Published:Updated:

ஆஸ்கர் ஏகாதிபத்தியமே... முத்துராமலிங்கம் முதல் AAA வரை... தமிழ் காவியங்களுக்கு விருது எங்கே?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆஸ்கர் ஏகாதிபத்தியமே... முத்துராமலிங்கம் முதல் AAA வரை... தமிழ் காவியங்களுக்கு விருது எங்கே?!
ஆஸ்கர் ஏகாதிபத்தியமே... முத்துராமலிங்கம் முதல் AAA வரை... தமிழ் காவியங்களுக்கு விருது எங்கே?!

ஆஸ்கர் ஏகாதிபத்தியமே... முத்துராமலிங்கம் முதல் AAA வரை... தமிழ் காவியங்களுக்கு விருது எங்கே?!

ஆஸ்கர் கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கின்றன. வெற்றி பெற்றவர்கள் வாழ்த்துமழையில் நனைகிறார்கள். இதில் சோகம் என்னவெனில், வழக்கம்போல தமிழ்ப் படங்களைப் புறக்கணித்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் இரண்டு தமிழ்ப் படங்களாவது ஆஸ்கர் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பரிந்துரைப் பட்டியலில்கூட தகுதியான தமிழ்ப் படங்கள் இடம்பெறாதது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஹே... ஆஸ்கர் ஏகாதிபத்தியமே! கடந்த ஆண்டில் வெளியான இந்தத் தமிழ்ப் படங்களை எல்லாம் ரீ-கன்சிடர் செய்! 

முத்துராமலிங்கம்:

கெளதம் கார்த்திக்கின் கரியரில் மிக முக்கியமான படம் `முத்துராமலிங்கம்'. பட புரொமோஷனுக்கு ஒட்டிய போஸ்டர்கள், படம் ஓடிய நாள்களைவிட அதிகநாள்கள் சுவற்றில் தென்பட்டன. உலக சினிமா வரலாற்றிலேயே ஆட்டுக்கும் மனிதனுக்கும் `தலைமுட்டி' சண்டைமூட்டிவிட்டது இந்த சினிமாதான். `க்ளாடியேட்டர்' படத்தையெல்லாம் கொண்டாடிய சமூகம், இந்தப் படத்தைப் புறக்கணித்தது சோகமே! குற்றம்சாட்டப்பட்டவர்களின் கைக்கு விலங்கு போடாமல் மீசைக்கு லாக் போட்ட புதுமையான காட்சிகள் எல்லாம் இதில் அதிகம். குறைந்தபட்சம் மும்பை சேட் மாடுலேஷனில் திருநெல்வேலி பாஷை பேசிய புது முயற்சிக்காகவாவது கெளதம் கார்த்திக்குக்கு ஆறுதல் ஆஸ்கர் கொடுத்திருக்கலாம்.

இணையதளம்:

ஹாலிவுட் படத்தில் மட்டும்தான் சைபர் க்ரைம் பற்றிய விறுவிறு த்ரில்லர் படங்கள் வருமா என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டதுதான் `இணையதளம்' படம். எண்ணம் என்னமோ நல்லதுதான். எடுத்தவிதம்தான்... தலை சுத்திருச்சு! வழக்கமாக ஹீரோக்களைத்தான் வெவ்வேறு பரிமாணங்களில் காட்டுவார்கள். ஆனால், இதில் ஹீரோ கணேஷ் வெங்கட்ராம் வழக்கம்போல ஸ்வீட் பீடா போட்டு நாக்கைக் கடித்துக்கொள்ளும் ரியாக்‌ஷனையே எல்லா சீன்களிலும் தர, அந்த கேப்பில் அடித்து விளையாடினார் ஈரோடு மகேஷ். அவரே வந்து கிச்சுக்கிச்சு மூட்டினாலும் சிரிப்பு வராத காமெடிகள், வீணை வாசிக்கும் அபிநயம், கண்ணை கிருட்டு கிருட்டென சுற்றி மோர்ஸ் கோட் காண்பிப்பது போன்ற முயற்சிகளுக்காக சிறந்த துணை நடிகர் விருதாவது அவருக்குக் கொடுத்திருக்கலாம்.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:

படப்பெயரை சொல்லி முடிப்பதற்குள் படத்தை தியேட்டரிலிருந்து தூக்கிவிட்ட சாதனை இந்தப் படத்துக்கே சொந்தம். சிம்புவின் கம்பேக் திரைப்படம். கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் கம்பேக் படங்கள் மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது வேறு விஷயம். மதுரை மைக்கேலாக திரையில் தோன்றி திருநெல்வேலி மைக்கேலை (அதாங்க புரொடியூசர்) நிஜத்தில் காலிசெய்தார் சிம்பு. ஆதிக் ரவிச்சந்திரன் - சிம்பு என இந்த இயக்குநர் - நடிகர் காம்போவே எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியதாக அவர்களே சொன்னார்கள். சிம்புவே விரட்டினாலும் விலகாத ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு `ஆளைவிடுங்க சாமிகளா!' என ஓடியதாக ஐ.நா குறிப்பு சொல்கிறது. மதுரை மைக்கேலு இங்க... அவருக்கு ஆஸ்கரு எங்க?

ஆயிரத்தில் இருவர்:

இயக்குநர் சரணுக்கு ஆக்‌ஷன், காதல், காமெடி எனத் தனித்தனி ஜானர்களில் படம்பண்ணுவது ஈஸியான வேலை. ஆனால், முதன்முறையாக ஆக்‌ஷன் படமாக எடுக்க நினைத்து, ரொமான்ஸ் கதையாக எழுதி, காமெடிப் படமாக எடுத்ததால் `ஆயிரத்தில் இருவர்' படம் ஆயிரத்தில் ஒருவர் கூட உட்காராத படமானது. 

`என்னண்ணே இப்படி கொலைப் பட்டினியா கிடக்கீங்க?'

`கொலை பண்ணத்தான் பட்டினியா கிடக்கேன்டா' - இதுபோன்ற `வாவ்டா' வசனங்களுக்கோ `மாங்கா பீஸுல இந்த மாங்கா பீஸுல மொளகாப்பொடி முத்தத்தால கலகம் செஞ்சுப்புட்ட' போன்ற அவுட் ஆஃப் தி வேர்ல்டு பாடல்களுக்கோ ஆஸ்கர் கொடுக்கலாம் ப்ளீஸ்!

இந்திரஜித்:

`முத்துராமலிங்கம்' கொடுத்த அடியிலிருந்து மீண்டு `ரங்கூன்' என்ற நல்ல படம் கொடுத்தார் கெளதம் கார்த்திக். `அதெப்படி அப்படிக் கொடுக்கலாம்?' என்ற கேள்வியோடு வந்த படம்தான் `இந்திரஜித்'. தமிழின் முதல் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் த்ரில்லர் பேன்டசி சூப்பர் ஹீரோ ரொமான்டிக் வார் காமெடி ஃபிலிம் இதுதான். ஜானருக்கு ஒன்றாக சீன் எழுதி கடாயில் கொட்டி கலக்கி எடுத்து இலையில் படைத்திருந்தார் இயக்குநர் கலாபிரபு. அதிலும் க்ளைமாக்ஸில் இயக்குநரைத் தவிர எல்லாருக்குமே தெரிந்திருந்த அந்த ட்விஸ்ட் சூப்பர் ரகம். படத்தின் கண்ணைப் பறிக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்காகவாவது சிறந்த அனிமேஷனுக்கான ஆஸ்கர் விருதை அள்ளிக் கொடுத்திருக்கலாம்.    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு