Published:Updated:

’’50 நாள் நடிக்கப்போறேன்... அஜித் கூடவே வரேன்..!’’ - விசுவாசத்தில் 'ரோபோ' ஷங்கர்

அலாவுதின் ஹுசைன்
’’50 நாள் நடிக்கப்போறேன்... அஜித் கூடவே வரேன்..!’’ - விசுவாசத்தில் 'ரோபோ' ஷங்கர்
’’50 நாள் நடிக்கப்போறேன்... அஜித் கூடவே வரேன்..!’’ - விசுவாசத்தில் 'ரோபோ' ஷங்கர்

''சினிமாவுல, என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும்  பெருந்தவமா நினைத்து பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் எப்படி தொலைக்காட்சிக்குள்ள வந்தேன், என் குடும்பப் பின்னணி என்ன என்பது மக்களுக்குத் தெரியும்...’’ என அநியாயத்துக்கு ஃபார்மலாக ஆரம்பித்தார் 'ரோபோ' ஷங்கர் .  அடுத்து நடிக்கும் படங்கள் என்னென்ன என்று கேட்டதும் ரகசியமாக, " 'தல' அஜித் படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறேன். ’விசுவாசம்’ படத்தில் காமெடியனாக  நடிக்கிறேன்" என்றார். 

சந்தோஷமான விஷயத்தை சைலன்ட்டாக சொல்றீங்களே என மேலும் விசாரிக்க ஆரம்பித்தோம்." தொலைக்காட்சி, மேடை நிகழ்ச்சிகள் பண்ணி இந்த இடத்துக்கு வந்திருக்கேன். நான் இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கு, அதுல ஆசைப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் அஜித் சார் கூட நடிக்கிறது. அது இப்போ ’விசுவாசம்’ படம் மூலமா நடக்கப் போகுது. மாரி 2  படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் ஒரு பெரிய நடிகருடன், படம் முழுக்க நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.'' 

காமெடி கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிற இயக்குநர் சிவா, இந்த படத்தில் உங்களுடையது கதாபாத்திரம் என்ன? வேற யாரெல்லாம் படத்தில் நடிக்கிறாங்க?

" ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு. ’வீரம்’, ’வேதாளம்’, ’விவேகம்’ வரிசைல நாலாவது முறையா அஜித் சார் படத்தை சிவா அண்ணன் டைரக்ட் பண்றார். சந்தானம், தம்பி ராமையா, சூரின்னு எல்லார்கிட்டயிருந்தும் பயங்கரமான காமெடி சீன்ஸ் வாங்கியிருப்பாரு இயக்குநர். இந்தப் படத்தில் எனக்கு என்ன மாதிரியான கதாபாத்திரம்னுகூட தெரியாது. உங்கள மாதிரிதான் நானும். நயன்தாரா இருக்காங்கன்னு தெரியும்.  அவங்க குழந்தை மாதிரி. சின்னச் சின்ன கவுன்ட்டருக்குக்கூட வாய்விட்டு சிரிப்பாங்க. அவங்ககூட நடிப்பது ஜாலியா இருக்கும்.  எனக்கும் இதுல யார் யார் நடிக்கப் போறாங்கன்னு பார்க்க ஆர்வமா இருக்கேன். இதெல்லாம் திடீர்னு நடந்திருச்சு. சிவா அண்ணன் 'விசுவாசம் படத்தில் காமெடியன்  ரோல் பண்ணணும்'னு சொன்ன நிமிஷத்துலேயே ஒகே சொல்லிட்டேன். இனிமேதான், அவரை மீட் பண்ணி கதாபாத்திரம் குறித்து கேட்கணும் முக்கியமா, நன்றி சொல்லணும்."

’விசுவாசம்’ படத்தில் நடிக்கப்போற உற்சாகம் உங்க குரல்ல தெரிகிறது, அஜித் மாதிரி நீங்க மிமிக்ரி பண்ணுயிருக்கிங்களா?

’’தல கூடவே 50 நாள் ஷூட்டிங்கில இருக்கப் போறோம். இதைவிட என்ன உற்சாகம் வேணும்.  அவரை மாதிரி நான் மிமிக்ரிகூட பண்ணதில்லை. உண்மைய சொல்லணும்னா இது வரைக்கும் அவரை நான் நேர்ல பார்த்ததில்லை. ஷூட்டிங் ஸ்பாட்லதான் பார்ப்பேன்னு நினைக்கிறேன். எது, என்னவானாலும் பரவாயில்லை, அஜித் சாரைப் பார்த்தவுடனே கட்டிப்பிடிச்சு ஒரு செல்ஃபி எடுக்கணும். அவர்கூட இருக்கப் போற ஒவ்வொரு நிமிஷமும் என் வாழ்க்கையில கோல்டன் மெமரீஸா இருக்கும்னு நம்புறேன்."

இந்த விஷயத்தைக் கேட்டு உங்க மனைவி என்ன சொன்னாங்க?

’’அவங்க நம்பவே இல்லை, இன்ப அதிர்ச்சிதான் அவங்களுக்கு. அவங்க இந்த விஷயத்தை சீக்ரெட்டா வெச்சிக்க சொன்னாங்க. உங்ககிட்ட எல்லாத்தையும் உளறிட்டேன். நம்ம என்னிக்கி மனைவி பேச்சைக் கேட்டிருக்கோம்" என சரவெடியாய் பேசி முடித்தார் ரோபோ ஷங்கர்.