Published:Updated:

'காலா'வை லெஃப்டில் ஒதுக்கி ஆஸ்கரைக் குறிவைக்கும் காவியம்! - 'தாராவி' படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
'காலா'வை லெஃப்டில் ஒதுக்கி ஆஸ்கரைக் குறிவைக்கும் காவியம்! - 'தாராவி' படம் எப்படி?
'காலா'வை லெஃப்டில் ஒதுக்கி ஆஸ்கரைக் குறிவைக்கும் காவியம்! - 'தாராவி' படம் எப்படி?

`தாராவி' - மும்பையில் தமிழர்கள் வாழும் குடிசைப் பகுதி. ஒட்டுமொத்த உலகமே 'காலா'வழி தாராவியின் வாழ்வியலை 'காலா' மூலம் காண ஆவலாக இருக்கும்போது, 'தாராவி' என்ற பெயரிலேயே ஒரு தமிழ்ப் படம் வந்தால் எப்படி இருக்கும்? அந்த ஆர்வத்தில் படம் பார்க்கச் செல்பவர்களைக் கட்டிவைத்து வெளுக்கிறார், படத்தின் இயக்குநர் பவித்ரன்.

இயக்குநரின் பெயரை எங்கேயோ கேட்டதுபோல இருக்கிறதா? ஆம், `வசந்தகாலப் பறவை',` சூரியன்', `ஐ லவ் இந்தியா', `இந்து', `திருமூர்த்தி', `கல்லூரி வாசல்' போன்ற படங்களை இயக்கிய அதே பவித்ரன்தான். கடைசியாக 'மாட்டுத்தாவணி' என்ற படத்துக்குப் பின் ஒதுங்கியிருந்தவர், இப்போது 'தாராவி' மூலம் தலை காட்டியுள்ளார்.

சதீஷ்பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ ஆகிய புதுமுகங்களுடன் சைமன் சோமு, மாறன் நாயகம், கதிர், ஷ்யாம், லதா என 'முகம் அதிகம் வெளியில் தெரியாத' பல நடிகர்கள் நடித்த காவியம் 'தாராவி'!. 'அறம்' படத்தில் நடித்த சுனு லட்சுமி தான் இதில் முகம்தெரிந்த ஒரே ஆள்... ஹீரோயின்.  ஸாரி லட்சுமி, இப்படி நீங்களே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துட்டீங்களே..!

கதை..? மும்பை தாராவியில் வசிக்கும், கேபிள் டிவியில் வேலை பார்க்கும் இரண்டு இளைஞர்களைச் சந்திக்க வருகிறார், தமிழ்நாட்டு நண்பர். அவர் மும்பைக்கு வரக் காரணமாக இருந்ததே அங்கிருக்கும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் சுனு லட்சுமிதான். சுனு லட்சுமியும், அந்த இளைஞரும் காதலிக்கிறார்கள். அது காதலா அல்லது நட்பா என்றுகூட தெளிவான காட்சிகள் இல்லாத புதுமையான காதல் அது. இந்த அல்பக் காதல் தெரிந்த சுனுவின் அண்ணன் அவர்களைப் பிரிக்க நினைக்கிறார். ஆனால், எதிர்பாராத ஒரு ட்விஸ்ட்டில் இருவருமே பிரிகிறார்கள். அந்த ட்விஸ்ட் என்ன..? - என்பதை நீங்கள் தியேட்டர் போய்த்தான் பார்க்க வேண்டுமென்பது இல்லை. காரணம், அவ்ளோ சீனெல்லாம் இல்லை. நாயகனாக வருபவர் லாரி கடத்தல் கும்பலில் ஒருவர்தான். அவர் வேறு யாருமல்ல, நாயகி சுனுவின் அண்ணனிடம் வேலை பார்ப்பவர். என்ன தலைசுற்றுகிறதா..? இதுக்கே சுற்றினால் எப்படி..? உலக சினிமா வரலாற்றில் இந்தப் படம் பல விஷயங்களைத் தொட்டுச் செல்வதைக் கேட்டால் எல்லாமே சுற்றும். 

புனே-மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் லாரிகள் கடத்தப்படும் சம்பவத்தை முதன்முறையாக இப்படம் பேசியிருக்கிறது. ஆனால், ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை வைத்து மயக்கி லாரி கடத்தும் தாத்தா காலத்து 'டீட்டெய்லிங்' மெர்சல் ரகமென்றால், ஆமை வேகத்தில் துப்பு துலக்கும் மகாராஷ்டிரா போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் கொட்டாவி விடவைக்கும் கொலவெறி ரகம். காமெடி எது சீரியஸ் எது என இனம் பிரிக்க முடியாத நிறைய டயலாக்குகள் படம் முழுக்கப் படுத்துகிறது. 

இது எல்லாவற்றையும்கூட சமாளித்துப் படம் பார்த்துவிடலாம். ஆனால், காமெடி என்கிற பெயரில் பாண்டா என்ற கேரக்டரும் அவருடைய நண்பர்கள் இருவரும் பண்ணும் ராவடிகள்... சாவடி அடிக்கிறது. சத்தியமாகக் கோபம் வரும் அளவுக்கான கொடுமையான மொக்கைக் காமெடி என்றால், இந்தப் படம்தான் ஆகச் சிறந்த ரெஃபரன்ஸ்! படத்தில் ஒரு ப்ளஸ்கூடவா இல்லை என்று நீங்கள் கேட்கிறீர்கள்தானே... பெரும்பாலான காட்சிகளை தாராவியில் படமாக்கியதைத்தவிர இந்தப் படத்தில் வேறெந்த சிறப்பும் இல்லை. கதை, திரைக்கதையில் ஆரம்பித்து காமெடி கவுன்டர்கள், டப்பிங் வாயசைவு வரை படத்தில் எல்லாமே `நான்-ஸின்க்'லேயே இருக்கிறது. உலகில் எங்குமே காண முடியாத ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரையும், நாயுடு என்ற தெலுங்கு பேசும் வில்லன் கேரக்டரையும் காட்டியிருக்கிறார்கள். அவர்களிடம், அப்படி ஒரு தேர்ந்த 'நவரச நச்சு பாய்ச்சும்' நடிப்பு!

படத்தில் பாண்டா எனும் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், பாண்டா கேரக்டரோ கதைக்கே வேண்டாத கேரக்டர். அதுவும், க்ளைமாக்ஸ் வரை வந்து நாயகியையும் நம்மையும் பாடாய்ப்படுத்தி விடுகிறது. இசையும் பாடல்களும் ஹைதர் அலி காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்ல உதவும் டைம் மெஷின்கள். 'சூரியன்' படத்தில் வரும் கவுண்டமணியின் ஃபேமஸ் டயலாக்தான் தியேட்டரைவிட்டு வெளியே வந்தபோது ஞாபகத்துக்கு வந்தது.

`சத்ய சோதனை'!