Published:Updated:

ரஜினியின் '2.0' டீஸர் லீக்... புது டீஸர் வெளியாகுமா?

ரஜினியின் '2.0' டீஸர் லீக்... புது டீஸர் வெளியாகுமா?
ரஜினியின் '2.0' டீஸர் லீக்... புது டீஸர் வெளியாகுமா?

ரஜினியின் '2.0' டீஸர் லீக்... புது டீஸர் வெளியாகுமா?

உலகில் அதிகம் சினிமா தயாரிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வெவ்வேறு மொழிகளில் அதற்கான கலாச்சாரப் பின் அமைப்புகளோடு இந்தியாவில் படங்கள் தயாராகின்றன. இந்தியாவின் பாரம்பர்யங்களில் கதை சொல்லுதல் பிரதானமானது. இந்திய மக்கள் சினிமாவை இவ்வளவு நேசிக்க இது ஒரு காரணமும்கூட. இங்கு படைப்பாளிகள் கதைகளைச் சொல்லும் விதத்தில்தான் வித்தியாசப்படுவார்களே தவிர, கதைகளால் இல்லை. இத்தகைய கலைஞர்களுக்கு இன்றைய டிஜிட்டல் உலகம் கேமரா, கிராஃபிக்ஸ் எனப் பல தொழில்நுட்பங்களைத் தந்திருந்தாலும், கூடவே பைரஸி, கன்டன்ட்  லீக், ட்ரோல்ஸ் எனப் பல சவால்களையும் கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமாத்துறையில் படங்களைத் திருட்டுத்தனமாக ஆன்லைனின் வெளியிட்டு ரத்தம் குடிக்கும் ஒட்டுண்ணிகள் அதிகம் ஆகியிருக்கும் சூழலில், 'லீக்' என்ற வார்த்தை சினிமாவில் கேஸூவலாகக் கேட்கப்படும் வார்த்தை ஆகிவிட்டது. சமீபத்தில் 'காலா', '2.0' டீசர்கள் இணையத்தில் வெளியானது, அப்படக் குழுவினரைப் பெரிதாக பாதித்தது. 


 

'காலா' டீசர் 

மார்ச் 1-ஆம் தேதி வெளியிடப்படவிருந்த 'காலா' படத்தின் டீசர் காஞ்சி ஶ்ரீஜெயந்திரர் மறைவிற்கு மரியாதை செய்யும்பொருட்டு இரண்டாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனினும் 'வேங்கை மவன் ஒத்தையிலே நிக்கேன்; தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே' என ரஜினி பேசும் வசனக் காட்சியை மார்ச் 1-ஆம் தேதி இரவே யாரோ திருட்டுதனமாக ஆன்லைனில் வெளியிட, ரசிகர்கள் அதை வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதைத் தொடர்ந்து, 'காலா' டீசர் அவசர அவசரமாக வெளியிடப்பட்டது.

2.0 டீசர்

'சிவாஜி', 'எந்திரன்' படங்களைத் தொடர்ந்து ரஜினி -  ஷங்கர் காம்போவில் உருவாகிவரும் படம் '2.0'. கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்... என மெகா பட்ஜெட்டில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தை, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது, படக்குழு. கூடுதல் விசேஷமாக பாலிவுட்டின் அக்‌ஷய் குமார் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் துபாயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. 

மற்றொரு பிரமாண்ட விழாவில் படத்தின் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் ஆன்லைனில் திருட்டுத்தனமாக ரெக்கார்டு செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. அடுத்தடுத்து ரஜினிகாந்த்தின் இரண்டு படங்களின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பே கசிந்திருப்பது, தமிழ் சினிமாவி்ல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளிவந்த அந்த டீசர் ஏதோ ஒரு வெளிநாட்டில் எல்.ஈ.டி-யில் திரையிடப்பட்டபோது, கேமரா மூலமாக எடுக்கப்பட்டிருக்கிறது. முழுமையற்ற டீசராக அது இருப்பதால், இது படத்தின் சர்வதேச வர்த்தகத்திற்காக எங்கேயும் திரையிடப்பட்டிருக்கலாம். ஆனால், இதைப் படக்குழு உறுதிப்படுத்தவில்லை. 
 
இதுபோன்று அதிகாரப்பூர்வமற்ற பகிர்வுகளால் தங்கள் உழைப்பு வீணடிக்கப்படுவதாக பல திரைப் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு படத்தின் டீசர் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டால், மறுபடியும் புது டீசரைத் தயார்

செய்வதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி பிரபல படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் பேசும்போது, "ஒரு படம் என்பது பலரின் உழைப்பு. அதிலிருக்கும் சிறிய காட்சிக்கும் பெரிய மெனக்கெடல் இருக்கும். '2.0' டீசரைப் பொருத்தவரை பல சி.ஜி ஷாட்ஸை நம்மால் பார்க்க முடிகிறது. அதைத் தயாரிக்க எத்தனையோ பேர் உழைத்திருப்பார்கள். இப்படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, எனினும் டீசர் லீக் ஆனதைப் பார்த்தவுடன் அதை எப்படியாவது சமூக வலைதளங்களிலிருந்து நீக்கச்சொல்லி படக்குழுவிடம் தெரிவித்திருந்தேன். முன்கூட்டியே இப்படி படத்தின் டீசர்கள் அரைகுறையாக வெளியாவதால், ரசிகர்களுக்குக் கிடைக்கும் அந்த எதிர்பார்ப்பு குறைய வாய்ப்புள்ளது. தவிர, இதுபோன்ற செயல்கள் படத்தின் வர்த்தகத்தையும் பாதிக்கும். இதே மாதிரி இன்னொரு டீசர் தயாரிப்பதும் மிகக் கடினமான வேலை. ஒரு டீசர் என்பது, படத்தின் சிறந்த காட்சிகளைக் கொண்டு தயாரிக்கப்படுவது. அதையே லீக் செய்துவிட்டால் மீண்டும் தயாரிக்கப்படும் வேறொரு டீசர் என்பது எந்த அளவிற்கு சிறந்ததாய் இருக்கும் என்பது கேள்விக்குறியே. '2.0' மாதிரி ஒரு படத்தின் டீசரில் வரும் சி.ஜி. காட்சிகளில் உள்ள வேலைகளைச் செய்ய குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தேவை. இப்படித் திருட்டுத்தனமான வெளியிடுவது, பார்த்துப் பார்த்து வளர்த்த குழந்தையைக் கடத்தி விடுவதற்கு சமம்." என்றார் அவர்.

சென்ற வருடத்தின் சிறந்த டீசர்களில் ஒன்று, 'அருவி'. அப்படத்தின் இயக்குநர் அருண்பிரபு பேசுகையில், "இங்கு ஒவ்வொரு படத்தின் ஆயுளும் குறைந்துகொண்டே வருகிறது, அதனால்தான் ஒவ்வொரு போஸ்டரில் தொடங்கி, டிரெய்லர் வரை... ஐம்பதுக்கும் அதிகமான விதங்களில் தயாரிக்கப்பட்டு, அதில்  சிறப்பான ஒன்றைப் பலரோடு ஆலோசித்து வெளியிடுகிறோம். சில புல்லுருவிகளால் திருட்டுத்தனமாக சில விஷயங்கள் வெளியிடப்படுகிறது என்பது வருத்தமே. ஒரு டீசர், டிரெய்லரைத் தயாரிக்க கஷ்டப்பட்டதைவிட, இதை மாற்றியமைப்பது இரண்டுமடங்கு கஷ்டம். அப்படி வேறு ஒரு நல்ல டீசர் வந்தாலும், இரண்டையும் ரசிகர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்!" என்றார். 

தனது ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான செளந்தர்யா ரஜினிகாந்த், ’2.0 திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வ ரிலீஸுக்கு முன்பாகவே திருட்டுத்தனமாக இணையத்தில்  பதிவேற்றப்பட்டது சகித்துக்கொள்ள முடியாதது. சில நொடி உற்சாகத்துக்காக, திரைப்படத்தை உருவாக்குபவர்களின் கடின உழைப்பையும், உணர்வுகளையும் சீரழிக்கும் இதயமற்ற செயல் இது. டிஜிட்டல் மீடியாவைத் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!’ என்று ட்வீட் தட்டியிருந்தார்.  

இத்தகைய டீசர், பாடல் கசிவுகள் இயக்குநர் ஷங்கருக்குப் புதிது இல்லை என்றாலும், ஒரு படைப்புக்கான மதிப்பு இன்றைய சமூகவலைதள யுகத்தில் குறைந்து வருகிறதா, அறிவுசார் சொத்துகள் குறித்து விழிப்பு உணர்வு அதிகம் தேவைப்படுகிறதா... என்று ஆராயவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இப்படித் திருட்டுத்தனமாக வரும் விஷயங்களைப் பகிராமல் இருப்பதுதான், திரைப்படக் கலைஞர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்! 

அடுத்த கட்டுரைக்கு