Published:Updated:

சிவாஜி டாப் 10

சிவாஜி டாப் 10
பிரீமியம் ஸ்டோரி
சிவாஜி டாப் 10

சினிமாஎஸ்.ரஜத்

சிவாஜி டாப் 10

சினிமாஎஸ்.ரஜத்

Published:Updated:
சிவாஜி டாப் 10
பிரீமியம் ஸ்டோரி
சிவாஜி டாப் 10
சிவாஜி டாப் 10

ந்தியத் திரைப்படத் துறையின் நூற்றாண்டு விழாவில், சாதனை படைத்தவர்கள் பட்டியலில் ஒருவராக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து நினைவுப் பரிசைப் பெற்ற மகிழ்ச்சியில் இருந்தார் இயக்குநர் சி.வி.ராஜேந்திரன். நடிகர் திலகத்தை வைத்து 13 படங்கள் இயக்கியுள்ளவரும், 'ஒன்ஸ்மோர்’ படத் தயாரிப்பாளருமான இவரிடம் ஒரு சவாலை முன்வைத்தோம். ''நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த 288 படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்த பத்தே பத்து கேரக்டர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். ஒரு முக்கிய நிபந்தனை... சிவாஜியை வைத்து ஒரே இயக்குநர் பல நல்ல படங்களை இயக்கியிருந்தாலும், அவற்றில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே குறிப்பிடவேண்டும்'' என்றோம்.

 ''நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி. அவர் நடித்த ஏராளமான பாத்திரங்கள், ரசிகர்களின் நெஞ்சங்களை விட்டு அகலாதவை. பத்து என்பது மிகவும் குறைவான எண்ணிக்கை. உள்ளங்கைக்குள் உலகத்தை அடக்கச் சொல்வது மாதிரி இருக்கிறது நீங்கள் கேட்பது. ஒரு படத்தைப் பற்றி மட்டும் சிறப்பாகச் சொன்னால், அது மற்ற ஒன்பது படங்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இருப்பினும், நீங்கள் கேட்பதால், மானசீகமாக என் ஆசானிடம் (சிவாஜி) மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, எனக்குப் பிடித்த பத்து கேரக்டர்களைப் பட்டியலிட முயல்கிறேன்'' என்றார் சி.வி.ராஜேந்திரன்.

அதற்கு முன்னதாக சிவாஜி பற்றிய சில நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அவர்.

''முத்துராமன், ராஜஸ்ரீ நடித்த 'அனுபவம் புதுமை’தான் நான் இயக்கிய முதல் படம். வியாபார ரீதியாக அது சரியாகப் போகவில்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ஒரு இயக்குநரின் முதல் படம்தான் அவரது தலையெழுத்தை நிர்ணயிக்கிறது. எனக்கு முதல் படம் சரியாகப் போகாததால், தொடர்ந்து வாய்ப்புகள் கிட்டவில்லை.

இந்நிலையில், சிவாஜியின் ஆடிட்டர்கள் நாக சுப்பிரமணியம், சம்பத்குமார் இருவரும் இணைந்து, ராம்குமார் பிலிம்ஸ் என்னும் புதுப் படக் கம்பெனியை ஆரம்பித்தார்கள். ஏற்கெனவே ராணுவ நிதிக்காக திரை உலகத்தினர் கலை நிகழ்ச்சி நடத்தியபோது, அதில் என் அண்ணன் இயக்குநர் ஸ்ரீதர் எழுதிய 'கலாட்டா கல்யாணம்’ என்னும் நகைச்சுவை நாடகத்தை நடத்தினார்கள். அது பெரும் வரவேற்பு பெற்றது. அந்த நாடகத்தையே படமாக்கலாம் என ராம்குமார் பிலிம்ஸார் விரும்பினார்கள். ஆனால், தனக்கு அப்போது அவகாசம் இல்லையென்றும், வேறு இயக்குநரை வைத்துப் படமாக்கிக்கொள்ளுமாறும் ஸ்ரீதர் சொல்லிவிட்டார். தயாரிப்பாளர்களின் அடுத்த சாய்ஸ் இயக்குநர் பி.மாதவன்தான். ஆனால், சிவாஜியோ என்னைப் பரிந்துரைத்தார். அவர்கள் தயங்கவும், ''சி.வி.ராஜேந்திரனை இயக்குநராகப் போட்டால்தான் நடிப்பேன்'' என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் சிவாஜி

சிவாஜி டாப் 10

என் முதல் படம் சரியாக ஓடாதபோதும், சிவாஜி என் மீது வைத்த நம்பிக்கையும் பாசமும் எனக்குள் உத்வேகத்தை எழுப்ப, 'கலாட்டா கல்யாணம்’ படம் சிறப்பாக உருவாகி, 100 நாட்களுக்கு மேல் ஓடி, பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, என் இயக்கத்தில் 'சுமதி என் சுந்தரி’யும் பெரிய ஹிட் ஆயிற்று! தயாரிப்பாளர் கே.பாலாஜிக்காக நான் இயக்கிய 'ராஜா’ மிகப் பெரிய ஹிட்!

சிவாஜி இல்லையென்றால் இந்த சி.வி.ராஜேந்திரன் இல்லை என்பதே உண்மை!'' என்று நெகிழ்ந்த சி.வி.ராஜேந்திரன், சிவாஜி நடிப்பில் உருவான கேரக்டர்களில் தனக்குப் பிடித்த பத்து கேரக்டர்கள் பற்றி இங்கே விவரிக்கிறார்.

1. உயர்ந்த மனிதன்

(இயக்கம்: கிருஷ்ணன்- பஞ்சு)

பணக்கார இளைஞர் ராஜசேகருக்கு ஏழை கிராமத்துப் பெண் வாணிஸ்ரீ மீது காதல். காதலி கர்ப்பமாகிறாள். பெற்றோரின் சொல்லை மீற முடியாமல், சௌகார் ஜானகியை மணக்க நேரிடுகிறது. தப்பு செய்துவிட்டோம்; ஏழைப் பெண்ணை ஏமாற்றிவிட்டோம் என்ற குற்ற உணர்வு சிவாஜியை வாட்டி வதைக்கிறது. வெளியே தெரியும் வாழ்க்கை வேறு; உள்ளுக்குள் தவிக்கும் வாழ்க்கை வேறு என்று இரண்டையும் மாறுபடுத்திக் காண்பிப்பார் சிவாஜி. பணக்கார வாலிபராக அவரது ஸ்டைல், மேனரிஸம் நம்மை அசத்தும். 'அந்த நாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே...’ - வித்தியாசமான மெட்டில், ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான பாடல்.

2. படிக்காத மேதை

(இயக்கம்: ஏ.பீம்சிங்)

விசுவாசமான வேலைக்காரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக 'படிக்காத மேதை’யில் ரங்கன் பாத்திரம் அமைந்திருந்தது. முதலாளி இறந்த பின்னரும், அவருடைய குடும்பத்தினருக்குப் பல வகைகளில் உதவி செய்து, அவர்களது பிரச்னைகளைத் தீர்க்கும்போதெல்லாம், சிவாஜி நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருப்பார். 'எங்கிருந்தோ வந்தான்... இடைச்சாதி நான் என்றான்’ என்ற பாடல் காட்சி பார்ப்பவர்களைக் கண்ணீர் சிந்தவைக்கும். இந்த ரங்கன் பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னர் பல படங்கள் வெளிவந்தன. இந்த படத்தின் ஹைலைட் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கதை வசனம்தான்!

3. தெய்வ மகன்

(இயக்கம்: ஏ.சி.திருலோக்சந்தர்)

இந்தியாவின் சிறந்த படமாக, ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம். சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த முதல் படம். பணக்கார இளைஞன் விஜய் கேரக்டரில் நகத்தைக் கடிப்பது, ஸ்டைலாக நடப்பது, உடை ஆகியவற்றில் என் மூத்த சகோதரர் இயக்குநர் சி.வி.ஸ்ரீதரின் சாயல்களை நிறைய உபயோகித்திருப்பார் சிவாஜி. நிஜ வாழ்க்கையில் உள்ள கேரக்டர்களைப் பார்த்து, கவனித்து அவற்றில் இருந்து பல விஷயங்களை, கிரகித்துக்கொள்வதில் சிவாஜி எக்ஸ்பர்ட்! ஒரு விபத்தில் நெருப்பில் பாதி முகம் எரிந்த ஒரு நபரை சிவாஜி பார்க்க நேரிட்டது. அதை நினைவில் கொண்டு கண்ணன் கேரக்டருக்கு மேக்-அப் போடுவதில் ஸ்பெஷலாக கவனம் செலுத்தினார். பணக்கார அப்பா சங்கர், சகோதரன் விஜய் இருவரும் சந்தித்துப் பேசுவதை கண்ணன் மறைந்திருப்பது கேட்பது, தன் பிறப்பைப் பற்றித் தந்தையுடன் விரக்தியாக பேசுவது... போன்ற பல காட்சிகள் நம்மை நெகிழவைக்கும்.

4. சுமதி என் சுந்தரி

(இயக்கம்: சி.வி.ராஜேந்திரன்)

சிவாஜி நடித்த இளமை ததும்பும் காதல் படம். எனக்கு இதுதான் முதல் கலர் படம். ராம்குமார் ஃபிலிம்ஸ் தயாரிப்பான இந்தப் படத்தை சிவாஜி ரசிகர்கள் மிகவும் விரும்பி மீண்டும் மீண்டும் வந்து பார்த்து ரசித்தார்கள். இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் அநேகம் பேர் சிவாஜி ரசிகைகளாக மாறினார்கள்.

பிரபல சினிமா நடிகையான சுமதி (ஜெயலலிதா) சினிமா, கிளாமர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடும்பப் பெண்ணாக வாழ வேண்டும் என்ற ஆசையில், வெளியே வந்துவிடுவார். சினிமாவே பிடிக்காத, சினிமாவே பார்த்திராத எஸ்டேட் மானேஜர் மது (சிவாஜி) மீது சுமதிக்குக் காதல் ஏற்படும். சுமதியைத் தேடிக்கொண்டு வரும் சினிமா ஆட்கள், இந்த எஸ்டேட்டுக்கு வந்துவிடுவார்கள். எதிர்பாராத திருப்பத்துடன் படம் முடியும். இந்தப் படத்தில் சிவாஜி அணியும் சட்டைகள் இளைஞர்களிடையே பாப்புலர் ஆகின. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், படத்தின் எல்லாப் பாடல்களுமே ஹிட்டானது. இதில் வரும் 'பொட்டு வைத்த முகமோ’ பாடல்தான் சிவாஜிக்காக எஸ்.பி.பி. பாடிய முதல் பாட்டு.

5. தங்கப் பதக்கம்

(இயக்கம்: பி.மாதவன்)

மிகவும் நேர்மையான, கடமையைத் தன் உயிரினும் மேலாகக் கருதும் போலீஸ் அதிகாரி எஸ்.பி.சௌத்ரியாக சிவாஜி, மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். பிரபல இயக்குநர் மகேந்திரன், இயக்குநராக ஆவதற்கு முன்பு சிவாஜிக்காக எழுதி, அனைவரும் ரசித்த, சிவாஜியின் மேடை நாடகம் இது. அந்தக் காலகட்டத்தில் சிவாஜி நிறையப் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், நாடகத்தின் மீது உள்ள தணியாத ஆர்வத்தால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார். சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில் தங்கப்பதக்கம் நாடகத்தைப் பலப்பல தடவை நடத்தியுள்ளார்

சிவாஜி டாப் 10

குடும்பம், பாசம் இவை எல்லாவற்றையும் விட ஒரு போலீஸ் அதிகாரிக்கு நாட்டு நலனும் கடமையும்தான் முக்கியம் என்பதைப் படத்தில் ஒவ்வொரு ஃபிரேமிலும் உறுதிசெய்வார். ராணுவ ரகசியங்களை வெளிநாட்டுக்குத் தன் மகன் விற்கிறான் என்பது ஊர்ஜிதம் ஆனதும், கிளைமாக்ஸ் காட்சியில் தன் மகனையே சுட்டுக் கொல்வார். 'சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி’ பாடல் காட்சி நம்மை நெகிழவைக்கும்.

6. நெஞ்சிருக்கும் வரை

(இயக்கம்: ஸ்ரீதர்)

தமிழ் சினிமா வரலாற்றிலேயே, நடிகர் நடிகைகள் யாருக்குமே மேக்-அப் போடாமல் எடுக்கப்பட்ட முதல் படம் இதுதான். இந்தப் படத்தின் கதைக்கு, பாத்திரங்களின் அமைப்புக்கு, நடிகர் நடிகைகளுக்கு மேக்-அப் போடாமல் எடுத்தால்தான் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீதர் தீர்மானித்தார். சிவாஜியிடம் இதைச் சொன்னதும், உடனே அவர் ஒப்புக்கொண்டார். மேக்-அப் இல்லாத படமா என விநியோகஸ்தர்கள் முதலில் தயங்கினார்கள். ஆனாலும், டைரக்டர் பிடிவாதமாக இருந்தார். படம் வெளியாகி, வியாபார ரீதியில் பெரும் வெற்றிபெற்றது.

ரகு (சிவாஜி), சிவா (முத்துராமன்), பீட்டர் (கோபாலகிருஷ்ணன்) மூவரும் வறுமையில் வாடும் இளைஞர்கள். நண்பர்கள். அவர்கள் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் மகள் கே.ஆர்.விஜயாவை சிவாஜி விரும்புவார். ஆனால் அவரோ, முத்துராமனை விரும்புவார். விஷயம் அறிந்த சிவாஜி தன் காதலை விட்டுக்கொடுத்து, முத்துராமன்- விஜயா திருமணத்தை நடத்திவைப்பார். 'இந்தப் படத்தில், பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ எனும் பாடல் பெரிய ஹிட் ஆனது.

7. செல்வம்

(இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்)

சிவாஜியை வைத்துப் பல அருமையான படங்களை கே.எஸ்.கோபால கிருஷ்ணன் உருவாக்கியிருந்தாலும், சிவாஜிக்கு மிகச் சிறந்த, சவாலான கேரக்டர் 'செல்வம்’ பாத்திரமாகத்தான் இருக்க முடியும். நடிகர் வி.கே.ராமசாமி சொந்தமாகத் தயாரித்த படம் இது.

பணக்கார வாலிபர் சிவாஜிக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும் திருமணம் நடக்கிறது. ஆனாலும், அவர்கள் சேரக் கூடாது; ஏதோ தோஷம் என்று ஜோசியர் சொல்லிவிடுவதால், அவர்கள் இணையவில்லை. விஜயாவும் மாமியார் சொல்படியே கேட்பார். கணவனும் மனைவியும் பிரிந்திருந்தால், அவர்கள் மனம் எவ்வளவு கஷ்டப்படும்; அந்தப் பிரிவு எவ்வளவு கொடுமையானது; மூட நம்பிக்கை எப்படி இளம் தம்பதியைப் பாதிக்கிறது என்பது மனத்தைத் தொடும் வகையில் சித்திரிக்கப்பட்டிருக்கும். நியாயமற்ற காரணத்துக்காக மனைவியைப் பிரிந்திருப்பது எத்தனைக் கொடுமையானது என்பதும், அதன் பாதிப்பும் சிவாஜியின் அற்புத நடிப்பில் வெளிப்படும்.

8. கர்ணன்

(இயக்கம்: பி.ஆர்.பந்துலு)

1964-ல் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற கர்ணன், 48 வருடங்களுக்குப் பிறகு 2012-ல் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு, சமீபத்திய ஸ்டார் நடிகர்களின் லேட்டஸ்ட் படங்களைவிட நன்றாக, 150 நாட்கள் ஓடிச் சாதனை படைத்தது. மகாபாரதத்தில் கர்ணன் மிக முக்கியமான கேரக்டர். சிவாஜியைத் தவிர, வேறு யாரும் அந்த கேரக்டரை இவ்வளவு சிறப்பாகச் செய்திருக்க முடியாது

சிவாஜி டாப் 10

சிவாஜிக்குப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அதிகம். மகாபாரதத்தை அவர் படித்தபோது, கர்ணன் பாத்திரம் அவரை மிகவும் கவர்ந்தது. பி.ஆர்.பந்தலு, சிவாஜிக்கு ரொம்ப வேண்டிய தயாரிப்பாளர். தன் விருப்பத்தை அவரிடம் சொல்ல, பந்தலு உடனே கர்ணன் படத்தைத் தயாரிக்க முடிவுசெய்தார்.

'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்தடா... கர்ணா’ - வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கும் இந்தப் பாடலில் சிவாஜி தமது நடிப்பால் நம்மைக் கலங்க வைத்திருப்பார். சாவித்திரி, தேவிகா, அசோகன், என்.டி.ராமராவ் என அத்தனை நடிகர் நடிகைகளுமே சிவாஜியோடு போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.

9. கௌரவம்

(இயக்கம்: வியட்நாம் வீடு சுந்தரம்

சிவாஜி டாப் 10

பாரிஸ்டர் ரஜினிகாந்த், கண்ணன் என முற்றிலும் மாறுபட்ட இரு பாத்திரங்களில் சிவாஜி நடித்த, மறக்கமுடியாத படம். வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள் சிறப்பாக அமைந்தது, படத்துக்கு பெரிய ப்ளஸ். தொழிலதிபர் டி.எஸ்.கிருஷ்ணாவின் பல மேனரிஸங்களை பாரிஸ்டர் ரோலில் சிவாஜி நயம்பட உபயோகப்படுத்தியிருப்பார். கோர்ட் காட்சிகள், பாரிஸ்டர் ரஜினிகாந்த்- அட்வகேட் கண்ணன் சம்பந்தப்பட்ட பல சென்டிமென்ட் காட்சிகள் இன்றைக்கும் ரசிகர்கள் மனத்தில் அழுத்தமாக நிற்கின்றன. 'கிளிக்கு றெக்கை முளைச்சிடுத்து... ஆத்தை விட்டுப் பறந்து போயிடுத்து’ என்ற வசனம் ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகலாது. நேர்மையான, கடமை தவறாத போலீஸ் அதிகாரி என்றதும், சிவாஜியின் 'தங்கப்பதக்கம்’ எஸ்.பி.சௌத்ரி கேரக்டர் எப்படி நினைவுக்கு வருகிறதோ... அதேபோல அசாத்தியமான திறமை, புத்திக்கூர்மை, தன்னம்பிக்கையுள்ள அட்வகேட் என்றால், 'கௌரவம்’ பாரிஸ்டர் ரஜினிகாந்த்தான் நினைவுக்கு வருவார்.

10. தில்லானா மோகனாம்பாள்

(இயக்கம்: ஏ.பி.நாகராஜன்)

ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்து, லட்சக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படித்து ரசித்த நாவல் இது. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய அமர காவியம். ஒரு நாவல், திரைப்படமாக எடுக்கப்படும்போது, வெற்றிபெறுவது இல்லை என்று நிலவிவரும் கருத்தைப் பொய்யாக்கி, பெரும் வெற்றிபெற்ற திரைப்படம். பிரபல நாகஸ்வர வித்வான் சண்முகசுந்தரம், பிரபல நாட்டிய மங்கை மோகனாம்பாள் இருவரிடையே உருவாகும் காதலை மிகவும் கண்ணியமாகச் சித்திரிக்கும் படம். பிரபல நாகஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளைதான் இந்த ரோலுக்கு சிவாஜிக்கு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு நாகஸ்வரத்தை சிவாஜி தொட்டாவது பார்த்திருப்பாரா என்பது சந்தேகம். ஆனால், மிகக் குறுகிய காலத்தில் நாகஸ்வர வித்வான்களே கண்டு வியக்கும்படி, மிகத் தத்ரூபமாக நாகஸ்வரத்தை அச்சு அசலாக அவரே வாசிப்பது போன்று நடித்தது சிவாஜியின் திறமைக்குச் சான்று!

''இவை தவிர, அருமையான பாத்திரப் படைப்புகளைக் கொண்ட இந்தப் படங்களையும் கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்'' என்றார் சி.வி.ராஜேந்திரன்.

1. கிருஷ்ணன்- பஞ்சு இயக்கிய பராசக்தி, தெய்வப் பிறவி.

2. பீம்சிங் இயக்கிய பாசமலர், பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும்.

3. ஸ்ரீதர் இயக்கிய ஊட்டிவரை உறவு, விடிவெள்ளி.

4. பி.மாதவன் இயக்கிய வியட்நாம் வீடு, பட்டிக்காடா பட்டணமா.

5. ஏ.பி.நாகராஜன் இயக்கிய நவராத்திரி, திருவிளையாடல்.

6. பி.ஆர்.பந்துலு இயக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்.

7. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய கை கொடுத்த தெய்வம், பேசும் தெய்வம், குலமா குணமா.

8. சி.வி.ராஜேந்திரன் இயக்கிய கலாட்டா கல்யாணம், ராஜா.

9. ஏ.சி.திருலோக்சந்தர் இயக்கிய பாரதவிலாஸ், வாழ்க்கை, அவன்தான் மனிதன்.

10. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை.