வெளியிடப்பட்ட நேரம்: 10:18 (02/03/2018)

கடைசி தொடர்பு:16:12 (02/03/2018)

சால் என்றால் என்ன... ரஜினி டபுள் ஆக்‌ஷனா... டீசர் தரும் சில குறிப்புகள்! #KaalaTeaser

காலா ரஜினி 

நேற்று வெளியாவதாக இருந்த ரஜினியின் காலா படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. இணையத்தில் நேற்றிரவே லீக்  ஆகிவிட அப்போதே பற்றிக்கொண்டது ‘காலா காய்ச்சல்’. 

இந்த முறை ரஞ்சித்தின் ஆஸ்தான நடிகர்களின் முகங்கள் டீசரில் தென்படவேயில்லை. சந்தோஷ் நாராயணனின் இசை, முரளியின் கேமரா, அன்பறிவின் சண்டை என டெக்னீஷியன்கள் மட்டும் அதே ரத கஜ துராக பதாதிகள். ரஜினியின் மனைவியாக ஈஸ்வரி ராவ், மகனாக(?) வத்திக்குச்சி நாயகன் திலீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சர்ப்ரைஸ் என்ட்ரியாக வந்திருப்பவர் நானா படேகர். இந்தியாவையே சுத்தமாக்க நினைக்கிற அரசியல்வாதி அவர்.

காலாவின் கதையை டீசரை வைத்தெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால், வெளியாகியிருக்கும் சின்னச் சின்ன விஷயங்களை வைத்து ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கிறார் நானா படேகர். அவர்கள் நினைக்கும் ஸ்மார்ட் சிட்டிக்கு இடையூறாக இருப்பது குடிசைப்பகுதிகள். அங்கிருப்பவர்களை அகற்ற நினைக்கிறது அரசு. அது மும்பையின் குடியிருப்பு. வெளியூரிலிருந்து, குறிப்பாகத் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் குடியிருப்பு. அதை நானா படேகர் அழுக்கு என நினைக்கிறார். அந்த அழுக்குதான் காலா கரிகாலனின் சாம்ராஜ்யம். 

“கறுப்பு... உழைப்போட வண்ணம். என் சால்ல வந்துப்பாரு. அழுக்கு அத்தனையும் வண்ணமா தெரியும்”

என்று ஒரு வசனம் பேசுகிறார் ரஜினி. சால் என்றால் குடியிருப்பு என்று அர்த்தம். நானா படேகருடன் நேருக்கு நேர் இந்தக் காட்சியில் மோதுகிறார் காலா.

ரஜினி பேசும் வசனம் முழுவதும் நெல்லைத் தமிழில் இருக்கிறது. திருநெல்வேலியிருந்து மும்பைக்குச் சென்ற குடும்பம் ரஜினியுடையது. இன்னொரு வசனத்தில் “வேங்க மவன் ஒத்தையில் வந்திருக்கேன்” என்கிறார். நிச்சயம் வேங்கை கதாபாத்திரமும் படத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கக்கூடும். அவர் நெல்லையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவராக இருக்கலாம். ஒருவேளை அதுவும் ரஜினியாக இருந்தால் ரசிகர்களுக்கு டபுள் தமாக்காதான்.

ரஜினி டீசரில் பேசும் கடைசி வசனம் இது

“இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த நீங்க பாத்தது இல்லைல... பாப்பீங்க”

இது விஐபியில் தனுஷ் பேசிய வசனம் என்றும் நெட்டிசன்கள் சொல்லி வருகிறார்கள். உண்மையில் இதை முதலில் சொன்னதும் ரஜினிதான். படையப்பா திரைப்படத்தில். 

“இந்த படையப்பனோட ஆறாவது முகத்தை பாத்தது இல்லைல... பாக்காதீங்க. நொந்துடுவீங்க” என ரம்யா கிருஷ்ணனிடம் சொல்வார்.

வங்காரி மாத்தாய்

காலா படத்தில் நீல நிற குறியீடுகள் ஆங்காங்கே இருந்தாலும் காலா முழுவதும் கறுப்புதான். ரஜினியின் பெயரில் தொடங்கி வசனம், காட்சிகள், கலர் டோன் என எங்கும் கறுப்பு. கறுப்பு உழைப்பவர்களின் வண்ணம் என்கிறார் ரஞ்சித். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில்கூட ரஜினியின் முகத்தில் கறுப்பு நிறம் அதிகமாகவே இருந்தது. அதனால், காலாவில் ரஞ்சித்தின் தலித் அரசியலைவிட ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலே ஓங்கியிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

காலா

காலா டீசர் இந்திய அளவில் யூடியூபில் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அதனாலாயே மீம்ஸ் உருவாக்குபவர்களின் விருப்பப் பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறது. கிரிக்கெட்டில் தொடங்கி அரசியல் வரை எல்லோரையும் இழுத்து காலா மீம்ஸ் பகிரப்பட்டு வருகிறது. எப்படி வந்தாலும் அதுவும் காலாவுக்கான மார்க்கெட்டிங்தான்.


 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க