Published:Updated:

" 'ஆர்வம் இருக்குல்ல, அது போதும்'ன்னார், சத்யஜித் ரே!'' - இன்றைய சூழலை அன்றே சொன்ன 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' #35YearsOfKannSivanthaalMannSivakkum

" 'ஆர்வம் இருக்குல்ல, அது போதும்'ன்னார், சத்யஜித் ரே!'' - இன்றைய சூழலை அன்றே சொன்ன 'கண் சிவந்தால் மண் சிவக்கும்'  #35YearsOfKannSivanthaalMannSivakkum
" 'ஆர்வம் இருக்குல்ல, அது போதும்'ன்னார், சத்யஜித் ரே!'' - இன்றைய சூழலை அன்றே சொன்ன 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' #35YearsOfKannSivanthaalMannSivakkum

சரியாக 35 ஆண்டுகளுக்கு முன், இதே மார்ச் முதல் வாரம் ரிலீஸான படம், 'கண் சிவந்தால் மண் சிவக்கும்'. விஜய் மேனன், ராஜேஷ், ஜெய்சங்கர், பூர்ணிமா, ரவீந்தர்,கொல்கத்தா விஸ்வநாதன் ஆகியோர் நடித்து, ஸ்ரீதர் ராஜன் இயக்கியது. பின்னாளில், நடிகர் ஜெமினி கணேசனின் மருமகனாகிவிட்ட ஸ்ரீதர் ராஜனுக்கு, இது முதல் படம். சிறந்த அறிமுகப்பட இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது இப்படம்.

படத்தை ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்த்தால், 'தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் நடக்குமென அன்றைக்கே சொல்லியிருக்கிறார்களே' என நினைக்கத் தோன்றுகிறது. அன்றைக்கு பேசப்பட்ட அரசியல், சமூகக் கருத்துகள் இன்றைய தேதிக்கும் பொருந்திப்போவது ஆச்சர்யம்! 

‘டெங்குவைத் தடுக்க என்ன வழி’ என்றால், ’அந்தக் கொசு பக்கத்து ஸ்டேட்ல இருந்து பஸ் ஏறி வருது’ எனப் பதிலளிக்கும் இன்றைய செல்லூர் ராஜுக்களை அன்றே காட்டியிருக்கிறார் இயக்குநர். மாற்றுத்திறனாளிகள் வேலை கேட்டுப் போராட, அமைச்சரோ, ‘கை, கால், கண்ணெல்லாம் கவர்மென்டா தரமுடியும்; இதெல்லாம் எதிர்க்கட்சி சதி’ எனப் பதிலளித்துவிட்டு, முன்னணி நடிகையின் பட பூஜைக்குக் கிளம்பிச்செல்கிற அறிமுகக் காட்சியே ’ஆஹா’ சொல்லவைக்கிறது.

தஞ்சை கீழ்வெண்மணிப் படுகொலை சம்பவத்தைத் தழுவிப் பின்னப்பட்ட கதை. ஆனால், `ஆண்டை’களுக்கும் ஆண்டுகொண்டிருக்கிற அரசியல்வாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது கூர்மையான வசனங்கள் வழியே கடத்தப்பட்டிருக்கும். படத்தில் ஒரு இடத்தில், ‘சந்தோஷத்தைக் கொண்டாட கள் குடி’ என மதுப்பழக்கம் இல்லாதவனைக் குடிக்கச் சொல்வதுபோல காட்சி. பண்டிகை நாளில் பலகோடி இலக்கு வைத்து விற்கும் டாஸ்மாக், நம் மனதில் வருவதைத் தடுக்க முடியவில்லை. ‘ஏல கோபாலு, கள்ளு நம்ம தாய்ப்பாலு’ என்கிற டயலாக் கேட்கிறபோது, குடித்துத் தீர்க்கிற இன்றைய சமூகத்தையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

‘மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்’

’பட்டு வேட்டி பற்றிய கனாவில் இருந்தால், கட்டிய கோவணமும் களவாடப்படும்..’

’நியாயம், தர்மம் இல்லாத ஊரில் அமைதி ஏது?’

’எது நடந்தாலும் அக்கறையில்லாத பார்வையாளர்கள்...'

இப்படிப் படம் நெடுக வசனம், பாடல் வழியே சாட்டை சுழற்றப்பட்டுள்ளதைப் பார்க்கிறபோது, ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம், இன்றைய சூழலில் இப்படி ஒரு படம் உருவானால், நிச்சயம் ரிலீஸ் ஆகியிருக்காது. மூன்றே படத்துடன் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்ட ஸ்ரீதர் ராஜனிடம், அந்தப் பழைய நினைவுகள்குறித்துப் பேசினோம்.

‘’கீழ்வெண்மணி சம்பவத்தை வைத்து வங்காள மொழியில் படம் பண்ணக் கேட்டுக்கொண்டார், அப்போதைய மேற்கு வங்க அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா. பிறகு என்.எஃப்.டி.சி., இதை இந்தியில் எடுக்க முன்வந்தது. இது எதுவும் நடக்கவில்லை. அந்த நேரத்தில் நான் கொல்கத்தா, டெல்லி, மும்பை எனப் பல இடங்களில் தங்கியிருந்தேன். எமர்ஜென்சி முடிந்திருந்த சமயம். வாஜ்பாய் போன்ற வலதுசாரித் தலைவர்களும் எனக்கு நெருக்கம். அத்வானி I&B அமைச்சராகப் பதவி வகித்தபோது, என்.எஃப்.டி.சி மற்றும் சென்சார் போர்டில் உறுப்பினர் ஆக்கப்பட்டேன். தென்மண்டல சென்சார் போர்டு உறுப்பினராக அப்போதுதான் சென்னைக்கே வருகிறேன். இங்கு வந்த பிறகே, `கீழ்வெண்மணியில் நடந்த நிகழ்வு; இந்தியிலும் வங்காள மொழியிலும் எதற்கு?’ எனத் தோன்றவே, தமிழில் அதுவும் வெகுஜன சினிமாவாக இதைத் தயாரிக்கலாமென முடிவானது. பிரேமாலயா வெங்கட்ராமனுடன் சேர்ந்து நானே தயாரித்து, இயக்கினேன் அந்தநேரம், சினிமாகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் பப்ளிஷிங் துறையில் இருந்தவன். வெளிநாடு சென்று சினிமா கற்றுக்கொண்டு வந்து படம் இயக்கலாம் என்றுதான் எண்ணம். 'போய் என்ன படிக்கப் போற? ஆர்வம் இருக்குல, அது போதும். கிணத்துல விழுந்துட்டா நீச்சல் தானா வந்திடும்'னு சொல்லி ஊக்கப்படுத்தியவர், சத்யஜித் ரே.

கீழ்வெண்மணி நிகழ்வைத் தழுவி இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘குருதிப்புனல்’ நாவலின் உரிமையை வாங்கினேன். திரைக்கதை ஆராய்ச்சி தொடங்கியபோது பெரிய புராணம் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதியின் ‘நந்தனார் கீர்த்தனை’யிலிருந்து 'நந்தனார் வரலாறு' தொடர்பாக குறிப்புகள் கிடைத்தன. ஜெமினி ஸ்டூடியோ திரைப்படமாக மெருகூட்டித் தந்திருந்த ‘நந்தனார்’ படத்தையும் பார்த்துவிட்டு, நந்தனார் வரலாற்றை கீழ்வெண்மணி நிகழ்வோடு கோத்து, நவீன பாணியில் கதை தயார்செய்தோம். இன்றைய நிலைமை என்றால், இது சாத்தியம் ஆகியிருக்காது. மதம், ஜாதி என எது எதுவோ குறுக்கே வந்து முட்டுக்கட்டை போட்டிருக்கும். ஆனால், அன்று சென்சார் கிடைத்தது.  ’நான் போர்டு உறுப்பினர் என்பதற்காக அல்ல. எமர்ஜென்சி முடிந்த நேரமென்பதால், பழைய சென்சார் கோட்பாடுகள் ஒதுக்கப்பட்டு, படைப்பாளியின்  சுதந்திரத்தைப் பாதிக்காத புதுக்கோட்பாடு கொண்டுவரப்பட்டிருந்தது. அப்போதுகூட 'ஏ' சர்டிஃபிகேட்தான் கிடைத்தது.

அதற்கு முன், நடிகர்களை முடிவுசெய்தபோது நிகழ்ந்ததெல்லாம் தனிக் கதை. இன்றைக்கு தனுஷ், விஜய் சேதுபதி மாதிரியான நடிகர்கள் வித்தியாசமான கதையில் நடிக்க ஆர்வம் காட்டுறாங்க. ஆனா, அன்றைய  சூழலில் அரசியலைப் பேசுற கதை என்றதும், முக்கிய நடிகர்கள் தயங்கினாங்க. கடைசியா ’கதையில கொண்டுவந்து நடிகர்களைப் பொருத்திட முடியும்’னு நம்பி இறங்கினோம். சத்யஜித் ரேயோட கேமரா மேன் சோமேந்த் ராய் ஒளிப்பதிவு, இளையராஜா இசை, பாடல்கள் வைரமுத்து. கோபாலகிருஷ்ண பாரதி, சுப்ரமணிய பாரதி, ஜெர்மன் சிந்தனையாளர் பெர்டோல்ட் வரிகள், இவற்றோட நா.முத்துசாமி, அனந்துவின் வீரியமான வசனங்கள் படத்துக்கு ஜீவநாடியாக விளங்கின. புரிசை கண்ணப்ப தம்பிரான் வசனங்களைக் கூத்து மெட்டில் எழுதி, தெருக்கூத்துக் காட்சிகளை வடிவமைத்தார்.

சென்னை பக்கத்தில் உள்ள படப்பையிலும் சேலம் பனமரத்துப் பட்டியிலும் ஷூட்டிங் நடைபெற்றது. மறைந்த முரசொலி மாறன், தனது முரசொலி அச்சகத்தில் படமாக்க அனுமதி தந்தார்.

பனமரத்துப்பட்டி ஷூட்டிங் நினைவுகள் இன்னும் மனதில் பசுமையாகவே இருக்கு. கொல்லன் பட்டறைத் தொழிலாளியாக ராஜேஷ் வருவார். நிஜமான ஒரு பட்டறையைத் தேடி சேலம் போனோம். அங்கு, ஒரு கொல்லன் பட்டறையில் ஷூட்டிங். கீழ் ஜாதிக்காரனான ராஜேஷை மேல்ஜாதிப் பண்ணையார் ஆள் வைத்துக் கொன்றுவிடுவார். கீழ்ஜாதி மயானத்துக்குச் செல்ல நேரம் ஆகும் என்பதால், பக்கத்திலேயே இருக்கிற மேல்ஜாதி மயானத்தில் எரிக்க போலீஸ் அனுமதி கேட்டுக் காத்திருப்பார்கள். அந்த சீனை எடுக்க கொஞ்சம் தாமதமாச்சு. கஷ்டப்பட்டு கிடைத்த ஒரு ஐஸ்கட்டிமீது கோணியைப் போட்டு, ராஜேஷ் செத்ததுபோல படுத்துக்கிடப்பார். சீன் தாமதமானதுல ஐஸ்கட்டி உருகத் தொடங்கிடுச்சு. வேற ஐஸ்கட்டியும் கிடைக்காதுங்கிற நிலைமை. என் டென்ஷன் புரியாமல்,  பூர்ணிமா வேற சிரிச்சுட்டிருந்தா. துறுதுறுன்னு இருப்பா. விளையாட்டுப் பிள்ளை. சினிமா ஃபீல்டுக்கு வந்திருந்த நேரம் அது. டென்ஷன் விலகி கேமரா ‘ரெடி’ங்கிற சமயத்தில், ஃபிரேமில் ஒரு ஆள் சிரிச்சிட்டிருக்கான். அவன், ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கிறவன். போய் பளார்னு ஒரு அறை விட்டேன். அவன் மயங்கிக் கீழே விழ, அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திட்டாங்க. ஒருவழியா ஷூட்டிங் முடிந்தது.

புரொடக்‌ஷன் யூனிட் ஆட்கள் வந்து, ‘உடனே பேக்-அப் பண்ணணும், இல்லாட்டி நிலைமை மோசமாயிடும்’னு சொல்றாங்க! என்னன்னு கேட்டா, ஆள் தெரியாமல் நான் அடித்தது, படமெடுக்க பட்டறை தந்தவனை. இந்தமாதிரி நிறைய நடந்தது. ரவீந்தரை (ஒரு தலை ராகம்) பைத்தியக்காரன் மாதிரி காட்டியிருப்போம். அந்தக் கோலத்திலேயே அவன் கிராமத்துக்குள் திரிஞ்சப்போ, தெரு நாய் ஒண்ணு விரட்டி, நிஜத்துலயே கடிச்சிடுச்சு. கோயம்புத்தூர் போய் ஊசி போட்டுக் கூட்டிவந்தோம்.

அதெல்லாமே எவர்கிரீன் மொமென்ட்ஸ். நான் விரும்பி எடுத்த சினிமா. கமர்ஷியலாகவும் நல்லாப் போச்சு . அதுவும் தேசிய விருது கமிட்டியில் இருந்த பத்துப் பேரில் ஒன்பது பேருக்குத் தமிழ் தெரியாது. ஒரு சின்ன பிரச்னையில் படம் சப்-டைட்டில் இல்லாமலும் அனுப்பப்பட்டது. இருந்தும், ஜனாதிபதி கையில் விருது கிடைத்தது. தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், பாராட்டு விழா எடுத்ததோட அண்ணா விருதும் வழங்கி கௌரவித்தார்.

'கண் சிவந்தால் மண் சிவக்கும்' பேசப்படவே, அடுத்த படம் கமிட் ஆனேன். முதல் படம்போலவே கதாநாயகனைத் தேட, வில்லனாக நடித்துக்கொண்டிருந்த சத்யராஜ் கிடைத்தார். ‘இரவுப் பூக்கள்’ எடுத்தேன். ‘ரொமான்ஸ் வரமாட்டேங்குதே’னு சொல்வார். ‘அதெல்லாம் வரும், பண்ணுங்க’னு எடுத்து, அந்தப் படமும் ஹிட்.

டி.ராஜேந்தர் இசையில் என் மூன்றாவது படமான ’பூக்கள் விடும் தூது’வுடன் என் சினிமாப் பயணமும் நிறைவடைந்தது. காரணம், நான் நினைத்த சினிமாவைத் தொடர்ந்து எடுக்கமுடியவில்லை. மூன்றாவது படத்திலேயே முதல் படத்தை விட்டு வெகுதூரம் வந்திருந்தேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே இதை ஒருமுறை என்னிடம் சொல்லிக் காட்டினார். சமரசம் செய்துகொண்டு போயிருந்தால் பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் மாதிரி நானும் பின்னாளில் பரபரப்பான இயக்குநராக வலம் வந்திருப்பேனோ என்னவோ?
அந்த சமரசம் எனக்குப் பிடிக்கவில்லை, என்ன செய்வது?" என்கிறார் ஶ்ரீதர் ராஜன்.

அடுத்த கட்டுரைக்கு