Election bannerElection banner
Published:Updated:

இயல்பு மாறாத மலையாள சினிமா... ஓர் அறிமுகம்..! - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 1

இயல்பு மாறாத மலையாள சினிமா... ஓர் அறிமுகம்..! - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 1
இயல்பு மாறாத மலையாள சினிமா... ஓர் அறிமுகம்..! - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 1

இயல்பு மாறாத மலையாள சினிமா... ஓர் அறிமுகம்..! - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 1

'விகதகுமாரன்' மலையாளத்தின் முதல் படம் என்று அறிய முடிகிறது. வெளிவந்த ஆண்டு 1928. ஜெ சி டானியல் இயக்குநர். அவர் ஒரு தமிழர். மலையாளிகள் அவரைப் பற்றியும் படம் எடுத்து விட்டார்கள்; பெரும்பாலானோர் பார்த்திருப்போம். பின்னர் வெளிவந்த படங்களின் பட்டியலோ வரலாறோ இந்த கட்டுரைக்கு அவசியம் இல்லாத பட்ஷம் மலையாள சினிமா பொதுவில் எவ்வாறு தோற்றம் தந்தது என்பதை பார்க்கலாம். உத்தேசப்படி, சினிமா வந்ததும் அதில் பங்கு பெறுவதற்கு கலைஞர்கள் முண்டியிருக்க மாட்டார்கள். அதனால் எல்லோருக்கும் தெரிந்த புராணக்கதைகள், நல்லத்தங்காள் போன்ற தொன்மக் கதைகள் படமாக்கப்பட்டன. படம் பிடிப்பதே பெரிய விஷயமாய் இருந்திருக்கும். அதை எடுத்து செய்பவர்கள் எல்லாம் தேவ தூதர்களாய் பட்டிருப்பார்கள். அதை ஒரு மயக்கமான காலம் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தெளிவது என்பது தனது தனித்தன்மைக்கு அது வந்து சேருவது என்று பொருள்படும்.

அந்நிய தன்மையோ அல்லது மேடை நாடகமோ அதிகம் இல்லாமல் கேரள மண்ணை மையப்படுத்திய கதைகளின் காலம் ஐம்பதுகளில் தொடங்கி விட்டது. பி பாஸ்கரனும் ராமு காரியத்தும் செய்த நீலக்குயில் ஒரு முழுமையான படம். ராரிச்சன் என்ற பவுரன், நாயர் பிடிச்ச புலிவாலு இவைகள் எல்லாம் மக்களால் கண்டுகளிக்கப்பட்ட படங்கள். வாழ்வை பற்றி சொல்லப் புகுந்தாலும் வெகுசன விருப்பத்துக்கு உவப்பான வடிவில் இவைகள் எடுக்கப்பட்டிருந்தன. அவைகளில் பல்வற்றிலும் கலையம்சமும் கண்டுணர முடிவதாயிருந்தது. சத்யனும் பிரேம் நசீரும் ஷீலாவும் எல்லாம் வந்து விட்டிருந்தார்கள்.

செம்மீன் கேரளாவை ஏறிட்டு பார்க்க வைத்த படம்.  

அது தகழி எழுதிய நாவல். பாத்திரங்கள் உயிர் பெற்றிருந்தன. பாடல்கள் எல்லா திக்குகளிலும் ஒலித்தது. மொழி பேதமில்லாமல் சப் டைட்டில்கள் இல்லாமல் சகலரும் படம் பார்த்தார்கள். அது சென்னையிலும் கூட ஹவுஸ் புல் காட்சிகளாய் ஓடின படம். கடலினக்கர போனோரே என்பது இந்தியா முழுவதும் தெரிந்த வரிகளாய் கூட இருக்கும்.

கேசவ தேவின் ஓடையில் நின்னு என்கிற நாவல் சேது மாதவனால் படமாக்கப்பட்டது. பஷீரும், தகழியும், பாறப்புறத்து போன்ற எழுத்தாளர்களுக்கு சினிமாவின் மீது ஒவ்வாமையில்லாமல் இருந்திருக்க வேண்டும். சரியாய் சொன்னால் இலக்கியத்தின் கூடேயே நடக்கிற அளவிற்கு சினிமா தரம் கொண்டிருந்தது. மெல்ல சொல்லியவாறு வந்து முடியும் நேரத்தில் அர நாழிக நேரத்தின் கதை என்னை திடுக்கிட செய்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அதை போலவே பார்கவி நிலையத்தில் வந்த யட்ஷி வின்சென்ட் மாஸ்டரின் கைவண்ணத்தில் மிகவும் சுவாரஸ்யமாயிருந்தாள். இலக்கியம் மட்டுமின்றி சமூக நாடகங்கள் மக்களின் வாழ்வில் இரண்டற பங்குபெற்றிருந்தது. பொதுவாகவே பைங்கிளிக் கதைகளில் கூட குறைந்த பட்ஷ  நம்பிக்கைத்தன்மை இருந்தது. அவைகள் எல்லாம் சேர்ந்த போது திரைப்படங்கள் தங்களை செழுமையூட்டிக் கொண்டன.  மேலும் இந்தியாவின் தெற்கில் தோன்றிய கம்யூனிச அறைகூவல் கேரளத்தில் மட்டுமே அன்று  நிலைகொண்டது. நக்சலிச வெடிப்புகளும் கூட. ஒருவிதமான கொந்தளிப்பு அரசியலில் இன்றும் கூட பங்கு பெறுகிற மக்களின் பரந்த அறிவும் கூட சினிமாவின் விரிவுக்கு காரணமாய் இருந்திருக்க வேண்டும். அப்புறம் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது பற்றின விவரம் அனைவருக்கும் தெரியும்.  

அங்கே நாடகத்தில் சக்கை போடு போட்ட தோப்பில் பாசியின் படைப்புகள் படமாக்கப்பட்டதில் வியப்பில்லை. நீங்கள் என்னே கம்யூனிஸ்ட்டாக்கி, துலாபாரம் மற்றும் பல படங்கள். அதை போலவே தான் பக்கர், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்ற இயக்குநர்களின் பங்களிப்பு. அடூர் மொத்த இந்தியாவையும் கவர்ந்தவர். எலிப்பத்தாயமும், முகாமுகமும், கதாபுருஷனும் காலத்தில் உறைந்தவர்களை, காலத்தைக் கடந்தவர்களை பற்றி சொன்ன நவீன சினிமாக்கள். அதில் கேரள வரலாற்றின் தீற்றல்கள் இருக்கின்றன. நாட்டின் மொத்த மக்களும் பல விஷயங்களும் புரியாத ஆர்ட் படங்களுக்கு வரவேற்பு கொடுத்தவர்களாய் இருந்திருக்கவே முடியாதென்றாலும் அதை செய்த கலைஞர்கள் எள்ளிநகையாடப்படவில்லை. அரசு விருதுகளை வாரி வழங்கினது போக ஜனங்கள் அவர்களை போற்றத் தெரிந்திருந்தார்கள். வெற்று அறிவுஜீவிகளாக அவர்கள் அந்த மண்ணில் இருந்து அந்நியப்படவில்லை.

ஜான் ஆபிரகாம் பற்றி நூறு கதைகள் சொல்லலாம்.

காதல் இருந்தது. கண்ணீர் பெருக்கினார்கள். பாட்டுக்கள் இருந்தன. விக்குத் தலைகளுடன் நடிகர்கள் பறந்து பறந்து சண்டை போட்டார்கள். அந்த மாதிரிப் படங்கள் எங்கே இல்லாமலிருக்கின்றன? பிரேம் நசீர் கல்லுரிப் பையனாய் ஜெயபாரதியை நோக்கி விசிலடித்த ஒரு படத்தை திக்கென்று நினைத்துக் கொள்கிறேன். இதற்கெல்லாம் சலித்துக் கொள்ளுவதில் அர்த்தமேயில்லை. அதனிடையே அங்கே பரதனால் எழ முடிந்தது. சின்ன சின்னதாய் எத்தனைக் காவியங்கள்? லோகி எழுதி அவர் இயக்கிய தனியாவர்த்தனம் ஓன்று போதாதா?அல்லது எம் டி வாசுதேவன் நாயர் எழுதினதை இயக்கிய தாழ்வாரம் மட்டும் பாருங்கள். ஒவ்வொரு படமும் நமக்கு ஒவ்வொரு உலகை அறிமுகம் செய்பவை. தனியாவர்த்தனம் போலவே அவர் இயக்கிய வெங்கலம் என்கிற படத்தைக் கூட மறுமுறை பார்க்க அஞ்சுபவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட படங்கள்.   

பரதன் என்றால் அடுத்து இவரது பெயரை சொல்லியாக வேண்டும். பரதனின் பல படங்களுக்கு எழுதியவர். மற்றும் பலருக்கும் எழுதி இருக்கிறார். அடிப்படையில் எழுத்தாளர். தன்னை சினிமாவுக்காக குவித்துக் கொண்டார். கதை எழுதின படத்தை இயக்கியவர் யாராக இருந்தாலும் அதில் தன்னை தெரிய வைக்கிற அளவிற்கு தனித்தன்மை இருந்தது முக்கியம். பத்ம ராஜன். அவரது படங்களை அலசி அந்தப் படங்களில் என்றும் உள்ளோடுகிற புதுமையை ஆயிரம் பக்கங்களில் எழுதலாம். கள்ளன் பவித்ரனின் புன்னகையை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். தூவானத் தும்பிகள் , நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புக்கள், அரப்பட்ட கெட்டிய கிராமம் போன்ற படங்களில் எல்லாம் முழுமையாய் கூட போக வேண்டாம், அவற்றின் ஆரம்பங்களே பிரமிப்புண்டாக்கக் கூடியவை. திரைக்கதையின் கூரிய ரகசியங்களில் அவரது கதைகள் ஒளிர்வதை பார்க்க வேண்டும். அப்புறம், சில நாட்கள் முன்பு மரணமைடைந்த ஐ வி சசி எழுத்தாளர்களின் துணையுடன் நூறு படங்களுக்கு மேலே இயக்கியிருக்கிறார். மீண்டும் ஒருமுறை கேரளத்தின் திரை எழுத்தாளர்களை நினைவு கொள்ளும் வண்ணம் பல இயக்குநர்கள் இயங்கியிருக்கிறார்கள். முக்கியமாய் சிபி மலையில். அவருக்கு எழுதிக் கொடுத்தவாறிருந்த லோகிதாதாஸ். 

பி பாஸ்கரன், சேதுமாதவன் போன்ற மாஸ்டர்களின் படங்களில் இருந்து விலகி பரதனும் பத்மராஜனும் ஒரு திருப்பம் என்றால் லோகி எழுதின படங்கள் அனைத்தும் வேறு ஒரு தினுசு. நமக்கு தெரிந்த சம்பவங்களில் இருந்து நாம் பார்க்க முடியாத கோணத்தில் அவர் கதை சொல்லும் போது மக்கள் தங்களையே பார்த்து வியப்பில் இருந்திருப்பார்கள் என்று எனக்கு எப்போதும் படும். வரிசையாய் எவ்வளவோ படங்கள். மோகன் லால் வரிசையாய் பண்ணின பல கதாபாத்திரங்களில் முன்னிறுத்தப்பட்ட துயருக்கு கசியாதவர்கள் இருக்க முடியாது. மற்றுமொரு ஜோடி இருந்தது. சத்யன் அந்திக்காடும், ஸ்ரீனிவாசனும். கொஞ்சம் சிரிக்க வேண்டியிருந்தாலும் நடுத்தர வர்கத்தின் அரசியல் சமூக குடும்ப கோணல்களை காட்டிக் கொடுத்தார்கள். கமலா தாஸின் கதைகள் கூட படமாகியிருக்கின்றன.  பாலு மகேந்திரா மலையாள ஸ்டைல்களுக்கு மறுபுறம் நின்று மூன்று படங்கள் செய்தது அந்த மக்களால் இன்றும் நெகிழ்வுடன் நினைத்துக் கொள்ளப்பட்டவாறு இருக்கும். கே ஜி ஜார்ஜும் கதைகளை சொன்னவர் தான். முற்றிலும் காவிய பாவனையில் ஒரு கலைஞனை விஸ்தரித்த வானப் பிரஸ்தம், ஷாஜி என் கருணுடையது.  சூப்பர் ஸ்டார்கள், மார்க்கெட் நடிகைகள் அல்லாமல் லலிதாவும், கவியுர் பொன்னம்மாவும், சுகுமாரியும், பிலோமினாவும் எல்லாம் கதைக்குள்ளிருந்து வந்தவாறிருந்தார்கள்.   சொல்லி வர வேண்டும் என்றால் அந்த மண்ணில் கதைகள் முளைத்து வந்தன. கதைகள், பின்னால் வருபவர்களின் நினைவுகளில் படிந்து கிடந்தன. வரிசையாய் பல இயக்குனர்களை, கதாசிரியர்களை, தொழில்நுட்ப வல்லுநர்களை சொல்லிக் கொண்டே போகலாம். அவர்கள் படத்தில் அவர்களின் மண் இருந்தது. மொழி இருந்தது. வாழ்க்கையும் கலாசாரமும் இருந்தது.

அதெல்லாம் அவர்களுக்கு பெருமையாகவும் இருந்தது. 

இதுவரையில் சரி. இன்று உலகின் முகமும் கேரளத்தின் முகமும் வேறு. யாரும் பிட்டும் கடலையும் பப்படமும் பிரதமனும் பேண விரும்பவில்லை. டைனிங் டேபிளில் பர்கரும் ஆப் பாயிலும் வைக்கிறார்கள். கள்ளுக் கடைகளில் வெறும் குடிகாரர்களே மிச்சமிருக்கிறார்கள்.கல்வியும் வேலைவாய்ப்பும் அசுர வளர்ச்சிகளும் அமைந்து விட முடியாத அந்த நில பரப்பை துறந்து வெளியேறி செல்வது மிகவும் துரிதப்பட்டிருக்கிறது. நிர்ப்பந்தமாயிருக்கிறது. திரைக்கடலோடி திரவியம் தேடுகிற நெருக்கடி மனிதர்களுக்கு நடுவே கொண்டு வரும் பேதங்கள் இப்போது இரண்டு மடங்காயிருக்கின்றன. மனித உறவுகளில் இருந்து நழுவத் துவங்கிய லட்ஷியம் மறைந்து வாழ்வின் முகம் வேறு பாவனைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. உலகம் மாறும் போது, தேசம் மாறும் போது, மாநிலமும் மாறியாக வேண்டுமே. உலகம் நம்மை நெருங்கி வந்தவாறிருக்கும் போது, நாமும் அதை அணைத்துக் கொள்ள முந்தியவாறிருக்கிறோம். நமது சினிமாக்களும் அப்படித்தான் இருக்க முடியும்.

சரியாய் சொன்னால் கொஞ்சம் முதிர்ந்த ஆட்களை விலக்கி விட்டு ஒருவகையில் கேரளா பையன்களின் சினிமாவை துவங்கி விட்டது. நான் முதிர்ந்தவர்கள் என்று வயதானவர்களையோ பையன்கள் என்று இளைஞர்களை இளம்பெண்களை மட்டுமோ குறிப்பிடவில்லை.அப்படிப்பட்ட படங்கள் வரிசையாய் வந்தவாறு இருக்கின்றன. கம்மாட்டிபாடமும், தொண்டி முதலும் திருக்சாட்க்ஷியும் கூட நான் சொல்லுவதில் அடங்குபவை தான்.

ஒரு வசதிக்காக அடுத்த பதிவை, சால்ட் அண்ட் பெப்பரில் இருந்து துவங்குவோம்.            

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு