"அஜித் - பிரபுதேவா - நயன்தாரா... புதிய படம், புதிய தகவல்!" #AjithNext #VikatanExclusive

'விவேகம்' திரைப்படத்தின் ரிசல்ட் அஜித்தை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறது. தமிழ்சினிமா உலகில் அஜித் மாதிரி அதிகமான தோல்விப் படங்களைச் சந்தித்தவர் யாருமே இருக்க முடியாது. அஜித் 'விவேகம்' படத் தயாரிப்பாளருக்கே மீண்டும் 'விஸ்வாசம்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஒன்றும் அதிசயமான விஷயம் அல்ல. இதற்கு முன்பும் அவர் நடித்த படங்கள் தோல்விகண்டபோது அதே தயாரிப்பாளருக்கு மறுபடியும் கால்ஷீட் கொடுத்த கதைகள் நிறைய இருக்கின்றன. ஒருமுறை அஜித், 'என்னைப்போல் எந்த ஹீரோவாவது தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தால், இந்நேரம் சினிமாவைவிட்டே போயிருப்பார்' என்று அவரே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அப்போது எல்லாம் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல், குதிரை மாதிரி பட்டென்று எழுந்து, சட்டென்று ஓடத் தொடங்கிவிடுவார். முன்பு 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' படங்களின் கதை, திரைக்கதை விவாதங்களில் கேஸூவலாக  உலாவந்த சிவா படக்குழு, இப்போது 'விஸ்வாசம்' படத்துக்கான வேலைகளில் சீரியஸாகப் பணியாற்றி வருகிறார்கள்.  

அஜித் - பிரபுதேவா - நயன்தாரா

அஜித்துக்கு தப்பான படத்தைக் கொடுத்துவிட்டோமோ... என்று சிவாவுக்கு எச்சரிக்கை உணர்வும், 'மூன்றாம் பிறை' கொடுத்த தயாரிப்பாளருக்குப் பணக்கவலையை உண்டாக்கிவிட்டோமே... என்ற எண்ணமும் அஜித்தை ஆட்டிப்படைக்க, இருவரும் போட்டி போட்டுக்கொண்டு 'விஸ்வாசம்' பட வேலைகளில் விறுவிறுப்பாக இறங்கியிருக்கிறார்கள்.

ஒருகாலத்தில் தமிழ்ப் படங்களை விலைக்கு வாங்கும் விநியோகஸ்தர்கள் எல்லோரும் 'படத்துல சில்க் ஸ்மிதா டான்ஸ் இருக்கா?' என்ற கேள்வியை கோரஸாக முன் வைப்பார்கள். அந்தளவுக்கு கோடம்பக்கத்தை 'சில்க்' ஈர்ப்பு ஆட்டிப்படைத்தது. அதன்பிறகு 'சூரியன்' படத்தில் 'டோலாக்கு...' பாடலுக்கும், 'வால்டர் வெற்றிவேல்' படத்தில் 'சின்ன ராசாவே...' பாட்டுக்கும் பிரபுதேவா டான்ஸ் ஆடி, சில்க் இடத்தைப் பிரபுதேவா பிடித்துக்கொண்டார் எனலாம். அதன்பிறகு, பவித்ரன் இயக்கிய 'இந்து', ஷங்கர் இயக்கிய 'காதலன்' படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார், பிரபுதேவா. பிறகு 'போக்கிரி', 'வில்லு' படங்களின்மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார், பிரபுதேவா. பிறகு விஜய் இயக்கிய 'தேவி' படத்தின் மூலம் தயாரிப்பாளர்  ஆனார். தற்போது 'சார்லி சாப்ளின் 2' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

ஏற்கெனவே விஜய்யை வைத்து 'வில்லு' படத்தை இயக்கிய பிரபுதேவாவின் லேட்டஸ்ட் டார்கெட், அஜித்குமார். புதுவிதமான ஹைடெக் ஸ்டைலில் பிரபுதேவா சொன்ன ஒரு கதை, நடிகர் அஜித்துக்கு ரொம்பவே பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 'விஸ்வாசம்' படத்துக்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறார், அஜித் என்ற செய்தி ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, அஜித் - பிரபுதேவா கூட்டணியும் இணையவிருக்கிறது. நயன்தாரா நடித்த 'அறம்' படத்தைத் தயாரித்த கோட்டப்பாடி ராஜேஷ்தான், பிரபுதேவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தைத் தயாரிக்கவிருக்கிறார். 

பிரபுதேவா, அஜித், நயன்தாரா

ஒரு காலத்தில் பிரபுதேவாவும், நயன்தாராவும் காதலித்த விஷயம் உலகறிந்தது. அதன்பின், இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது விக்னேஷ் சிவனுடன் காதல் பாட்டு பாடிவருகிறார், நயன்தாரா. தமிழ், தெலுங்கு, இந்தி என நயன்தாரா நடிக்கும் அனைத்து மொழிப் படங்களுக்கும் நயன்தாராவின் கால்ஷீட் தேதிகளைக் கவனித்து வருபவர், தயாரிப்பாளர் ராஜேஷ். அநேகமாக அஜித் நடித்து, பிரபுதேவா இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோயினாக நயன்தாராவே நடிப்பார் என உறுதியாகச் சொல்கிறார்கள். அஜித் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டால், தினசரி படப்பிடிப்பில் பிரபுதேவைச் சந்திக்க நேரிடும் என்பதால், தவிர்க்கவும் வாய்ப்பு இருக்கிறது. இது எந்தளவுக்கு உண்மை என நயன்தாரா தரப்பிலேயே விசாரித்தோம். 

"சினிமாவில் புரொபஷனல் வேறு, பர்ஷனல் வேறு என்பதைத் தெரிந்துவைத்திருப்பவர், நயன்தாரா. ஏற்கெனவே இதேபோன்று சிம்புவுடன் 'இது நம்ம ஆளு' படத்தில் நடித்தபோதும் 'சிம்புவுக்கும், நயன்தாராவுக்கு மீண்டும் காதல்' என்று கதைகட்டி விட்டனர். ஆனால், நயன்தாரா 'நடிகை'யாக அந்தப் படத்திற்குத் தேவையானதை செய்துகொடுத்தார். எனவே, இந்தப் படத்திலும் அஜித்துடன் நடிக்கும் சூழல் ஏற்பட்டால், அதைத் தவிர்க்கும் வாய்ப்புகள் குறைவு, நிச்சயம் நடிப்பார்!" என்கிறார்கள்.

அஜித் - பிரபுதேவா - நயன்தாரா கூட்டணி அமைந்தால், எதிர்பார்ப்பின் லெவல் எக்கச்சக்கமாய் இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!