Published:Updated:

" இந்தியாவுல லெனின் சிலையைத் தகர்த்துட்டோம்னு ரஷ்யாவுக்குப் போறப்ப சொல்வீங்களா மோடி?!" - இயக்குநர் அமீர்

" இந்தியாவுல லெனின்  சிலையைத் தகர்த்துட்டோம்னு ரஷ்யாவுக்குப் போறப்ப சொல்வீங்களா மோடி?!" - இயக்குநர் அமீர்
" இந்தியாவுல லெனின் சிலையைத் தகர்த்துட்டோம்னு ரஷ்யாவுக்குப் போறப்ப சொல்வீங்களா மோடி?!" - இயக்குநர் அமீர்

25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சியைப் பிடிக்க முடியாத பாரதிய ஜனதா கட்சி, தற்போது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி ஐபிஎப்டி கூட்டணியுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆட்சியைப் பிடித்தவுடனே திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிக்காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலையை புல்டோசர் மூலம் அகற்றி உள்ளது. இதனால் திரிபுராவில் கலவரம் வெடித்தது. இந்தச் செயலுக்கு சிறிதும் வருத்தம் தெரிவிக்காத பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜா, லெனின் சிலையைத் திரிபுராவிலிருந்து அகற்றியதுபோல தமிழ்நாட்டில் பெரியார் சிலையை அகற்றுவோம். என்று ஃபேஸ்புக்கில் பதிவு தட்டியிருந்தார். இந்தப் பதிவுக்குப்  பலரது கண்டனங்கள் எழுந்தவுடன், அவர் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். இந்த விவகாரத்தில், இயக்குநரும் நடிகருமான அமீரின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம்.

"கடவுள்கூட எனக்கு எங்கேயும் சிலை வைங்கனு சொல்லலை. நாமதான் கடவுளுக்கு சிலை வெச்சு வணங்கிட்டு வர்றோம். மறைந்த தலைவருக்கு சிலை வைப்பது மரியாதைக்குரிய செயலாகப் பார்க்கப்படுது. ஆன்மிகம், அரசியல், சித்தாந்தம், புரட்சியாளர் தலைவர்கள்னு எல்லோருக்கும் மரியாதை செய்துகொண்டுதான் வருகிறோம். ஒவ்வொரு தேசத்திலும் தலைவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அரசோ அல்லது தனியாரோ சிலை வைத்து அழகு பார்ப்பது மரபாக இருக்கிறது. 

திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சியிருந்தது. அதனாலேயே, அங்கே புரட்சியாளர் லெனின் சிலையிருந்தது. அந்தச் சிலையை உடைப்பதால் பா.ஜ.க-வுக்கு என்ன ஆகப்போகுதுனு தெரியல. அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலையை வைக்கக் கூடாதுனு அவர்கள் இதை ஒரு வாதமா வெச்சுக்கிட்டாகூட, அந்நிய நாட்டின் முதலீடுகளும், வாகனங்களும், பெட்ரோல் என அங்கேயிருந்து வந்த அனைத்தும் இங்கே இல்லைனா, இந்தியா ஒரு நாளாவது இயங்குமா? எந்த விஷயத்தில் தேசப்பற்றைக் காட்டுறாங்கனு புரியல. இன்றைய தினம் வரைக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்குச் சென்று முதலீடு செய்ய வாங்க வாங்கனு எல்லோரையும் சொல்லிட்டுதானே இருக்கிறார். ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டுக்கொண்டேதானே இருக்கிறார். ரஷ்யாவுக்கு மோடி போகும்போது சொல்ல முடியுமா, 'எங்க நாட்டில் இருந்த உங்க தலைவரின் சிலையைத் தகர்த்துவிட்டோம். வாங்க ஒப்பந்தம்னு'... முடியாதுல்ல?  பா.ஜ.க-வின் இந்தச் செயலின் மூலமா ஒரு சின்னக் காழ்ப்புஉணர்ச்சிதான் தெரியுது. 25 வருடங்களுக்குப் பின்னாடி இவங்க வெற்றி அடைஞ்சிருக்காங்கனு சொன்னா, முதலில் அதை நேர்மையான வெற்றியான்னு பார்க்கணும். 

வெற்றியடைஞ்சிட்டா, மக்களுக்கு நல்லது பண்ணுங்க. அதை விட்டுட்டு சிலையை உடைக்கிறது. பல தலைவர்களின் பெயர்களை அழிப்பேன்னு சொல்றது எல்லாம் சரியா இல்லை. இது தொடர்ச்சியா நடந்துக்கிட்டேதான் இருக்கு. தாஜ்மஹாலை உலக அதிசயத்திலிருந்து தூக்குறதும், சுற்றுலாத் தளங்களிலிருந்து அந்தப் பேரை எடுக்குறதும்... நல்லவா இருக்கு. எந்த மாநிலங்களில் எல்லாம் அவங்க ஆட்சிக்கு வர்றாங்களோ, அங்கே இருக்கக்கூடிய இந்தியாவுக்கான அடையாளங்களை அழிப்பது என்பது, சரியல்ல. இதைத்தான் சிங்களன் செய்தான் இலங்கையில். 

இதுமாதிரியான அசாம்பாவித சம்பவங்கள் நடக்கும்போது தேசியத் தலைவராக இருக்கக்கூடியவர் ஆழமான கருத்துகளைப் பதியணுமே தவிர, அதை விட்டுட்டு போட்டிக்காக நானும் இங்கேயிருக்கக்கூடிய பெரியார் சிலையை உடைக்கிறேன்னு சொல்வது, அவருடைய தரத்தைதான் காட்டுது. 

ஹெச்.ராஜா தமிழகத்தில் கலவரம் வர வேண்டுமென்பதில் ரொம்பத் தெளிவாகயிருக்கிறார். அவருடைய வாழ்நாளில் தமிழகத்தில் தலைமை தாங்கி ஒரு கலவரத்தை நடத்தியே ஆகணும்னு இருக்கார். பல உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படணும்னு,  திட்டமிட்டு அவர் செயல்படுகிறார். தொடர்ச்சியா அவருடைய பேச்சுகள் அப்படிதான் இருக்கிறது. 

இதுவரைக்கும் அவரை நான் சந்தித்ததில்லை. அவரைப் பார்த்தால், 'உங்களுக்கு என்ன வேணும். தமிழகத்தில் என்ன நடக்கணும்னு நினைக்குறீங்க'னு கேட்பேன். இங்கே யார் ஆள வேண்டுமென்பது முக்கியமில்லை. மக்கள் அமைதியாய் வாழ வழிவகை செய்ய ஆட்சியாளர்கள் இருக்காங்களாங்கிறதுதான் முக்கியம். யாரும் எந்தக் கொள்கையை ஏற்றவராகவும் இருக்கலாம். தேசம் முழுவதும் ஒரே கொள்கையை ஏற்றவர்னு உலகத்தில் எந்த மூலையிலும் யாருமே கிடையாது. பூமி பரப்பில் எங்கேயும் அப்படியில்லை. கருத்து, எதிர்க்கருத்து, வாதம், விவாதம்... இதுதான் தீர்ப்பு.  

ஹெச்.ராஜா, சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்களுக்கு மோடி எதுவும் சொல்ல மாட்டாரா?. பிள்ளையும் கிள்ளி விட்டுட்டுத் தொட்டிலையும் ஆட்டுவது அவர்கள்தானே. தமிழ்நாட்டில் ஹெச்.ராஜா பேசுகிறார். அதே மாதிரி உத்தரப்பிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ, '2024-ல் இந்தியா இந்து ராஜ்ஜியமா மாறும்'னு சொல்றார். அதுக்கும் மோடி எந்தவொரு கருத்தும் சொல்லவில்லை. தேசம் முழுவதும் இருக்கிற பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏதாவது சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அதுக்கு என்ன ரியாக்‌ஷன் வருகிறது என்பதை மேல் மட்டத்தில் இருப்பவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். பாஜக என்பது மற்ற கட்சியைப் போலில்லை. மற்ற கட்சிகளுக்கு என்ன நோக்கமிருக்கிறதுனு தெரியலை. ஆனா, இவர்களின் கனவு இந்தியாவை இந்துக்கள் ஆட்சி செய்ய வேண்டுமென்பது. அறுபது ஆண்டுக் கனவு. அந்த இடத்தை இப்போது அடைஞ்சிருக்காங்க. அதனால என்ன வேண்டுமானாலும் பேசுவாங்க. நோட்டாவுக்குக் கீழே குறைவான ஓட்டுகளை அவர்கள் வாங்கியிருக்கும்போதே தமிழகத்தில் இத்தனை பிரச்னைகளையும், கலவரத்தையும் உண்டு பண்ண முடியுமென்றால், ஆட்சி அமைத்தால் என்னவெல்லாம் செய்வார்கள்.'' 

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று நினைக்குறீர்களா?

''இதை நான் நம்பவில்லை. ஏன்னா, தமிழகம் அதுக்கு ஒத்துழைக்காது. ஒரு வேலை சர்வாதிகார ஆட்சியின் அடிப்படையில் நடந்தால், இப்போல்லாம் ஓட்டு மெஷினில் யாருக்கு ஓட்டு போட்டாலும் பா.ஜ.க-வுக்கு ஓட்டு போகுதுன்னு சொல்றாங்க. அதனால, ஓட்டு மெஷினை வெச்சு இப்படி  ஒரு விபரீதம் நடந்துருச்சினா, இந்தியாவில் இருக்கக்கூடிய பெரும்பாலான இந்துக்களாலேயே இந்தக் கட்சி புறக்கணிக்கப்படும். இவர்கள் சொல்கிற ஒற்றைக் கலாசாரக் கொள்கையை இவர்கள் மக்களிடம் திணித்தால், அந்த மக்களாலேயே அவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். நான் திரும்பத் திரும்பச் சொல்றேன். பா.ஜ.க. என்பது இந்துக்களாலான ஆட்சியல்ல. அது சித்தாந்தத்தின் ஆட்சி. இன்னைக்குப் பெருமையா சொல்றாங்க, '21 மாநிலங்களில் நாங்கதான் ஆளுறோம்'னு. ஒரு தேசத்தில் இருபத்தோரு மாநிலங்களில் நீங்க ஆண்டால், நாட்டை வளப்படுத்தக்கூடிய பொறுப்பு அவர்களிடம்தானே இருக்கு. அதை அல்லவா அவர்கள் செய்திருக்க வேண்டும். அதை விட்டுட்டு, எதுக்கு சிலையை உடைப்பேன், கலவரம் செய்வேன்னு சொல்ற வேலை. எந்த மாநிலம் இவர்களால் தன்னிறைவு அடைஞ்சிருக்கு.'' 

பெரியார் சிலை மீது அவர்கள் தாக்குதல் நடத்துவார்களா?

''ஆள் இல்லாத ராத்திரியில் அவர்கள் உடைத்துவிட்டால், என்ன பண்ண முடியும். பிரச்னையைத்தான் அவர்கள் உண்டாக்குகிறார்கள். ஒரே ஒரு விஷயத்தில் வேண்டுமென்றால் ஹெச்.ராஜாவை மதிக்கலாம். அவர் போட்ட ட்வீட்டுக்கு எதிர்ப்பு வந்தவுடனே அதை நீக்கியதுதான். இப்போதான் முதல் தளத்துக்கு வந்திருக்கார். ஒரு பயமாவது இருக்கேன்னு நினைச்சிக்கிறேன். அதை விட்டுட்டு திரும்பத் திரும்ப வம்பு பண்ணுவேன்னு மல்லுகட்டிக்கிட்டே இருந்தால் என்ன பண்ணுவது. அந்தப் பயமாவது அவரிடம் இருக்கட்டும். இந்த மண் எல்லோருக்குமான மண். தமிழகம் அப்படிதான் இருந்திருக்கிறது, இருக்கும்.''