Published:Updated:

"குஷ்புவுக்குப் பிறகு நிக்கி கல்ராணிக்கு ஒரு ஸ்பெஷல் குவாலிட்டி இருக்கு!" - 'சார்லி சாப்ளின்' சக்தி சிதம்பரம்

உ. சுதர்சன் காந்தி.
"குஷ்புவுக்குப் பிறகு நிக்கி கல்ராணிக்கு ஒரு ஸ்பெஷல் குவாலிட்டி இருக்கு!" - 'சார்லி சாப்ளின்' சக்தி சிதம்பரம்
"குஷ்புவுக்குப் பிறகு நிக்கி கல்ராணிக்கு ஒரு ஸ்பெஷல் குவாலிட்டி இருக்கு!" - 'சார்லி சாப்ளின்' சக்தி சிதம்பரம்

2002-ம் ஆண்டு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவான 'சார்லி சாப்ளின்' படம் நல்ல வரவேற்பைப் பெற்று மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்திற்கு பிறகு, 'மகாநடிகன்', 'கோவை பிரதர்ஸ்' போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்த சக்தி சிதம்பரம், மீண்டும் 'சார்லி சாப்ளின்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவருகிறார். இயக்குநர் சக்தி சிதம்பரத்திடன் பேசினேன். 

'சார்லி சாப்ளின்' படத்துக்குப் பிரபு - பிரபுதேவா ஜோடியை நடிக்க வைக்கணும்னு எப்படித் தோணுச்சு? 

"நான் வெறித்தனமான சார்லி சாப்ளின் ரசிகன். என் கம்பெனியோட லோகோவுலகூட சார்லி சாப்ளின் இருப்பார். உடல் பருமனா ஒரு அண்ணன், ரொம்ப ஒல்லியா ஒரு தம்பி இவங்களுக்குள்ள நடக்குற கலாட்டாவை வெச்சுப் படம் பண்ணலாம்னு யோசிக்கும்போதுதான் இந்தப் படத்துக்கான ஒன்லைன் கிடைச்சது. நானும் பிரபுதேவாவும் நல்ல நண்பர்கள். அவர் போன் பண்ணா, 'ஹலோ நான் நகம் பேசுறேன். அங்க யாரு, தசையா?'னு கேட்பார். நான் போன் பண்ணா, 'ஹலோ நான் தசை பேசுறேன். அங்க யாரு, நகமா?'னு கேட்பேன். அந்த அளவுக்குப் பழக்கம். அதனால, அவரும் பிரபு சாரும் பண்ணா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அப்படித்தான் இந்தக் கூட்டணி அமைஞ்சது. அந்தப் படம் எனக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்துச்சு. அதை தெலுங்குலேயும், இந்தியிலேயும் என்னையே டைரக்ட் பண்ணக் கூப்பிட்டாங்க. என்னாலதான் போகமுடியாம போச்சு. இரண்டாம் பாகத்திலேயும் இந்தக் காம்போவை நடிக்க வெச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு."

"இரண்டாவது பாகத்தை இவ்ளோ வருடம் கழிச்சு இயக்கக் காரணம் என்ன, இந்தப் படத்துல பிரபு - பிரபுதேவாவிற்கு என்ன மாதிரியான ரோல்?" 

" 'சார்லி சாப்ளின்' படத்தோட இரண்டாவது பாகத்தை எடுக்கணும்னு ரொம்ப நாளாவே பிளான் இருந்துச்சு. ஆனா, அதுக்கான ஒன்லைனைப் பிடிக்க கொஞ்சம் தாமதமாகிடுச்சு. இப்பவும் ஒரு சின்ன ஒன்லைனைப் பிடிச்சு அதை மெருகேற்றி இருக்கோம்.  இந்தப் படத்துல பிரபுவும் பிரபுதேவாவும் மாமனார் - மருமகன் கேரக்டர்கள்ல நடிக்கிறாங்க. இந்தப் படத்துல பிரபுதேவாவோட நடிப்பைப் பத்தி சொல்லியே ஆகணும். அவருக்குள்ள ஒரு ரியல் சார்லி சாப்ளின் ஒளிஞ்சிருக்கார். நிறைய இடங்கள்ல டயலாக்கே இல்லாமல் பாடி லாங்குவேஜ்லேயே சிரிக்க வெச்சிருக்கார். அவரை எல்லாரும் ஒரு டான்ஸ் மாஸ்டராதான் பார்க்குறாங்க. ஆனா, அவரோட நடிப்பை வெளிக்கொண்டுவர சரியான தீனி கிடைக்கலைனுதான் சொல்லணும். இந்தப் படத்துல  பிரபு சார் தன் மருமகனை 'மரோ'னுதான் கூப்பிடுவார்."
 

"முதல் பாகத்துல அபிராமி, காயத்ரி ரகுராம்னு ரெண்டு பேருக்கு ரெண்டு ஹீரோயின் வெச்சிருந்தீங்க. இந்தப் பாகத்துலயும் நிக்கி கல்ராணி, அடா ஷர்மானு ரெண்டு ஹீரோயின் இருக்காங்களே?"

"ஆமா. அதுல ரெண்டு பேருக்கும் ஜோடி இருக்கும். இதுல பிரபுதேவாவுக்கு நிக்கி கல்ராணி ஜோடி. பிரபு சார் நிக்கி கல்ராணிக்கு அப்பாவா நடிக்கிறார். அடா ஷர்மா பிரபுதேவா லைஃப்ல எப்படி வர்றார்ங்கிறது சஸ்பென்ஸ். செட்ல எல்லார்கிட்டேயும் அவங்க குடும்பத்துல இருக்கிற நபர்கள்கிட்ட பேசுற மாதிரிதான் பேசுவார் நிக்கி. அது நிக்கி கல்ராணியோட ப்ளஸ்னு சொல்லலாம். நான் பார்த்தவரைக்கும் குஷ்புவுக்குப் பிறகு ஒரு சில ஸ்பெஷல் நிக்கி கல்ராணிகிட்ட இருக்கு"

"கேரியர்ல இவ்ளோ வருடம் இடைவெளிக்கு என்ன காரணம்?"

" நான் ஒரு சில படங்களை வாங்கி ரிலீஸ் பண்ணேன். அதுல சில, பல காரணங்களால் லேட் ஆயிடுச்சு. என்மேல எந்தத் தப்பும் இல்லாமலே கொஞ்சம் கெட்ட பேர் வந்திடுச்சு. அதிலிருந்து மீண்டு வந்து முழு உத்வேகத்தோட படம் பண்றதுக்குக் கொஞ்சம் தாமதமாகிடுச்சு. இந்தப் படத்துக்காக அம்மா கிரியேஷன்ஸ் சிவா சார் எனக்கு ரொம்பவே சப்போர்ட்டா இருந்தார். நான் இதை இடைவெளியா நினைக்கலை. ஊருக்குப் போற வழியில ஒரு இடத்துல இறங்கி தண்ணி பாட்டில் வாங்கிட்டு மறுபடியும் பஸ் ஏர்ற மாதிரிதான் நான் நினைக்கிறேன்."

" 'ஜெயிக்கிற குதிரை' படம் என்ன ஸ்டேஜ்ல இருக்கு?"

"ஜீவனை வெச்சுப் பண்ண படம் 'ஜெயிக்கிற குதிரை'. இந்தப் படத்தை நானே தயாரிச்சு இயக்கிருக்கேன். இப்போ இருக்கிற அரசியல் சூழலை வெச்சு ஒரு காமெடியான படமா எடுத்திருக்கோம். இது எனக்கு இன்னொரு 'மகாநடிகன்' மாதிரி அமையும்னு நம்புறேன். இந்தப் படத்துக்கு சென்சார் கிடைக்கவே மூணு மாசம் ஆச்சுனா பாத்துக்கோங்க. மார்ச் மாசம் வெளியிடலாம்னு இருக்கோம். ஜீவனும் இந்தப் படம் மூலம் கவனிக்கப்படுவார்"
 

"அடுத்து?"  

"'சார்லி சாப்ளின் 2' படத்தோட ஷூட்டிங் இன்னும் சில நாள்கள் பாக்கி இருக்கு. அதை முடிச்சுட்டு மே மாசம் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடிவு பண்ணிருக்கோம். அதுக்கு முன்னாடி 'ஜெயிக்கிற குதிரை' வந்திடும். இந்த 2018 எனக்கு நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம், 'சார்லி சாப்ளின்-3' படத்துக்கான ஒன்லைன் ரெடியா இருக்கு. இதே பிரபு - பிரபுதேவா கூட்டணியுடன் இன்னொரு ஸ்டாரையும் வெச்சுப் பண்ணலாம்னு இருக்கேன் "