Published:Updated:

"காதல் இல்லை, காமம் இல்லை... உங்கள்மேல் உள்ள அன்புக்குப் பெயரில்லை செல்வா!" - #HBDSelvaraghavan

தார்மிக் லீ
"காதல் இல்லை, காமம் இல்லை... உங்கள்மேல் உள்ள அன்புக்குப் பெயரில்லை செல்வா!" -  #HBDSelvaraghavan
"காதல் இல்லை, காமம் இல்லை... உங்கள்மேல் உள்ள அன்புக்குப் பெயரில்லை செல்வா!" - #HBDSelvaraghavan

"காதல் இல்லை, காமம் இல்லை... உங்கள்மேல் உள்ள அன்புக்குப் பெயரில்லை செல்வா!" - #HBDSelvaraghavan

90-களில் பிறந்தவர்களை இசைப் பிரியர்களாக மாற்றியதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் எந்தளவுக்குப் பங்கு இருக்கிறதோ, சில சினிமாக்களின் வாயிலாக, அதற்குள் நம்மை மூழ்கடிக்கச் செய்ததில் இயக்குநர்கள் சிலருக்கும் பெரும் பங்குண்டு. ஒருவன், எக்காலத்திலும் நடமுறைக்குச் சாத்தியமில்லாத சில விஷயங்களை அல்லது தான் ஆசைப்பட்டு நிகழாத சில விஷயங்களைத் தன் கற்பனை உலகத்தில் நிகழ்த்தி இன்பம் காணுவான். ஆங்கிலத்தில் அதற்கு `Fantasy world' என்ற அழகான பெயரும் உண்டு. அதைத் தன் படங்களின் வழியே காட்டிய சில இயக்குநர்களில் செல்வராகவன் ஒருவர். அவர் படங்களில் ஏதோ ஒரு வழியில் நம்மை நாயகனாகக் காட்டிய, இந்நாளின் பிறந்தநாள் நாயகனான செல்வராகவனுக்கு... இக்கட்டுரை சமர்பணம்.  

எல்லா ரக மனிதனுக்கும், அவனுக்குள் இருக்கும் ஒரு சில பழக்க வழக்கம், டைம் டிராவலாக அமையும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒரு இடத்துக்குப் போனால் கடந்தகால நினைவுகள் வரும். சிலருக்கு புத்தகங்கள் படித்தால் வரும். அந்த இடத்திலே தான் இருப்பதாக உணர்வான். `Book is a time travel' என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலருக்கு இசை. புத்தகத்தை எப்படி டைம் டிராவல் என்று அழைக்கிறார்களோ, அதேபோல் செல்வராகவனையும் நான் டைம் டிராவல் என்றே சொல்வேன். ஆம், `Selvaraghavan is a time travel'. இவரது படங்களைப் பார்க்கும்போதும், நம்மால் அதை முழுமையாக உணரமுடியும். அது `Fiction'-ஆக இருந்தாலும் சரி, `Non-fiction'-ஆக இருந்தாலும் சரி. சினிமாவுக்கென்று ஒரு தனி குணாதிசியத்தையே உருவாக்கியவர், செல்வா. இவரின் படங்களில் வெளிப்படையான பல `RAW' ரக விஷயங்கள் அதிகமாக இடம்பெற்றிருக்கும். அதை மற்ற இயக்குநர்கள், ரசிகர்களுக்கு வேறுவிதமாகக் கொண்டு சேர்ப்பார்கள். ஆனால், செல்வராகவன் அதை அணுகும் முறையே வித்தியாசமானது (சினிமாவின் பார்வையில்). ஆனால், அதுதான் நிதர்சனம் என்று ஒவ்வொருவருக்குமே தெரியும். தான் காதலிக்கும் பெண் விளையாடும்போது அருகில் நின்று `ரசித்து'ப் பார்ப்பது, தோழி தோளில் சாய்ந்திருக்கும்போது `மனம்' பாழாய்ப் போவது, தாலி எடுத்துகொடுக்கும் ரௌடி அவள்மேல் கொண்ட ஆசையால், அவனே கட்டிவிட்டு, தன் பசிக்குத் தீனிபோட நினைப்பது, காதலர்களுக்குள் ஏற்படும் இச்சைகள், கோபத்தில் பேசும் கொச்சையான வார்த்தைகள்... என எல்லாவற்றையுமே அப்பட்டமாகத்தான் (நிதர்சனமாகத்தான்) காட்டியிருப்பார். 

இயக்குநர்கள் அனைவரும் அவர்களது படங்களில் நிறங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். `கருப்பு - வெள்ளை' நிறங்களைக் குறியீடாக வைத்து வெளிவந்த தமிழ் சினிமாக்கள் சமீபத்தில் ஏராளம். அதில் `காலா' படமும் அடக்கம். அதேபோல் செல்வராகவனுக்குப் பிடித்த நிறத்தை `புதுப்பேட்டை' படத்தில் காணலாம். அதில் அவர் குறியீட்டாகப் பயன்படுத்திய நிறங்கள் காலங்காலமாக தமிழ் சினிமாவில் பயன்படுத்திய ஒன்றே. முழுமையாகக் கூறுவதற்கு முன் நிறத்தின் விளக்கத்தைச் சொல்கிறேன். சிவப்பு நிறம் - அபாயம், பயம், கோபம், வலிமை, காதல் என பல விஷயங்களைக் குறிப்பிடும். பச்சை நிறம் - பசுமை, புத்துணர்ச்சி, அமைதி, உயர்வு எனப் பல விஷயங்களைக் குறிப்பிடும். 'புதுப்பேட்டை' படத்தின் ஆரம்பம் இந்த இரண்டும் கலந்த லைட்டிங் கொண்ட காட்சியில் இருந்துதான் தொடங்கும். சிறைச்சாலைக்கு உள்ளே பச்சை நிறமும், வெளியே சிவப்பு நிறத்தையும் வைத்திருப்பார். பல தவறுகள் செய்த ரௌடி கொக்கிகுமார், சிறைச்சாலையில் இருந்து வெளியேவந்தால் பலிவாங்கத் துடிக்கும் எதிரிகள் (அபாயம்-சிவப்பு). ஆனால், சிறைச்சாலைக்கு உள்ளே இருந்தால், உயிரோடாவது இருக்கமுடியும் என்பதன் குறியீடு (அமைதி - பச்சை). அமைதியின் அடையாளமாக `பச்சை' நிறப் பகுதியில் இருக்கும் கொக்கிகுமாரின் வசனம் இது, `அமைதியா இருக்குது, ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கு... தாங்க முடியல'. இதுபோன்ற மறைமுக குறியீடுகளையும், வசனங்களையும் கச்சிதமாகப் பயன்படுத்தும் படைப்பாளிதான், செல்வராகவன். இதேபோல் `சிவப்பு - பச்சை' நிறத்தின் கூட்டணியையும், அதற்குத் தகுந்த வசனங்களையும் படத்தின் பல முக்கியமான காட்சிகளில் காணலாம். 

இவரின் மற்றொரு மகத்தான படைப்பு, `ஆயிரத்தில் ஒருவன்'. இந்தப் படத்தைப் பற்றி வர்ணிக்க தனி புத்தகத்தையே எழுதலாம். வெறும் பிரம்மாண்டத்தை மட்டும் `பாகுபலி' படத்தோடு ஒப்பிடும் சினிமா ரசிகர்கள், இப்படத்தில் சொல்லவரும் மையக்கருத்தையும், அரசியலையும் மறந்துவிட்டது விடைதெரியா புதிர். சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தத்தை விவரிக்கும் படம்தான், `ஆயிரத்தில் ஒருவன்'. இந்தப் படம் புடிக்கலைனு சொல்றவங்களைவிட, புரியலைனு சொல்றவங்கதான் அதிகம். பாலை நிலத்தில் வாழும் மக்கள் (சோழர்கள்) கொற்றவையை வழிபடுவது, நிழலை மையமாக வைத்த இரண்டு காட்சிகள் (நடராஜர் சிலை, ரீமா சென்னுடன் பார்த்திபன் போடும் சண்டை), மன்னரோடு சேர்த்து சோழர்கள் அனைவரும் தூதுவனை (கார்த்தியை) வணங்குவது... என படத்தில் அழகியல் நிரம்பி வழியும். படம் பாதிவரை கமர்ஷியல் பாணி... அதாவது காமெடி, காதல், ஏழு தடைகள் என ஜாலியாக நகர்ந்ததை ஏற்றுகொண்ட ரசிகர்களால், புலிச் சின்னம், நிழல் சண்டை, தூதுவன், மழை என நகரும் குழப்பமான திரைமொழியால்  படத்தைப் பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் ஏராளமாக வெளிவந்தது. `புதுப்பேட்டை', `அன்பே சிவம்' போன்ற படங்களின் வரிசையில் இந்தப் படமும் சேர்ந்தது. இப்படிப்பட்ட படைப்பை 2010-லேயே கொடுத்த செல்வராகவனும், ஆயிரத்தில் ஒருவனே!. 

செல்வராகவன் கலைத்துறைக்கு 2002-ல் வந்திருக்கிறார். ஆனால் அவரது படைப்புகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தமிழ் சினிமாவில் `எண்கள்' மட்டும் சாதனைகள் இல்லை என்பதற்கு ஓர் மிகச் சிறந்த உதாரணம்தான், செல்வராகவன். `ரசிகர்களுக்குப் பிடித்தமாதிரி நான் படம் இயக்கமாட்டேன், நான் இயக்கும் படங்கள் ரசிகர்களுக்குப் பிடிக்கும்' என்பதில் உறுதியாக நிற்பவர், செல்வராகவன். இவர் படங்களில் `ஹீரோ' என்பது வெளியே சொல்வதில் மட்டும்தான் இருக்கும்; படத்தில் இருக்காது. தாயின் பாசத்தைப் பிரதிபலிக்கும் தோழியிடம் காதல் கொண்ட காதல் கிறுக்கன், 7-ஜி ரெயின்போ காலனியின் மேல்வீட்டில் இருக்கும் உதவாக்கரை, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகத் தடம்மாறி தன் அப்பாவையே கொல்லும் அளவுக்கு அரக்க குணம் படைத்த ரௌடி, `பிடித்த துரையில்தான் வேலைசெய்வேன்' என்று நம்மையே மயக்கடிக்கும் புகைப்படக் காதலன்... நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற கதாபாத்திரங்களைக் கண்டால் நாம் இரண்டடி தள்ளி நிற்போம். ஆனால், அருகில் அமரவைத்துக் கொஞ்சி அழகுபார்த்தவர், இந்த் செல்வா. 

காதல் இல்லை, காமம் இல்லை... உங்கள்மேல் உள்ள அன்புக்குப் பெயரில்லை செல்வா. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரைக்கு