Published:Updated:

" 'ஓல்ட் பாய்', 'தி பாடி', 'இன்விசிபிள் கெஸ்ட்' தவிர்க்கக்கூடாத ஐந்து சினிமாக்கள்

தார்மிக் லீ
" 'ஓல்ட் பாய்', 'தி பாடி', 'இன்விசிபிள் கெஸ்ட்' தவிர்க்கக்கூடாத ஐந்து சினிமாக்கள்
" 'ஓல்ட் பாய்', 'தி பாடி', 'இன்விசிபிள் கெஸ்ட்' தவிர்க்கக்கூடாத ஐந்து சினிமாக்கள்

தமிழ் சினிமாவிலும், ஹாலிவுட் சினிமாக்களிலும் சில படங்களை எப்படி மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டுமோ அப்படி பிற மொழிகளிலும் சில படங்களை மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டும். அப்படி ஸ்பேனிஷ், கொரிய சினிமாக்களில் மிஸ் பண்ணக்கூடாத படங்களில் சில.

Old boy : (IMDB - 8.4) :

கொரியன் மொழிப் படங்களில் இது மிக முக்கியமான படம். 2003-ல் வெளியான இப்படத்தை பார்க் சான் வூக் இயக்கியிள்ளார். கதைப்படி, சோய் மின் சிக் குடிகாரர், எந்த வேலையும் செய்யாதவர், தன் குழந்தையின் பிறந்தநாளைக்கூட மறந்துவிடக் கூடியவர். ஒருநாள் திடீரென அடையாளம் தெரியாத ஆட்களால் கடத்தப்படுகிறார். ஒருவாரம், ஒருவருடம் அல்ல, 15 வருடங்கள் ஒரு அறையில் அடைக்கப்படுகிறார். 1988-ல் அடைக்கப்பட்ட இவர், 2003-ல் எப்படியோ அங்கிருந்து தப்பித்துவிடுகிறார். எதற்காக கடத்தப்பட்டார், யார் கடத்தியது என்ற தேடுதல் வேட்டைதான் மீதிக்கதை. படத்தில் இவரது நடிப்பு வேற லெவல். மனுஷன் அந்தக் கதாபாத்திரத்திலேயே வாழ்ந்திருப்பார். 

I saw the devil : (IMDB - 7.8) :

`ஓல்டுபாய்' படத்தில் நடித்த சோய் மின் சிக், இந்தப் படத்தின் வில்லன். 2010-ல் வெளியான இப்படத்தை கிம் ஜீ வூன் என்பவர் இயக்கியுள்ளார். இவரின் நடிப்பில் மிஸ் பண்ணக்கூடாத படங்களுள் இதுவும் ஒன்று. தமிழ் சினிமாவைப்போல் அங்கிருக்கும் நடிகர்கள் ஒரே கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்காமல், கதைக்கேற்ப வெவ்வேறு ரோல்களை ஏற்று நடிப்பார்கள்.  இந்தப் படத்தின் ஒன்லைன் ரொம்பவே சிம்பிள்தான். சர்வதேச உளவுத்துறை அதிகாரிக்கும், ஒரு சைக்கோ கொலைகாரனுக்கும் நடக்கும் `டாம் அண்ட் ஜெர்ரி' சண்டைதான் களம். ஆங்காங்கே இடம்பெறும் டிவிஸ்ட்டுகள், படத்தின் சர்ப்ரைஸ் எலெமன்ட்ஸ். `தனி ஒருவன்' படத்தில் பயன்படுத்தியிருக்கும் `பக் டெக்னாலஜி' இந்தப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒரே வித்தியாசம்... அதில் வில்லன், ஹீரோவுக்கு பக் வைப்பார். இதில் ஹீரோ வில்லனுக்கு பக் வைப்பார். ஆனால், வில்லன் அவருக்குள் இருக்கும் பக்கை கண்டுபிடித்து வெளியே எடுக்கும் முறைதான் இதில் `வேற' லெவல். மிஸ் பண்ணிறாதீங்க மக்களே.  

Julia's Eyes : (IMDB - 6.7) :

ஸ்பானிஷ் மொழியில் உருவான இத்திரைப்படம் 2010-ல் வெளியானது. குய்லெம் மொராலஸ் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். சாரா - ஜூலி இருவரும் இரட்டை சகோதரிகள். மன அழுத்தத்தின்போது இருவருக்குமே சிறிதுநேரம் பார்வை மங்கிவிடும். சாராவுக்கு இந்நோயின் வீரியம் அதிகாமாகி, பார்வையை முழுமையாக இழந்துவிடுவார். சாரா ஒரு தனிமை விரும்பி. கண் தெரியவில்லையென்றாலும் ஒரு  தனி வீட்டில்தான் வாழ்ந்து வருவார். ஆனால், இவரைத் தவிர இன்னொருவரும் இவருடன் இருப்பதாக உணருவார். மன அழுத்தம் அதிகமாகி, அவர் வீட்டின் பேஸ்மென்டிலே தற்கொலை செய்து இறந்தும்விடுவார். படமே இந்தக் காட்சியில் இருந்துதான் ஆரம்பிக்கும். சாராவின் இறுதிச் சடங்கிற்கு வரும் ஜூலியும் அங்கு வேறு யாரோ இருப்பதை உணர்வார். உணர்வுகளைப் பின்தொடர்ந்து செல்லும் ஜூலிக்கு, சாராவின் இறப்பில் சந்தேகம் ஏற்படும். உண்மையிலேயே சாரா தற்கொலைதான் செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதைத் திகில் கலந்த திரைக்கதையில் எடுத்துச்சொல்வதுதான், `ஜூலியாஸ் ஐஸ்'. 

The Body : (IMDB - 7.6) :

2012-ல் ஓரியல் பௌலோ இயக்கத்தில் வெளியான படம் `தி பாடி'. இரவு நேரத்தில் பிணவறையில் வேலை செய்துகொண்டிருக்கும் காவலாளி, பிணங்கள் வைத்திருக்கும் இடத்தில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து, விரைந்து சென்று பார்ப்பார். அங்கிருக்கும் ஒரு பிணம் மட்டும் காணாமல் போயிருப்பதைப் பார்த்ததும் பதறிப்போய், காவல்துறையிடம் தகவலைத் தெரிவித்துவிடுவார். படமே அங்கிருந்துதான் ஆரம்பிக்கும். ஆரம்பித்த இடம் முதல் படம் முடியும்வரை திகிலுக்குப் பஞ்சமே இருக்காது. `Julia's eyes' படத்திற்குக் கதை எழுதிய ஓரியல் பௌலோதான் இப்படத்தின் இயக்குநர். படத்தின் கதையை இதற்குமேல் சொன்னால் ஸ்பாயிலராகிவிடும் என்ற காரணத்தினால், மீதி படத்தைப் பார்க்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன். என்ஜாய்! 

The Invisible Guest : (IMDB - 8.1) :

ஐந்து வருடங்கள் கழித்து ஓரியல் பௌலோ இயக்கிய படம் `தி இன்விஸிபில் கெஸ்ட்'.  இவரின் படங்களைப் பொருத்தவரை ஒவ்வொரு காட்சிகளிலும் ஒவ்வொரு டிவிஸ்ட்டை வைத்திருப்பார். அதுதான் இவரின் ஸ்டைலும்கூட. வேலை விஷயமாக வேறு நாட்டிற்கு வந்திருக்கும் மரியோ கசஸஸ், ஏர்போர்ட் செல்லும் வழியில் கார் விபத்து நடந்துவிடும். அதில் இருந்து படம் ஆரம்பிக்கும். வெவ்வேறு திசையில் பயணிக்கும் கதையை ஒரு `பரபரப்பு' மோடிலே எடுத்திருப்பார். 2017-ல் வெளிவந்த வேற்றுமொழி சினிமாக்களில் இப்படம் சக்கைபோடு போட்டது. இவரது படங்களின் ஒன்லைனைச் சொன்னாலே ஸ்பாயிலராகிவிடும். அந்தளவு திரைக்கதையில் தன் நுணுக்கத்தை வெளிக்காட்டியிருப்பார்.  

இதுபோல உங்களையும் நெகிழ்ச்சியூட்டிய, திகிலடையவைத்த, 'வாவ்' ரியாக்‌ஷன்ஸ் கொடுக்கவைத்த பல சினிமாக்களைக் கமெண்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளலாமே?!