Published:Updated:

வானத்தைப் போல...

வானத்தைப் போல...
பிரீமியம் ஸ்டோரி
வானத்தைப் போல...

நினைவுகள் : ஆர்.கோவிந்தராஜ்

வானத்தைப் போல...

நினைவுகள் : ஆர்.கோவிந்தராஜ்

Published:Updated:
வானத்தைப் போல...
பிரீமியம் ஸ்டோரி
வானத்தைப் போல...
வானத்தைப் போல...

எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் டூப்பாகவும் அரசியல் வாழ்வில் மெய்க்காப்பாளராகவும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். எம்.ஜி.ஆர். வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

தொழிலாளி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வியர்வை சிந்தி உயர்வைத் தரும் அடிமட்ட தொழிலாளர்களை எம்.ஜி.ஆர். அளவுக்கு மதித்த தலைவர்கள் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஓர் உதாரணம் சொன்னால் புரியும்.

1980-ம் ஆண்டு சென்னையில் கிண்டி புகை வண்டி நிலையத்தை அடுத்து கட்டப்பட்ட புதிய சுரங்க நடைபாதையை திறக்கச் சென்றார் எம்.ஜி.ஆர். அங்கே சென்றதும் சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்தவர், அருகேயிருந்த என்னை அழைத்து, ''இந்த சுரங்க நடைபாதையைக் கட்டிய மேஸ்திரியை அழைத்து வா!'' என்று சொல்ல... நான் விசாரித்தபோது, ஓரமாக நின்றிருந்தார் மேஸ்திரி ஏழுமலை. நான் அவரிடம், ''முதல்வர் அழைக்கிறார்...'' என்றதும், தயங்கியபடியே வந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் சொன்னார். உடனே, கத்தரிக்கோலை அவரிடம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரையே ரிப்பனை வெட்டி, அந்தப் பாலத்தைத் திறந்துவைக்கச் சொன்னார். அவரோ பதற்றத்துடன் ''வேண்டாம் ஐயா! நீங்களே திறந்துவையுங்கள்!'' என்று மறுக்க... எம்.ஜி.ஆர் அவரிடம், ''இந்த பாதை உங்களைப் போன்றவர்களின் உழைப்பால் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த ரிப்பனை வெட்டும் தகுதி உங்களுக்குத்தான் முழுமையாக உள்ளது. எனவே தயங்காமல், ரிப்பனை வெட்டுங்கள்!'' என்று சொல்ல... மிகுந்த மன மகிழ்ச்சியுடன் ஏழுமலை சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார். மக்கள் விண்ணதிர கரகோஷம் செய்து மகிழ்ந்தனர்.    

வானத்தைப் போல...

  வள்ளல்

பல வருடங்களாக எம்.ஜி.ஆரின் மாம்பலம் அலுவலகத்தில் (தற்போதுள்ள நினைவு இல்லம்) காவல் பணியில் மகேந்தர் என்ற கூர்க்கா மிகுந்த விசுவாசமாகப் பணியாற்றி வந்தார். ஒருநாள் இரவு எம்.ஜி.ஆர். கீழே வரும்போது, மகேந்தர் பணியில் இல்லை. அவருக்கு அலுவலகத்தின் பின்புறம் ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் பணியில் இல்லாததைக் கண்ட எம்.ஜி.ஆர், பின்புறம் உள்ள அந்த அறைக்குச் சென்று பார்க்க... தனது இரவு உணவுக்காக சமையல் செய்து கொண்டு இருந்தார். உடனே எம்.ஜி.ஆர் மற்றொரு அலுவலகப் பணியாளரான கேசவனை அழைத்து, ''இவர் ஏன் சமைக்கிறார்? உங்களுக்கு எல்லாம் ஹோட்டல்ல இருந்து வருவதுபோல, இவருக்கும் கொடுக்கலாமே...'' என்று சொல்ல... அதற்கு கேசவன், ''இரவிலே மட்டும்...'' என்று இழுத்தார். உடனே எம்.ஜி.ஆர்., ''இரவிலும் மகேந்தருக்கு சாப்பாடு கொடுத்தால் இந்த ராமச்சந்திரன் ஏழையாகவா போய் விடுவான்? இவர் வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு!'' என்று சொல்லிவிட்டார்.

அத்துடன் நில்லாமல், அலுவலகக் கணக்குகளை கவனித்து வந்த குஞ்சப்பனிடம் (சக்கரபாணியின் மைத்துனர்), ''மகேந்தருக்கு என்ன சம்பளம் போடப்படுகிறது?'' என்று கேட்டார். ''முந்நூறு ரூபாய்'' என்றார் குஞ்சப்பன். உடனே எம்.ஜி.ஆர் அந்த கூர்க்காவை அழைத்து, அவரது குடும்ப நிலையைக் கேட்க... ''எனக்கு இரண்டு பிள்ளைகள், மனைவி எல்லாம் நேபாளத்தில் ஒரு கிராமத்தில் இருக்கிறார்கள். என் செலவுகள் போக அவர்களுக்குக் கொஞ்சம் பணம் அனுப்புவேன்'' என்று சொன்னார். எம்.ஜி.ஆர்., குஞ்சப்பனிடம், ''இந்த சம்பளத்தில் எப்படி இங்கே இவரும் அங்கே குடும்பமும் நிம்மதியாக வாழமுடியும்? இவருக்கு இந்த மாதம் முதல் ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுங்கள்'' என்று கூற... கூர்க்கா முகத்தில் மகிழ்ச்சி அலைபுரண்டது!

வானத்தைப் போல...

ரத்தத்தின் ரத்தங்கள்!

தன்னைத் தேடி வரும் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்து அனுப்புவதை ஒரு தனி கடமையாக நினைத்துச் செயல்படுவார் எம்.ஜி.ஆர். வண்டலூர் அருகே ஒரு படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்ட நேரத்தில், 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர்கள் வந்துவிட்டார்கள். படப்பிடிப்பின் இடைவேளையில் அவர் அமர்ந்ததும், உடனே அனைவரும் ஆர்வ மிகுதியால் சூழ்ந்துகொண்டனர். எவ்வளவோ கட்டுப்படுத்திப் பார்த்தோம். அனைவரும் எம்.ஜி.ஆரிடம் கையெழுத்து வேண்டும் என அடம் பிடித்தனர். இவ்வளவு பேருக்கும் எப்படி கையெழுத்துப் போட்டுக் கொடுக்கமுடியும் என நாங்கள் மலைத்தோம். ஆனால், அத்தனை பேருக்கும் கொஞ்சமும் சலியாமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.! இடையில் நாங்கள் சிலரை தடுத்தபோதும், எங்களைக் கடிந்துகொண்ட எம்.ஜி.ஆர் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கையெழுத்துப் போட்டுவிட்டுதான் நடிக்க வந்தார்.

மக்கள் நாயகன்

சத்யா மூவிஸ் தயாரிப்பில் ஜெய்சங்கர், சிவகுமார், லட்சுமி நடித்த, 'கன்னிப் பெண்’ படத்தின் இயக்குநர் ஏ.காசிலிங்கம் எனக்கும் புத்தூர் நடராஜனுக்கும் கொள்ளைகாரர்கள் வேடம் தந்தார். சத்யா ஸ்டுடியோவில் அதன் படப்பிடிப்பு நடந்தபோது, திடீரென எம்.ஜி.ஆர் அங்கு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஜெய்சங்கர், காசிலிங்கம் மற்றும் பலர் எம்.ஜி.ஆருக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்று பேசிக் கொண்டிருந்தபோது நானும், நடராஜனும் வணக்கம் தெரிவித்தோம். ''என்னப்பா இங்கே?'' என்றார். இப்படத்தில் எங்களுடைய வேடத்தைப் பற்றி கூற... உடனே எம்.ஜி.ஆர் அருகில் இருந்த புத்தூர் நடராஜனிடம், ''என்ன நடராஜண்ணே! நீங்களும் ராமகிருஷ்ணனுடன் கொள்ளையில் கூட்டா?'' என்று கேட்டு குலுங்கிச் சிரித்தார்.

வானத்தைப் போல...

எம்.ஜி.ஆர். கிளம்பியபிறகு ஜெய்சங்கர் எங்களிடம் எம்.ஜி.ஆர். பற்றி மனசு நிறைய பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தார்.  பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் ''எம்.ஜி.ஆருக்கு 'பாரத்’ பட்டம் கொடுத்தது சரிதானா?'' என்று பத்திரிகை நிருபர் ஒருவர் ஜெய்சங்கரிடம் கேட்டபோது, ''இது ஜனநாயக நாடு. மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்வதால்தான் படங்கள் ஓடுகின்றன. பல வருடங்களாக கதாநாயகனாக நடித்து வரும் எம்.ஜி.ஆரை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் நானும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன், வரவேற்கிறேன்!'' என்றார்.

அள்ளித் தரும் பூமி!

அடுத்தவர்களின் கஷ்டத்தைப் புரிந்து கொள்வதில் அவருக்கு நிகர் அவரே!

1956-ம் ஆண்டு கஸ்தூரி ஃபிலிம்ஸின் ஒரு திரைப்படத்தின் சண்டை காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி ஸ்ரீரஞ்சனி. இயக்கம் டி.ஆர்.ரகுநாத்.

இதில் எனக்கு இருநூறு ரூபாய் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. சுமார் ஒரு மாதத்துக்குப் பின்பு பணத்தைப் பெற்றுக்கொள்ள தி.நகர் ராஜாபாதர் தெருவிலுள்ள அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கு சோகமாக இருந்த தயாரிப்பாளர், ''படத்தைத் தொடர இயலவில்லை!'' என்று வருத்தத்துடன் கூறி என்னைத் திருப்பி அனுப்பிவிட்டார். இந்தத் தகவலை அறிந்துகொண்ட எம்.ஜி.ஆர். ''எவ்வளவு பணம் வரவேண்டும்?'' என்று கேட்டு, எனக்கு சேரவேண்டிய இருநூறு ரூபாயை தானே கொடுத்தார். அதோடு நில்லாமல், ''இனி நீங்கள் தயாரிப்பாளரை நாட வேண்டாம். பாவம், அவர் இக்கட்டான நிலையில் உள்ளார். நான் கொடுத்தது பற்றி யாரிடமும் கூற வேண்டாம்!'' என்றார்.

வானத்தைப் போல...

தீய பழக்கமே தள்ளிப்போ...

எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றிலும் நல்ல கருத்துகளை மட்டுமே முன்வைப்பார். சிகரெட் புகைப்பது போன்றோ மது அருந்துவது போன்றோ நடிக்க விரும்ப மாட்டார்.  'திருடாதே’ படத்தில் சிகரெட் புகைப்பது போல நடிக்க வேண்டும் என்று அதன் இயக்குநர் ப.நீலகண்டன் கேட்டதற்கு உறுதியாக மறுத்து விட்டார். 'நம் நாடு’ திரைப்படத்திலும் இறுதிக் காட்சிகளில் வில்லன்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து மகிழ்விக்குமாறு காட்சிகளை அமைத்துக் கொண்டாரே ஒழிய, தான் குடிப்பதாக காட்சிகளை வைக்கவில்லை. இவ்வாறு அவர் செய்யக் காரணம், சினிமாவையே நிஜமாக நம்பும் பல ரசிகர்கள் திரையில் தன் நடத்தைகளை நிஜத்தில் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்து வைத்திருந்ததுதான்!

வானத்தைப் போல...

இறுதி மரியாதை!

'ஒருவரது திருமணத்துக்குக்கூட செல்லாமல் இருக்கலாம். ஆனால், தெரிந்த ஒருவர் மறைந்துவிட்டால் இறுதி அஞ்சலிக்குப் போகாமல் இருக்கவே கூடாது!’ என்பதைத் தீவிரமாகக் கடைப்பிடித்தவர் எம்.ஜி.ஆர். தனக்கு அறிமுகமான யாருடைய மறைவையாவது கேள்விப்பட்டால், எத்தனை பெரிய பணிகள் இருப்பினும் ஒதுக்கிவைத்துவிட்டு, அஞ்சலி செலுத்தக் கிளம்பிவிடுவார்.

சினிமா கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் தன்னுடைய பணியாளர்கள் மற்றும் அறிமுகமான திரையுலக தொழிலா ளர்கள் என்றாலும் அவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வார். சினிமா கலைஞராக இருந்த காலம் தொடங்கி முதல்வராக இருந்த காலத்திலும் இந்தக் கொள்கையை எத்தனை நேர நெருக்கடிக்கு நடுவிலும் கைவிடவே இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism