Published:Updated:

விஜய், அஜித், சூர்யா, விஜய்சேதுபதி... ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்ட நடிகர்கள்! - #TamilCinemaStrike

விஜய், அஜித், சூர்யா, விஜய்சேதுபதி... ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்ட நடிகர்கள்! - #TamilCinemaStrike
விஜய், அஜித், சூர்யா, விஜய்சேதுபதி... ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்ட நடிகர்கள்! - #TamilCinemaStrike

தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணம் பெறுவதாக டிஜிட்டல் சினிமா நிறுவனங்களை எதிர்த்து மார்ச் 1- ம் தேதி முதல் தமிழக தியேட்டர்களில் புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று அறிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்து ஸ்டிரைக் நடத்திவருகிறது. இப்போது மார்ச் 16- ம் தேதி முதல் திரைப்படப் படப்பிடிப்பு, ஆடியோ விழா என்று எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது எனவும் அதிரடியாக அறிவித்து இருக்கிறது. சினிமா ஸ்டிரைக் பிரச்னையால் முன்னணி ஹீரோக்களுடைய படங்களின் ஷூட்டிங் அனைத்தும் பாதியிலேயே நிற்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துவரும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். திபாவளிக்கு ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இப்படத்தை உருவாக்கிவருகிறார், முருகதாஸ். சென்னை முட்டுக்காடு கடற்பகுதி, ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று முடிந்த இப்படத்தின் படப்பிடிப்புப் பிறகு புனேவுக்கு நகர்ந்து, தொடந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. மூன்று ஷெட்யூல் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டார், முருகதாஸ்.

இன்னும் ஒரு ஷெட்யூலை முடித்துவிட்டால், இப்படம் முழுமையடைந்துவிடும். ஏற்கெனவே 2017- ம் ஆண்டு தீபாவளி விருந்தாக 'மெர்சல்' படத்தைத் தனது ரசிகர்களுக்குக் கொடுத்த விஜய், இந்த வருட தீபாவளிக்கு இந்தப் படத்தை ரிலீஸ் செய்து ரசிகர்களைக் குஷிப்படுத்தலாம் என்று நடித்துக்கொண்டிருந்த விஜய்க்கு, சினிமாவின் ஸ்டிரைக் பிரச்னை ஷாக்கிங் நியூஸ். தயாரிப்பாளர்களின் இந்தத் திடீர் போராட்டத்தால் விஜய் படக்குழு விரக்தியில் நிற்கிறது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பல காமெடி நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்கள். இந்தப் படத்திற்காக ரோபோ சங்கரிடம் 50 நாள்களுக்கும், தம்பி ராமையாவிடம் 80 நாள்களுக்கும் தொடச்சியாக கால்ஷீட் தேதியைப் பெற்றிருக்கிறார்கள். மார்ச் மாத இறுதியில் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் திட்டத்தோடு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்த ஏற்பாடு நடந்துகொண்டு இருக்கிறது. அஜித் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளைத் தவிர, இதர அனைத்துக் காட்சிகளையும் ஹைதராபாத்திலேயே நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருந்தது, படக்குழு. பல நடிகர்களின் கால்ஷீட் தேதிகளை கஷ்டப்பட்டு வாங்கி வைத்திருந்த டைரக்டர் சிவா, இப்போது கால்ஷீட்டால் ஏற்படும் குளறுபடிகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார். 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. சென்னையில் ஈவிபி ஸ்டுடியோவில் அம்பாசமுத்திரத்தை அப்படியே ஜெராக்ஸ் செய்ததுபோல பிரம்மாண்ட செட் போட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங்கை காரைக்குடியில் நடத்துவதற்காகப் புறப்படுவதற்குத் தயாராக இருந்த நேரத்தில்தான், தமிழ்சினிமாவின் இந்த ஸ்டிரைக் சூர்யா படக்குழுவினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. 

ஸ்டிரைக் பிரச்னையால், விஷால் நடித்து மார்ச் 29-ம் தேதி அன்று ரிலீஸாகவிருந்த 'இரும்புத்திரை' திரைப்படம் இப்போதைக்கு ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துக்கொண்டிருந்த 'சண்டக்கோழி-2' படப்பிடிப்பும் பாதியிலேயே கிடக்கிறது. 'நாடோடிகள்-2' படப்பிடிப்பை மதுரையில் மொத்தம் 72 நாள்கள் நடத்திவிட்டு, ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டிருந்தார், இயக்குநர் சமுத்திரக்கனி. நடிகர் சசிக்குமார், அஞ்சலியிடம் மொத்தமாக கால்ஷீட் தேதிகளை வாங்கிக்கொண்டு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்த சமுத்திரக்கனிக்கும் ஸ்டிரைக் அறிவிப்பால், சிக்கல். எனவே, 'நாடோடிகள்-2' படக்குழுவோடு சென்னைக்குத் திரும்பவிருக்கிறார், சமுத்திரகனி. இதுதவிர, விக்ரம் மகன் துருவ் நடிக்கும் 'வர்மா' படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. திரைத்துறையினரின் இந்தப் போராட்ட அறிவிப்பு, 'வர்மா' படக்குழுவையும் பேக்கப் செய்யவைத்திருக்கிறது. வெளிநாடுகளில் நடந்துகொண்டிருக்கும் படப்பிடிப்புகளும் 23- ம் தேதிமுதல் நடைபெறாது என்பதால், 'ஜுங்கா' படத்திற்காக அவசர அவசரமாக ஃபாரீன் கிளம்பியிருக்கும் விஜய்சேதுபதி கிடைத்த நாள்களில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு திரும்பவிருக்கிறார்.

பிரச்னைகள் எப்போது முடியும்... மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது விரைவில் தெரியும்.