Published:Updated:

"கீர்த்தி சுரேஷ் பாட்டி... சாரு ஹாசன் ரொமான்ஸ்"... கலங்கடிக்கும் 'தாதா 87' அப்டேட்

"கீர்த்தி சுரேஷ் பாட்டி... சாரு ஹாசன் ரொமான்ஸ்"... கலங்கடிக்கும் 'தாதா 87' அப்டேட்
"கீர்த்தி சுரேஷ் பாட்டி... சாரு ஹாசன் ரொமான்ஸ்"... கலங்கடிக்கும் 'தாதா 87' அப்டேட்

" 'தாதா 87' படத்தோட போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் எல்லாம் முடிந்து, ரிலீஸுக்காகக் காத்துகிட்டு இருக்கு. என்னுடைய முதல் குழந்தையை எல்லாரும் எப்படி வரவேற்கப்போறாங்கனு தெரியலை. ஆனா, கண்டிப்பா இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். அதுக்கு இந்த ஸ்டிரைக் சீக்கிரம் முடியணும் பாஸ்" - விறு விறுவெனப் பேச ஆரம்பிக்கிறார், 'தாதா 87' இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி.

"உங்களுக்கும், சினிமாவுக்குமான  தொடர்பு..."

"நான் காலேஜ் டைம்ல ஜிம் பாயா இருந்தேன். அப்போ இருந்தே எனக்கு சினிமாமேல கொள்ளைப் பிரியம். மணிரத்தினம் சாரோட படங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்ஸ். சினிமாவுல வாய்ப்பு தேடுறப்போ, அவரோட படங்கள்ல ஜிம் பாயா இருக்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சுச்சு. நான் நல்லா படம் வரைவேன். நிறைய படங்களுக்கு ஸ்டோரி போர்டு பண்ணிக் கொடுத்திருக்கேன். அப்படி சில இயக்குநர்களோட கதைக்குள்ள பயணிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சு. அப்படியே மெதுமெதுவா சினிமாவுக்குள்ள காலடி எடுத்து வச்சு, இப்போ 'தாதா 87' படம் வரைக்கும் கொண்டுவந்து விட்டிருக்கு."

"அதென்ன 87... ஏதுவும் குறியீடா?"

"87- என்பது சாருஹாசன் சாரோட வயதுதான். இந்தக் கதையை எழுதும்போதே, சாரு சாரை மனசுல வெச்சுத்தான் எழுதினேன். ரகுவரன் சார் இருந்தா, அவரை வெச்சு இந்தப் படத்தை எடுத்துருப்பேன். ஏன்னா, ரகு சார் பெயரைச் சொல்லும்போதே ஒரு மாஸ் வைப்ரேஷன் இருக்கும். அவருக்கு ஈடு இணை வேறுயாரும் இல்லை. இது கேங்ஸ்டர் படம் மட்டும் கிடையாது. ரொமான்ஸ் இருக்கு, சண்டைக் காட்சிகள் இருக்கு. ஆனா, சாருஹாசன் சார் சண்டை போடமாட்டார். அவருக்குக் காதல் காட்சிகள் மட்டும்தான். சாருக்கு ஜோடியா கீர்த்தி சுரேஷோட பாட்டி சரோஜா அம்மா நடிக்கிறாங்க. முதல்ல நான் சரோஜா அம்மாகிட்ட பேசி, நடிக்கிறதுக்கு ஓகே வாங்கிட்டு, வீட்டுக்குத் திரும்பி வரும்போதுதான், அவங்க கீர்த்தி சுரேஷ் பாட்டிங்கிற விஷயம் தெரியவந்துச்சு. குடும்பத்தோட ரொம்ப நெருக்கமா இருக்கிற பொண்ணு. கீர்த்தி சுரேஷ்தான் அவங்க பாட்டிக்கு காஸ்டியூம் டிசைனரும்கூட."

"சாருஹாசன் இந்தக் கதையை கேட்டு எப்படி ரியாக்ட் பண்ணார்?"

"பலரும் சாருஹாசனை ஏன் நடிக்க வைக்கிறீங்க, உங்களுக்கு வேற பெரிய நடிகர்களோட கால்ஷீட் கிடைக்கலையா'னு கேட்டாங்க. ஆனா, அவங்க எல்லோரும் டீஸரைப் பார்த்துட்டு பாராட்டுனாங்க. நாம ஏன் ரஜினி, கமல் மாதிரியான ஆட்களை மட்டும் சினிமாவுக்குத் தேர்வு செய்யணும்... தனுஷ் சார் மாதிரியான சில நடிகர்கள் சினிமாவுல ஹீரோவுக்கான இலக்கணத்தையே உடைத்து எறிந்தவங்க. அந்த மாதிரிதான் நான் சாரு சாரைப் பார்க்குறேன்."

"முதல்ல இந்தக் கதையை சாரு சார்கிட்ட சொல்லும்போது, அவர், 'என்னை தாத்தாவா நடிக்கிறதுக்காகக் கூப்புடுறீங்களா'னு கேட்டார். 

'இல்லை சார். இந்தப் படத்துல தாதா ஒரு ஹீரோ. அந்த ரோல்ல நடிக்கிறதுக்காக உங்களைக் கூப்பிடுறேன்'னு சொன்னேன். 

அவர், 'என்னால நடக்கக்கூட முடியாது. என்னை எப்படி நடிக்க வைக்கப் போறீங்க'னு கேட்டார். 

'அதுக்கு ஏத்த மாதிரி வசதிகள் பண்ணிக்கலாம் சார்'னு சொன்னேன். 

கடைசில அரை மனசாதான் நடிக்க ஒப்புக்கிட்டார். இந்தப் படத்தோட டீஸர் ஷூட் பண்ணியிருக்குற இடமே ரொம்ப ஆபத்தானது. பாம்பு, பூரான் எல்லாம் வரும்னு அக்கம் பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்க. ஆனா, அது எதையுமே சாரு சார் பொருட்படுத்தவே இல்லை. 'சினிமானா எல்லாத்தையும் தாங்கித்தான் ஆகணும்'னு சொல்லி என்னையும் ஊக்கப்படுத்தினார். 

சாருக்கு வாக்கிங் ஸ்டிக் இல்லாம நடக்க கஷ்டமா இருக்கும். ஆனா, 'ஆக்ஷன்'னு ஒரு வார்த்தை சொன்னா, அவர் எழுந்திருச்சு நடக்க ஆரம்பிச்சிடுவார். அந்த அளவுக்கு சினிமாமேல உயிரா இருக்கார். அவருக்கு ரெண்டு பை-பாஸ் சர்ஜரி, மூளையில் ஒரு ஆபரேஷன் பண்ணிருக்கு. அதைமீறி நடிக்க வந்திருக்கார். ஜனகராஜ் சார், மனோஜ் குமார், ஆனந்த் பாண்டி, ஆதித்யா சேனல் கதிர் அண்ட் டீம் மற்றும் இன்னும் நிறைய புதுமுகங்கள் இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க. 'ஐ ஆம் நாட் சத்யா' இதுதான் படத்தோட ஒன் லைன். 

"டீஸர்ல, 'பொண்ணுங்கமேல கையை வெச்சா, கொளுத்திருவேன்'னு ஒரு வசனம் இருக்கு. பெண்கள் மீதான வன்முறைப் பேசுற படமா?"  

"ஆமா. எப்படி குடிக்கிறதும், சிகரெட் பிடிக்கிறதும் தவறுனு சொல்றாங்களோ, அதேமாதிரி பெண்களை வன்முறைக்கு உட்படுத்துறதும் தவறுதான்னு ஆண் குழந்தைகள்கிட்ட சொல்லி வளர்க்கணும். இது நம்மளோட கடமை. நம்ம ஊர் தினமும் பெண்கள் எந்த அளவுக்குப் பாலியல் சிக்கலுக்கு உள்ளாக்கப்படுறாங்கனு நமக்குத் தெரியும். ஆனா, அதை எதிர்த்து தைரியமா யாரும் குரல் கொடுக்குறது இல்லை. சினிமா மூலமா இதுக்கு ஒரு விடிவுகாலம் கிடைச்சா, சரி.!"

"மற்ற தாதா படங்கள் மாதிரி, இதுலேயும் அதே டெம்ப்ளேட் காட்சிகள் இருக்குமா?"

"தொடர்ந்து தாதாக்கள் எல்லோருமே மும்பை அண்ட் சென்னையிலேயே இருக்காங்க. அவங்க எந்த இடத்துல இருந்தாலும் சரி, ரௌடிக்கு முக்கியமானது மாஸ்தான். ஸோ, கதைக்களத்தை பெருசா பொருட்படுத்தாத கேங்ஸ்டர் படமாகத்தான் இது இருக்கும். இந்தப் படத்தை தெலுங்குலேயும், இந்தியிலேயும் ரீமேக் பண்றதுக்காக கேட்ருக்காங்க. டீஸரைப் பார்த்துட்டு, சாரு சாருக்கு தெலுங்குல, அல்லு அர்ஜுன் படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு." என்று உற்சாகமாகக் கூறி முடித்தார், விஜய் ஸ்ரீ ஜி.