அறிவிப்புகள்
Published:Updated:

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் season 4, episode 3

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

`தல’ அஜித்... ஆல்டைம் ஃபேவரைட்!

ஹாய்..! போன எபிசோடுல விட்டதில் இருந்து ஆரம்பிப்போமா பேச்சை..?!

என் ஃபிட்னஸ் சார்ட்!

பெரியவங்க, சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்னு சொல்வாங்களே... அது மிகப்பெரிய உண்மை. விளையாட்டு வீரர்கள்னு இல்லை, எல்லாருக்குமே இது பொருந்தும். உடம்பை ஃபிட் ஆக வெச்சிருந்தீங்கன்னா, உங்களுக்கே ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும்.

என்னைப் பொறுத்தவரை, ரொம்ப ஃபிட்னஸ் கான்ஷியஸா இருப்பேன். இருக்க வேண்டியதும் அவசியம். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஜிம் வொர்க் அவுட்ஸ். தவிர, தினமும் மாலை 4 - 6 ஸ்குவாஷ் டைம். இப்படி ஒரு நாள்ல 5 - 6 மணி நேரத்துக்கும் மேல ஃபிட்னஸுக்கு சமர்ப்பணம்.

ஒரு நாளைக்கு 5 - 6 தடவை சாப்பிடுவேன்!

எந்தளவுக்கு உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போனோ, அதே அளவு முக்கியத்துவம் சாப்பாட்டுக்கும், தூக்கத்துக்கும் கொடுப்பேன். ஒரு நாளைக்கு 5 - 6 தடவை சாப்பிடுவேன். காய்கறிகள், பழங்கள்தான் மெனுவில் அதிகம் இருக்கும். வாரத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டும் ஜங்க் ஃபுட் ஆசைக்கு சாப்பிடுவேன். அப்புறம்... எல்லா கேர்ள்ஸையும்போல எனக்கும் சாக்லேட்ஸ்னா உயிர். எங்கிட்ட ஒரு காரியம் நடக்கணும்னா, ஒரு பார் சாக்லெட் கொடுத்தா போதும். வீட்டில் நான் அதிகமா திட்டு வாங்கிற விஷயம்... இந்த சாக்லெட் கிரேஸ்தான்.

முழங்கால் காயம், முடக்கம்!

போட்டிகள், பரிசுகள், பயணங்கள்னு ரொம்ப ஹேப்பியா போயிட்டிருந்த என் வாழ்க்கையில 2011-ல் அடித்தது... ஒரு சோதனை புயல்! அமெரிக்காவில் ஒரு டோர்னமென்ட்ல சமந்தா கார்னட் என்ற வீராங்கனையோட செமி ஃபைனல்ஸ் மேட்ச் விளையாடிட்டு இருந்தப்போ எதிர்பாராதவிதமா கீழ விழுந்ததில், என் வலது முழங்காலில் பலத்த காயம். மேட்சை முடிக்க முடியாம, உடனடியா சென்னைக்குத் திரும்பி சிகிச்சை எடுக்க வேண்டிய க்ரிட்டிக்கல் நிலை.

டாக்டர்ஸ் ரெஸ்ட் எடுக்கச் சொல்ல, நான் ‘ஸ்குவாஷ் விளையாடணுமே?’னு கேட்டேன். ‘நீங்க இப்போ நடக்கிறதே சிரமம்’னு சொன்னப்போ, உடல் வலியைவிட, என்னால ஸ்குவாஷ் விளையாட முடியாத மனவேதனை அதிகமா இருந்தது. பயிற்சி, விளையாட்டுனு நிற்காம ஓடிட்டு இருந்த எனக்கு, நடக்கக்கூட மத்தவங்களோட உதவி தேவைப்பட்ட அந்த நாட்கள், ரொம்ப ரணமா இருந்தது. பல மாதங்கள் ஓய்வில் இருந்த அந்த காலகட்டத்தில், ஸ்குவாஷ் உலகத் தரவரிசையில் என் ரேங்க் சரிஞ்சுபோச்சு. நொண்டி நொண்டி நான் நடந்ததைப் பார்த்த பலரும், அதோட என் ஸ்குவாஷ் வாழ்க்கை முடிஞ்சுட்டதா நினைச்சு வருத்தப்பட்டாங்க.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

விளையாட்டில் காயம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒரு விஷயம்தான். ஆனா, அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமில்ல. `மீளணும், மீள்வோம்’னு நான் நம்பினேன். மும்பையில் தங்கி ரிஹேபிலிடேஷன் கேர் (Rehabilitation Care) எடுத்துக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமா காயம் குணம் ஆனது. குடும்பம் எனக்குப் பெரிய சப்போர்ட்டா இருந்தாங்க. நாட்கள் கடந்தன. விபத்துக்குப் பிறகான என்னோட முதல் டோர்னமென்ட் 2012 ஏப்ரல் மாசம். ஃபீல்டுக்குள் நுழைஞ்சதும், என்னை வெல்கம் பண்ணும்விதமா அங்கிருந்த ஒவ்வொருத்தரும் கைதட்டி உற்சாகப்படுத்த, என் எனர்ஜி பல மடங்கா உயர்ந்தது. விளாசித் தள்ளினேன். படிப்படியா விட்ட இடத்தைப் நோக்கி முன்னேறினேன், அதை அடைஞ்சேன்.

காயம்கூட நல்லதுதான்!

இப்போ யோசிச்சுப் பார்த்தா, அந்தக் காயம்கூட நல்லதுதான்னு நினைச்சுக்குவேன். அந்த இடைப்பட்ட காலத்தில்தான், உண்மையில் என் மேல் அக்கறை கொண்டவங்க யார்னு புரிஞ்சது. மேலும், என் வாழ்க்கையில் ஸ்குவாஷ் எந்தளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை முழுமையா உணர்ந்து, என் வாழ்க்கை இனி எந்த திசையில் பயணிக்கணும் என்பதையும் தெளிவா திட்டமிட்டேன். எல்லாத்துக்கும் மேல, சோதனைகள்தான் சாதனைகளுக்குப் படிக்கட்டுகள்னு புரிஞ்சுக்கிட்டேன். காயத்துக்குப் பிறகு கலந்துகிட்ட சென்னை ஓபனில்  டைட்டிலை வென்றேன். வெற்றிகள் மறுபடியும் தொடர்கதை ஆச்சு. இப்போ நான் கவனமா இருக்கிற ஒரு விஷயம், விளையாடும்போது காயம் ஏற்படாம முடிந்தவரை பாதுகாப்பா விளையாடணும் என்பது.

`தல’ அஜித் ரொம்பப் பிடிக்கும்!

ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்கோமே? ஜோஷ்னா ஒரு ஸ்குவாஷ் வீராங்கனை, அவ்ளோதானே உங்களுக்கு என்னைப் பற்றித் தெரிஞ்சது. என்னோட லைட்டர் சைடும் சொல்லவா?! நான் நிறைய படம் பார்ப்பேன். `தல’ அஜித் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆல் டைம் ஃபேவரைட் அவர் எனக்கு!

சமீபத்தில் பார்த்த படங்கள்ல ‘தனி ஒருவன்’ படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அரவிந்த்சாமி செம்ம ஸ்டைலிஷ். அப்புறம்... நிறைய புக்ஸ் படிப்பேன். மர்மக்கதைகள் மற்றும் பேய்க்கதைகள்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, படிச்ச அன்னிக்கு நைட்டெல்லாம் பயம் வந்துடும்.

எனக்கு வந்த புரபோசல்ஸ், ‘அர்ஜுனா அவார்டு’ கொடுத்த சந்தோஷம், இந்தியாவில் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகமாக என்ன செய்யணும், வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நான் செய்யத் திட்டமிட்டிருக்கிற விஷயங்கள்... இதையெல்லாம் பேசுவோம் அடுத்த மீட்ல! ப்ளீஸ் வெயிட் ஃபார் டூ வீக்ஸ்!

பை பை!

எஸ்.கே பிரேம்குமார், கோ.இராகவிஜயா, படங்கள்:எம்.உசேன், அபிரக்‌ஷன்

ஸ்குவாஷ் விளையாட்டு... ஓர் அறிமுகம்!

ஸ்குவாஷ்... ஒரு போட்டி மூன்று அல்லது ஐந்து செட்களைக் கொண்டது. ஒரு செட் 11  புள்ளிகளைக் கொண்டது. இதில் அதிக செட்களைக் கைப்பற்றுகிறவர் வெற்றியாளர். 

ஸ்குவாஷ் மைதானம் என்பது சற்று வித்தியாசமானதாக, நான்கு புறமும் கண்ணாடிச் சுவர்களால் சூழப்பட்டிருக்கும். மைதானத்தில் இருக்கும் கோடுகளைப் புரிந்துகொண்டால், ஸ்குவாஷ் எளிதான விளையாட்டு ஆகிவிடும். முன்புற சுவரில் கீழிருந்து இருக்கும் முதல் கோடு ‘டின் லைன்’ என்று அழைக்கப்படும். இந்தக் கோடு மற்ற சுவர்களில் இருக்காது. நடுவில் இருக்கும் கோடு ‘சர்வீஸ் லைன்’ எனப்படும். இந்தக் கோடும் மற்ற மூன்று சுவர்களில் இருக்காது. மூன்றாவது கோடு ‘அவுட் லைன்’ எனப்படும். இது இருபக்க சுவர்களிலும் இருக்கும். பின்புற சுவரில் கோடு இருக்காது.

முதலில் சர்வீஸ் செய்பவர், தனது சர்வீஸ் பாக்ஸில் இருந்தபடி முன்புற சுவரை நோக்கி அடிக்க வேண்டும். அந்தப் பந்து சர்வீஸ் லைனுக்கு மேலும், அவுட் லைனுக்குக் கீழும் படவேண்டும். படவில்லை என்றால் எதிர்த்து ஆடுபவருக்கு ஒரு புள்ளி கிடைக்கும். முன்புற சுவரில் சரியான இடத்தில் பட்டாலும், பந்து எதிராளி இருக்கும் கட்டத்துக்குள் ஒரு துள்ளலில் செல்ல வேண்டும். இது தவறினாலும் எதிரணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும்.

சர்வீஸ் தவிர்த்து அடிக்கும் மற்ற பந்துகள் டின் லைனுக்கு கீழும் அவுட் லைனுக்கு மேலும் பட்டால் அது அவுட் ஆகும். எதிர் வீரருக்கு ஒரு புள்ளி கிடைக்கும். சர்வீஸ் செய்யும்போது ஒரு கால் சர்வீஸ் பாக்ஸில் இருக்க வேண்டும். அதன் பிறகு மைதானம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சுற்றிச் சுற்றி ஆடலாம்.

எதிரணி வீரர் அடிக்கும் பந்தை தரையில் இரண்டு துள்ளல் துள்ளும் முன், அடித்துவிட வேண்டும். சுவர்களில் பந்து படுவது துள்ளலாக கணக்கில் கொள்ளப்படாது. தரையில் ஒரு துள்ளலில் அடித்துவிட வேண்டும். இரண்டு துள்ளல் துள்ளிவிட்டால் எதிர் வீரருக்கு ஒரு புள்ளி கிடைக்கும்.

ஸ்குவாஷ் கேம்... வெரி இன்ட்ரஸ்ட்டிங்!