Published:Updated:

"நான் நயன்தாராகூட ஆடுனது விக்னேஷ் சிவனுக்குப் பிடிக்கலை!" - 'ஜாலி கேலி' ராகுல்

"நான் நயன்தாராகூட ஆடுனது விக்னேஷ் சிவனுக்குப் பிடிக்கலை!" - 'ஜாலி கேலி' ராகுல்
"நான் நயன்தாராகூட ஆடுனது விக்னேஷ் சிவனுக்குப் பிடிக்கலை!" - 'ஜாலி கேலி' ராகுல்

"நான் நயன்தாராகூட ஆடுனது விக்னேஷ் சிவனுக்குப் பிடிக்கலை!" - 'ஜாலி கேலி' ராகுல்

பல ஆண்டுகள் திரைத்துறையில் இருந்திருந்தாலும், சிலருக்கு ஏதோ ஒரு படம்தான் அவர்களுக்கான அடையாளத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில், 'நானும் ரெளடிதான்' படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர், ராகுல் தாத்தா. மாஸ் ஹீரோக்களுக்கு கட்-அவுட் வைக்கும் தீவிர ரசிகர்கள் எல்லோருக்கும்கூட இவர் ஸ்பெஷல் ஸ்டார்தான். 'நான் ஒரே பிஸி. என்கிட்ட டேட் இல்லை. என்னை காண்டாக்ட் பண்றதா இருந்தா...' என்று பரபரவென கோடம்பாக்கத்தில் வலம்வரும் ராகுல் தாத்தாவைச் சந்திக்க அவர் ஏரியாவுக்குச் சென்றோம். 'வாங்க ப்ரோ... என்ன சாப்பிடுறீங்க?' என்றவுடன், 'நாங்க உங்களுக்கு ப்ரோவா தாத்தா?' எனக் கேள்வியைத் திருப்பிவிட்டால், 'ஆமா பிரதர்... அப்படி என்ன வயசு ஆகுது எனக்கு, ஐ எம் யங் ' என்று கண்ணடித்தவாரே கேள்விகளை எதிர்கொள்கிறார், ஜாலியாக! 

உங்களோட நடிக்கணும்னு நிறைய ஹீரோக்கள் சொல்றாங்களாமே. என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க?

"எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து சின்னச்சின்ன ரோல்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா, 'நானும் ரெளடிதான்' படம்தான் என்னை அடையாளப்படுத்துச்சு. அதுக்கு அப்புறம் நிறைய படங்கள் நடிச்சிட்டேன். இப்போ, 'கஜினிகாந்த்', 'கீ', 'இரும்புத்திரை', 'குப்பத்து ராஜா', 'பதுங்கிப் பாயணும் தல'னு சில பல படங்கள் ரிலீஸ் ஆகப்போகுது. இப்போ ஜீவா படத்துல நடிக்க தாய்லாந்து போறேன். இதுல 'ராகுல் தாத்தா நடிக்கணும்'னு ஜீவாதான் ரெக்கமென்ட் பண்ணார். காலேஜ் பசங்க பண்ற நிறைய குறும்படங்கள்ல நடிக்கிறேன். நானும் எஸ்.ஏ.சியும் ஒரு குறும்படத்துல சேர்ந்து நடிச்சோம். என்னைப்பத்தி, 'என்னால அவர்கூட நின்னு நடிக்க முடியலை. அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன்'னு எஸ்.ஏ.சி சொன்னார். அவ்வளவு பெரிய டைரக்டர் அவர்... என்னை அப்படிச் சொல்லணும்னு என்ன இருக்கு. உண்மையாவே அவருக்குப் பெரிய மனசுங்க."

நீங்க நடிச்சுக்கிட்டு இருக்கிற படங்கள்ல உங்களுக்கு என்ன மாதிரியான கேரக்டர்? 

" 'குப்பத்து ராஜா' படமே ஒரு நாலு கேரக்டரை சுத்தித்தான் நகரும். அதுல நானும் ஒண்ணு. 'பதுங்கிப் பாயணும் தல' படத்துல நான் சிம்புவோட தீவிர ரசிகனா வருவேன். அந்தப் படத்துல ஒவ்வொரு சீன்லேயும் சிம்பு நடிச்ச ஒவ்வொரு படங்களோட காஸ்ட்யூம்ல வருவேன். ஹீரோவைவிட எனக்குதான் காஸ்ட்யூம்ஸ் அதிகம். படம் பார்த்தா உங்களுக்கே தெரியும். சாங், ஃபைட், ரொமான்ஸ், பேத்தோஸ்னு எல்லா எமோஷனும் பண்ணிருக்கேன். ஏற்கெனவே, சிம்புவுக்கும் எனக்கும் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்துல இருந்தே நல்ல நெருக்கம். நான் இந்தப்படத்துல உங்க ரசிகனா நடிக்கிறேன்னு சொன்னவுடனே, 'நீ பண்ணு மச்சி'னு சொல்லிட்டாப்ள. 'A A A' படத்தை ரொம்ப எதிர்ப்பார்த்தேன். ஆனா, சரியா போகலை. படத்துல நான் நடிச்ச நிறைய சீன்ஸ் வெச்சிருந்தாங்க. இப்போ, என்ன நடந்தாலும் பரவாயில்லை, ஆதிக் ரவிசந்திரனே இன்னொரு படம் அதே பேனர்ல பண்ணப்போறார். அதுல ஒரு முக்கியமான ரோல்ல நடிங்கனு சொல்லிருக்காங்க. புரொடியூசர் மைக்கேல் ராயப்பன், 'நம்ம பேனர்ல எந்தப் படம் பண்ணாலும் ராகுல் தாத்தா கண்டிப்பா இருக்கணும்'னு சொல்லிட்டார். அதைத்தான் 'பதுங்கிப் பாயணும் தல' படத்தோட தயாரிப்பாளரும் சொன்னார். எல்லோரும் என்னை லைக் பண்றாங்க, ரொம்பவே சந்தோஷமா இருக்கு."

நீங்க யூத்னு சொல்றீங்க. ஹீரோக்கள் உங்களை எப்படிக் கூப்பிடுறாங்க?   

"சிம்பு என்னை 'மச்சி'னு கூப்பிடுவார். ஆர்யா 'இன்றைய சூப்பர் ஸ்டார்'னு தான் என்னை எல்லோர்கிட்டேயும் சொல்றார். நான் அவரை 'வாங்க ப்ரோ... என்ன ப்ரோ?'னு கூப்பிடுவார். ஜீவாகூட நிறைய படம் பண்ணிட்டு இருக்கிறதுனால, நானும் அவரும் ரொம்ப குளோஸ் ஆயிட்டோம். அவர் என்னை 'அண்ணே'னு கூப்பிடும்போது ஒரு பாசம் தெரியும். சூப்பர் ஸ்டாரும் என்னை 'அண்ணே'னுதான் கூப்பிடுவார். நான் அவரை, 'சொல்லுங்க குருவே'னு சொல்வேன். அவரை எனக்குப் பிடிச்சதைவிட என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். இப்படி என்னைப் பலவிதமாகக் கூப்பிடுவாங்க. அவங்க எல்லோரும் என்மேல வெச்சிருக்கிற அன்பு, பாசம் எல்லாம் பார்க்கும்போது, ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு"

ரஜினி, கமல் ரெண்டு பேரும் அரசியலுக்கு வந்ததை எப்படிப் பார்க்குறீங்க? 

"ரஜினி, கமல் இவங்க ரெண்டுபேரும் அரசியலுக்கு வந்தது சுத்தமாப் பிடிக்கலை. அரசியல்ல நிறைய குழப்பங்களும் அராஜகங்களும் இருக்கு. ஒருத்தர் ஒண்ணு பண்ணா, அது இன்னொருத்தருக்குப் பிடிக்கமாட்டேங்குது. ரஜினுக்கும் கமலுக்கும் அவசியம் அரசியல் தேவைதானானு எனக்குத் தோணுது. இப்போ இருக்கிற உச்ச இடத்துலேயே எப்போவும் இருக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. இப்போ இருக்கிற சூழல்ல அரசியலுக்கு வந்து யாரும் ஜெயிக்கமுடியாது. அப்படி ஜெயிக்கிறதுக்கு நீங்க எம்.ஜி.ஆர் கிடையாது. நீங்க வந்தா நிறைய பிரச்னைகள் வரும். இதனால், ரஜினி - கமலுக்கான நட்பே முறிஞ்சுபோகக்கூட வாய்ப்பு இருக்கு. இவங்க ரெண்டுபேரும் இப்போ இருக்கிற மாதிரியே இருக்கணும்னா, அரசியலுக்கு வரக்கூடாது."

நயன்தாராவுக்கு லவ் லெட்டர்லாம் எழுதிருக்கீங்க. அவங்களை அவ்ளோ பிடிக்குமா, அவங்க உங்களுக்கு கிஃப்ட் ஏதாவது கொடுத்திருக்காங்களா?

"எனக்கு நயனை ரொம்பப் பிடிக்கும். எப்போவும் என்னை 'ராகுல்ஜி'னுதான் கூப்பிடுவாங்க. நான் அவங்களை 'சீதா'னு கூப்பிடுவேன். ஏன்னா, தெலுங்குல சீதா கேரக்டர்ல நடிச்சது எனக்குப் பிடிக்கும். அடிக்கடி 'உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க'னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. நான், எதுவும் வேண்டாம்னு சொல்லிடுவேன். ஆனா, அடுத்த மாசம் எனக்கு ஒரு வீடு வாங்கிக்கொடுங்கனு கேட்கலாம்னு இருக்கேன். சன் டிவில ஒரு ஷோவுல நானும் நயனும் டான்ஸ் ஆடிருப்போம். அதைப் பார்த்துட்டு விக்னேஷ் சிவன் கொஞ்சம் ஃபீல் ஆகிட்டாப்ளனா பார்த்துக்கோங்களேன்!."

உங்க பேரன் பேத்திகள் எல்லாம் உங்க படங்களைப் பார்த்துட்டு என்ன சொல்வாங்க?  

"என் பேரப்பிள்ளைகள் எல்லாம் என் மனைவிகிட்ட,  'ஏன் தாத்தாவைக் கண்டிக்காம விட்டுட்ட. அவர் நயன்தாராகூட டான்ஸ் ஆடிட்டு இருக்கார். தாத்தாமேல ஒரு கண்ணு வெச்சுக்கோ'னு சொல்லி புகார் கொடுக்குறாங்க. என் படம் ரிலீஸ் ஆச்சுனா, அவங்கதான் முதல்ல பார்த்துட்டு கமென்ட் சொல்வாங்க"

சினிமாவில இதைப் பண்ணனும், அதைப் பண்ணனும்னு ஏதாவது பெரிய ஆசை இருக்கா?   

"எனக்கு அப்படி ஆசையெல்லாம் கிடையாது. எனக்குக் கிடைக்கிற பேர், புகழ், சந்தோசம் எல்லாம் நான் சினிமாவுக்குள்ள வந்தபோதே கிடைச்சிருந்தா, என் அம்மா, அப்பா, என் தங்கச்சி எல்லாம் பார்த்து சந்தோசப்பட்டிருப்பாங்க. இப்போ என் படங்களைப் பார்க்க அவங்க யாரும் இல்லையேனு நினைச்சாதான், ஆதங்கமா இருக்கு. ஆனா, நீங்க கேட்டதால சொல்றேன். ஒரு படம் எடுக்கணும். அதுல விஜய் சேதுபதி ஹீரோ. நயன்தாராதான் ஹீரோயின். நான் விஜய் சேதுபதிக்கு அப்பாவா நடிக்கணும். அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும். அவங்களோட குழந்தைகளை ஒரு தாத்தாவா என் மடியில வெச்சுகிட்டு குடும்பத்தோட சந்தோசமா வாழணும். கடைசியா 'A story by Rahul Thatha'னு எண்ட் கார்டு போடணும். இதுதான் ஆசை. " என்றவர் 'பை ட்யூட்...டேக் கேர்.. என்று நம்மை வழி அனுப்பி வைத்தார்.  

அடுத்த கட்டுரைக்கு