என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

சௌமியா என்னும் சங்கீதக் குயில்!

ஜெ.முருகன்

சௌமியா என்னும் சங்கீதக் குயில்!

##~##சௌமியா... ப்ளஸ் ஒன் படிக்கும் புதுவையின் இசைக் குயில்! விஜய் டி.வி. சூப்பர் ஸிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர். சன் டி.வி-யின் பாட்டுக்குப் பாட்டு, ஜெயா டி.வி-யின் ராகமாலிகா, ராஜ் டி.வி-யின் ராஜ கீதங்கள், ஜீ தமிழ்,  தூர்தர்ஷன் என இவர் பங்குபெறாத சேனல்களே இல்லை! புதுச்சேரிக்கு எந்தப் பிரபலம் வந்தாலும் அவர்கள் முன் பாட அரசாங்கம் அழைப்பு விடுக்கும் நபர் சௌமியாதான். தனது எட்டாவது வயதில் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம், இப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் என இரண்டு ஜனாதிபதி களின் முன்பாகப் பாடிய பெருமைக்குச் சொந்தக்காரர். 'சாணை பிடித்தால் ஜொலிக்கும் ரத்தினம் இவள்’ என கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பாராட்டு பெற்றவர்!

''இரண்டு வயசு இருக்கும்போதே டி.வி-யில் வர்ற பாட்டைக் கேட்டுக் கேட்டுத் தனியா பாட ஆரம்பிச்சிடுவா. வார்த்தை புரியலைன்னாலும் ராகத்தை மட்டும் சத்தம் இல்லாம பாடிக்கிட்டு இருப்பா. அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல முறைப்படி கர்னாடக இசை வகுப்பில் அவளைச் சேர்த்தோம்!'' என்கிறார் சௌமியாவின் பாட்டி மல்லிகா.

''நான் முதல் வகுப்பு படிக்கும்போது 'முத்தைத் தரு பத்தித் திருநகை’ பாட்டை மேடையில் பாடினேன். அதற்கே எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. அப்புறம் பரத நாட்டியம், வீணை, ஓவியம்னு நிறைய கத்துக்க ஆரம்பிச்சேன். ஆனா, இசை மீது மட்டும் அளவில்லாத ஆர்வம். மூன்றாம் வகுப்பு படிக்கும்போதுதான் ஜெயா டி.வி-யில் 'இளைய மேதைகள்’ நிகழ்ச்சியில் முதன்முதலாகப் பாடினேன். அதே வருஷத்துல சன் டி.வி. 'பாட்டுக்குப் பாட்டு’, நான்காம் வகுப்பு படிக்கும்போது ஜெயா டி.வி. 'ராகமாலிகா’னு ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு டி.வி-யில் பாடிட்டு இருப்பேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது திருமணம் மற்றும் திருவிழாக் கச்சேரிகளில் பாட ஆரம்பிச்சுட்டேன்!'' என்று சொல்லும் சௌமியா, இதுவரை எழுநூறுக்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பாடி இருக்கிறார்.

சௌமியா என்னும் சங்கீதக் குயில்!
சௌமியா என்னும் சங்கீதக் குயில்!

ஏழாம் வகுப்பு மாணவியாக விழுப்புரத்தை அடுத்த பெரிய தச்சூர் என்ற ஊரின் திருவிழாவில் பாடியபோது, அந்த ஊர் மக்கள் சௌமியாவின் குரல்வளத்தில் மயங்கி, அவருக்கு ரசிகர் மன்றமே துவக்கி இருக்கிறார்கள்.

''ஆரம்பத்துல கிளாஸிக்கல் மட்டும்தான் பாடிட்டு இருந்தேன். டி.வி-யில், கச்சேரியில் பாட ஆரம்பிச்சதும் எல்லா வகையான பாடல்களையும் பாட ஆரம்பிச்சேன். விஜய் டி.வி. சூப்பர் ஸிங்கர்ல 'பெஸ்ட் வெஸ்டர்ன் ஸிங்கர்’ விருதும் ஒரு லட்சம் பணமும் கிடைச்சது. 'நீ கர்னாடக சங்கீதத்தை இன்னும் நிறையக் கத்துக்க, நிறைய பாட்டுகளையும், நாகஸ்வர இசையையும் கேளு’னு எனக்கு நிறைய சி.டி-க்கள் தந்து உற்சாகப்படுத்துறது கி.ரா. தாத்தாதான். எனக்கு ஐ.ஏ.எஸ். ஆகணும்னுதான் ஆசை. ஆனா, என் அம்மாவுக்கு நான் டாக்டர் ஆகணும்னு ஆசை. என் பாட்டிக்கு நான் பெரிய பாடகியா பேர் வாங்கணும்னு ஆசை. அதனால எம்.பி.பி.எஸ். முடிச்சுட்டு, ஐ.ஏ.எஸ். படிக்கலாமானு யோசிச்சுட்டு இருக்கேன். ஐ.ஏ.எஸ். படிச்சா பாடக் கூடாதா என்ன?'' என்று கேட்டுக் கலகலவெனச் சிரிக்கிறார் சௌமியா.

எது எப்படியோ... பாட்டுப் பாடும் டாக்டரோ அல்லது பாட்டுப் பாடும் கலெக்டரோ நமக்குக் கிடைக்கப்போவது உறுதி!

  • தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் முதலில் சௌமியாவின் பாட்டைக் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் கி.ராஜநாராயணன்! 
     
  •  25&க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்!