Published:Updated:

"ரத்தம், சதை, அழுகிய பிணம்.. அருவெறுப்பின் உச்சம்தான். ஆனால், கொஞ்சம் ஸ்பெஷலும் கூட!" - 'பரி' படம் எப்படி? #PariNotAFairyTale

"ரத்தம், சதை, அழுகிய பிணம்.. அருவெறுப்பின் உச்சம்தான். ஆனால், கொஞ்சம் ஸ்பெஷலும் கூட!"  - 'பரி' படம் எப்படி? #PariNotAFairyTale
"ரத்தம், சதை, அழுகிய பிணம்.. அருவெறுப்பின் உச்சம்தான். ஆனால், கொஞ்சம் ஸ்பெஷலும் கூட!" - 'பரி' படம் எப்படி? #PariNotAFairyTale

ஓர் அடர்ந்த காட்டில், தனது கால்களை சங்கிலியில் கட்டிக்கொண்டு வாழ்கிறாள், ருக்சானா. சமூகத்திலிருந்து விலகி வாழும் அவளை, மர்மமான மனிதர்களும், அமானுஷ்யங்களும் பின் தொடர்கின்றன. ரூக்சானா யார், அவளை ஏன் இவர்கள் பின் தொடர்கிறார்கள் போன்ற கேள்விகளுக்குப் பயமும் அருவெறுப்புமாக, ரத்தமும் சதையுமாக, அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக பதில் சொல்கிறது இந்த 'பரி- நாட் அ ஃபேரி டேல்'.

1995-ஆம் ஆண்டு, வங்கதேசத்தில் சில கர்ப்பிணி பெண்களைப் பிடித்துவைத்து, குழந்தை பிறந்தவுடன் தாய்சேய் இருவரையும் கொடூரமாகக் கொலை செய்கிறார், காசிம் அலி (ராஜாத் கபூர்). அப்போது ஒரு கர்ப்பிணிப் பெண், அலியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிடுகிறாள். அவளது மகள்தான் ரூக்சானா (அனுஷ்கா சர்மா). பல ஆண்டுகள் கழித்து ருக்சானாவின் தாய், அர்னாபின் காரில் எதிர்பாராத விதமாக மோதி இறந்துவிடுகிறார். தாயை இழந்து காட்டுக்குள் வாழும் ருக்சானா, காட்டில் பாதுகாப்பின்மையை உணர்ந்ததால், அர்னாபை (பரம்ப்ரதா சாட்டர்ஜி)  காண கொல்கத்தா நகரத்துக்கு வருகிறாள். அங்கு அவள் அர்னாபின் வீட்டில் பல அமானுஷ்ய விஷயங்களைச் சந்திக்கிறாள். அவை அவளைப் படாதபாடு படுத்துகிறது. மறுபுறம், காசிம் அலியும் தீவிரமாக ருக்சானாவைத் தேடிக்கொண்டிருக்கிறான். இறுதியில், காசிம் அலி யார், அவனுக்கும் ருக்சானாவுக்கும் என்ன தொடர்பு, கூடவே அர்னாப் - ருக்சானா காதல் என்ன ஆனது... போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்லிப் படத்தை முடிக்கிறார்கள்.

மற்ற பேய் படங்களோடு ஒப்பிடுகையில், 'பரி' நிச்சயம் ஒரு வித்தியாசமான படைப்பு. குறிப்பாக, கதைசொல்லும் பாணி நம் ஊருக்கு ரொம்பவே புதிது. அதை விஷுவலாக சாத்தியப்படுத்த அவ்வளவு உழைத்திருக்கிறார்கள். இயக்குநர், ஒளிப்பதிவாளரைவிட கவனிக்க வைக்கும் ஒரு டெக்னீஷீயன், கலை இயக்குநர். கொல்கத்தாவின் தனிமைப்படுத்தப்பட்ட சாலைகள், சிதிலமடைந்த வீடுகள் என மழைக்கால நகரத்தையும், இரவு நேரத்தில் அடர்ந்த காட்டின் திகில் பக்கத்தையும் திரையில் காட்டி அதகளப்படுத்தியிருக்கிறார். 

ஆரம்பத்தில், பயந்த சுபாவம் கொண்ட ஒரு சாதாரண ஜிப்ஸி பெண்ணாக மட்டுமே தெரிகிறாள், ருக்சானா. திடீரென்று நாயின் கழுத்தைக் கடிப்பதும், காசிம் அலியுடன் இருக்கும் கொடூரவாதிகளை சூறையாடுவதும், அர்னாப் தன் காதலியுடன் இருக்கும்போது பயமுறுத்துவதும் என தனது மறுபக்கத்தைக் காட்டுகையில் அதிர்ந்துவிடுகிறோம். அந்தக் கதாபாத்திரத்தில் அவ்வளவு சிரத்தையோடு நடித்திருக்கிறார், அனுஷ்கா சர்மா. தரமான நடிப்பு! தன்னை தேடிவந்த பெண்ணுக்கு வேறு வழியில்லாமல் அடைக்கலம் கொடுப்பதும், ருக்சானா மீது அக்கறை கலந்த காதலை வெளிப்படுத்துவதும் என தனது இயல்பான நடிப்பை சிறந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகன் பரம்ப்ரதா சாட்டர்ஜி. காசிம் அலியும், அவரது கூட்டாளிகளும் தீயசக்தி கொண்ட சைத்தான் வம்சத்தைச் சேர்ந்தவர்களை மர்மமான முறையில் கடத்தி, நரகவதம் செய்யும் காட்சிகளில் ராஜாத் கபூரின் நடிப்பு அரக்கனுக்கு குறைவில்லை ரகம்.

ரத்தம், சதை, அழுகிய பிணம், நரமாமிசம் போன்றவற்றை இயக்குனர் ப்ரொசித் ராய் அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.  பார்ப்பவர்களுக்கு அது உட்சபட்ச அருவெறுப்பாகவே இருக்கிறது. காசிம் அலி தனது செயற்கைக் கண்ணை எடுத்துவிட்டு, பஞ்சால் ரத்தத்தைத் துடைக்கும் காட்சியெல்லாம் வேறு லெவல். அதேநேரம், திகில் காட்சிகளுக்குப் படத்தில் குறையொன்றுமில்லை. அனுஷ்கா சர்மா நகம் வெட்டும் காட்சியில், தியேட்டரே அலறுகிறது. மற்ற படங்கள்போல பேய்க்கு ஓவர் மேக்கப்பும், வழவழவென்று இழுக்கும் வசனங்களுக்கும் 'பரி' முற்றுப்புள்ளி வைத்துள்ளது. "ராட்சசன் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறான். என்ன... ருக்சானா அவற்றை வெளிப்படையாகக் காட்டுகிறாள். நமக்குள்ளே இருக்கும் ராட்சசனை நாம் வேண்டுமென்றே மறைக்கிறோம்" என்று அர்னாபின் காதலி பியாலி (ரித்தாபரி சக்ரபோர்தி) பேசும் வசனங்கள் பார்ப்பவர்களை சற்று யோசிக்கவைக்கிறது. என்னதான் இருந்தாலும், தீயசக்திக்கு முடிவில்லை. மனிதன் இந்த உலகை ஆளும்வரை தீயசக்திகளும் மனிதனை ஆளும்... என்று வழக்கமான பாணியில் படத்துக்கு எண்ட்-கார்ட் போட்டிருக்கின்றனர். 

மொத்தத்தில்... பயப்படும் அளவுக்கு அருவெறுப்பு படப்போவதும் உறுதி. ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளுக்கு விடை தேடாமல் பார்த்தால், தனக்கே உரித்தான திகில் பாதையில் அனைவரையும் கடத்திச் செல்கிறாள் பரி. இறுதியாக சொல்ல ஒன்று மட்டும் இருக்கிறது, 'இதயம் பலவீனமானவர்கள் பரி பக்கம் போனால் பறிகொடுப்பது மனதை அல்ல, உயிரை!'.