Published:Updated:

குதிரைத் தலை, குடும்பச் சண்டை, துரோகம்... 'தி காட்ஃபாதர்' எனும் அனுபவம்! - #46YearsOfGodFather

தார்மிக் லீ
குதிரைத் தலை, குடும்பச் சண்டை, துரோகம்... 'தி காட்ஃபாதர்' எனும் அனுபவம்! - #46YearsOfGodFather
குதிரைத் தலை, குடும்பச் சண்டை, துரோகம்... 'தி காட்ஃபாதர்' எனும் அனுபவம்! - #46YearsOfGodFather

மாஃபியாக்களின் வாழ்க்கையை நம்பகத்தன்மையோடு எடுக்கப்பட்ட திரைப்படம் `தி காட்ஃபாதர்' (The Godfather). 1972-ல் இப்படம் வெளியானது. இன்றோடு இந்தப் படம் வெளியாகி 46 வருடங்கள் முடிந்துவிட்டன. காட்ஃபாதர் என்ற பெயரைச் சொன்னவுடனேயே மைண்டில் ஓப்பனிங் பி.ஜி.எம் ஒலிப்பதை யாராலும் தடுக்க முடியாது. `புயலுக்குப் பின் அமைதி' என்பதுபோல் இடம்பெற்றிருப்பது, நினோ ரோட்டாவின் ட்ரம்பட் மியூசிக். சரி நம்ம மேட்டர்க்கு வருவோம். என்ன முயன்றாலும் இனி இதுபோன்ற கிளாஸிக் கல்ட் ரக படங்கள் வெளிவரப்போவதில்லை. ஆகவே, படத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்.   

1969-ன் சிறந்த புத்தகங்கள் வரிசையில் கொடிகட்டிப் பறந்தது, மேரியோ புஸோவின் `தி காட்ஃபாதர்' நாவல். அதை வெளியிடுவதற்கு முன்பே படமாக்கும் உரிமையைப் பாரமவுன்ட் பிக்சர்ஸ் பெற்றுக்கொண்டது. புத்தகம் வெளியானதும் நினைத்ததைப்போல் வேற லெவல் ஹிட்டானது. 3 வருடத்தில் 12 இயக்குநர்களிடம் கலந்துரையாடிய பாரமவுன்ட் பிக்சர்ஸ், இறுதியாக ஃப்ரான்சிஸ் ஃபோர்டு கொப்பல்லாவைத் தேர்வு செய்தது. காரணம், அமெரிக்கன் - இத்தாலியன் இயக்குநர்களில், இவர்தான் அப்பொழுது சிறந்து விளங்கினார். கதையும் இத்தாலியன் மாஃபியாக்களை மையமாக வைத்து இருந்தமையால் பாரமவுன்ட் பிக்சர்ஸ் கொப்பல்லாவைத் தேர்ந்தெடுத்தது. படமாக்க முற்பட்ட பின் புத்தகத்தின் எழுத்தாளர் மேரியோ புஸோவும் இயக்குநர் கொப்பல்லோவும் கூட்டுச் சேர்ந்து கதையில் பல மாற்றங்களைக் கொண்டுவர வேலையை ஆரம்பித்தனர். இருவரும் இருவிதமான கதைகளை எழுதி அதை மீண்டும் ஒன்று சேர்த்தனர். எவ்வளவு கதை எழுதியும் ஆறுதல்படாத இருவரும், படப்பிடிப்பின்போதுகூட கதைக்கு மேலும் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். பாரமவுன்ட் நிறுவனம் வணிக ரீதியான காரணத்தினால், படத்தை இரண்டு மணி நேரத்துக்குள் எடுக்கவேண்டுமென்ற கோரிக்கையை வைத்தது. பல முயற்சிகளுக்குப் பின் அதை மூன்று மணிநேர திரைப்படமாக மாற்றினார், இயக்குநர் கொப்பல்லா. 

முதல் பகுதியின் படப்பிடிப்பு முடிந்தவுடன், படத்தைப் பார்த்த பாரமவுன்ட்டுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. படம் முழுக்க இருட்டு, தேவையில்லாத செலவு, சம்பந்தம் இல்லாத காட்சிகள் என அடுக்கடுக்கான காரணங்களைச் சொல்லிக்கொண்டே போனது. அதுமட்டுமன்றி, இதுபோன்ற காரணங்களை வைத்து அடுத்த பகுதியை இயக்கும் வாய்ப்பினைக் கொப்பல்லாவுக்குத் தர மறுத்தது. தவிர, ஒட்டுமொத்த படக்குழுவோடும் வருத்தம் ஏற்பட்டது. அதற்குப்பின் படத்தின் முதல் காட்ஃபாதராக நடித்த மார்லன் பிராண்டோ, பாரமவுன்ட் பிக்சர்ஸிடம் `அடுத்த பாகத்தை இவர் இயக்கவில்லையென்றால், நான் இனி நடிக்கமாட்டேன்' எனச் சொல்லியிருக்கிறார். அதன் பின்னர் படம் வெளியானது, பல விருதுகளைப் பெற்றது, தற்பொழுது பல படங்களுக்கு முன்னோடியாக உள்ளது... என்பதெல்லாம் வேற கதை. இரண்டாவது காட்ஃபாதராக நடித்திருக்கும் அல்பசினோவுக்கு (மைக்கெல் கார்லியோன்) இது மூன்றாவது படம். இவருக்கு முன் தேர்வு செய்யப்பட்டவர்கள் ராபர்ட் நெட்ஃபோர்டு, ரையன் ஓ நீல் என்பவரும்தான். ஆனால், அவர்களை நிராகரித்துவிட்டு இவரைத் தேர்வு செய்தார், இயக்குநர் கொப்பல்லா. காட்சியின் நம்பகத்தன்மையை மேம்படுத்த உண்மையான குதிரைத் தலை ஒரு காட்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இப்படிப் படத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். 

காலம் காலமாக மாஃபியா செய்துவரும் ஐந்து குடும்பம்... அந்த ஐந்து குடும்பத்திற்குள்ளேயே, 'நீ பெரியவனா, நான் பெரியவனா?' என்ற சண்டை. ஐந்து குடும்பத்துக்குள் நடக்கும் துரோகம், பழி தீர்த்தல், வஞ்ச செயல்... இதுதான் படத்தின் கதை.  தாதா படங்கள் ஆகட்டும், மாஃபியா பற்றிய படங்கள் ஆகட்டும்... எல்லா ரகப் படங்களுக்குமே காட்ஃபாதராக இருப்பது, இந்த `காட்ஃபாதர்'தான். ஒரு கல்யாணத்தில் ஆரம்பித்து, அதே தம்பதியின் விவாகரத்தில் முடியும் திரைக்கதை, கூர்மையான வசனங்கள், நடித்த நடிகர்கள், நம்பகத்தன்மையான காட்சிகள், நினோ ரோட்டாவின் இசை, கோர்டன் வில்லிஸின் ஒளிப்பதிவு, முக்கியமாக... கொப்பல்லாவின் அதிநேர்த்தியான இயக்கம்... எனப் படத்தின் இண்டு இடுக்குகளில்கூட அதிக கவனம் செலுத்தி உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். தன் மூன்றாவது படத்திலேயே இப்படியொரு உழைபைக் கொடுத்த அல்பசினோ, பின்னர் நடித்த படங்களில் இதே நற்பெயரைத் தக்கவைத்துக்கொள்ள வெளிக்காட்டிய நடிப்பு, அசாத்தியமானது.

பல கலைஞர்களின் திறமைகளை வெளிக்காட்ட சிறந்த மேடையாக அமைந்த படம், காலத்தால் தவிர்க்கமுடியாத ஓர் அற்புதப் படைப்பு, `தி காட்ஃபாதர்'!.