிலையானது. சில அடையாளம் தெரியாமல்போன படங்கள் கூட, இவரின் இசையால் அதகளம் ஆனது. உச்சம் தொடும் இசையின் கொடியாக பல பாடல்கள் திகழ்ந்தது, பேரன்பின் ஆதியுற்றாக கேட்பவரின் உணர்வுகளைப் பின்னிப் பிணைந்தது, தொலைந்த பல பறவைகளைத் தேடவைத்தது, ரசிகர்களை மங்கத்தா ஆட்டம் போட வைத்தது, ஆராரிரோ பாடி அம்மாக்களின் பெருமை பாட வைத்தது, காதலில் மூழ்கியவர்களை இறகைப் போலே அலையவிட்டது, வீழ்ந்திருப்பவர்களை `எதிர்த்து நில் தடைகளே இல்லை' எனக் கூறி நம்பிக்கையூட்டியது. இப்படி மனிதுக்குள் புதைந்திருக்கும் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் உயிர் கொடுத்தது இவரின் இசை. 

இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு தூங்கிய குழந்தைகள்தான், யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களைக் கேட்டு தூக்கம் தொலைத்த இளைஞர்களாக இருக்கிறார்கள்... அதுதான், யுவனின் வெற்றி. 

உனது நல்லிசை தொடர வாழ்த்துகள்!  

அடுத்த கட்டுரைக்கு