Published:Updated:

ஒரு ‘கைப்புள்ள’ பச்சோந்தி, கெளபாய் ஆன கதை! #Rango

ஒரு ‘கைப்புள்ள’ பச்சோந்தி, கெளபாய் ஆன கதை! #Rango
ஒரு ‘கைப்புள்ள’ பச்சோந்தி, கெளபாய் ஆன கதை! #Rango
ஒரு ‘கைப்புள்ள’ பச்சோந்தி, கெளபாய் ஆன கதை! #Rango

வருங்காலத்தில் தண்ணீருக்குத்தான் உலகப் போர் நிகழும் என்கிறார்கள். அதற்கான அடையாளங்களை இப்போதே உணரத் தொடங்கிவிட்டோம். பாலைவனப் பிரதேசத்தில் திருட்டுப்போன நீரைத் தேடிப் பயணிக்கும் ஒரு பச்சோந்தியின் கதைதான் Rango. வெட்டி வீராப்புகளால் தன்னை வீரனாக முன்னிறுத்திக்கொள்ளும் அது, சம்பவங்களின் போக்கில் உண்மையான வீரனாக மாறுகிறது. சிறந்த அனிமேஷன் திரைப்பட பிரிவில் 2011-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது உள்பட பல திரை விருதுகளை வென்ற திரைப்படம் என்று இதன் சிறப்பை ஒரே வரியில் சொல்லலாம். 

வளர்ப்புப் பிராணியாக உள்ள பச்சோந்தி ஒன்று, தன்னை நடிகனாக முன்னிறுத்தி தற்பெருமைப் பேசுகிறது. பிறகு, நிகழும் விபத்தின் மூலம்தான் நமக்குத் தெரியவருகிறது, ஓடும் காருக்குள் இருக்கும் ஒரு மீன்தொட்டியில் அது நின்றிருப்பது. அந்த விபத்தினால், சாலையில் விழும் பச்சோந்தியை ஒரு ஆர்மடில்லோ அழைக்கிறது. அதுவும் விபத்தில் சிக்கியிருப்பதால், அதன் உடல் இரண்டாகப் பிளந்திருக்கிறது. 

“இந்தக் கடும் கோடையில், அதுவும் பாலைவனச் சாலையில் நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்கிறது பச்சோந்தி. “நான் மேற்கின் ஆன்மாவைத் தேடிக்கொண்டிருக்கிறேன். சாலையைக் கடக்கும்போது விபத்தில் சிக்கிக்கொண்டேன்” என்கிறது ஆர்மடில்லோ. “சாலையைக் கடந்து பாலைவனத்தில் புகுந்தால், ‘டர்ட்’ என்கிற சிறுநகரம் வரும். அங்கே மேற்கின் ஆன்மாவைக் காணமுடியும்” என்று தத்துவார்த்தமாகவும் பேசுகிறது. 

மறுபடியும் வாகனங்களுக்குள் சிக்கும் பச்சோந்தி, சில பல களேபரங்களுக்குப் பிறகு, சாலையின் மறுபுறம் சென்று விழுகிறது. குடிக்க ஒரு துளி நீர் இல்லாமல், கடுமையான வெயிலில் பாலைவனத்தில் நடக்கும் பச்சோந்தியை ஒரு பருந்து துரத்துகிறது. பச்சோந்தி அதனிடமிருந்து சாமர்த்தியமாகத் தப்பிக்கிறது. இதைக் கிண்டல் செய்த ஓர் ஆமை, பருந்தின் வேட்டைக்குப் பலியாகிறது. 

பச்சோந்தி மேலும் முன்னேறிச் செல்லும்போது, 'பீன்ஸ்' என்கிற பெண் உடும்பைக் காண்கிறது. தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் பீன்ஸ், ‘டர்ட்’ நகருக்கு வழிகாட்டுகிறது. தட்டுத் தடுமாறி அங்கே செல்லும் பச்சோந்தி ஒரு பாருக்குள் நுழைந்து, ‘ஒரு கிளாஸ் தண்ணீர் வேண்டும்” என்று கேட்கிறது. 

அங்குள்ள பாலைவன விலங்குகள், சிறந்த ஜோக் கேட்டதுபோல விழுந்து விழுந்து சிரிக்கின்றன. கடுமையான நீர்ப் பஞ்சம் உள்ள ஊரில் இப்படிக் கேட்டால் சிரிக்காமல் என்ன செய்வார்கள்? 

“என்னைப் பார்த்தா சிரிக்கிறீர்கள், நான் யார் தெரியுமா? ஒரே தோட்டாவில் ஏழு பேரைக் கொன்றவன்’' என்று தன் வழக்கமான வாய்வீச்சை ஆரம்பிக்கிறது பச்சோந்தி. அப்போது தோன்றுகிற பெயரையே ‘ரங்கோ’ எனத் தனக்குத் தானே சூட்டிக்கொள்கிறது. 

இதை நம்பிவிடும் விலங்குகள் பயந்து நடுங்குகின்றன. அந்த ஊரே பயப்படும் ஒரு பாம்பு, அந்தச் சமயத்தில் உள்ளே நுழைகிறது. அதையும் தன் பாணியில் கலாய்க்கிறது ரங்கோ. உள்ளுக்குள் பயம் இருந்தாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் வீராப்புடன் பேசுகிறது. ஆத்திரமான அந்தப் பாம்பு, பச்சோந்தியிடம் துப்பாக்கியைக் கொடுத்து, சண்டைக்கு அழைக்கிறது. 

ஒரு ‘கைப்புள்ள’ பச்சோந்தி, கெளபாய் ஆன கதை! #Rango

அப்போது, ரங்கோவைத் துரத்திய அதே பருந்து, அந்த ஊருக்குள் வருகிறது. பாம்பு உள்பட அனைத்து விலங்குகளும் பயந்து ஒளிந்துகொள்கின்றன. தனியாகச் சிக்கும் ரங்கோவை, கதறக் கதற துரத்துகிறது பருந்து. ஆனால், பருந்துடன் ரங்கோ சண்டையிடுவதாக ஊர் நினைக்கிறது. தற்செயலாக, நிகழும் விபத்தில் அந்தப் பருந்து இறந்துவிடுகிறது. ‘ரங்கோ’ ஹீரோவாகிறது. அந்த ஊரின் தலைவரான ஆமை, ரங்கோவுக்கு ‘ஷெரிப்’ அதிகாரத்தைத் தருகிறது. 

அந்தப் பிரதேசத்தின் நீர் இருப்பு மிகக் குறைவாக இருக்கிறது. ‘நீரையெல்லாம் எவரோ திருடுகிறார்கள்’ என பீன்ஸ் சொல்லும் புகாரை, யாரும் மதிப்பதில்லை. ரங்கோ செய்யும் குழப்படியால் குறைந்தபட்சமாக உள்ள நீரும் காணாமல்போகிறது. ஊரே பதறுகிறது. காணாமல்போன நீரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு ரங்கோவுக்கு வருகிறது. நீரைத் தேடி மற்ற விலங்குகளுடன் பச்சோந்தி செய்யும் பயணம், அத்தனை எளிதாக இல்லை. தண்ணீர் திருட்டுக்குப் பின்னால் மிகப்பெரிய சதியும் அதற்குக் காரணமானவர்கள் பற்றிய தகவலும் தெரியவருகிறது. ‘கைப்புள்ள’யாக இருந்த ரங்கோ, உண்மையான ஹீரோவாகும் சூழல் வாய்க்கிறது. 

சிறிய உருவம்கொண்ட ஒரு பச்சோந்தியை, பிரதான கதாபாத்திரமாக்கி, திரைக்கதையை உருவாக்கிய கற்பனைக்காகவே பாராட்டலாம். ஹாலிவுட்டின் பிரபல நடிகரான ஜானி டெப், பச்சோந்திக்கு அட்டகாசமாக குரல் தந்துள்ளார். விதவிதமான உருவத்தில் பாலைவன விலங்குகள், கொலைவெறியுடன் துரத்தும் பருந்திடமிருந்து தப்பிக்கும் நகைச்சுவை சாகசங்கள், திருடர்களிடமிருந்து நீரை மீட்கும் துரத்தல் காட்சிகள், ரங்கோவின் புத்திசாலித்தனமான திட்டத்தால், ஊரே நீரில் இன்பமாக நனையும் காட்சி, ரங்கோவின் கதையை, பாடல்களின் வழியாக நமக்குச் சொல்லும் ஆந்தைகளின் காட்சிகள் போன்றவை அபாரமாக உருவாக்கப்பட்டுள்ளன. பல வெஸ்டர்ன் படங்களை நினைவுபடுத்தும் காட்சிகளும் பின்னணியும் பழைய காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. 

ஒவ்வொரு பாத்திரத்தின் தோற்றமும் மிகத் துல்லியமாகவும் தனித்தன்மையுடனும் படைக்கப்பட்டுள்ளது. தனது பயத்தை மறைத்துக்கொண்டு ‘ரங்கோ’ செய்யும் அலப்பறைகள் விழுந்து விழுந்து சிரிக்கவைக்கின்றன. தோல்வியின் எல்லைக்கே சென்று விரக்தியுடன் வெளியேறும் ரங்கோ, ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்டு திரும்பும் காட்சி உணர்வுபூர்வமானதாக உள்ளது. நகரத்தின் பயன்பாட்டுக்காகவும் வணிக லாபத்துக்காகவும், நீர் ஆதாரங்கள் சட்டத்துக்குப் புறம்பான வழியில் திருடப்பட்டு மடைமாற்றப்படும் கொள்ளையை திரைப்படம் அற்புதமாக அம்பலப்படுத்துகிறது. 

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படவரிசையை இயக்கிய Gore Verbinski இந்தத் திரைப்படத்தையும் அற்புதமாக இயக்கியுள்ளார். பிரபல இசையமைப்பாளரான Hans Zimmer பின்னணி இசையும் பாடல்களும் சிறப்பாக உருவாகியுள்ளன. ரங்கோவின் நகைச்சுவை சாகசங்களையும் வீரத்தையும் சித்திரிக்கும் rango திரைப்படத்தைக் குழந்தைகளுடன் குதூகலமாக ரசிக்கலாம்.