Published:Updated:

இளைஞர்களே... கொஞ்சம் நில்லுங்கள்!.

இளைஞர்களே... கொஞ்சம் நில்லுங்கள்!.
பிரீமியம் ஸ்டோரி
இளைஞர்களே... கொஞ்சம் நில்லுங்கள்!.

அனுபவம்: எஸ்.ரஜத்

இளைஞர்களே... கொஞ்சம் நில்லுங்கள்!.

அனுபவம்: எஸ்.ரஜத்

Published:Updated:
இளைஞர்களே... கொஞ்சம் நில்லுங்கள்!.
பிரீமியம் ஸ்டோரி
இளைஞர்களே... கொஞ்சம் நில்லுங்கள்!.

ந்த அளவுகோல் வைத்துப் பார்த்தாலும் முழுமையாகத் தெரிபவர், நடிகர் சிவகுமார். வாய்ப்புகள் இருந்த நேரத்திலும், 'நடித்தது போதும்’ என்று ஒரு முடிவு எடுத்து படிப்பு, எழுத்து, பேச்சு என்று வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டவர். அவரிடம், ''இன்றைய இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டதும், ''இன்றைய தலைமுறையினர் புத்திசாலிகள். அவர்களுக்கு ஆலோசனை தேவை இல்லை. சில தகவல்களைச் சொல்கிறேன். விருப்பமானவர்கள் பிடித்துக்கொள்ளட்டும்...'' என்று தன் மனத்தைத் திறந்து வைத்தார்! 

விருப்பமே வெற்றி தரும்!        

ஒரு விஷயத்தில் முடிவு எடுக்கும்போது மனம் தடுமாறக் கூடாது. நான் ஓவியக் கல்லூரியில் ஆறு வருடங்கள் பயின்று, அப்போதிருந்த பிரபல ஓவியர்களான அல்ஃபான்சோ, சி.ஜெ.அந்தோணி தாஸ் போன்றவர்கள் வரிசையில், 'அசல் ஓவியங்கள் சிறப்பாக வரைகிறேன்’ என்று பாராட்டு பெற்றவன். ஆனால், ஓவியங்களை மட்டும் வாழ்க்கை பூராவும் வரைந்து வாழ்க்கையை ஓட்ட முடியுமா? என்ற பூதாகாரமான கேள்வி மனதில் எழுந்தது. இந்தத் துறையில் இருந்த சிலரை கவனித்தேன். நான் விரும்பும் எதிர்காலம் இதில் இல்லை என்று உணர்ந்தேன். அதன் பிறகே சினிமாத் துறையில் நுழைந்தேன். அது, நான் வாழ்க்கையில் எடுத்த மிகவும் முக்கியமான முடிவு. அன்று அப்படி ஒரு முடிவு எடுத்ததற்கு இன்றும் பெருமைப்படுகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இளைஞர்களே... கொஞ்சம் நில்லுங்கள்!.

எம்.ஜி.ஆருடன் 'காவல்காரன்’ 'இதயவீணை’ போன்ற படங்களிலும் சிவாஜியுடன் 15 படங்களும் நடித்தேன். எனக்கு சினிமாவில் காட் ஃபாதர் என்று யாரும் கிடையாது. அதனால் நடிப்புத் திறமை, தனித்தன்மையை வளர்த்துக்கொள்ள 1967-70களில் சொந்தமாக நாடக் குழு ஏற்படுத்தி, அதில் நடித்தேன். பிறகு மேஜர் சுந்தர்ராஜனோடு இணைந்து 1971-77 வரை நடித்தேன். சுமார் 1,000 நாடகங்கள் நடித்தாகிவிட்டது. 170 படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறேன்.

பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குநர்களது வருகைக்குப் பிறகு... நாடக மேடை நடிப்பு, ஓவர் ஆக்டிங் போன்றவை திரைப்படங்களுக்குத் தேவை இல்லை என்று மாறியது. யதார்த்தமாக இருப்பதே நடிப்பு என்று ஆகியது.

எனது 100-வது படம், 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி’யில் என் மனைவி (நடிகை தீபா) சிவச்சந்திரனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை நான் பார்த்துவிடும் காட்சி வரும். ஆவேசமாகிக் குரல் கொடுத்தோ... கோபப்பட்டோ... கண்ணீர்விட்டோ... நெற்றி சுருக்கியோ... முகம் துடித்தோ... இப்படி எதுவும் செய்யாமல் உறைந்த முகத்துடன் எக்ஸ்பிரஷன் கொடுத்திருப்பேன்.

கே.பாலசந்தர் இயக்கிய 'சிந்துபைரவி’ படத்தில் ஜே.கே.பி. என்ற பாத்திரத்தில் நடித்தேன். கரென்ட் இல்லாத ஊரில் பிறந்த ஒருத்தன், 14 வயது வரை ரேடியோகூட கேட்காத ஒருத்தன், கர்னாடக சங்கீத வித்வானாக நடித்தேன். அதில் கர்னாடக இசை ஸ்வரங்களை தத்ரூபமாகப் பாடுவது போல் நடித்திருப்பேன். இதுபோன்று சினிமாவில் எது எல்லாம் சாத்தியமோ, அதை மட்டும் செய்ய ஒப்புக்கொள்வேன். ஏழு வருஷம் ஓவியனாக இருந்ததும் என் விருப்பம்தான்; 40 வருடங்கள் நடிகனாக இருந்ததும் என் விருப்பம்தான்! பிடித்ததை விரும்பிச் செய்தேன். விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பதால் மன நிறைவுடன் இருக்கிறேன். விரும்பியதைச் செய்தால் வெற்றி எளிதில் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இளைஞர்களே... கொஞ்சம் நில்லுங்கள்!.

எல்லோரும் சூப்பர் மேன்!  

கம்பராமாயணச் சொற்பொழிவில் நூற்றுக்கணக்கான பாடல்களை நான் மனப்பாடமாகச் சொல்வதால், எனக்கு அசாத்திய நினைவாற்றல் என்று பலரும் புகழ்வார்கள். உண்மையில் நான் சூப்பர் மேன் இல்லை. கடுமையான உழைப்புதான் காரணம். கம்பராமாயணத்தில் 100 பாடல்களை மனப்பாடம் செய்தேன், சில பாடல்கள் மனதில் நிற்கவில்லை. காலை மூன்று மணிக்கு எழுந்து அந்தப் பாடல்களை 28 தடவை எழுதினேன். அப்புறம்தான் அவை மனப்பாடம் ஆகின. சிறிய சாதனைக்கும், பெரிய சாதனைக்கும் கடின உழைப்புதான் ஒரே வழி.

உடலுக்கு மரியாதை!  

அறிவுக்கும், உயிருக்கும், ஆன்மாவுக்கும் வயதாவது இல்லை. உடம்புக்கு மட்டும்தான் வயதாகிறது. எப்போது, மனம் நினைத்ததை உடம்பு செய்ய மறுக்கிறதோ... அப்போது உங்கள் உடம்புக்கு வயதாகிவிட்டது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் உண்மையில் இளைஞராக இருக்கலாம். ஆனால், கால்களில் குனிந்தபடி ஷூ லேஸ் கட்ட முடியவில்லையா? மூன்று மாடிப்படிகளை ஒரே நேரத்தில் ஏற முடியவில்லையா? 30 அடி தூரத்தில் நிற்கும் பஸ்ஸில் ஓடிப்போய் ஏற முடியவில்லையா? சப்பணம் போட்டு உட்கார்ந்து சாப்பிட முடியவில்லையா? முதுகுத் தண்டு வளைய மறுக்கிறதா? உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம். சரியான ஆலோசனை பெற்று, உடனடியாக தேகப் பயிற்சி, யோகா செய்யத் தொடங்குங்கள். இட் இஸ் நெவர் டூ லேட், யங் மேன்.

ஆரோக்கியத்துக்கு அடிப்படை விஷயம் சுத்தமான காற்று. காலை 4.30 முதல் 5.30 வரை காற்றில் ஓஸோன் நிறைய இருக்கிறது. அதற்குப் பின் பஸ், ஆட்டோ, கார் புகை, பூமியை நிரப்பிவிடுகிறது. அதனால், அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

பொறியியல் மேதை விஸ்வேஸ்வரய்யா கண்களைப் பாதுகாக்க ஒரு நல்ல வழி சொல்லி இருக்கிறார். இரண்டு கண்களையும் மூடி இடம் வலமாக 70 தடவை விழியை நகர்த்த வேண்டும். அதன்பின் கண்களை மூடிக்கொண்டு மேலும் கீழுமாக விழியை 40 தடவை நகர்த்த வேண்டும். அடுத்து 20 தடவை இடப்பக்கம் தொடங்கி மீண்டும் இடப்பக்கம் வரும்படி கண்களைச் சுழற்ற வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கண்களைக் கழுவிக்கொண்டு திறந்த வெளிக்கு வந்து கண்களில் ஆக்ஸிஜன் படும்படியாக ஐந்து நிமிடமாவது நிற்க வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் கண்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

உணவுடன் நட்பு!  

அவசரம் அவசரமாக அள்ளி விழுங்குவதை நிறுத்தி, நன்றாக மென்று சாப்பிடுங்கள். மேலும், சாப்பிடும்போது கவனம் சாப்பாட்டில் மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, டி.வி. பார்ப்பது, புத்தகம் படிப்பது வேண்டாம். அதுபோன்று காலம் தவறி சாப்பிட வேண்டாம். இரவு 12 மணிக்கு மேல் எந்தக் காரணத்தைக்கொண்டும் சாப்பிட வேண்டாம், அது இயற்கைக்கு முரணானது.

தேவை இல்லாமல் உடலுக்குள் கழிவுகள் தேங்கியிருப்பதும் தவறு. காலை, மாலை இரு வேளைகளிலும் கழிவுகளை அகற்றிவிட வேண்டும். நம் பெரியவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஃபார்முலாவாக, 'நாள் இரண்டு, வாரம் இரண்டு, மாதம் இரண்டு, வருடம் இரண்டு’ என்பார்கள். தினமும் இரண்டு முறை உடல் அசுத்தங்களைப் போக்க வேண்டும். வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். மாதம் இரு முறை தாம்பத்ய உறவும் வருடம் இரு முறை வயிற்றை சுத்தம் செய்யவும் வேண்டும் என்றார்கள்.

சமீபத்தில் எனக்கு ஒரு தகவல் வந்தது. சூர்யா மாதிரி சிக்ஸ்பேக் பையன், ஐந்து சாஃப்ட்வேர் கம்பெனிக்குத் தலைவனாக இருந்தவன் 35 வயதிலே இறந்து போய்விட்டான். திடீர் மரணம் குறித்து ஆராய்ச்சி செய்ததில், அவன் உடம்புக்குப் போதுமான ஓய்வு கொடுக்காமல், தூங்காமல் காலில் இறக்கை கட்டிக்கொண்டு பறந்திருக்கிறான். சாப்பாட்டைவிட தூக்கம் முக்கியமானது.

எனக்குத் தெரிந்த ஒரு பிரபல நடிகர் 10 வருடங்களாக தொடர்ந்து தண்ணி அடித்தார், சிகரெட் பிடித்தார். கணக்குப் போட்டு பார்த்தால் சுமார் 7,300 பாட்டில்களையும், 1,46,000 சிகரெட்டையும் குடித்திருக்கார். இப்படி இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்? அவருக்கு உடல் சரியில்லை என்று மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். கொடுக்கும் ரத்தத்தை உடம்பு ஏற்றுக்கொள்ளவில்லை, மரணத்தைத் தழுவினார்.

இளைஞர்களே... கொஞ்சம் நில்லுங்கள்!.

இன்னொருவர் புகழ் பெற்ற நடிகை. சொந்தமா படம் எடுத்தாங்க. தோல்வியால் சொத்து போச்சு. அந்த வேதனை தாங்காம ரம், விஸ்கி, பிராந்தினு குடிச்சாங்க. போதை உச்சமானது, திடீரென கோமாவில் விழுந்தார்கள். ஒரு வருடமும் 10 மாதமும் கோமாவில் இருந்ததில் ஐந்தடி நாலு அங்குலம் இருந்த உடல் சுருங்கி தலையணை அளவுக்கு வந்தது, அவரும் மறைந்தார். மது எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நான் 24 வயசுப் பையனாக முருகன் வேஷம் போட்டபோது, கே.ஆர்.விஜயாவுக்கு 17 வயது. எனக்கு 30 வயசு ஆனபோது என் கதாநாயகியாக 17 வயதுப் பெண். எனக்கு 40 வயதான போதும், 50 வயதான போதும் கதாநாயகி மட்டும் 17 வயதுப் பெண்தான். போதும்டா சாமின்னு வந்துட்டேன். சினிமாவில் சிகரெட், தண்ணி, பெண்கள் தாராளமாகவே கிடைக்கும். ஆனால், அதைத் தவிர்த்து வாழ்ந்தவன் என்ற அடிப்படையில் உங்களுக்குச் சொல்கிறேன், இவற்றைத் தவிர்ப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

செக்ஸ் என்பது வங்காள விரிகுடா போன்றது. அதில் நீந்தி மூழ்கியவன் மட்டுமே உண்டே தவிர, தப்பிப் பிழைத்தவன் யாரும் இல்லை. 45 வருடங்கள் சினிமாவில் நடித்து 87 கதாநாயகிகளைக் கட்டிப்பிடித்து நடித்தேன்.

நான் மகான் அல்ல, புத்தர் அல்ல, இயேசு அல்ல, காந்தி அல்ல. ஆனால் அத்தனை சலனங்களையும், சவால்களையும் தாண்டி இதுவரை ஒரே பெண்ணுடன் வாழ்ந்து வருகிறேன். அதனால் சொல்கிறேன்,

'இன்னொரு வாழ்க்கை கிடையாது. தயவு செய்து புகை, மது போன்ற தவறுகள் வேண்டாமே’.

பிரச்னைகள் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. ஆனால், அப்படி பிரச்னை ஏற்படும்போது, அதனை உணர்வுபூர்வமாக அணுகாமல் அறிவுபூர்வமாக அணுகினாலே எளிதில் தீர்த்துவிட முடியும். அதற்கு முதலில் வாழ்க்கைபற்றிய தெளிதல் வேண்டும். 'எப்படியும் வாழலாம், எப்படியாவது வாழலாம்’ என்று வாழக் கூடாது 'இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று நமக்கு நாமே ஒரு நியதி வைத்துக்கொண்டு, அதன்படி வாழ்வதே நிம்மதியான வாழ்க்கை.

ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்தவர் மட்டும் முழுமையான மனிதன் இல்லை. முழுமையான மனிதன் என்பவன் அடிப்படையில் ஒழுக்க சீலனாக வாழ வேண்டும். உயர்ந்த கல்வியை... நல்ல நூல்களைப் படித்திருக்க வேண்டும். மண்டை வெடிக்கிற மாதிரியான துன்பம் வரும்போது, அதனை இறக்கி வைப்பதற்கு ஓர் உத்தமமான நண்பன் வேண்டும். எந்தச் சிக்கல் வந்தாலும், 'இதுவும் கடந்து போகும்...’ என்று புரிந்துகொள்ளும் சலிப்படையாத மனது வேண்டும். கணவன் - மனைவி, ஒருவரை ஒருவர் மதிக்கும் மனோபாவம் வேண்டும். கேட்பதற்குக் கொடுக்கும் மனம் வேண்டும். அதற்குச் கொஞ்சம் பணம் வேண்டும். நான் என்கிற அகந்தை இல்லாமல் வாழ வேண்டும். இத்தனை தகுதிகளோடும் வாழ்பவன்தான், முழுமையான மனிதன்!

இளைஞர்களே... கொஞ்சம் நில்லுங்கள்!.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism