Published:Updated:

" 'அன்பா, அறிவா'னு கேட்டுக் கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்குவார் ரஜினி சார்!" - ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ்

உ. சுதர்சன் காந்தி.
" 'அன்பா, அறிவா'னு கேட்டுக் கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்குவார் ரஜினி சார்!" - ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ்
" 'அன்பா, அறிவா'னு கேட்டுக் கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்குவார் ரஜினி சார்!" - ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ்

தமிழ் சினிமாவில் நிறைய சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் இருந்தாலும் இரட்டையர்களாக மிரட்டி வருகிறார்கள் அன்புமணியும் அறிவுமணியும் (அன்பறிவ்). 'கபாலி', 'இருமுகன்' போன்ற பல வெற்றிப் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து தங்களை நிரூபித்து ஜொலித்து வருகிறார்கள். இருவரில் ஒருவரான அன்புமணியிடம் ஒரு ஜாலி சாட். 

"ஸ்கூல் படிக்கும்போது ரெண்டுபேரும் சேர்ந்து நிறைய கோல்மால் வேலைகள் பண்ணுவோம். அப்போ ரெண்டுபேரும் ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருப்போம். யாராலும் கண்டுபிடிக்க முடியாது. நான் கணக்குப் பாடத்துல ரொம்ப வீக். மார்க் ஷீட் கொடுக்கும்போது என் பேரைக் கூப்பிட்டா அறிவை போகச் சொல்லிடுவேன். டீச்சர் நான்னு நினைச்சு அடிச்சாக்கூட அவன் வாங்கிப்பான். சிலநேரங்கள்ல அவனுக்கு பதிலா நான் போயிடுவேன். ஏழாவது படிக்கும்போது அவன் ஸ்கூல் ஃபுட்பால் டீம்ல இருந்தான். அறிவு சூப்பரா விளையாடுவான். ஒரு சில நேரங்கள்ல அவன் சோர்ந்து போயிட்டான், ரெஸ்ட் தேவைப்படுதுன்னா, அப்படியே தண்ணி குடிக்கிற மாதிரி வெளியே வருவான். ரெஃப்ரீக்குத் தெரியாம நான் உள்ளே போயிடுவேன். நானும் ரொம்பநேரம் விளையாண்ட மாதிரி ரியாக்‌ஷன் கொடுத்துட்டு அவனுக்குப் பதிலா நான் உள்ளே ஆடிட்டு இருப்பேன். மேட்ச் முடிஞ்சு வந்து, நாங்க சிரிச்சுக்குவோம். செம ஜாலியா இருக்கும். என்னால சைட் அடிக்கப் போகமுடியலைன்னா, அவனை அனுப்பி அந்தப் பொண்ணு பார்க்குதானு கேட்டுத் தெரிஞ்சுப்பேன்" என்றவர் கொஞ்சம் சீரியஸ் மோடிற்குச் செல்கிறார்.

"நாங்க ப்ளஸ் டூ படிக்கும்போதே எங்க வீட்ல பைக் வாங்கிக்கொடுத்துட்டாங்க. ரெண்டு பேருக்குள்ள பைக் ரேஸ் வெச்சுக்குவோம். காரணம், ரெண்டு பேருக்குமே பைக் மேல செம க்ரேஸ் இருந்துச்சு. மாதவரம் ஹைவேஸ்ல யார் சீக்கிரமா போறாங்க பார்க்கலாம்னு போட்டி வெச்சோம். என் பின்னாடி உட்கார்ந்திருந்த பையன், எனக்குப் பயமா இருக்கு'னு சொல்லி கீழே இறங்கிட்டான். ஆனா, அறிவு பின்னாடி உட்கார்ந்த பையன் பயத்துல கத்தக் கத்த மெதுவா போய் திடீர் திடீர்னு ரைஸ் பண்ணிப் போயிட்டிருந்தான். ஒரு கட்டத்துல நான் அவனை ஓவர்டேக் பண்ணிட்டு முன்னாடி போயிட்டேன். அவங்களுக்கு அங்கே ஆக்ஸிடன்ட் ஆகியிருக்கு. அது எனக்குத் தெரியாது. ஆனா, எனக்கு மனசுக்குள்ள பயம். பயந்துபோய் வண்டியை திருப்பிட்டு வந்தா, கூட்டமா இருந்த எல்லாரும் கலைஞ்சு போறாங்க. இவங்க ரெண்டு பேரையும் காணோம். அப்போ, அங்கிருந்த ஒருத்தன் என்னைப் பார்த்துட்டு ஷாக் ஆயிட்டான். 'நீங்க நீங்க... ரத்தம் ரத்தம்..'னு சொல்றானே தவிர, என்னனு சொல்லலை. அப்புறம் நானா 'ஆக்ஸிடென்ட் ஆகியிருச்சா? எங்கே அவங்க?'னு கேட்டுப் போனேன். போற வழியில, அவங்க போற ஆட்டோவைப் பார்த்துட்டேன்.

பார்த்தா... ஒரே ரத்தம். எனக்கு செம பயம் ஆகிடுச்சு. 'நீ ஹாஸ்பிட்டல் போ. நான் பசங்களைக் கூட்டிக்கிட்டு வந்திடுறேன்'னு சொல்லிட்டு ஃப்ரெண்டு வீட்டுக்கு வந்தா, அப்போதான் எல்லாரும் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. எனக்கு சாப்பிட்டுட்டு இருக்கவங்ககிட்ட எப்படி சொல்றதுனு தயங்கிக்கிட்டே, 'அம்மா... இந்த மாதிரி இந்த மாதிரி'னு பதட்டத்தோடயே சொன்னேன். அவங்களோ, 'முதல்ல சாப்பிடு. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்'னு சொன்னாங்க. என்ன பண்றதுனு தெரியாம உட்கார்ந்து வேகவேகமா சப்பிட்டேன். அப்புறம்தான், அறிவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுன்னு நான் சொன்னவுடனே செம ஷாக். 'அடப் பாவி! வந்தவுடனே சொல்ல வேண்டியதுதானே?'னு சரியான திட்டு எனக்கு. ஹாஸ்பிட்டல் போனா, அவன்மேல இருந்த ரத்தத்தைக் க்ளீன் பண்ணி, தையல் போட்டுட்டு டாக்டர் வெளிய வந்தார். அப்போ, நான் உள்ளே போனேன். அவரரோ, 'உனக்கு இப்போதான் தையல் போட்டேன். எப்படி தெளிவா இருக்க'னு ஷாக் ஆயிட்டார். அவனுக்கு ட்ரீட்மென்ட் முடிஞ்சபிறகு எங்க ரெண்டு பேரையும் ஒன்னா நிற்கவெச்சுப் பார்த்தபிறகுதான், இயல்புக்குத் திரும்பினார்!" எனச் சிரிக்கிறார், அன்பு.

இந்தக் குழப்பம் இப்போ ஷூட்டிங் ஸ்பாட் வரை தொடருது. சினேகா மேடமுக்கு நாங்க ட்வின்ஸ்னு தெரியாது. நான் எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருப்பேன். அறிவு அவங்க பின்னாடி நின்னுட்டு இருப்பான். திடீர்னு திரும்பிப் பார்த்த அவங்க, 'ஏப்பா, ட்வின்ஸா நீங்க? இதெல்லாம் சொல்றதில்லையா?'னு பயந்துட்டாங்க. ரஜினி சாரே 'கபாலி' பட ஷூட்டிங்ல கன்பியூஸ் ஆயிட்டார். ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் எங்ககிட்ட பேசும்போது, 'அன்பா, அறிவா?'னு கன்ஃபார்ம் பண்ணிட்டுதான் பேசுவார். அறிவு என்னைவிடக் கொஞ்சம் ஒல்லியா இருப்பான். நான் அசைவப் பிரியர். அதனால, அவனைவிட நான் கொஞ்சம் குண்டா இருப்பேன். அவ்ளோதான் எங்களுக்குள்ள வித்தியாசம். நானும் சீக்கிரமா உடம்பைக் குறைச்சிடுவேன். ரெண்டுபேரும் ஒரேமாதிரி இருந்தால்தான் நல்லா இருக்கு; அதுதான் எங்களுக்கும் பிடிச்சிருக்கு" என்றபடி விடைபெற்றார்.