Published:Updated:

''15 வருஷ சினிமா அனுபவத்துல, இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லமுடியாது!" - 'இயற்கை-2', 'பார்ட்டி' கதை சொல்லும் ஷாம்

''15 வருஷ சினிமா அனுபவத்துல, இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லமுடியாது!" - 'இயற்கை-2', 'பார்ட்டி' கதை சொல்லும் ஷாம்
''15 வருஷ சினிமா அனுபவத்துல, இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லமுடியாது!" - 'இயற்கை-2', 'பார்ட்டி' கதை சொல்லும் ஷாம்

''15 வருஷ சினிமா அனுபவத்துல, இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லமுடியாது!" - 'இயற்கை-2', 'பார்ட்டி' கதை சொல்லும் ஷாம்

"எப்போதும் எனக்கான ஸ்க்ரிப்ட் தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கவனமாகவே இருப்பேன். நல்ல படம் பண்ணனும்னு நினைப்பேன். அதுக்காகத்தான் சில கால இடைவெளிகளிலேயே என் படங்கள் ரிலீஸாகிறது. இனிமேல் படங்கள் பண்ணுவதில் தப்பு பண்ணக்கூடாதுங்கிறதுல ரொம்பவே கவனமா இருக்கேன்!" என்கிறார், ஷாம்.  

தமிழ் சினிமாவில் இத்தனை வருடங்கள் இருந்தும், உங்களுக்கான ஒரு நிரந்தர இடம் இல்லையே... ஏன்னு யோசிச்சிருக்கீங்களா?

இயக்குநர் ஜீவா என்னை  அறிமுகப்படுத்தினார். நல்ல படமா, எனக்குனு ஒரு கேரக்டரை உருவாக்கிக் கொடுத்தார். அவர் மரணம், என் துரதிர்ஷம். அதுக்குப் பிறகு எனக்கு முந்தைய அளவுக்கு நல்ல கேரக்டர்கள் கிடைக்கலை. எனக்குனு எந்தவொரு பேக்ரவுண்டும் இல்லை. சில ஹீரோக்களுக்கு அப்பா, அண்ணன்னு யாராவது இருந்தாங்க. ஆனா, என்னைமாதிரி ஆட்களுக்கு அப்படி ஒரு சப்போர்ட் இல்லாததுதான், நினைச்ச இடத்தை அடைய முடியலைனு நினைக்கிறேன். ஆனா, இப்போ இதையெல்லாம் ஒரு காரணமா சொல்லமுடியாது. ஏன்னா, சினிமாவுக்கு நான் வந்து 15 வருடங்கள் ஆயிடுச்சு.  

இன்னைக்கு இருக்கிற சினிமா ரொம்ப மோசமான நிலையில இருக்கு. சமீபத்துல ஒரு சர்வே எடுத்திருக்காங்க. அதில், வசூல்ரீதியா தமிழ் சினிமா கலெக்‌ஷன் குறைஞ்சிக்கிட்டே வருதுனு சொல்லியிருக்காங்க. ஏன்னா, தியேட்டருக்கு வந்து படம் பார்க்குற ஆடியன்ஸ் குறைஞ்சிட்டாங்க. பெஸ்ட் படத்தைவிட, 'சூப்பரா இருக்கு'னு சொல்ற படத்தைத்தான் பார்க்க விரும்புறாங்க. இதுமட்டுமில்லாம, அமேசான் மாதிரி சில வெப்சைட்களிலும் படத்துக்கான ரைட்ஸைக் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. இது எல்லாத்தையும் நாம காரணமா சொல்லமுடியாது. நாம நல்ல படம் பண்ணிட்டுப் போயிடலாம்... அதுக்கு ஒரு ரிதம் வேணும். அதைக் கரெக்டா பிடிச்சுட்டா, நமக்கு வெற்றிதான். அதுக்குக் கொஞ்சம் டைம் ஆகும். எனக்குத் தெரிஞ்சு நல்லா நடிக்கிற, திறமை இருக்கிற சிலருக்கு இங்கே அங்கீகாரம் கிடைக்கலைனுதான் சொல்வேன். இன்னும் ஹீரோயின்ஸ் பின்னாடி லவ் பண்ணிக்கிட்டே இரு, பத்துபேரை அடி, ஃ'பிட்' பாடியோட இருக்க... போலீஸ் கேரக்டர் இல்லை, வில்லன் ரோல் உனக்கு... இப்படித்தான் சொல்றாங்க. ஃபிட்னெஸ் அண்ட் பெர்ஷனாலிட்டி இருக்கிற நடிகர்களுக்கு ஏத்தமாதிரி நல்ல ரோல் கிடைக்கிறதில்லை. 

டூயல் ஹீரோ சப்ஜெக்ட்உங்களுக்குப் பிரச்னையா இல்லையா? 

கண்டிப்பா இல்லை. அது ஆரோக்கியமான விஷயம்தான். தவிர, தமிழ்சினிமாவுல டூயல் ஹீரோ சப்ஜெக்ட் கம்மியா வருது. பாலிவுட், மாலுவுட்ல எல்லாம் பெரிய ஹீரோக்கள்கூட டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் நிறைய பண்றாங்க. தமிழ்சினிமாவுல நிறைய டூயல் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் வரணும். அப்போதான், ஆரோக்கியமான சினிமாவைப் பார்க்க முடியும். 'புறம்போக்கு' படத்துல நான் நடிக்கும்போது விஜய் சேதுபதி என்னை ரொம்பப் பாராட்டுவார். படம் பார்த்துட்டு, ''சார், நீங்க நடிக்கும்போதுகூட தெரியல, படம் பார்க்குறப்போதான் ஃபீல் ஆகுது. நல்லா நடிச்சிருக்கீங்க சார். நீங்க நல்லவரா கெட்டவரானு தெரியலை சார்''னு ஒவ்வொரு சீனையும் நோட் பண்ணிச் சொன்னார். இன்னொரு சான்ஸ் கிடைச்சா, அவர்கூட சேர்ந்து நடிப்பேன். அதுக்குத் தகுந்தமாதிரி ஸ்கிரிப்ட் அமையணும்.

உங்ககூட நடிச்ச ஹீரோக்களின் வளர்ச்சியை எப்படிப் பார்க்குறீங்க?

என்கூட நடிச்சவங்கெல்லாம் இப்போ பெரிய ஹீரோக்களே இருக்காங்களேனு நான் எப்போவும் பொறாமைப்பட மாட்டேன். ஏன்னா, பொறாமைப்பட்டு என்ன ஆகப்போகுது. எல்லோருடைய வளர்ச்சியும் அவங்க கடந்து வர்ற பாதையைப் பொருத்துதான். நமக்குப் பின்னாடி வந்தவங்கெல்லாம் முன்னாடி இருக்காங்களேனு பார்த்திருந்தா, டைம்தான் வேஸ்ட். நாம எப்படி வந்தோம், வளர்றோம்னுதான் பார்க்கணும். ஒருநாள் ராத்திரிதான் ஒருத்தரை ஸ்டார் ஆக்குது. அந்த நாளுக்காக நாம வெயிட் பண்ணிட்டுதான் இருக்கணும். எப்போவும் எல்லாத்தையும் பாஸிட்டிவாதான் பார்ப்பேன். மத்தவங்ககிட்ட இருந்து என்ன கத்துக்க முடியும்னுதான் பாப்பேன். 

வெங்கட்பிரபு டீமுடன் வேலை பார்த்த அனுபவம்?

வெங்கட்பிரபு படங்களைப் பார்க்கும்போது ரொம்ப ஜாலியா இருக்கும். அந்த டீமுடன் வேலை பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை. கரெக்டான டைம்ல கூப்பிடுவேன்னு வெங்கட் பிரபு சொன்னார். இப்போ, 'பார்ட்டி'க்குக் கூப்பிட்டார். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல வெங்கட்பிரபு ரொம்ப ஸ்ரிக்ட். சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் டைரக்டர் வெங்கட்பிரபுவைத்தான் பார்க்க முடியும். ஜாலியா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனா, எனக்கு இயக்குநர் வெங்கட்பிரபுவைப் பார்த்து செம ஷாக். கேங்ஸ்டார் படத்துல எனக்கு நல்ல ரோல் கொடுத்திருக்கார். சத்யராஜ், நாசர், ஜெயராம்னு சீனியர்ஸ்கூட வொர்க் பண்ணதுல செம ஹாப்பி. அவங்க எல்லோருமே செம டெடிகேஷன் பெர்ஷன்ஸ். எனக்கு, சத்யராஜ், ஜெய்யுக்கு படத்துல தனி டிராக் இருக்கு.

இயக்குநர் ஜனநாதன்?

ஜனநாதன் என் ஃபேமிலியில ஒருத்தர் மாதிரி. அவர்கூட நிறைய ஸ்க்ரிப்ட்டில் உட்காருவேன். சில ஸ்க்ரிப்ட் ஷாமுக்கு கரெக்டா இருந்தா நல்லாயிருக்கும்னு நினைப்பார். 'புறம்போக்கு' படத்துல நான் நடிச்சா நல்லாயிருக்கும்னு அவர்தான் சொன்னார். 'இயற்கை 2' படத்துக்கான ஸ்க்ரிப்ட்கூட இருக்கு. ஆனா, படம் பண்ணதான் தயக்கமாயிருக்கு. ஏன்னா, 'இயற்கை' படத்துக்கு தேசியவிருது கிடைச்சது. ஆனா, வசூல் ரீதியா படம் ஓடலை. அந்தப் படத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தோம்னு எங்களுக்குத்தான் தெரியும். இப்போல்லாம் நல்ல படத்துக்காக உழைப்பைப் போடவே பயமா இருக்கு.  

தயாரிப்பாளர் ஷாம்?

'6 மெழுகுவர்த்திகள்' படத்தைத் தயாரிச்சேன். ஏன்னா, அது நல்ல ஸ்க்ரிப்ட். விமர்சன ரீதியா நடிகரா எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துச்சு. ஆனா, வசூல் ரீதியா கலெக்‌ஷன்ஸ் வரலை. ஆடியன்ஸூக்கு எந்தமாதிரி படங்கள் எடுத்தா பிடிக்கும்னே தெரியலை. ஏன்னா, இந்தப் படத்தை டி.வியில பார்த்த பலபேர் 'செம படம் சார்'னு பாராட்டுறாங்க. இதே ஆடியன்ஸ் தியேட்டரில் போய்ப் பார்த்திருந்தால் என் உழைப்புக்கும், டைரக்டர் உழைப்புக்கும் அர்த்தம் இருந்திருக்கும். இனி நிறைய நல்ல படங்களைத் தயாரிக்கணும்னு நினைக்கிறேன். விரைவில் அறிவிப்பு வரும்.
 

அடுத்த கட்டுரைக்கு