Published:Updated:

''இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ!'' போட்டோ ஷுட் வித் ரஹ்மான் : க்ளாசிக் க்ளிக்ஸ் - பகுதி1

''இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ!'' போட்டோ ஷுட் வித் ரஹ்மான் : க்ளாசிக் க்ளிக்ஸ் - பகுதி1
''இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ!'' போட்டோ ஷுட் வித் ரஹ்மான் : க்ளாசிக் க்ளிக்ஸ் - பகுதி1

''இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ!'' போட்டோ ஷுட் வித் ரஹ்மான் : க்ளாசிக் க்ளிக்ஸ் - பகுதி1

ஜி.வெங்கட்ராம், புகைப்படக் கலைஞர். பலரின் சாதாரணம் டு சாதனை பயணத்தில் வெங்கட்டின் ஃப்ளாஷ் ஒரு முக்கியப் பதிவு. போட்டோஷூட், விளம்பரங்கள் எனப் பரபர பணிதான். ஆனாலும் அதில் ஒரு க்ளாசிக் டச் சேர்ப்பது இவரின் பலம். ஒரு திரைப்படத்தின் மொத்த ஃபீலையும் ஒரே ஒரு புகைப்படத்தில் கொண்டு வந்துசேர்க்கும் இவரின் திறமைக்கு ஏகப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் உதாரணங்கள் உள்ளன. இவரின் ஒவ்வொரு ‘கிளிக்’க்குப் பின்னும் பல கதைகள் கிளைவிடுகின்றன. இப்படியான தன் ஃப்ளாஷ் பயணத்தையும் அதில் தன்னோடு பயணமாகும் பிரபலங்கள் பற்றியும் இந்தத் தொடரில் பகிர்ந்துகொள்கிறார். இந்த வாரம் ஏ.ஆர்.ரஹ்மானை கிளிக்கிய அனுபவங்களைப் பற்றி சொல்கிறார் வெங்கட்.

‘‘ஏ.ஆர்.ரஹ்மான். இந்திய திரையிசைக்குத் தன் கீபோர்டு மூலம் எலக்ட்ரானிக் ரத்தம் பாய்ச்சத் தொடங்கிய காலம். எங்கு பார்த்தாலும் இவரைப் பற்றியே பேச்சு. 1995-96 என நினைக்கிறேன். ‘சொசைட்டி’ இதழில் இருந்து, ‘மோஸ்ட் வான்டடு தமிழர்கள்' பற்றிய ஒரு கட்டுரை. 'ஏ.ஆர்.ரஹ்மானை ஒரு போட்டோஷூட் பண்ணித்தரமுடியுமா?’ என அழைப்பு. போட்டோஷூட்டுக்கான இடம், அவரின் கோடம்பாக்கம் ரெகார்டிங் ஸ்டூடியோ, நேரம் காலை 9.30. என் டீமுடன் ஷார்ப்பாக ஆஜராகியிருந்தேன். காத்திருந்தோம். நேரம் மதியத்தை நோக்கிக் கடந்து கொண்டிருந்தது. அவர் ஓர் இரவுப் பறவை என்பது அப்போது எனக்குத் தெரியாது.  

எங்கு வைத்து போட்டோஸ் எடுக்கலாம் என இடம் தேடினாலும், உண்மையில் கண்கள் அவரை எதிர்பார்த்தபடியே இருந்தன. ‘கார்டன் வேண்டாம், லாபி வேண்டாம்’ என விலக்கினேன். ‘ஸ்டூடியோ இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்’ என்றார், அவரின் மேனேஜர் நோயல். பார்த்ததும், ‘இதுதான் ஸ்பாட்’ என முடிவு செய்தேன். அவர் வழக்கமாக அமர்ந்து கம்போஸ் பண்ணும் இடத்தில் அவரின் தலைக்குமேலே மட்டும் லைட்டிங் பண்ணி, மற்ற இடங்களை டார்க் பண்ணினேன். அன்று டிஜிட்டல் கிடையாது என்பதால், என் அசிஸ்டென்ட் ஒருவரை மார்க்கில் அமரவைத்து போலராய்டு எடுத்தேன். மணி 12.30... ம்ஹூம்... ரஹ்மான் வரக்காணோம். எடுத்த போலராய்டை நோயலிடம் தந்து ரஹ்மானிடம் காட்டிவரச்சொன்னேன். 

அவர் போலராய்டு காட்டிய அடுத்த 5-வது நிமிடத்தில், ‘எங்க எடுத்தீங்க... நல்லாயிருக்கே...’ என்ற கேள்வியோடே வந்தார் ரஹ்மான். ‘நான் தினமும் உட்கார்ற இடம் இவ்வளவு அழகா... எப்படி?’ இப்படி ஏகப்பட்ட கேள்விகளோடு தயாரானார். வேலை செய்யும் இடம்தான் அவருக்குக் கோயில். அது இவ்வளவு அழகாக இருக்கிறதே என்ற சந்தோஷம். இதுபோன்ற ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஆரம்பத்திலேயே தூண்டிவிட்டால், நம் வேலை எளிதாகிவிடும். அதேபோல் ஸ்பாட்டில் இருப்பதை வைத்து ஒரு விஷயத்தைப் புதிதாகக் கிரியேட்  செய்து காட்டுவதும் முக்கியம். 

‘இந்த டிரெஸ் ஓ.கேவா?’ என தான் அணிந்திருந்த கேஷுவல் டி-ஷர்ட், ஜீனைக் காட்டிக் கேட்டார். நான் திருப்தியாகவில்லை என்பதை என் முகம் பார்த்து உணர்ந்தவர், ‘வார்ட்ரோப் பாக்குறீங்களா?’ என்று அழைத்துச் சென்றார். அலமாரியைத் திறந்தால், வித விதமான டிசைன், கலர்களில் குல்லாக்கள். என் ஆச்சர்யத்தை உணர்ந்தவராக, ‘குல்லா கலெக்ஷன்ல ஆர்வம். இதைப்பாருங்க, இது ஹிமாச்சல் பிரதேஷ்ல வாங்கினது. இது காஷ்மீர்ல...’ என்னை மென்மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ‘ஒரு டி-ஷர்ட், வேறொரு கேஷுவல் ஷர்ட்... கூடவே இந்தக் குல்லா. இதுதான் காம்பினேஷன். ஏதாவது மியூசிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்றேன். ‘இது ஓ.கே.வா’ என கைக்கு அருகிலேயே கிடைத்த கிடாரை எடுத்தார். ‘வழக்கமா இருக்கும். இன்ட்ரஸ்டிங்கா கிடைக்குமா?’ என்றேன். அடுத்த நொடியே தன் நண்பரை போனில் அழைத்தார்.

அடுத்த அரை மணிநேரத்தில், வீணையும் கிடாரும் ஃப்யூஷன் ஆனது போன்ற ஓர் இசைக்கருவி வந்தது. ‘இது அவுத். அரேபியன் இன்ஸ்ட்ரூமென்ட். ஃப்ரெண்டு வீட்ல இருந்து எடுத்துட்டு வரச்சொன்னேன்’ என்று சிரித்தார். ஆரம்பமானது போட்டோஷூட். காஸ்ட்யூம், இன்ஸ்ட்ரூமென்ட் என ஒவ்வொரு முயற்சிக்கும், ‘ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ?’ என அவரிடம் சிறிதும் பெரிதுமாக நிறைய கூச்சம். இதற்கிடையில், ‘ஏகப்பட்ட பேர் வெயிட் பண்றாங்க, சீக்கிரம்... சீக்கிரம்...’ என நோயலின் நச்சரிப்பு. ஆனாலும், அவரின் அவசிய அவசரத்தைப் புரிந்தும் புரியாமலும் எனக்குத் திருப்தியாகும் வரை கிளிக்கினேன். சரியாக ஒரு மணி நேரத்தை விழுங்கி இருந்தேன். அவரும் பயங்கர ஹேப்பி. ‘வாட் ய டவுன் டு எர்த் பெர்சன்’ என்று எனக்கு ஆச்சர்யம். 

இன்று இருப்பதைவிட அன்று நான் இன்னும் பயங்கர பிஸி. காரணம், வந்ததை எல்லாம் ஒப்புக்கொண்டு வொர்க் பண்ணும் பரபரப்பான பணி. ‘ச்சே... 12.30-தான் டைம்னா, 12.30-க்கே வாங்கனு சொல்லியிருக்கலாமே, ஏன் 9.30க்கு வரச்சொல்லணும்?’ என சின்ன வருத்தம். கோபம் என்றே சொல்லலாம். அந்தக் கோபத்துடனே வெளியே வந்தபோது, மாடிப் படிக்குக் கீழே ஒரு பிளாஸ்டிக் சேரில் ஒரு சூட்கேஸுடன் அமர்ந்திருந்த அந்த தாடிக்காரரைப் பார்த்ததும், ‘இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே...’ என்ற யோசனை. ஒரு ஃப்ராக்ஷன் ஆஃப் செகண்ட் ஃப்ளாஷில், ‘ஐயோ... இவர், சேகர் கபூர்ல...’ என்று அதிர்ந்தேன். அருகருகே இன்னும் சில பாலிவுட், கோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்.

‘ ‘வெயிட் பண்றாங்க. சிக்கிரம் முடிங்க’ எனச் சொன்னது இவங்களைத்தானா?’ என்ற அதிர்ச்சி. ‘இவ்வளவு பெரிய மனுஷன் பாம்பேயில இருந்து வந்து வெளியில ஒரு சூட்கேஸோட வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது, நம்ம போட்டோஷூட்டுக்கு ரஹ்மான் இவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்காரே...’ என் கோபம், பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாறியது. ஆனால் ஏன் எனத் தெரியவில்லை, இன்றும் ரஹ்மானைப் பார்க்கும்போதெல்லாம், மாடிப்படிக்குக்கீழே சூட்கேஸுடன் அமர்ந்திருக்கும் சேகர் கபூர்தான் மனதில் வந்துபோகிறார்.

‘ஜில்லுனு ஒரு காதல்’, கலைப்புலி தாணு தயாரிப்பு. பிரமிப்பை ஏற்படுத்துவதில் தாணு எப்போதும் தனி. ‘ஆடியோ ரிலீஸ். போஸ்டர், பேனர்னு எங்க பார்த்தாலும் ரஹ்மானா தெரியணும். படத்தோட சம்பந்தப்படணும்னு கிடையாது. செட் வேணும்னாலும் போட்டுக்கங்க...’ தாராளம் காட்டினார் தாணு. பிரசாத் ஸ்டூடியோவில் அழகான செட் அமைத்துத் தந்தார் தோட்டா தரணி. பழைய கதவு, மரக்கிளைகளில் இருந்து வழியும் ஆரஞ்ச் கலர் விளக்கொளி பின்னணியில் ஓர் இராணுவ வீரரின் வீடு, பிரம்மாண்ட ஓபனிங் என்பதைக் குறிக்கும் வகையிலான சிவப்பு கலர் கர்ட்டனைத் திறந்து கொண்டு வருவது போன்று வேறொரு செட். கொட்டிக்கிடக்கும் வெள்ளை கூழாங்கற்கள் எனப் பிரமாதப் பின்னணியில் தரணி சார் அசத்தி இருந்தார்.

அந்த போட்டோஷூட்டில் ஒரு சுகமான சுமை சம்பவம். அவர் இரவில்தானே வேலை செய்வார் என்பதால், ‘9 மணிக்கு ஷூட்’ என்று தாணு சார் சொல்லிவிட்டார். ஆனால், அதை ரஹ்மான் காலை 9 மணி என நினைத்துக்கொண்டு காலையிலேயே பிரசாத்தில் பிரசன்ட் ஆனார். அப்போதுதான் அங்கு செட் வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. ‘காலையில்தான் ஷூட்னு நினைச்சிட்டு நைட் 9 மணிக்கு சுபாஷ் கய்யோட மீட்டிங்குக்கு ஃபிக்ஸ் பண்ணிட்டேன்’ என்றவர், ‘ஓ.கே. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்’ என்றபடி சென்றுவிட்டார். 

நைட் 9 மணிக்கு சுபாஷ் கய் பிரசாத்துக்கு வந்தார். ‘இன்னைக்கு நிறைய குழப்பங்கள் காத்திருக்கும் போலிருக்கே’ என நினைத்தேன். ரஹ்மான் 9..30-க்கு வந்தார். ‘அரை மணிநேரம் ஷூட்டிங், அரை மணி நேரம் மீட்டிங்... ஓ.கே.வா வெங்கட்’ என்று ஷார்ப்பாக பிரித்துத் தந்தார். ஒரு செட்டில் ஷூட் முடித்து வேறொரு செட்டில் லைட்டிங் பண்ணும் அந்த இடைவேளைகளில் சுபாஷ் கய்யுடன் கேரவனில் மீட்டிங்கில் இருப்பார். 

பிரபலம் என்றாலும், புது மாடல் என்றாலும் போட்டோஷூட்டுக்கு கான்செப்ட் முக்கியம். ‘பிரமாண்ட பின்னணியில் ஃபோட்டோ எடுக்கணும்’ என்று தாணு சார் சொல்லியிருந்தாலும், ‘சின்ன கான்செப்ட் பிடிப்போமே’ என்று யோசித்ததுதான், இந்த சிவப்பு கலர் கர்ட்டைன் போட்டோஸ். ‘இசையில் ஆர்வம் உள்ள ஏழைக் குழந்தைகள். அவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் ஒரு இன்ஸ்ட்ரூமென்ட். ரஹ்மான் சிவப்பு கலர் கர்டைனைத் திறந்துகொண்டு வர, இவர்கள் தங்கள் கைகளில் உள்ள கருவிகளை இசைக்க, அதில் தெறித்துப்போய் அவர் தன் காதைப்பொத்திக்கிட்டு கத்த... இதுதான் கான்செப்ட். ஆக்டிங்தான்’ என்றேன். ‘நடிக்கச் சொல்றீங்க. ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ?’ என்று வழக்கம்போல் சொன்னவர், ‘ஓ.கே. டிரை பண்ணுவோம். நல்லா இருந்தா வெச்சுப்போம், இல்லைனா விட்ருவோம்’ என்று பிறகு அவரே ஆர்வமானார். பசங்க பயங்கர கலாட்டா. கையில கிடைச்சதை எல்லாம் போட்டு அடி பின்ன, ரஹ்மான் உண்மையிலேயே மிரண்டுட்டார். 

இந்த போட்டோஸ் பார்த்ததும் இன்னொரு சுவாரஸ்யம் நினைவுக்கு வருகிறது. இந்த போட்டோஸ் எடுத்த சிலபல வருடங்களுக்குப் பிறகே, ‘ஸ்லம் டாக் மில்லினியர்’ படம் வந்தது. ஆனால் அந்தப் படத்தின் கதைக்கு, இந்த போட்டோஸ் அச்சு அசலாகப் பொருந்திப்போக, அந்தப் படத்துக்காகத்தான் இந்த போட்டோஷூட் பண்ணப்பட்டதாக நினைத்த மும்பை மீடியாஸ், எனக்கு போன் பண்ணி பிரிச்சு எடுத்துட்டாங்க. 

ஹ்மான் கொஞ்சம் கூச்ச சுவாவிதான். ஆனால், அந்த கூச்சம் கலைந்தால், நிறைய பேசுவார். இவ்வளவு பரபர பணிகளுக்கு மத்தியிலும் எங்கிருந்து விஷயங்கள் திரட்டுகிறார் என்று ஆச்சர்யமாக இருக்கும். மியூசிக் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். போனமுறை வந்தபோதுகூட ஆரம்பத்தில் தான் எடுத்த விளம்பரப் படங்களை காட்டி ஃப்ளாஷ்பேக்கினார். அவர் அதையெல்லாம் பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அது நமக்கு ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைப்பார். ‘நான் அங்க அப்படி ஒரு விஷுவல் பார்த்தேன். பிரமாதம்’ என ‘இன்று ஒரு தகவல்’ போல போகிற போக்கில் தகவல் தட்டுவார். 

இதேபோல நானும் ‘இப்படி ஒரு விஷுவல் பார்த்தேன்’ என்று ஒரு மெயில் தட்டினால், கூடுதல் தகவல்களுடன் ரிப்ளை பண்ணுவார். ‘காலம் கண் போன்றது... என்ற தொனியில் நாம் சொல்லும் பழமொழி எவ்வளவு உண்மை என்பதை அவர் அருகில் இருந்து பார்க்கும்போதுதான் உணர முடியும். அவரிடம் ஆச்சர்யப்படுத்தும் இன்னொரு விஷயம், எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் அனைத்துக்கும் நேரத்தைப் பிரித்தளித்து பதட்டமின்றி பணியாற்றும் மனநிலை. அப்படியான மனநிலை வாய்ப்பது வரமென்றே நினைக்கிறேன். 

ஃபிலிம்ஃபேரில் அதிக அவார்ட் அடித்தது அவர்தான் என நினைக்கிறேன். எப்படியும் அரை சதத்தைத் தாண்டியிருப்பார். ஒருமுறை நான் எடுத்தபோதே 35-ஐத் தாண்டி இருந்தார். அவர் பெற்ற அத்தனை டிராஃபிக்களையும் வைத்து எடுப்பதுதான் அந்த இதழுக்காக போட்டோஷூட் கான்செப்ட். ஸ்டூடியோவில்தான் எடுத்தோம். ‘எல்லாத்தையும் வெச்சு எடுப்போம் சார்’ என்றதும், ‘எனக்கு அத்தனை கைகள் இல்லையே’ என்று சிரித்தார். அத்தனை அவார்டையும் ‘எஸ்’ வடிவத்தில் வைத்து இவரை ஓரு ஓரத்தில் அமர்த்தினோம். அந்தப் படத்தைப் பார்த்தால், ‘அடப்பாவி, இத்தனையும் வாங்கினது நீயா?’ என நினைக்கிற அளவுக்கு அப்பாவியாக அமர்ந்திருப்பார். 

‘ஜோதா அக்பர்’ பெரிய ஹிட். அதற்காக அந்தப் படக்குழு இவருக்கு தந்த போர்வீரர்கள் அணியும் கிரீடத்தை ஸ்டூடியோவில் பார்த்தேன். அதைச் சற்று உயரத்தில் வைத்து அதற்குள் லைட்டிங் பண்ணி, அதன் நிழல் இவரின் முகத்தில் விழுவதுபோல் எடுத்தது ஒரு போட்டோகிராஃபரகா எனக்குத் திருப்தியான படம். அந்த வெளிச்சத்தை முகத்தில் வாங்கியபடி போஸ் தரணும் என்பதால், குனிந்து நிமிர்ந்து கொஞ்சம் டார்ச்சராகித்தான் போயிருப்பார். ஆனால் முகத்தில் சேம் ஸ்மைல். 

ன்னொரு முறையும் அதே ஸ்டூடியோ பின்னணி. வெரைட்டிக்கு என்ன செய்யலாம் என யோசித்தபோது அங்கிருந்த ஃபையர் எக்ஸ்டிங்குஸ்ஷர் கண்ணில்பட்டது. ‘சார் இதுக்கு பக்கத்துல...’ என்றேன். யோசித்தபடி வந்து நின்றார். ‘இதுல என்ன இன்ட்ரஸ்டிங் இருக்கப்போகிறது?’ என்று சுற்றி நின்றவர்களுக்கு ஆச்சர்யம். ‘பொட்டன்ஷியலான ஆள். இவரே ஒரு ஃபயர், அதாவது மியூசிக்கல் ஃபயர்... பத்திரிகைகளில் இப்படி தலைப்பு, போட்டோகேப்ஷன் போட அழகாக செட்டாகும். அதனால்தான்’ என்றேன். ‘ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ’ என்றார். 

அவரின் சந்தேகங்கள் பெரும்பாலும் மிகச்சரியாகவே இருக்கும். நம்மைப் பொருத்தவரை அது ஒரு படம். ஆனால், அது நாளை மிகப்பெரிய ஹோர்டிங், பத்திரிகை விளம்பரங்கள்... என மக்களின் பார்வைக்குச் செல்லப்போகிறது. அதனால், ஒரு இசையமைப்பாளராக தனக்கான பண்புகளோடு அது இருக்கிறதா என்பதில் கவனமாக இருப்பார். சமயங்களில் ‘இது பண்ணலாமா... அது பண்ணலாமா... இப்படியொரு விஷுவலை அங்கே ஷூட் பண்ணும்போது பார்த்தேன். லைட்டிங் நல்லா இருந்துச்சு’ என்று ஞாபகங்களில் இருந்து சொல்வார். நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். 

வரைப் பிடிப்பதே சிரமம் என்பதால், கிடைத்துவிட்டால் குறைந்த நேரத்தில் மேக்சிமம் எப்படிப் பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்த நினைப்பேன். எத்தனையோ பேர் அவருக்காக காத்திருக்கும் நிலையில், தன் ஒரு மணிநேரத்தைத் தருகிறார் என்றால் அதை மதிப்புமிக்கதாக மாற்ற ஆசைப்படுவேன். அந்தக் குறைவான நேரத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்து பார்க்க விரும்புவேன். 

அப்படி ஓரிரு வருடங்களுக்குமுன் ஷூட் சிட்னி லைவ் கான்செர்ட்டுக்காக எடுத்தேன். அவரது பேச்சில் உலகின் பரபர மனிதரிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்ற சுவடே தெரியவில்லை. பேசும் விதம், ஸ்டைல், அடக்கம், எளிமை என ஒரு மனிதராக அன்று பார்த்த அதே ரஹ்மான். ஆரம்பத்தில் கொஞ்சம் வேலைப்பாடுகள் மிகுந்த காஸ்ட்யூம் தந்தால், ‘இது ஓகே.வா’ என சந்தேகிப்பார். ஆனால், அவரே நிறைய மியூசிக்கல் ஆல்பம், இன்டர்நேஷனல் கான்செர்ட் பண்ணுவதால் காஸ்ட்யூம், லுக், மேனரிசத்தில் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கார். ஜாக்கெட்ஸ், கூலிங் கிளாஸ் என தற்போது கொஞ்சம் எக்ஸ்பெரிமென்ட் பண்ணுகிறார். இதற்குக் காரணம் அவரது மனைவி. ரஹ்மானின் ஸ்டைலிஸ்ட், டிசைனர் அவர்தான். 

அன்று அப்படி பியானோ டைப்பில் ஒரு புது இன்ஸ்ட்ரூமென்ட் எடுத்து வரச்சொல்லியிருந்தார். இரவு 11 மணிக்குத் தொடங்கிய ஷூட் விடியற்காலைவரை போனது. ராக் ஸ்டார் ஸ்டைலில் நடந்து வந்து திரும்பிப் பார்ப்பது, ஆக்ஷன் ஸ்டைல்... வெரி இன்ட்ரஸ்டிங். ஆனால், அன்றும் திரும்பத் திரும்ப இப்படி கேட்டுக்கொண்டே இருந்தார்... ‘இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ?’’’

ஃபிளாஷ் ஒளிரும்...

அடுத்த கட்டுரைக்கு